சட்டச் சொற்கள் விளக்கம் 741-750 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 731-740 : தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 741-750
741. Additional Court | கூடுதல் நீதிமன்றம் நீதிமன்றத்தின் பணிச்சுமையைப் பகிர்வதற்காகத் துணைச் சேர்க்கையாக அமைக்கப்படும் நீதிமன்றம் கூடுதல் நீதிமன்றம் ஆகும். கூடுதல் நீதிமன்றம் என்பது இயல்பான நீதிமன்றமாகவும் இருக்கலாம், அமர்வு நீதிமன்றம் முதலிய பிற நீதிமன்றமாகவும் இருக்கலாம். |
Additional District Magistrate | மாவட்டக் கூடுதல் குற்றவியல் நடுவர் மாவட்டக் குற்றவியல் கூடுதல் நடுவர் கூடுதல் மாவட்டக் குற்றவியல் நடுவர் கூடுதல் மாவட்டத்திற்கான குற்றவியல் நடுவர் எனப் பொருள் கொள்ளக் கூடாது. மாவட்டக் குற்றவியல் நடுவர் என்பதை ஓர் அலகுச் சொற்களாகக் கொண்டு கூடுதல் இணைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள குற்றவியல் கூடுதல் நடுவரின் பணிச்சுமைகளைக் குறைப்பதற்காக அமர்த்தப்படும் குற்றவியல் நடுவர். |
Additional Evidence | மேற்சான்று. கூடுதல் சான்று கூடுதல் சாட்சியம் என்று வழக்கத்தில் கூறுகிறோம். எனினும் மேற்கொண்டு அமையும் சான்று என்பதால் மேற்சான்று என்பதே சரியாகும். தமிழ்ப்பேரகராதி இவ்வாறே குறிப்பிடுகிறது. கூடுதலாகத் தரப்படுகின்ற ஆவணம், தடயம், சான்றுரை, உத்து(அத்தாட்சி), எழுத்துக் குத்து(எழுத்துச் சான்று) எதுவாக இருந்தாலும் பொதுவாக மேற்சான்று எனப்படுகிறது. |
Additional Judge | கூடுதல் நீதிபதி நீதிபதியின் பணிச்சுமையைக் குறைப்பதற்காக அமர்த்தப்படும் கூடுதல் நீதிபதி. |
Additional Public Prosecutor | அரசுக் குற்றவியல் கூடுதல் வழக்குரைஞர் அரசு வழக்குரைஞரின் கூடுதல் பணிச்சுமையைப் பகிர்வதற்காக அமர்த்தப்படும் கூடுதல் அரசுக் குற்றவியல் வழக்குரைஞர். |
Additional Qualification | கூடுதல் தகுதி ஒரு பணிக்குத் தேவையான அடிப்படைத் தகுதிகளைவிடக் கூடுதலாக இருந்தால் சிறப்பு எனக் கருதப்படும் தகுதிகள் |
Additional Report | கூடுதல் அறிக்கை அறிக்கை அளிக்கப்பட்ட பின்னர், மேற்கொண்டு கிடைக்கப்பெறும் தகவல் அடிப்படையில் அல்லது கூடுதலாக விவரம் அளித்தால் சிறப்பு என்று தோன்றும் பொழுது கூடுதலாக அளிக்கப்பெறும் மற்றோர் அறிக்கை |
Additional Sessions Judge | கூடுதல் அமர்வு நீதிபதி பணிச்சுமையைப் பகிர்வதற்காகக் கூடுதலாக அமைக்கப்படும் நீதிமன்றத்தின் நீதிபதி. |
Additional Written Statement | கூடுதல் எதிருரை கூடுதல் எதிர்வாதுரை, கூடுதல் மறுப்புரை என்பவற்றின் சுருக்கமாகக் கூடுதல் எதிருரை எனலாம். இவ்வாறு நேர் பொருளாகக் குறிக்கப்படும் முன்னர்க் கூடுதல் எழுத்துக்குத்து என்றனர். எழுத்து மூலமான வாதத்தை அளிப்பது எதிர்வாதியின் உரிமை. ஆனால், கூடுதல் எதிருரை அளிப்பது நீதிமன்றத்தின் மனத்தேர்விற்கேற்ப அமையும். |
Address | அளவளாவும் முறை ஈடுபடுத்திக்கொள், உரைநிகழ்த்து; உரையாற்று; கண்டுபேசு, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) குறிவை சொற்பொழிவாளர் பேருரையாற்று, முகவரி முகவரி எழுது, விண்ணப்பம் செய்; (கணிப்பொறித்துறையில்) நினைவகம் address என்பதன் பல்வேறு பயன்பாடு: எ.கா.: This Legislation is to address this requirement. இந்தச் சட்டம்அந்தத் தேவையை நிறைவு செய்வதாக அமையும். Our partnership addresses a broad range of strategic and security concerns. பாதுகாப்பு குறித்த பல்வேறு விவகாரங்களை நம் இரு நாடுகளும் சேர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. The Water Supply Scheme will provide safe drinking water to address the water woes of water deprived Dhule region. குடிநீர் வழங்கல் திட்டமானது, தண்ணீர் பற்றாக்குறையால் தவிக்கும் துலே மண்டலத்திற்குப் பாதுகாப்பான குடிநீரை வழங்கும். We must address the barriers of excessive banking secrecy, and complex legal and regulatory frameworks. வங்கி சேவைத் துறையில் உள்ள கமுக்கத் தன்மையை நீக்கவும், இதில் நிலவும் பல்வேறு சட்டப்படியான சிக்கல்களைக் களையவும் நாம் பாடுபட வேண்டும். Addere என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் ‘சேர்க்க’. இச்சொல்லில் இருந்து Addendum உருவானது. |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply