-வழக்குரைஞர் வே.சௌந்தரராசன்-

mozhi inam nilam01

இந்தியப் பாராளுமன்றின் அலுவல்களில் புதிய சில நெருக்கடி நிலைகள் தோன்றியுள்ளன. அரசியல் மேகமோ இருள் சூழ்ந்ததாக இன்று மாறி வருகின்றது. புயலடிக்கத் தொடங்கியுள்ளது போன்ற அச்ச உணர்ச்சி ஆங்காங்கே பரவலாகத் தென்படுகின்றது. இதுகாறும் பல்வேறு நல்ல முடிவுகளைக் கண்ட இப்பேரவை இன்று ஏனோ ஆட்சிமொழிச் சிக்கலுக்கு உரியதோர் தீர்வு காணவியலாது நிற்கின்றது. நல்லோர் உள்ளங்களில் அதுபற்றி அமைதி குலைந்து காணப்படுகின்றது. ஆளவந்தார் இதனை எளிதெனக் கருதி அதிகாரத்தையே நம்பி நிற்கின்றனர். மக்களாட்சி முறைக்கு ஒரு வினாக்குறி எழுந்துள்ளது என்றே சொல்லவேண்டும். ஆட்சிமொழி பற்றிய ஆர்வலர் சிலர் அரசியல் நலன் கருதி ஆரவாரம் செய்வதாகக் கூறுவது முறையன்று. அவரவர் தம் தாய்மொழி வழியாகவே நாட்டுணர்வு பெறுதலும், அதனையுறுதுணையாகக் கொண்டு கலை, பண்பாடு, வரலாற்றுப் பெருமைகள், இலக்கியம், கணிதம், ஆயபலவற்றையும் வளர்ப்பதும் உலகியல் மரபு. ஐரோப்பிய நாடுகளான செர்மனி, உருசியா, பிரான்சு போன்ற நாடுகளின் வளர்முறைகள் நமக்கு இவ்வுண்மையைத் தெள்ளிதின் புலப்படுத்துகின்றன. அதேபோன்று இன்று இந்தியாவிலும் தாய்மொழிவழியாக நாட்டுணர்வும் நாட்டு நிருவாகமும் மேற்கொள்ள குடிமக்கள் பெரிதும் விழைந்து நிற்கின்றனர். இவ்விழைவு ஒரு மொழி பேசுவோரிடை புகுததைப்படுவதன்று, இயல்பின் உருவாவது கருவிலிருந்து. இதனை எஞ்ஞான்றும் தவிர்க்கவும், தடுக்கவும் வல்ல வேற்றுணர் வொன்று இல்லை. குருதியிற் பிணைந்து உறுதியாய் நிற்பது ஆகலின் மொழியுணர்வு முதலுணர்வாகவும் முடிவுணர்வாகவும் ஒவ்வொரு குடிமகனிடத்தும் ஆட்கொண்டு விடுகின்றது. அதில் தமிழ் மொழி போன்று தன்பாலில்லாதது இல்லை எனக் கூறுமளவு சொல்வளம், கற்பனை, இலக்கணம் அத்துணையும் நன்கு வளர்ந்து செந்தண்மை பெற்றுள்ள மொழிபேசுவோர் நிலை சற்று மிகுதியான பெருமையோடு விளங்குவதில் வியப்பதற்கேதுமில்லை. நிலத்தால் மாநிலமொழி என்றால் ஒப்பியல் நிலையாலும் அதுவேதான் எனத் தமிழைக் கூற முடியாது. மாநிலங்களைக் கடந்து உலகின் பல நாடுகளிலும் சென்று சிறப்புப் பெற்றுள்ள சிறந்த மொழி தமிழ். தமிழ் நன்கறிந்தோர் இதனை உலக மொழி உலகியல் மொழி என்றே ஒப்புவர். இத்தகு சீர்த்த நன்மொழிக்கு இன்று இடர்ப்பாடுகள் பல எழுந்துள்ளன. அவற்றை ஆய்ந்து நமது மொழி வழியாக அரசியலுரிமை, தொழில் வளர்ச்சி, துணைக் கண்டத்தின் எதிர்கால ஒற்றுமை; கூட்டாட்சியின் தன்மைகள், மக்களாட்சி மாண்பும் ஆயவற்றை நாம் பெறவேண்டும் தனித்தன்மைகளுக்கு மாசு ஏற்படின் தனிமனிதனுக்கும் மாசு ஏற்படும் என்பதை மொழிச்சிக்கலில் முன் வைத்து ஆய வேண்டும்.

துணைக் கண்டத்தில் நிலைப் பரப்பளவு ஒருமைப்பாடு ஏற்படுத்தக் கருதி அரசியல் சட்டத்தில் இந்திக்கு ஏற்றம் தர 1948ல் அரசியல் நிர்ணய சபையினர் ஒப்பினர். பெரும்பான்மையோரால் பேசப்படுவதாக ஒரு குறிப்பினை ஏற்படுத்திக்கொண்டு அத்தகு ஒரு சார்புள்ள முடிவினைச் செய்தனர். அச்சபையின் காங்கிரசுக் கட்சி உறுப்பினர்களது தனிக் கூட்டத்தில் இந்தியாவின் எதிர்காலப் பொதுமொழி, என்ற வாதம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதில் அச்சபைசரியாய் இரு கூறாய்ப் பிளந்து ஒரு சாரார் இந்திதான் வேண்டும் என்றும் பிறிதொரு சாரார் இந்தி அறவே கூடாது என்றும் கூற இறுதியில் அவைத்தலைவர் தமக்கென்றுள்ள தனிச்சிறப்பு வாக்கினை இந்திக்கு ஆதரவாக அளித்து இந்தியே இந்தியாவின் எதிர்காலப்பொது மொழி என முடிவுகட்டினர். காங்கிரசாருள்ளேயே பெரும்பான்மை பெற முடியாது. நன்கொடைபோன்றதோர் வாக்கினால் திடுமென உருவான, அதாவது இன்றைக்குப் பதினைந்து ஆண்டுகட்கு முன்னர் ஏற்பட்ட, முடிவினையே நாம்தவறு என்கிறாம். ஏன்? அந்தச் சபை இந்தியக் குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதன்று; நியமிக்கப்பட்ட மன்றேமேயாம். அன்று மக்கள் குரல் அங்கு ஒலிக்கவழியில்லை கட்சிக்குரல்தான் அது என்பதில் ஐயமில்லை. பின்னர் வந்த பாராளுமன்றம் இப்பொதுமொழிச் சிக்கல் குறித்துத் தனி குழு ஏதும் ஏற்படுத்தி ஆய்ந்தால் இந்திக்கு உயர்தனி இடம் இல்லாமற்போகலாம் என வஞ்சி தமக்கு முன் கூறப்பட்ட பழைய கருத்தானையை ஏற்பதாக உடன்பட்டனர். உடன்பாடு எதற்கென்றால் கட்சியைச் சரிகட்ட, சிக்கலை அல்ல, தொலைநோக்கற்ற அரசியல் புரிந்ததன் விளைவாக இன்று ஆட்சிமொழிச் சிக்கல் ஒரு பெரும் நெருக்கடியைத் தோற்றுவித்து விட்டது.

அரசியல் சட்டத்தில் இந்தி, இந்துத்தானி, குசராத்தி, மாட்டியம், வங்காளி, உருது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி போன்ற பதினான்கு மொழிகள் ஒன்றிற்கொன்று சமவாய்ப்பிற்கும் சம தகுதக்கும் உரியவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன்படி இந்தி அனைத்திந்திய மொழி என்றால் உருதுவும் அனைத்திந்திய மொழிதான், தமிழும் அனைத்திந்திய மொழிதான் என்ற பொருள். இவற்றுள் ஒரு மொழி பிறிதொன்றனுக்கு உயர்ந்ததன்று என்ற உறுதிப்பாடும் இருக்கின்றது. இது மாநிலமொழி, அது அனைத்திந்தியத் தகுதியுள்ள மொழி என்று பரிந்துரைக்கப்படவுமில்லை. உண்மை இவ்வாறிருக்க, இன்று இந்திக்கு மட்டும் தனித்தகுதியும் தனிச்சிறப்பும் அளிப்பது தவறினும் தவறு. வாக்குறுதியைப் பற்றிக் கணிக்கின்ற போக்காகும். பதின்மூன்று மொழிகளுக்கும் மேலான ஒரு தலைமையை உருவாக்கித் திட்டமிட்டுத் திணிப்பது அறமாகாது, அரசியலுமாகாது.

ஈதென்ன வேடிக்கை! பதினான்கு மொழிகளிலும் ஒரு சேர நிருவாகம் நடத்தவியலுமா என்ன என்கிறார்கள். பதினான்கு எங்கேயிருந்து வரும். சட்டத்தில் மக்கள் மனமுவந்து அளித்த உரிமையினை உயர் நல் வாய்ப்பினைத் தங்களுக்கு வேண்டா என்றும் இரண்டாந்தர நிலையே போதும் இந்திக்கே எங்கள் ஆதரவு, எங்களது மொழிக்கு மாநில அளவில் மட்டும் உயர்வுகிட்டின் போதும் அனைத்திந்திய ஆட்சி மொழியாவதெற்கென அரசியல் சட்டமளித்துள்ள உயர்தகுதி, வாய்ப்பு எதும் வேண்டா எனத் துறவுக்கோலம் பூண்டு, வலிந்து உரிமையினை இழக்கிறோம்… தெரிந்தே விடுகிறோம் என்றும் சட்டமன்றின் வாயிலாகத் தீர்மானித்து விட்டோரைப் பற்றிக் கணக்கிலெடுத்துக் கொண்டு மீண்டும் பதினான்கு, பதினான்கு என்றால் என்ன பொருள்? இது தமிழ் மக்களின் தெளிவுக்குத் திரைபோடும் முயற்சியா? மக்களாட்சி முறைக்குக் கறையேற்படுத்தும் விண் கூச்சலா? சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆக இந்தி ஒன்று தமிழ் ஒன்று எனப் பொதுமொழிகள் இரண்டுதானே நடைமுறைக்கு வரமுடியும். நாற்பத்தைந்து கோடி மக்களுள்ள துணைக்கண்டத்தில் இரண்டு மொழிகளில் நிர்வாகம் நன்கு நடத்தலாமே மற்ற பதின்மூன்று மொழியினர் தங்கட்கு இந்திய நிலை வேண்டா என்றும் இந்தியே அதற்குப் போதும் என்றும் முடிவாகச் சொல்லிவிட்டதால் இந்தி என்பது பதின்மூன்று மாநிலங்களுக்குப் பகராளுமை(பிரதிநிதித்துவம்) வகிப்பதாகிறது. அவர்கள் போலல்லாது அரசியல் சட்டத்தில் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பினைத் தமிழ்பெற விழைகிறது. அது ஏனை மொழிகளோடு அன்றே தமிழுக்கும் அளிக்கப்பட்ட உரிமை; ஏனையோர் இவ்வுரிமையை விரும்பி இழக்கின்றனர்; இழப்பது தங்களுக்குப் பெருமை என்று கூடச் சொல்கின்றனர் என்பதால் தமிழும் அங்ஙனம் தனது உரிமையினை இழக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அறிவுடைமையாகுமா? அதை யாராலும் வற்புறுத்தவும் முடியாது. இந்திக்கு மத்தியாட்சியில் ஒரு இடம் அளிப்பது நியாயமே. ஆனால் தமிழுக்கு அதன் இடம் இல்லை என்பது அரசியற் சட்டத்தாலல்லாமல் வேறு எதைக் கொண்டு? இந்தியின் மீது தமிழர்க்கு வெறுப்பில்லை ஆனால் தமிழரல்லாத அத்துணைபேருக்கும் தமிழின் மீது பொருளற்றதோர் வெறுப்பு, காழ்ப்பு, சீற்றம் எல்லாம் ஏற்படுவதேனோ? உரிமை மறுக்கப்படுவதன் விளைவுதானே. கிளர்ச்சி விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தீர்வு காண வேண்டின் இந்திய அரசியல் சட்டத்தின் ஆட்சிமொழிப் பகுதியினை அப்படியே நீக்கிவிட்டு இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாகவிருக்கும், ஏனையவை அந்தந்த மாநில அளவில் மட்டும் இருந்துவரும் என்று வெளிப்படையாக அறிவித்திடல் இன்றேல் சட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை எந்த விலை கொடுத்தேனும் எதையிழக்க நேரிடினும் தந்தேயோகவேண்டும். அதுதான் அரசியல் அறநெறி.

–          குறள்நெறி  மாசி 18. 1995 / 01.03.1964