சட்டச் சொற்கள் விளக்கம் 851-860 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 841-850 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் 851-860
851. Affidavit | உறுதியம் உறுதி யுரை ஆவணம்; உறுதி ஆவணம்; உறுதியாவணம் ஆணை மொழி ஆவணம், பிரமாணப் பத்திரம் .ஆணை மொழி ஆவணம் . உறுதிப்பாடு; உறுதிமொழி; உறுதிமொழி ஆவணம்; உறுதிமொழித்தாள்; உறுதிமொழித்தாள்ஆணைப்பத்திரம் எனப் பலவாறாகக் கூறுகின்றனர். தான் கூறுவது உண்மைதான் என்று உறுதி செய்து எழுத்து வடிவில் ஒருவர் நீதிமன்றத்தில் அளிக்கும் பத்திரம். நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்த உறுதிமொழி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட எழுத்துப்பூர்வ அறிக்கை. சட்டப்பூர்வமாக அங்கீகாரம் பெற்ற ஒருவர் முன் எழுதப்பட்ட அறிக்கை. அதிகாரமளிக்கப்பட்ட நீதிபதி அல்லது அதிகாரியிடம் உறுதிமொழியாக எழுத்து மூலமாக அளிக்கப்படும் ஆவணம். பிரமாணம் தமிழ் வழக்கல்ல. உண்மை என்று உறுதியளிக்கப்பட்ட தரவுகளைக் கொண்ட எழுத்து மூலமான வாக்குமூலம் அல்லது உறுதிமொழி. affidavit என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் உறுதியிட்டுரை. சுருக்கமாக உறுதியம் எனக் குறிக்கலாம். |
852. affidavit of service | ஊழிய உறுதியம் ஊழிய மெய்ப்பு(Proof of Service) என்றும் கூறப்பெறுகிறது. Proof – சான்றினை நிறுவு, மெய்ப்பி என்பதன் அடிப்படையில் பிழை திருத்தப்படியை மெய்ப்பு எனத் தவறுதலாகக் கையாள்கின்றனர். அகராதிச் சொற்கள் அடிப்படையில் மட்டும் சொல்லாக்கம் மேற்கொள்வது தவறு என்பதற்கு இச்சொல்லே சான்று. எனவே, மெய்ப்பு என்பது தவறு. எனவே பணிச்சான்று எனலாம். ஆனால், இங்கே அது பொருந்தாது. |
853. Affirmation | உறுதியுரை, மெய்யுறுதி, ஏற்றுறுதிப்படுத்துதல் உறுதிமொழி வாக்குறுதி. உண்மையைக் கூறுவதற்காக ஒருவர் கூறும் பற்றுறுதி மொழி. வாக்குறுதியில் பொய்கூறுதல் குற்றமாகும். |
854. affirmative covenant | விதியுறு உடன்பாடு வரைநிலை உடன்பாடு சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு வகை உறுதிமொழி அல்லது உடன்பாடு விதியுறு உடன்பாடு எனப்படும். நேர்மறை வரைமொழி உடன்பாடு என ஓர் அகராதியில் குறிக்கப்பெற்றுள்ளது. affirmative என்பதை நேர்மறை என்னும் பொருளில் இந்த இடத்தில் கையாள வேண்டா. சில விதிகளை வரையறுப்பதால் வரைமொழி என்பது சரிதான். இதையே வரைநிலையில் உள்ள உடன்பாடு என்னும் பொருளில் வரைநிலை உடன்பாடு எனக் குறிக்கப்பட்டுள்ளது. |
855. Aggravate the punishment | தண்டனையை மேலும் கடுமையாக்கு (மக்கள் சார்பாளுமைச் சட்டம் 2003 பிரிவு 13) Aggravate என்றால் மேலும் கேடாக்கு, தீங்குபெருக்கு, சினமூட்டு, தீங்கைப் பெருக்கு சிக்கலாக்கு, தீவிரமடைதல், மிகைத்தல் என அகராதிகளில் பொருள்கள் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் இங்கே கடுமையாக்கு என்ற பொருளிலேயே வருகிறது. |
856. Aggravated assault | கடுமையாகத் தாக்க முனைதல் தாக்குதல் என்பது குற்றச்செயல். வன்முறைகளைப் பயன்படுத்திக் கடுமையாகத் தாக்குதல் கூடுதல் தண்டனைக்குரிய குற்றமாகிறது. |
857. Aggravation | கடுமையாதல் தீங்கு பெருக்கல் aggravation என்னும் இடைக்கால பிரெஞ்சுச் சொல்லின் பொருள் மேலும் மோசமாக்கு / தீங்கு பெருக்கல் / சினமூட்டுகை தீங்கு/சினம் மேலும் கடுமையாக அதிகரிகரிக்கப்படுவதால் கடுமையாதல் எனச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. |
858. Agreement | உடன்பாடு உடன்படிக்கை இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட பொருண்மையில்/பொருண்மைகளில் கருத்தொருமித்து, ஒத்திசைந்து, இணங்கி உடன்பாட்டை எழுத்து மூலமாகத் தெரிவித்தல். இந்து தத்தெடுப்பும் பேணுகையும் சட்டம் 1956, பிரிவு 27 இந்து கற்றல் ஆதாயச் சட்டம் 1930 பிரிவு 4(இ) தொல்பொருட்கள் கலைக்கருவூலங்கள் சட்டம் 1972 பிரிவு 20(1)(அ) (S. FJA, 1947) (S. 2(a) FA(ETDFL)A,2002) |
859. Agreement in restraint of marriage | திருமணத் தடை உடன்பாடு திருமணத் தடை ஒப்பந்தம் பெண்வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் இணங்கி நடைபெற உள்ள திருமணம் ஒன்றிக்கு எதிராகப் போடும் தடை ஒப்பந்தம். அதே நேரம், இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் 26 ஆம் பிரிவு, ” சிறார் திருமணம் தவிர, வேறு எந்த ஒருவரின் திருமணத்தையும் தடுக்கும் எந்தவோர் ஒப்பந்தமும் செல்லாது” என்கிறது. அதுபோல், எந்த ஒருவரின் திருமண உரிமைக்கு அல்லது எவரையும் திருமணம் செய்யும் அவரின் உரிமைக்கு எதிரான எந்த ஒப்பந்தமும் செல்லாது என்கிறது. |
860. Agreement of indemnity | ஈட்டுறுதி உடன்பாடு நிதிப்பொறுப்பிற்கு எதிரான பாதுகாப்பு. ஒரு தரப்பினர் மறு தரப்பினருக்கு ஏற்படுத்தும் இழப்புகள், சேதங்கள் முதலியற்றிற்கு எதிராகப் பணம் அல்லது ஈடு செலுத்த ஒப்புக் கொள்கிறார்கள். பணக்காப்பின் மூலம் சிறையிலிருந்து அல்லது சிறைக்குச் செல்லாமல் வெளி வருவதால் பிணைக் காப்பு என்றும் குறிக்கப்பெறுகிறது. |
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply