–சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

 (முந்தைய இதழ்த் தொடர்ச்சி)

தலைவியும் தோழியும்

தலைவியும் தோழியும்

“நம் உயர்வை

 நினைந்தனர் காதலர்” – தோழி

 (தலைவியும் தோழியும்)

 தலைவி: தோழி! அவர் சென்றுவிட்டாரா? நேற்று அவர் உரையாடும் போதே அதன் குறிப்பு . . . . .

 தோழி: அவர் பிரிந்து பொருள் தேடச் செல்வார் என்ற குறிப்புத்தானே?

 தலைவி: ஆம்.

 தோழி: உங்களிடத்தில் “நான் போய் பொருள் தேடி வருகிறேன்” என்று கூறினால் “நானும் புறப்படுகிறேன்” என்பீர்கள். அதனால்தான் குறிப்பால் உணர்த்திவிட்டுச் சென்றார்.

 தலைவி: அவர் நம் தமிழ் மறையைப் படித்திருக்கமாட்டாரா என்ன?

 தோழி: அவரா, நம் தமிழ் மறையாம் திருக்குறளைப் படித்திருக்க மாட்டார் என்று நினைத்தீர்கள்! அவர் கலைபயில் தெளிவும் கட்டுரை வன்மையும் உரையாடும் போது நேரில் அறியவில்லையா?

 தலைவி: அறிந்துள்ளேன். அதில் ஒரு குறளை மறந்துவிட்டாரே என்று தான் நினைக்கின்றேன்.

 தலைவி: ஓ! ஒ!! அந்தக் குறளா?

 தலைவி: எந்தக்குறள்? சொல்லு பார்க்கலாம்.

 தோழி: என்னம்மா? நான் உங்கள் தோழி என்பதை மறந்துவிட்டீர்களா?

 தலைவி: நான் நினைத்த குறள்தான் எது?

 தோழி: அதுதான் அம்மா, ‘காதலியோடு உறைவதைவிடக் கருத்துக்கினிய உலகம் உண்டோ’ என்னும் குறிப்பைத் தரும் குறள்தானே?

 தலைவி: ஆம், அதுதான்!

“தாம் வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக்கண்ணான் உலகு”

 தோழி: வள்ளுவர் பெருமான் அருமையாகத்தான் கூறியுள்ளார். தம்மை விரும்பிக் காதலிக்கும் காதலியின் மென்மையான தோளில் துயிலுவதை விடத், திருமால் உலகம் (வைகுந்தம்) இனியது ஆகுமோ?” என்றல்லவா கூறியுள்ளார். திருமால் உலக இன்பமும் ஈடில்லை என்றல்லவா கூறிவிட்டார்.

 தலைவி: ஆம். அதனால்தான் கேட்டேன். திருக்குறளைப் படிக்கவில்லையே? படித்திருந்தும் மறந்தாரா என்று.

 தோழி: அவர் பொருள் தேடச் சென்றுள்ளதும் நம் பொருட்டுத்தானே? நம் உயர்வுக்காகத்தானே?

 தலைவி: என்ன?

 தோழி: ஆம்; நம்மை அவர் மணந்து இல்லறம் நடத்த வேண்டாமா? அப்பொழுதுதானே பலரறி நன்மணம் பாங்காத நடந்தபின் அறவோர்க்களித்தும், அந்தணர் ஓம்பியும், விருந்தெதிர்கொண்டும் மேன்மையான முறையில் நம் கடனை ஆற்றலாம். அப்பொழுது அல்லவா நம் உயர்வை நிலை நாட்டலாம். அந்த உயர்வை நினைத்தல்லவா சென்றுள்ளார்.

 தலைவி: அவர் செல்லும் வழியைப்பற்றி அறிவாயா?

 தோழி: ஆம், அறிவேன் அம்ம! அவரே தாம் கூறினாரே! கொடிய வழிதான். பாலை நிலம் தான். மரங்களில் இலைகள் கூட இரா. ‘ஞெமை’ மரங்களும் ‘யா’ மரங்களும் உண்டு. வீட்டிலிருக்கிற கோழியின் தாடி போல யா மரத்தின் இலைகள் அமைந்திருக்குமாம். கிளைகள் கருமையாய் இருக்குமாம். அழிந்துபட்ட ஊர்கள் உண்டு. அவ்வழிகளில் யானைகள் பனைமரத்தின் குருந்துக்களைத் தின்று கொண்டிருக்கும். இருட்டிவிட்டால் என் செய்வார்? உணவுக்குக்கு என் செய்வார்? என்று கவலைப்படாதே. மலையைச்சார்ந்து சிறு சிறு வீடுகள் உண்டு. அங்குள்ளவர்கள் வீடுகள் சிறியன ஆனாலும் அவர்கள் உள்ளம் பெரியது. விருந்தினர்களை வரவேற்று விருந்தயர்வதில் சிறந்தவர்கள். இரவில் அவர்கள் வீடுகளில் தங்கி விருந்துண்டுவிட்டுச் செல்வார். கவலைப்படாதீர்கள். காலை நேரத்தில் இளவெயிலில் யானைகள் அசைந்து கொண்டிருக்கும் காட்சி, கடலில் பரதவர் ஓடம் அசைந்து கொண்டு நிற்பது போல் காணப்படும்.

 தலைவி: அவர் வரும் வரையில் நம் முற்றம் அழகற்றுப்போய் விடுமல்லவா? விழாநாளைப்போல் புதுமணல் பரப்பி அழகுபடுத்தி அவரோடு உரையாடுகிற இன்பம் என்று கிடைக்குமோ? இம்முற்றம் இனி வெறிச்சென்று போய்விடுமல்லவா?

 தோழி: கவலற்க, நம் உயர்வை நாடிச் சென்றவர் விரைவில் வந்துவிடுவார்.

 *****

 பாடல்

 அகநானூறு 187  பாலை

 தோள்புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு

 நாள்பல நீடிய கரந்துஉறை புணர்ச்சி

 நாணுடைமையின் நீங்கிச் சேய்நாட்டு

 அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி

 நம் உயர்வு உள்ளினர் காதலர்- கறுத்தோர்

தெம்முனை சிதைத்த கடும்பரிப் புரவி

 வார்கழற் பொலிந்த வன்கண் மழவர்

 பூந்தொடை விழவின் தலைநா ளன்ன

 தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்

 புலம்புறும் கொல்லோ தோழி! – சேண்ஓங்கு

அலைந்தலை ஞெமையத்து ஆளில் ஆங்கண்

 கல்சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து

 எல் விருந்து அயர ஏமத்து அல்கி

 மனையுறை கோழி அணல் தாழ்பு அன்ன

 கவை ஒண்தளிர கருங்கால் யா அத்து

வேனில்  வெற்பில் கானம் காய

 முனை எழுந்து ஓடிய கெடு நாட்டாரிடைப்

 பனை வெளிறு அருந்து பைங்கண் யானை

 ஒண்சுடர் முதிரா இளங்கதிர் அமையத்துக்

 கண்படு பாயன் கையொடுங்கு அசைநிலை

 வாள்வாய்ச்  சுறவின் பனித்துறை நீந்தி

 நாள் வேட்டெழுந்த நயனில் பரதவர்

 வைகுடல் அம்பியில் தோன்றும்

 மைபடு மாமலை விலங்கிய சுரனே

 சொற்பொருள்:

 தோள் – நமது தோளின், புலம்பு – தனிமை, அகல – நீங்க, துஞ்சி – உறங்கி, நம்மொடு – நம்முடன், நாள்பலநீடிய – பல நாட்கள் நீடித்த, கரந்துறை – பெற்றோர்க்குத் தெரியாமல் மறைவாகத் தங்கப்பெறும், புணர்ச்சி – களவுக்கூட்டத்தை, நாணுடைமையின் – தொழிலில்லாமல் இன்ப வொழுக்கத்திலேயே மூழ்கியிருப்பதை நினைந்து வெட்கப்படுதலால், நீங்கி – நம்மைவிட்டுப் பிரிந்து, சேய்நாட்டு – தொலைவில் உள்ள நாட்டிற்கு, அரும் பொருள் – தேடுவதற்கு அரிய பொருளை, வலித்த – தேடுவதற்குத் துணிந்த, நெஞ்சமொடு – மனத்துடன் ஏகி – போய், நம் உயர்வு – நமது உயர்வை, உள்ளினர் – நினைத்தனர். காதலர் – அன்பர்.

 கறுத்தோர் – சினங்கொண்டு புறப்பட்ட பகைவர்களின், தெவ்முனை – போர் முனையை, சிதைத்த – அழித்த, கடும்பரி – விரைந்து ஓடும் செலவினையுடைய, புரவி – குதிரைப் படையினையுடைய, வார்கழல் – நுட்பமான  வேலைப்பாடு அமைந்த கழலால் பொலிந்த – விளங்கிய, வன்கண் – அஞ்சாமையையுடைய, மழவர் – வீரர்கள் நடத்தும், பூந்தொடை விழவின் – பூந்தொடை என்று சொல்லப்படும் விழாவினது, தலைநாள் அன்ன – முதல் நாளில் இருப்பதை ஒத்த, தருமணல் – புதிதாக கொணர்ந்திட்ட மணல், ஞெமிரிய – நிறைந்த, திருநகர் – அழகிய வீட்டின் முற்றம், புலம்புறும் கொல்லோ – தலைவருடன் உரையாடி  மகிழும் காட்சிக்கிடமாகாமல் தனித்து வெறிச்சென்று காணப்படுமோ? தோழி – தோழியே.

 சேணோங்கு – மிகவும் உயர்ந்துள்ள, அலைந்து அலை – காய்ந்து ஆடுகின்ற, ஞெமையத்து – ஞெமை என்னும் மரங்கள் மிக்க, ஆள் – ஆட்கள் ( மக்கள்), இல் – இல்லாத, ஆங்கண் – அவ்விடங்களில், கல்சேர்பு – மலையைச் சார்ந்து, இருந்த – பொருந்திய, சில்குடி – சில குடிகளையுடைய, பாக்கத்து – ஊரின் கண். எல்விருந்து அயர – இரவில் விருந்து செய்ய, ஏமத்து – இரவில், அல்கி – தங்கி, மனையுறை – வீட்டில் உள்ள, கோழி அணல் – கோழியின்தாடி, தாழ்புஅன்ன – தொங்குவதை ஒத்த, கவை-  கிளைகளாகப்பிரிந்து வளர்ந்துள்ள, ஒண்தளிர – ஒளி பொருந்திய தளிர்களைளயுடையனவாய், கருங்கால் – கரியகிளைகளையுடைய, யாஅத்து – யாமரங்கள்மிகக, வேனில் வெற்பில் – கோடைக்காலத்தில் மலையில், கானம் – காடு, காய-பசுமையற்றுக் காய்ந்திட, முனை எழுந்து ஓடிய – பகைவர் படைமுனையைக் கண்டு புறப்பட்டுஓடிவிட்ட, கெடுநாட்டாரிடை – அழிந்துபோன நாட்டின் செல்லுதற்குரிய வழியிடத்தே, பனைவெளிறு – பனைமரத்தின் உள்ளிருக்கும் வெண் குருத்தை, அருந்தும் – தின்னுகின்ற, பைங்கண்யானை – பசுமையான கண்ணினையுடைய யானை, ஒள்சுடர்முதிரா – ஒள்ளிய வெப்பக்கதிர் சுட்டுவருத்தும் தன்மையில் மிகாத, இளங்கதிர் – இளம்ஞாயிறு (தோன்றிமேல் எழும் ஞாயிறு) விளங்கும், அமையத்து – பொழுதாகிய  காலையில், கண்படுபாயல் – உறங்கும் இடத்தில், கைஒடுங்கு – செயல்  அற்று அசைநிலை – அசையும்நிலை, வாள்வாய் – வாள்போன்ற கூரியபற்கள் மிக்கவாயினைனயுடை, சுறாவின் – சுறாமீன்கள் உள்ள, பனித்துறை – குளிர்ந்த துறைகளை, நீந்தி – கடந்து, நாள்வேட்டு எழுந்த – விடியற்காலையின் மீது வேட்டையை விரும்பிப் புறப்பட்ட, நயனில் – பெரும்பயன்கிட்டாத, பரதவர் – நெய்தல்நில மக்களின், வைகுகடல் – கடலில் தங்கிநிற்கும், அம்பியில் – ஓடம்போல், தோன்றும் – காட்சியளிக்கும், மைபடு – மேகங்கள் தங்கும், மாமலை – பெரியமலைகள், விலங்கிய – குறுக்கிட்ட, சுரன் – பாலைநிலங்களில். (ஏ. அசை)

 (இயைபு): தோழியே, தலைவர், நம்மோடு பெற்ற களவு மணத்தில் காலத்திக் கழிப்பதைநாணி, அரும்பொருள் வலித்த நெஞ்சமொடு, சுரத்தின் கண்ணே, இரவில் விருந்தளிக்கத் தங்கி, ஏகி, நம்உயர்வு உள்ளினர். அதனால் முற்றம் அவரின்றிப் புலம்புறுங்கொல்லோ.

 புலம்பு: புலம்புதல் என்றசொல் இற்றைநாளில், வாய்விட்டு அழுதல் என்னும் பொருளில் வழங்கப்படுகின்றது. அன்று தனிமை என்னும் பொருளில் வழங்கப்பட்டது. தொல்காப்பியர், உரியியலில் ‘புலம்பே தனிமை’ என்று புலம்பு என்பதற்குத் தனிமை என்றுதான் பொருள் கூறியுள்ளார்.

 பூந்தொடை விழா: எவரேனும் ஒருவர் ஒரு கலையைப் பயின்றால், அக்கலைப்பயிற்சி முடிந்தபின்னர், அவர் அக்கலைத் திறனைக்காட்டுமாறு, ஒருவிழா நிகழ்த்துவர். இதற்கு அரங்கேற்றுவிழா என்று பெயர். படைக்கலம் பயின்ற வீரரை அரங்கேற்று விழாவிற்குப் பூந்தொடைவிழா, என்று பெயரிட்டிருந்தனர் போலும். ‘தொடை’ என்றால் ‘தொடுத்தல்’ என்றும் ‘பூ’ என்றால் ‘அழகு’ மென்மை ‘மங்கலம்’ என்றும் பொருள் தரும். ஆகவே, ஒருவரைக் கொல்வதற்கு அம்பு தொடுக்காது மங்கலநாளில் அம்பு தொடுத்தல் என்று பொருள் கொள்ளலாம்.

 பாக்கம்: இச்சொல் கடற்கரையில் உள்ள ஊர்களுக்கே உரியதாயினும், மலைநாட்டு ஊர்கட்கும் பின் அடையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் (சில்லாவில்) ‘பாக்கம்’ என்ற பெயர்தாங்கிப் பலஊர்கள் உள்ளன. நெய்தல் நிலத்து ஊரைக்குறித்து, பின் மருதநிலத்து ஊரையும் குறித்து, பின் ஊர்ப் பொதுவாக ஆகிவிட்டது.

 நம் காதலர்: தோழி, ‘நம்காதலர்’ என்று கூறுவது பொருந்துமா? என்று சிலர் கருதலாம். “தோழிக்கும் காதலரோ” எனக் குறும்பாகவும் கேட்கலாம். இவ்வழக்கு இன்றும் உள்ளது. வீட்டு வேலைக்காரி, வீட்டுத்தலைவியை நோக்கி “நம் ஐயா எங்கே அம்மா?” என்று கேட்பது இன்றும் உண்டே. அதே போல் தன்னையும் உளப்படுத்திக்கூறுதல் அன்பும் நெருங்கியதொடர்பும் பற்றியேயன்றிப் பிறிதன்று.

 உவமை: யாமரத்தின் தளிர்கட்கு உவமையாகக் கோழியின் தாடிகளைக் கூறுவதும், யானை அசைந்துகொண்டே நிற்பதற்கு உவமையாகக் கடலில் நிற்கும் ஓடத்தைக் கூறுவதும் எண்ணி மகிழ்தற்குரியது.

 வழக்கற்ற சொற்கள்: ஞெமிர்தல், வீட்டைக் குறிக்கும் நகர். ஞெமை, ‘யா’, அம்பி.