சட்டச் சொற்கள் விளக்கம் 906 – 910 : இலக்குவனார் திருவள்ளுவன்

(சட்டச் சொற்கள் விளக்கம் : 901-905-தொடர்ச்சி)
சட்டச் சொற்கள் விளக்கம் : 906 – 910
906. assistance,food./Food assistance | உணவு உதவி அரசாங்கம், தன் நாட்டு மக்களுக்கான பசியைப் போக்க உதவுதல், நாட்டில் உள்ள சிறாரின் உணவுத்தேவையை நிறைவேற்ற உதவுதல், பள்ளி மாணவர்களின் பசியைப் போக்க உதவுதல், நண்பகல் உணவுத் திட்டம், காலை உணவுத் திட்டம், 60 அகவைக்கு மேற்பட்ட முதியோரின் பசியைப் போக்க உதவுதல், இலவச உணவு அளித்தல், சலுகை விலையில் உணவு அளித்தல்,அரசுடன் இணைந்தோ தனித்தோ தனிப்பட்ட அமைப்புகளோ தனியாரோ பசிப்பிணி போக்கல் என நாட்டிறகு நாடு உணவு உதவிகள் உள்ளன. ‘உறுபசி யில்லாத நாடே நாடு’ என்கிறார் திருவள்ளுவர். “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்” என்கிறது மணிமேகலை. இருக்கும் நலன்களை எல்லாம் அழிக்கும் பசிப்பிணி என்னும் பாவி என மணிமேகலை வாயிலாகப் புலவர் சீத்தலைச் சாத்தனார் கூறுகிறார், பசியைப் போக்குவதை அறமாக இலக்கியங்கள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் கோயில்கள் இப்பணியை ஆற்றி வருகின்றன, தமிழ்நாட்டில் சத்துணவுத்திட்டம், நண்பகல் உணவுத்திட்டம், காலை உணவுத்திட்டம் முதலியவை நடைமுறையில் உள்ளமை போல் பல நாடுகளிலும் பசிப்பிணி என்னும் பாவி தரும் துன்பத்தைத் தணிக்கும் திட்டங்கள் செயற்பாட்டில் உள்ளன. இயல்பான இத்திட்டங்கள் தவிர, இயற்கைச் சீற்றங்களால் பாதிப்புற்றோர், தொற்றுநோய்ப் பரவுதலால் வாடுநர், நெருக்கடிக்காலங்கள், போர்க்காலங்களில் நலிவுறுவோர், உள்நாட்டுப்போர், போர் முதலிய காரணங்களால் பலம்பெயர்ந்து வந்து பசியால் நலிவோர் முதலானவருக்கும் அளிக்கப்படும் உணவு உதவி, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 – இன் மூலம் இந்திய அரசு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுப் பணிகள் போன்ற பல்வேறு அரசு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது போன்ற சட்டங்கள் ஏற்கெனவே தமிழ்நாடு, பீகார், சத்தீசுகர் முதலான பல மாநிலங்களில் உள்ளன, பசித்தோருக்கு உணவு வழங்குதல் போல் பிறருக்குத் தரமான உணவுப்பொருள்கள் வழங்குதலையும் அரசுகளின் சட்டங்கள் உறுதி செய்கின்றன. உணவுத் திட்டங்களில் நேரும் முறைகேடுகளைக் களைய நீதிதுறை உதவுகிறது. |
907. assistance,foreign/Foreign assistance | அயலக உதவி வெளிநாட்டு உதவி வளர்ச்சியுறா நாடுகளுக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கும் வளர்ச்சியுற்ற நாடுகளும் செல்வ நாடுகளும் உதவுதல். நிதியுதவியாவோ உணவு முதலிய பொருள் வழங்கலாவோ தொழில்நுட்ப உதவியாகவோ ஆதார வள உதவியாகவோ அளித்தல். அயலக உதவிகளை வழங்குவதற்கேற்ற செயல் திட்டங்களும் உள்ளன. இவை தொடர்பில் சட்டச்சிக்கல்கள் ஏற்படின் செயற் திட்ட விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள வழக்கு வரம்பிற்குரிய நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதி காண வேண்டும். |
908. assistance, government/Government assistance | அரசு உதவி குறிப்பிட்ட அளவுகோல்களின்படித் தகுதியுடைய தனியருக்கோ பிரிவினருக்கோ அமைப்பிற்கோ அரசு செய்யும் உதவி. அரசு என்பது உள்ளாட்சி அமைப்பு, மாநில அரசு, தேசிய அரசு. பன்னாட்டு அமைப்பு முதலியவற்றை உள்ளடக்கியதே. அரசு உதவி என்பது முழு நிதியுதவி, பகுதி நிதியுதவி, பொருளுதவி, மூலப் பொருளுதவி, தொழில் தொடங்க உதவி, வரிச்சலுகை உதவி. போன்று பலவகைப்படும், அரசு உதவித் திட்டங்களில் முறைகேடுகள் நிகழ்வதைத் தடுப்பதற்கும் முறைகேடுகளைச் செய்வோர்களைத் தண்டிப்பதற்கும் சட்டங்களின்படி நீதி மன்றங்கள் உதவுகின்றன. |
909, assistance, humanitarian/Humanitarian assistance | மனிதநேய உதவி மாந்தநேய உதவி மனிதாபிமான உதவி என்பர். அபிமானம் என்பது அயற்சொல்லின் தமிழ் வடிவம். நன்மானம் எனலாம். சில இடங்களில் தன்மானம் என்றும் பொருள்படும். மாந்தநேய உதவி என்பது மாந்தரால் உருவாக்கப்பட்ட நெருக்கடிகள், இயற்கைப் பேரழிவுகளின் போதும் அவற்றுக்குப் பின்னரும் உயிர்களைக் காப்பாற்றவும் துன்பங்களைத் தணிக்கவும் மக்களிடையே பேணவும் நல்கப்படும் உதவியும் செயற்பாடுகளுமாகும். இவை உணவு, தண்ணீர், தங்குமிடம், மருத்துவ உதவி, பேணுகை, பாதுகாப்பு முதலிய பல்வேறு செயற்பாடுகளை உள்ளடக்கியன. மாந்த நேய உதவி என்பது மனிதநேயம், பாகுபாடற்ற தன்மை, நடுநிலைமை தன்னுரிமை முதலிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. மாந்த நேய உதவியில் பன்னாட்டு மாந்த நேயச் சட்டம் [International humanitarian law(IHL)] குறிக்கத்தக்க இடத்தை வகிக்கிறது. இஃது ஆயுத மோதலின் சட்டங்கள் (laws of armed conflict) என்றும் குறிப்பிடப்படுகிறது. இது போரின் நடத்தையை ஒழுங்குபடுத்தும் சட்டமாகும் (இலத்தீனில் jus in bello ;jus=சட்டம்; bellō = போர்) இது பன்னாட்டுச் சட்டத்தின் பிரிவு ஆகும். இது போர்களில் பங்கேற்காதவர்களைப் பாதுகாப்பதன் மூலம் ஆயுத மோதலின் விளைவுகளைக் குறைக்க முயல்கிறது மேலும், போராளிகளுக்குக் கிடைக்கும் போர்க்கருவிகளையும் வழிமுறைகளையும் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துகிறது. |
910. assistance, immediate/Immediate assistance | உடனுதவி உடனடி உதவி உதவி தேவைப்படும் நேர்வில், எவ்வகைக் காலத்தாழ்ச்சியுமின்றி உடனடியாக அத்தகைய உதவியைச் செய்தல். இதனைத்தான் திருவள்ளுவர் “காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. ” (திருக்குறள் ௱௨ – 102) எனக் குறிப்பிடுகிறார். உதவித் தேவைப்படுநரும் உதவுநரும் தனியராகவோ பலராகவோ குறிப்பிட்ட பிரிவை அல்லது ஊரை அல்லது நகரை அல்லது அமைப்பை அல்லது மாநிலத்தை அல்லது நாட்டை குறிப்பதாகவோ இருக்கலாம். சட்டத்தில் குற்றச் செயலால் பாதிப்புறுநருக்கோ சில நேர்வுகளில் குற்றம் சாட்டப்படுநருக்கோ தேவைப்படும் உதவியையும் குறிக்கும். |
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply