–       கூடலரசன்

 mozhi01

இந்தியத் துணைக்கண்டத்தில் நிலையான விவாதத்துக்குரிய சிறந்த பொருளாக மொழிச்சிக்கல் அமைந்துள்ளது அரசியல் வடிவம் பெற்றுள்ள மொழிஆதிக்கம் பெருநிலப் பரப்பின் கருப்பொருளாக அனைவரின் சிந்தனையையும் கவர்ந்துள்ளது. ஆட்சிப்பீடத்து ஆதிக்க மொழியாக நான்கு நூற்றாண்டுகள் இடம் பெற்றிருந்த ஆங்கிலம் அகற்றப்படுவதும், அந்தச் சிறப்பான உரிமையை இந்தி மொழிக்கு வழங்குவதும் இமயம் முதல் குமரிமுனை இறுதியாக கடுமையான கண்டனத்துக்குரியதாக அமைந்துள்ளது. இந்திக்கு மகுடம் சூட்டினாலும் ஆங்கிலத்தின் தேவையைப் புறக்கணிப்பது இயலாத செயலாக இருக்கிறது. ‘அறிவுப் பெருக்கத்திற்கு ஆங்கிலம் தேவையாகும். அனைத்திந்தியத் தொடர்பு மொழியாக ஆங்கிலமே நீடிக்க வேண்டும். இந்திமொழி அனைத்திந்தியத் தொடர்பு மொழியாகக் கூடிய நிலையை இன்னும் அடையவில்லை. இந்தியாவிலுள்ள பல்வேறு மொழிவழி மாநிலங்களுக்கிடையே செய்திப் போக்குவரத்துத் துறையில் வளர்ந்துவரும் தேவையை நிறைவு செய்வதில் ஆங்கிலமே சிறந்தமுறையில் பயன்படமுடியும். வட்டார மொழிகள் ஆங்கிலத்தின் இடத்தை நீக்கிவிடும் அளவுக்கு வளர்ச்சியுறவில்லை; அதன் இடத்தைப் பிடிப்பது இயலாத ஒன்றாகும்’ இந்திய அரசின் இன்றைய கல்வி அமைச்சர் எம்.சி.சக்ளா அவர்கள் இந்தக் கருத்துகளை பம்பாய் – குசராத் சீக்கியக் கழகத்தின் 22-ஆவது விழாவில் பேசும்போது மிகவும் துணிவுடன் கூறியுள்ளார். ‘‘ஆங்கிலத்தை அகற்றுவது அறிவுக் கதவை மூடுவதாகும். இந்தி வெறியர்களின் மனப்போக்கு மாற வேண்டும். எல்லாம் இந்திமயமாக மாறவேண்டும் என்று கூக்குரலிடுவது, இயல்பான உண்மைகளைக் காண மறுத்துக் கண்களை மூடிக்கொள்வதாகும்’’ – இதனை, மத்திய நலவாழ்வு அமைச்சர் மருத்துவர் சுசீலா(நாயர்) அவர்கள் சென்னை ‘இந்திப் பிரச்சார சபை’யின் பட்டமளிப்பு விழாவில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளார். ‘‘மொரார்சியின் இந்தி வெறிக்கு ஆந்திர மாநில மக்கள் எதிர்ப்பு, இந்தியில் பேசுகையில் கூட்டத்தை விட்டு வெளி நடப்புச் செய்தனர். முரட்டுத்தனமான போக்கிற்கு மக்கள் சரியான பாடம் கற்பித்துள்ளனர்’’ என்ற செய்தித் துணுக்கும் ‘தினத்தாட்’களில் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் & இந்தி இரண்டின் நிலையும் இந்திய அரசில் பொறுப்பேற்றுள்ளவர்கள் விளக்கியுள்ளனர். ஒரு மொழி ஆதிக்கம் இந்தச் சிக்கலை உருவாக்கியுள்ளது.

ஆங்கிலத்தின் இன்றியமையாமையை முற்றும் உணர்ந்து உரை நிகழ்த்திய சக்ளாவைப் போலவே வேறு பல அறிஞர்களும் அவர் தம் அருமையான கருத்துகளைச் சொல்லியுள்ளனர். இந்தியத் தலைமையமைச்சர் அவர்கள் கூட அடிக்கடி அதனை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் வேறொர் நிலையில் இந்தியைத் தமக்கையாகவும், தமிழைத் தங்கையாகவும் ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார் இந்தச் செய்தியுடன். ‘‘கீழ் வகுப்பிலிருந்தே ஆங்கிலம் கற்றுத்தரப்பட வேண்டும். சிறுவர்களின் எதிர்காலம் அதில் அடங்கியுள்ளது -இந்தியின் திணிப்புத் தேவையன்று’ என்று குசராத் அரசுக்கு அந்த மாநிலத்து ஆமாதாபாத் பெற்றோர்கள் சங்கம் இறுதி எச்சரிக்கை அனுப்பியிருக்கும் சிறந்த குறிப்பும் காணப்படுகின்றது. மொழிச்சிக்கலின் இந்திக்குள்ள பொது மன்றத்து குறைந்தளவு ஆதரவினையே நம்மால் உணர முடிகிறது. உலகப் பொதுமொழியென்ற உயர் நிலையிலிருக்கும் ஆங்கிலம் துணைக் கண்ட மக்களிடையே தொடர்பு மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத கட்டாயமான வலியுறுத்தப்பட்ட உண்மையாகும். வட்டார மொழிகளின் வளர்ச்சியை ஆங்கிலம் கட்டுப்படுத்திவிடும். இந்தி வளப்படுத்தும் என்று வலிவான சான்றுகளைச் சொல்லிச் சொற்போரிட ஆயத்தமாக இல்லை. இந்தியின் தகுதியைக் குறைத்து மதிப்பிட்டால் எதிர்ப்பாளர்களின் தூண்டுதல் என்றெண்ணுவோரும் உண்டு. ஆழ்ந்த மொழித்திறனாய்வு படைத்தோரும் கூட இந்தப் பழியினின்று விடுவித்துக் கொள்ள முடிவதில்லை தமிழகத்துப் புலவர் குழுவினர். கன்னியா குமரியிலும் புதுவையிலும் கூடி முடிவெடுத்தபோது அரசியல் கட்சி சார்புடையோர் இவ்விதமே மதிப்பிட்டனர். ஆனால் ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாகவே இந்தியை ஆட்சி மொழியாக்குவதற்குப் பெருமுயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அதனுடைய நிறைவுக்குறையை எவராலும் சரி செய்ய இயலவில்லை. அண்மையில்தான் சட்டச் சொற்களை இந்தியில் மொழி பெயர்க்கக்குழு அமைத்துள்ளனர். ஆட்சி மொழியாகப் பயன்படக்கூடிய தரமான இந்திச் சட்டச் சொற்களை உருவாக்க மத்திய அரசினரின் சட்டங்கள், விதிகள், ஆணைகள் இவற்றுக்குரிய சட்டச்சொற்களைத் தேடிக் கொண்டுள்ளனர். இதைப்போல் எத்தனையோ வகையான முயற்சிகளுக்காகப் பொதுமக்களின் வரிப்பணம் வீணடிக்கப்டுகின்றது என்ற உண்மை எவராலும் மறுக்க முடியாத ஒன்றாகும். அரசியல் சார்பு சூழ்நிலைகளுக்கு அப்பால் பணியாற்றும் மொழி வளர்ச்சியின் சிந்தனையாளர்கள், கட்டாயமாகத் திணிக்கப்படும். மொழிச் சிக்கலைத் தீர்க்க முற்பட வேண்டும்.

இந்தியாவின் தேசிய மொழியாகப் பதினான்கு எண்ணிக்கை விளம்பரப்படுத்தப்பட்டாலும் இந்திமொழி ஒன்றுக்கு மட்டுமே ஆட்சிப்பீட உரிமை வழங்கப்பட்டுள்ளது பெரும்பான்மையோர் பேசுகின்ற மொழியென்றும் துணிந்து பொய்யுரைக்கப்படுவது கூர்ந்து நோக்கத்தக்கதாகும். அரசினர் மக்கள் அவையிலும் & மாநிலத்து சட்டமன்றத்திலும் அளித்துள்ள ஆதாரங்கள் எவற்றிலும் இந்தி பேசுவோரின் தனிக்கணக்கை இதுகாறும் காட்ட இயலவில்லை. இந்தி, இந்திசுதானி, உருது, பஞ்சாபி என்ற நான்கு மொழிக்குழுவினர் பேசும் எண்ணிக்கையைத்தான் நாற்பத்துமூன்று விழுக்காடு என்று நாட்டுக்குச் சொல்லி நம்பித்தீர வேண்டுமென்று நம்மையெல்லாம் கட்டாயப்படுத்துகின்றனர். உலக மொழிக்கும் தாய்மொழிக்கும் இடையிலே இன்னொரு தரகு மொழி தேவையில்லை; தவிர்க்கப்பட வேண்டும். இந்தியாவின் மேன்மைக்காகச் சட்டங்கள் செய்யும் ஆட்சிப்பீடத்தவர். சலுகைகளை உருவாக்கித்தரும் அமைச்சர் குழுவினர் மற்ற தேசிய மொழிகள் பற்றி கவனம் கொள்ளவில்லை. ஆங்கிலத்தைத் தேசியமொழி நிலையிலேயிருந்து அயல் மொழியாக அறிவித்துவிட்டாலும், அதனைத் தாய்மொழியாகக்கொண்டவர் விடுக்கும் விண்ணப்பத்திற்கு விடைதர முடியவில்லை. அந்த மக்களுடைய உரிமைக்காகப் பாராளுமன்றத்தில் தொதாடர்ந்து போராடும் பிராங் அந்தோனி அவர்கள் சில நாள்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தபோது இந்தியாவின் நிலையான ஆட்சிமொழியாக இந்தியைத் திணிப்பதற்கு ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்ட கொடுமையான முறைகளை எல்லாம் சான்றுகளுடன் விளக்கியபோது வியப்புடன் மயங்கியவர்கள் எண்ணிக்கையிலே மிக அதிகம் பேராகும். இந்தியாவின் மொழிச்சிக்கல் தமிழ் மக்களின் வாழ்வில் பல ‘சோதனை’களைத் திணிக்கும் திட்டமாகும். ஒருமொழி அதுவும் இந்திமொழியேதான் தமிழர் அனைவரின் வாழ்வியலுக்கும் வரம்புகட்டும் வாய்ப்பினைப் பெற்றுவிட்டதென்றால், மொழிகாக்கும் அரும் பணியினைத் தமிழர் அனைவரும் ஏற்றுக் கொண்டாக வேண்டும். தாய்மொழிப்பற்றால் மேற்கொள்ளும் தலையாய கடமைப் பணிகளுக்கு ‘மொழி வெறி’யென்ற அவதூறு வழங்குவதற்கும் இங்கே சிலர் காத்திருக்கிறார்கள். இந்தியாவின் ஒற்றுமையைக் காத்திடும் பெருநோக்கம் கொண்டவர்கள், இந்தி தவிர ஏனைய மொழிகளுக்கும் உரிய பெருமையினை வழங்க வேண்டும். நினைவிழந்தவர்களுக்குத் தூண்டுதலாக குறள்நெறி விரும்பும் நல்லவர்களின் பணி அமைய வேண்டும். தமிழர் திருநாளில் உறுதியெடுத்துப் பணிபுரிவோம். வாழ்த்துக்கள். வணக்கம்.

–       குறள்நெறி : தை 19. 1995 / 01.02.1964