thamizh01

குறள்நெறி  மாசி 18. 1995 / 01.03.1964 இதழில், ‘பாரதம்’ எம்.சி.(இ)லிங்கம் என்னும் நண்பர் இந்தி குறித்துப் பின்வருமாறு எழுதி 7 வினாக்களைத் தொடுத்து விடை கேட்டிருந்தார்.

நான் பிறப்பால் தமிழன்! மொழியால் தமிழன்! என் கதை, கட்டுரைகளில் தமிழ் தவிரப் பிற மொழிச் சொற்கள் இடம் பெறா!

 சுருங்கக்கூறின் என் உடல், பொருள், ஆவி தமிழ்தான்!

எனினும் தேசியப்பற்று உடையவன். என் தேசம் இந்தியா! என் தலைவர் நேருசி, என் உரிமை காமராசர், என் சகோதரசகோதரிகள் நாற்பது கோடி மக்களும்!

ஆக, மொழியால் தமிழையும், நாட்டால் இந்தியாவையும் விரும்புகின்ற நான் தங்கள் இதழான குறள்நெறியைத் தொடர்ந்து படித்து வருகிறேன்!

 

அதில் தாங்கள் மொழிபற்றிய கருத்துகளில் கையாளும் தன்மை அவ்வளவு மன நிறைவு தருவதாகத் தெரியவில்லை!

 

அதனால் எழுந்த சில கேள்விகள்தாம் கீழே தருகிறேன். அதற்குத் தாங்கள் தயவுகூர்ந்து விவரமாக விடை கூற  வேண்டுமென்று நன்றிஉணர்வுடன் வேண்டிக் கொள்கிறேன்.

 

வினாக்கள்:

  1.  இந்தியால் தமிழ் எந்த வகையில் அழிந்தது? அழிகிறது? அழியும்?
  2. நம்நாட்டில் உள்ள மாநிலங்களின் தொடர்பிற்கு உரியமொழிஇந்தி என்பதனை ஒப்புக் கொள்கின்றீர்களா?
  3.  தமிழ்நாட்டில் இதுவரை எந்தெந்த இடங்களில் இந்தி புகுந்துள்ளது? அதனால் தனிமனித வாழ்வு யாருக்காவது பாதிக்கப்பட்டுள்ளதா?
  4. இந்தி மொழியால் எங்காவது ஓரிடத்தில் தமிழ் மொழி மறைந்திருக்கிறதா?
  5. பிறமொழிகளைக் கற்பதால்தான் ஒருவனின் தாய்மொழி உலகப் புகழ்பெற முடியும் என்ற கருத்தை ஒப்புக்கொள்கிறீர்களா? இந்த வகையில்தான் தமிழால் ஆகிய திருக்குறள் இன்று உலகப் புகழ் கண்டுள்ளது என்பதை மறைக்க இயலுமா?
  6. மொத்தத்தில் இந்தியால் நம் தமிழ் கிஞ்சித்துஞ் சிதைவுறாது என்று பசுமரத்தாணிபோல என் மனத்தில் பதிகிறது! இதில் உங்கள் மனச்சாட்சி என்ன?
  7.  இறுதியாக தாங்களும் இன்னும் சிலரும் வேண்டாத இந்த மொழி விடயத்தில் இறங்கி இந்தி தமிழ் எனப் பிரித்துப் பேசுவதால் அது ஒரு சில கட்சிகளுக்கு வளர்ச்சியாகவும் நம் இந்தியத் தேசத்தின் பற்றிலிருந்து ஒரு சிலரை வெளியேற்றுவதாகவும் அமைகிறது என்பதை உணருகிறீர்களா?

 

.ஐயா,

தாங்கள் இக்கேள்விகளுக்கு விரைவிலேயே விடை கூறவேண்டும் என்று விரும்புகின்றேன். தங்கள் விடை எனக்கு மனநிறைவு அளிப்பதாக அமைந்தால் மறுநாளே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முதலாவதாக இறங்கி விடுகின்றேன். இது உறுதி. சத்தியம்.

– ‘பாரதம்’ எம். சி.(இ)லிங்கம்

 

இவர்  கேள்விகட்கு

விடை எழுதுவோர் எழுதலாம். விடைகள் அன்புடன் வரவேற்கப்படும். அன்பர்கள் கருத்துகளை எல்லாம் வெளியிட்ட பின்னர் ஆசிரியர் கருத்து அறிவிக்கப்படும்.

ஆசிரியர்.

 

இவ்வாறு இடம் பெற்றவினா விடைகள் அகரமுதல  இதழில் தொடர்ந்து வெளிவரும். எனினும் இக்காலச் சூ்ழலில் இன்னும் ஆழமான விடைகளை அன்பர்கள் எழுதி அனுப்பினால் அவையும் வெளியிடப்பெறும். அன்பர்கள் விடை தருவார்களாக! – ஆசிரியர்