சட்டச் சொற்கள் விளக்கம் 591-600 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 581-590 : இலக்குவனார் திருவள்ளுவன்- தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 591-600
591. Act judicially | நீதித்துறைச் சட்டம் வெவ்வேறு துறைகளுக்கான சட்டங்கள் இயற்றப்படுகின்றன. இங்கே நீதித்துறைச் செயற்பாட்டிற்காக இயற்றப்படும் சட்டங்களைக் குறிக்கிறது. |
592. Act making an offence | குற்றம் விளைவிக்கும் செயல் குற்றம் விளையக் காரணமாகும் எச்செயலும். சட்டம், வழக்காறு, விதி போன்றவற்றை மீறல் அல்லது குலைத்தல் குற்றம் நேரக்/நிகழக் காரணமாவதால் குற்றச் செயலாகிறது. |
593. Act of a child under seven years of age | ஏழு அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல் இந்தியத் தண்டிப்புப் தொகுப்பு, பிரிவு 82 இன்படி 7 அகவைக்குட்பட்ட குழந்தையின் செயல் எதுவும் குற்றமாகாது. எத்தீங்கும் செய்ய மாட்டாமை(doli incapax) என்னும் இலத்தீன் தொடரில் இருந்து இக்கருத்தாக்கம் உருவானது. காண்க: Acts of child |
594. Act of a person of unsound mind | மன நலமற்றவரின் செயல் செயலின் தன்மையைப் புரிந்து கொள்ள இயலாத அல்லது தான் செய்யும் செயல் தீங்கானது அல்லது சட்டத்திற்கு முரணானது என உணர்ந்து கொள்ள இயலாத சூழலில் மன நலம் குன்றியவர் செய்யும் எச்செயலும் குற்றமாகாது என இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 84 கூறுகிறது. |
595. Act of bad faith | நம்பிக்கை வஞ்சச் செயல் தீங்கெண்ணச் செயல் நம்பிக்கை வருவதுபோல் வஞ்சகமாக நடந்து கொண்டு ஏமாற்றும் இரண்டகச் செயல். |
596. Act of bad faith for benefit of a person without consent | ஒருவரின் ஆதாயத்திற்காக இசைவின்றிச் செய்யப்படும் தீச் செயல் ஒருவர், தனக்கு அல்லது தன்னைச் சார்ந்தவருக்கு ஆதாயம் ஏற்படுவதற்காகத் தீய நோக்குடன் செய்யும் செயல். இது தண்டனைக்குரிய குற்ற செயலாகும். |
597. act of conveyance | மாற்றளிப்புச் செயல் மாற்றுரிமை உரிமை மாற்றச் சட்டம் உடைமையின் உரிமைப்பட்டயம், உரிமை, நலன்களை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றுதல். பொதுவாக நாம் conveyance என்றால் பயண வகை, ஊர்தி வகை, கொண்டு செல்கை, வையம்(வாகனம்), இவரி(சவாரி – உருதுச் சொல்), செல்கலம்/ செல்கலன் (செல்வதற்குரிய வண்டி), வண்டி,ஊர்தி, போக்குவரத்துச் செலவு, பயணப்படி எனப் போக்குவரத்துத் தொடர்பிலேயே கருதுவோம். ஆனால் சட்டத்துறையில் உரிமைமாற்றளிப்பு, உரிமைமாற்றளிப்பாவணம் என உரிமை மாற்றச் செயற்பாட்டையே குறிக்கிறது. |
598. Act of cruelty | கொடுஞ்செயல் மனிதர்களுக்கோ பிற உயிரினங்களுக்கோ வலி, துன்பம், ஊறு, உயிரிழப்பு நேர்விக்கும் வன்மையான செயல். ஒரு பெண்ணிற்கு அவள் கணவனோ கணவனின் உறவினர்களோ கொடுமை இழைத்தால் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய சிறைத்தண்டனை, ஒறுப்புத் தொகை விதிக்கப்படும். (இ.த.தொ. பிரிவு 498.அ.) சட்டப்புறம்பான கோரிக்கை மூலமோ தாங்க இயலாக கொடுமை இழைப்பின் மூலமோ பெண்ணின்மரணத்திற்கு அல்லது தற்கொலை முயற்சிக்குக் காரணமானவர்கள், உயிரிழப்பிற்குக் காரணமான அல்லது கொலை முயற்சிக்கான குற்றமிழைத்தவர்களே. கணவனைக் கொடுமைப்படுத்தினால் அதற்குக் காரணமானவர்களுக்கும் இது பொருந்தும். விலங்குகளுக்குக் கொடுமை இழைப்பதிலிருந்து காப்பாற்ற விலங்குகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1960(The Prevention Of Cruelty To Animals Act, 1960) உள்ளது. விலங்குகள் இழுக்கும் வண்டிகளில் அதிகச் சுமை ஏற்றுதல், அடைத்து வைத்தல் சங்கிலியால் அல்லது வேறு வகையில் முரட்டுத்தனமாகப் பிணைத்து வைத்துத் தேவையற்ற துன்பங்களை ஏற்படுத்தல், உணவு அல்லது தண்ணீர் வழங்காமல் இருத்தல், அழுக்கு அல்லது ஒட்டுண்ணி நிலையில் வைத்தல், கால்நடை மருத்துவ உதவி வழங்காமை, முதலான பலவும் தடைசெய்யப்பட்ட பட்டியலாக இச்சட்டம் தெரிவிக்கிறது. மான் முதலிய விலங்கின வேட்டையும் கொடுஞ்செயல் பாற்பட்டதே. |
599. Act Of God | இயற்கைச் செயல் இறைமைச் செயல் தெய்வச் செயல் நிலநடுக்கம், கடல்கோள், போன்ற இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் பேரிடர் அலலது பெருமிழப்பு. இவை மக்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாக உள்ளதால் இறைமைச் செயல் அல்லது இயற்கைச் செயல் எனப்படுகிறது. இயற்கைச் சட்டம், இறைமைச் சட்டம், தெய்வச் சட்டம் என Act என்பதைச் சட்டம் என்று கையாள்வதை விடச் செயல் என்பதே ஏற்றதாகும். அல்லது நிகழ்வு எனலாம். நேர்ச்சி என்பதும் பொருந்தும். இயற்கை இடர்களையெல்லாம் சட்டமாகக் கூறுவது பொருந்தாது அல்லவா? கடல்வழிச் சரக்குகளின் இந்தியச் சட்டம் 1925, இயற்கைச் செயலால் ஏற்படும் இழப்பு குறித்துக் கூறுகிறது. |
600. Act of grace | அருட் செயல் சட்டச் செயற்பாடு அல்லது தண்டிப்பு நோக்கில் மட்டும் செயல்படாமல் பரிவுக் கண்ணோட்டத்துடன் குற்றவாளியை அணுகுவது அருட் செயலாகும். ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண் ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை(திருக்குறள் 579) எனத் தண்டனைக்குரியவரையும் பொறுத்து – மன்னித்து விடுமாறு திருவள்ளுவர் கூறும் கண்ணோட்டம் இதுவே. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply