(சட்டச் சொற்கள் விளக்கம் 711-720 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

721. Ad Interimஇடைக்கால  

இடைப்பட்ட காலத்துக்குரியதை அல்லது இடைப்பட்டக் காலத்தில் நேர்வதைக் குறிப்பது.  

இலத்தீன் தொடர்
722. Ad Interim Injunctionஇடைக்கால நெறிகை    

இடைக்கால ஏவுரை
 
இடைக்கால உறுத்துக் கட்டளை  

இடைக்கால உறுத்தாணை

இடைக்கால ஏவாணை

இடைக்காலத் தடையாணை    

வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது நீதி மன்றத்தால் வழங்கப்படும் இடைக்காலத் தடையாகும். விண்ணப்பதாரர் இத்தடை வழங்கவில்லையேல்  சரிசெய்ய முடியாத  சேதம் ஏற்படும் என நிறுவினால் அல்லது நீதிமன்றம் கருதினால் வழங்கப்படுவது.

injunction  – உறுத்துக்கட்டளை, கட்டளை, தடையாணை, தடங்கலுத்தரவு, மறியல், நியமம் · உரிமைக் கட்டளை, தடைக்கட்டளை, ஆணை, சட்டம் எனப் பலவகையாகக் கூறுகின்றனர்.   அறிவுறுத்திக் கட்டளை பிறப்பிப்பதால், உறுத்துக்கட்டளை என்பதையே இப்போது பெருவாரியான அகராதிகள் குறிக்கின்றன. இன்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக் கூடாது என நீதிமன்றம் ஏவுவதால் ஏவுரை என்பது சரியாக இருக்கும்.  எனினும் ஏவுரை என்பதில் உள்ள அதிகாரத் தொனியைத் தவிர்க்கலாம்.  

ஒரு வழக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கையில் குறிப்பிட்ட ஒன்றைச் செய்யவோ செய்யாதிருக்கவோ, வழக்காடும் சார்பினருக்கு நீதிமன்றம் இடும் ஆணை.  

சேர்ப்பதற்கான, நெறிப்படுத்துவதற்கான, கட்டளையிடுவதற்கான,தடுப்பதற்கான அறிவுறுத்தலாணை.

இரட்டைச் சொல்லைவிட இவையாவுமே வழக்குப் போக்கை நெறிப்படுத்துவதால் நெறிகை எனலாம்.   எ.கா.: யுஎசுவி வரையறுக்கப்பட்டது எதிர் இலிப்புகா ஆய்வகம் வரையறுக்கப்பட்டது (Usv Limited vs Ipca Laboratories Limited ) வழக்கில் 26.06.2002 அன்று எதிர்வாதி அவரது வழங்குநர், இருப்பு வைத்திருப்போர், பணியாளர்கள், முகவர்கள்  முதலியோர் வாதிக்குரிய வணிக முத்திரை(PIOZED)யைப் பயன்படுத்துவதற்குத் தடை விதித்து உரிமையியல் நடைமுறைத்தொகுப்புப் பிரிவு 151இன் கீழ்ச் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால நெறிகை வழங்கியது.  

இலத்தீன் தொடர்
723. Ad Litemவழக்கிற்கென,

வழக்கிற்காக  

தனக்குத்தானே எடுத்துரைக்க இயலாத அல்லது சார்பாற்ற இயலாத குழந்தை, இயலாப் பெரியோர் முதலியவர்கள் பொருட்டு அமர்த்தப்படுபவர்கள்.  

இலத்தீன் தொடர்.
724. Ad Litem Guardianவழக்குநிலை காப்பாளர்  

சட்டத்தால் அல்லது நீதி மன்றத்தால் அமர்த்தப்படும் காப்பாளர்.  

தன்னைத்தானே கவனிக்கும் ஆற்றலற்ற மற்றொருவர் மீது அல்லது அவரது சொத்து மீது அல்லது இரண்டின்மீதும் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு சட்டத்தால் அல்லது நீதிமன்றால் சட்டப்படியான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டவர்.  

இலத்தீன் தொடர்
725. Ad naseumசலிப்பூட்டு  


சலிப்பும் எரிச்சலும் உண்டாகும்படி மீண்டும் மீண்டும் சொல்லப்படுவது அல்லது செய்யப்படுவது.  

இலத்தீன் தொடர்
Ad nauseam என்னும் இலத்தீன் தொடரின் பொருள் குமட்டு.
726. ad quantitatemவகை அளவு  

எவ்வளவு உள்ளதோ அவ்வளவிற்கு  

ஒட்டுமொத்த விலைக்கு அல்லாமல் எவ்வளவு உள்ளதோ அவ்வளவிற்கு விற்பது. [பெருனாண்டோ எதிர் சுமங்களா (FERNANDO et al. v. SUMANGALA TERUNNANSE et)] .

இலத்தீன் தொடர்
727. Ad Quod Damnumதீங்கிற்கேற்ப

தீங்கிற்குத் தக்க  

ad damnum என்றும் சொல்லப்பெறும்.  

பொல்லாங்குச் சட்டத்தின்படி(tort law), வெகுமதியோ தண்டத்தொகையோ ஏற்படுத்தப்பட்ட  அல்லது துன்புறு இழப்பிற்கு ஏற்ற வகையில் – அடைந்த தீங்கினைச் சரிக்கட்டும் வகையில் – அமைய வேண்டும்.  

இலத்தீன் தொடர்
728. Ad Valoremமதிப்பிற்கிணங்க,

மதிப்பீட்டின்படி,

விலைமதிப்பீட்டிற்குத் தக,

பெறுமானப்படி    

சொத்துடைமை மதிப்பு விகிதத்திற்கிணங்கக் கணக்கிடப்படும் வரி மதிப்பீட்டு வரியாகும்.  

இலத்தீன் தொடர்.
729. Ad Valorem Dutyமதிப்பீட்டுத் திறை    

சொத்துடைமை மதிப்பு விகிதத்திற்கிணங்க கணக்கிடப்படும் வரி மதிப்பீட்டுத் திறையாகும்.  

சார்நிலையிலுள்ள அரசுகள், பேரரசிற்குச் செலுத்துவதைக் கப்பம் என்றும் திறை என்றும் குறிப்பர். அதற்கான சூழல் தற்போது இல்லை. எனவே, கப்பம் என்ற சொல்லை மட்டும் இப்பொருளில் கையாண்டுவிட்டுத் திறை என்பதைப் பொருட்கள், பணிகள், பரிமாற்றங்கள் முதலியவற்றின் மதிப்பீட்டு வரி(duty) என்பதைக் குறிக்கப் பயன்படுத்தலாம்.

வரி(tax) என்பதைத் தனியருக்கு விதிக்கப்படுவது என்றும்; திறை (duty) என்பதை அமைப்பிற்கு விதிக்கப்படுவது என்றும் கூறுவர்.  

இலத்தீன் தொடர்.
730. Adaptதழுவு    

தழுவி எழுது

மாற்றிக்கொள்  

பொருந்திக் கொள்  

புதிய சூழ்நிலைக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக்கொள்;

புதிய சூழ்நிலைக்குத் தக்கவாறு நடந்துகொள்.  

வேறொரு பயன்பாட்டுச் சூழலுக்குத் தக்கவாறு ஒன்றை மாற்றியமை.    

மற்றவரது ஆக்கத்தைத் தழுவித் தனதுபோல் ஆக்கிக் கொள்ளுதல்.

இந்தியச் சட்டத்தின் கீழ் தழுவல் என்பது அடிப்படையில் வடிவமைப்பின் மாற்றமாகும், அஃதாவது பதிப்புரிமை பெற்ற படைப்பு ஒரு வடிவமைப்பிலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாற்றப்படுவது.