(உ.வே.சா.வின் என் சரித்திரம் 92 : அத்தியாயம்-57 : திருப்பெருந்துறை – தொடர்ச்சி)

திருப்பெருந்துறையில் புராண அரங்கேற்றம் ஒரு நல்ல நாளில்
ஆரம்பிக்கப்பெற்றது. சுப்பிரமணியத் தம்பிரான் அதன் பொருட்டு மிக
விரிவான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அயலூர்களிலிருந்து கனவான்களும்
வித்துவான்களும் சிவநேசச் செல்வர்களும் திரள் திரளாக வந்திருந்தனர்.

குதிரை சுவாமி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெறலாயிற்று.
அப்போது நானே பாடல்களை இசையுடன் படித்து வந்தேன். பாடம்
சொல்லும்போதும் மற்றச் சமயங்களிலும் தமிழ்ப்பாடல்களைப் படிக்கும்
வழக்கம் எனக்கு இருப்பினும் அவ்வளவு பெருங்கூட்டத்தில் முதன்முறையாக
அன்றுதான் படிக்கத் தொடங்கினேன். கூட்டத்தைக் கண்டு எனக்கு அச்சம்
உண்டாகவில்லை; ஊக்கமே உண்டாயிற்று.

அரங்கேற்றம்

ஒவ்வொரு நாளும் பிற்பகலில் அரங்கேற்றம் நடைபெறும்;
பெரும்பாலும் ஐந்து மணி வரையில் நிகழும். சில நாட்களில் சிறிது நேரம்
அதிகமாவதும் உண்டு. அங்கே வந்திருந்தவர்கள் அடிக்கடி வந்து வந்து பேசி
வந்தமையால் மற்ற வேலைகளிலும் என் ஆசிரியருக்கு ஓய்வே இல்லை.

புராணத்திலே சில படலங்களே இயற்றப் பெற்றிருந்தன. நாள்தோறும்
அரங்கேற்றம் நடந்தமையால் மேலும் மேலும் செய்யுட்களை இயற்றவேண்டியது
அவசியமாக இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அவ்விசயத்தைப் பற்றிக் கவலை
அடைந்தவராகத் தோற்றவில்லை. வந்தவர்களோடு சம்பாசணை செய்வதிற்
பெரும் பான்மையான நேரம் போயிற்று.

முன்பே இயற்றப் பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் அரங்கேற்ம் ஆயின.
மறுநாள் அரங்கேற்றுவதற்குப் பாடல்கள் இல்லை. நான் இந்த விசயத்தை
இரண்டு நாட்களுக்கு முன்பே தெரிவித்தேன். ஆசிரியர், “பார்த்துக்
கொள்ளலாம்” என்று சொல்லி அதைப் பற்றிய முயற்சியில் ஈடுபடாமல்
இருந்தார்.

“காலையில் பாடி மாலையில் அரங்கேற்றுவது இவர்களுக்குச் சுலபமாக
இருக்கலாம். ஆனால் காலையில் ஓய்வு எங்கே இருக்கிறது? எப்பொழுதும் யாரேனும் வந்து பேசி வருகிறார்கள்? இவர்கள் பாடல்களை இயற்றுவதற்கு ஓய்வு எவ்வாறு கிடைக்கும்? அரங்கேற்றத்தை இரண்டு தினங்கள் நிறுத்தி வைக்கத்தான் வேண்டும்?” என்று நான் எண்ணியிருந்தேன்.

ஆச்சரிய நிகழ்ச்சி

மறுநாள் பொழுது விடிந்தது. வழக்கம் போல் காலையிற் சிலர் வந்து
பேசத் தொடங்கினர். “சரி; இன்றைக்கு அரங்கேற்றம் நிற்க வேண்டியது தான்”
என்று நான் நிச்சயமாக எண்ணினேன். வந்து பேசியவர்களிடம் எனக்குக்
கோபங்கூட உண்டாயிற்று.

சிறிது நேரத்துக்குப்பின் ஆசிரியர் என்னை அழைத்து ஏட்டையும்
எழுத்தாணியையும் எடுத்து வரச் சொன்னார். நான் அவற்றை எடுத்துச்
சென்றேன். அவரருகில் உட்கார்ந்தேன். “நல்ல வேளை; இப்பொழுதாவது
இவர்களுக்கு நினைவு வந்ததே!” என்ற சந்தோசம் எனக்கு உண்டாயிற்று.
அங்கிருந்தவர்களை எல்லாம் விடை கொடுத்தனுப்பி விட்டுச் செய்யுள் இயற்றத்
தொடங்குவாரென்று எதிர்பார்த்தேன்.

நான் எதிர்பார்த்தபடி நடக்கவே இல்லை. அவர்கள் இருக்கும்
பொழுதே பாடல் செய்யத் தொடங்கிவிட்டார் அக்கவிஞர்பிரான்.
வந்தவர்களும் அவர் செய்யுளைத் தடையின்றி இயற்றிவரும் ஆச்சரியத்தைக்
கவனித்து வந்தார்கள். இடையிடையே அவர்களோடு பேசியபடியே
செய்யுட்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வந்தார். அவ்வளவு காலம் அவரோடு
பழகியும் அத்தகைய அதிசய நிகழ்ச்சியை அதுவரையில் நான் பார்க்கவே
இல்லை. பிறரோடு சம்பாசித்தும் அதே சமயத்தில் கற்பனை செறிந்த
செய்யுட்கள் பலவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தொடர்ந்து இயற்றிக் கொண்டும்
இருந்த அவருடைய பேராற்றலை நான் மனத்துள் வியந்து கொண்டே
எழுதிவந்தேன்
. அட்டாவதானம் செய்பவர்கள் கூடச் சில செய்யுட்களையே
செய்வார்கள். ஆசிரியரோ ஒரு புராண காப்பியத்தை இயற்றி வந்தார். அக்
கூட்டத்தின் நடுவே அவர்களுடன் பேசும் போதே அவர் மனத்தில்
கற்பனைகள் எவ்வாறு தோற்றினவென்பது ஒரு பெரிய அதிசயமாகவே
இருந்தது.

அக்கவிஞரது மன இயல்பை நாளடைவில் தெரிந்து கொண்டேன். அவர்
உள்ளம் கவிதை விளைபுலம்; அதில் எப்பொழுதெல்லாம் உற்சாகம்
நிறைந்திருக்கின்றதோ அப்பொழுதெல்லாம் தடையின்றிச் செய்யுட்கள் எழும்.

பல அன்பர்களுடன் பேசி யிருந்தபொழுது அவர் மனத்தில் அந்த உற்சாகம் இருந்தது. அதைத் தடைப்படுத்துவனவாகிய கடன் முதலியவற்றின் ஞாபகம் அப்போது
எழுவதில்லை. அத்தகைய ஞாபகம் மறைந்திருந்த அச்சந்தர்ப்பங்களில்
சோர்வின்றிக் கற்பனைகள் உதயமாகும்.

அன்று அரங்கேற்றுவதற்கு வேண்டிய செய்யுட்களை இயற்றி விட்டுப்
பூசை முதலியவற்றைக் கவனிக்கச் சென்றார் ஆசிரியர். மற்றவர்களும் விடை
பெற்றுச் சென்றனர். அன்றுமுதல் ஒவ்வொரு நாளும் காலையிற் செய்யுட்களை
இயற்றி மாலையில் அரங்கேற்றுவதே வழக்கமாகிவிட்டது
.

புராண ஆராய்ச்சி

திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்கவாசகர் சரித்திரத்தை
விரிவாக அமைக்க எண்ணிய ஆசிரியர் அவர் வரலாற்றைப் புலப்படுத்தும்
வடமொழி தென்மொழி நூல்களை ஆராய்ந்து அவற்றிலிருந்து பல செய்திகளை
எடுத்துக் கொண்டனர். வடமொழியிலுள்ள ஆதி கைலாச மாகாத்துமியம்,
மணிவசன மாகாத்துமியம் என்னும் இரண்டு நூல்களை அங்கிருந்த
சாத்திரிகளைப் படித்துப் பொருள் சொல்லச் செய்து கேட்டார்.
ஆதிகைலாசமென்பது திருப்பெருந்துறைக்கு ஒரு பெயர்.
திருப்பெருந்துறைக்குரிய பழைய தமிழ்ப்புராணங்களையும். திருவாதவூரடிகள்
புராணம், திருவிளையாடற்புராணம் என்பவற்றையும் என்னைப் படிக்கச் செய்து

மாணிக்கவாசகப் பெருமான் வரலாற்றை இன்னவாறு பாட வேண்டும் என்று
வரையறை செய்து கொண்டார்.

சில காலமாக ஆசிரியர் சொல்லும் பாடல்களை எழுதுவதும்,
அரங்கேற்றுகையில் படிப்பதுமாகிய வேலைகளையே நான் செய்து வந்தேன்,
‘கற்றுச் சொல்லி’ உத்தியோகம் வகித்து வந்த எனக்குத் தனியே பாடம் கேட்க
இயலவில்லை. ஆயினும் முன்னே குறித்தவாறு மாணிக்கவாசகர் வரலாற்றின்
பொருட்டு நடைபெற்ற ஆராய்ச்சியினால் நான் மிக்க பயனையடைந்தேன்.
தமிழ்ப் புராண நூல்கள் சிலவற்றைப் படித்தபோது அவற்றைப் பாடம்
கேட்பதனால் உண்டாவதை விட அதிகமான பயனே கிடைத்தது.

சுரமும் கட்டியும்

நான் ‘கற்றுச் சொல்லி’யாக நெடு நாட்கள் இருக்கவில்லை. என்னுடைய
துரதிருட்டம் இடையே புகுந்தது. எனக்குச் சுர நோய் வந்தது. அதனோடு
வயிற்றிலே கட்டி உண்டாகி வருத்தத் தொடங்கியது. வயிற்றுப் போக்கும்
உண்டாயிற்று.முதலில் சாதாரணமான சுரமாக இருக்குமென்று எண்ணினேன். எனது
பொல்லாத காலம் பலமாக இருந்தமையால் அது கடுமையாகத்தானிருந்தது.
பாடல்களை எழுதுவதையும் அரங்கேற்றுகையில் படிப்பதையும் நான்
நிறுத்திக்கொள்ள வேண்டியதாயிற்று. படுத்த படுக்கையாக இருந்தேன்.

ஆசிரியர் வருத்தம்

என் ஆசிரியர் திருப்பெருந்துறைக்கு வந்தது முதல் உற்சாகத்தோடு
இருந்தார். பல அன்பர்களுடைய சல்லாபமும் அங்கே நடைபெற்று வந்த
உபசாரங்களுமே அதற்குக் காரணம். தினந்தோறும் காலை முதல் இரவு
நெடுநேரம் வரையில் தம்மைப் பாராட்டி ஆதரவு செய்வோருடைய
கோசுட்டியினிடையே இருந்து பழகியதனால் துன்பத்தை உண்டாக்கும் வேறு
ஞாபகம் எழுவதற்கு நேரமில்லை.

இடையே எனக்கு உண்டான நோய் அவருடைய அமைதியான
மனநிலையைக் கலக்கி விட்டது. நான், “என் துரதிருட்டம் இப்படி நேர்ந்தது”
என்று நினைத்தேன். அவரோ, “அரச மரத்தைப் பிடித்த பேய்,
பிள்ளையாரையும் பிடித்ததுபோல என்னைப் பிடித்த சனியன் என்னைச்
சேர்ந்தவர்களையும் துன்புறுத்துகிறதே” என்று சொல்லி வருத்தமுற்றார்.

புராண அரங்கேற்றம் நடைபெறாத காலங்களில் என் அருகிலேயே
இருந்து கவனித்து வந்தார். தக்க வைத்தியர்களைக் கொண்டு பரிகாரம் செய்யச்
சொன்னார். அவர்பால் அன்பு வைத்துப் பழகியவரும் அங்கே காவல் ஆய்வாளர்
உத்தியோகத்தில் இருந்தவருமாகிய சிரீ சட்டைநாத
பிள்ளையென்பவர் சில நல்ல மருந்துகளை வருவித்து
அளித்தார். சுரம்
நீங்கினபாடில்லை.

நான் நோய்வாய்ப் பட்டமையால் என் ஆசிரியர் சொல்லும்
பாடல்களைப் பெரியண்ணம்பிள்ளை என்பவர் ஏட்டில் எழுதி வந்தார்.
அரங்கேற்றம் நடைபெறுகையில் பாடல்களை வாசிக்கும் பணியைச் சிவகுருநாத
பிள்ளையாக மாறிய சவேரிநாதபிள்ளை ஏற்றுக்கொண்டார்.

பிள்ளையவர்களுக்கு என் அசௌக்கியத்தால் உண்டான மன வருத்தம்
யாவருக்கும் புலப்பட்டது. ஒவ்வொரு நாளும் அரங்கேற்றம் நிகழ்ந்த
செய்தியைச் சவேரிநாதபிள்ளை எனக்கு வந்து சொல்வார். பிள்ளையவர்களும்
சொல்வதுண்டு.

ஒருநாள் சிரீ சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து சுப்பிரமணியமணியத்
தம்பிரானுக்கு அரங்கேற்றத்தைப்பற்றி விசாரித்துத் திருமுகம் ஒன்று வந்தது. அன்று ஆசிரியர் என்னிடம் வந்து, “சந்நிதானம் கட்டளைச் சாமிக்குத் திருமுகம் அனுப்பியிருக்கிறது. அரங்கேற்றத்தைப்பற்றி விசாரித்திருக்கிறது. ‘சாமிநாதையர் படிப்பது உமக்குத் திருப்தியாக இருக்குமே’ என்று எழுதியிருக்கிறது. உமக்குச் சுரமென்று தெரிந்தால் சந்நிதானம் மிக்க வருத்தத்தை அடையும்” என்று சொல்லி
இரங்கினார்.

பிள்ளையவர்களிடம் வந்த பிறகு இது மூன்றாவது முறையாக நேர்ந்த
அசௌக்கியம். முன்பு அசௌக்கியம் நேர்ந்த காலங்களைக் காட்டிலும்
இப்பொழுது நேர்ந்த காலம் மிகவும் முக்கியமானது. அரங்கேற்றத் திருவிழாவிற்
கலந்துகொண்டு இன்புறும் பாக்கியத்தை அது தடை செய்தது. வர வர அந்த
அசௌக்கியம் அதிகமாயிற்று. சுர மிகுதியினால் சில சமயங்களில் நான்
ஞாபகமிழந்து மயக்கமுற்றுக் கிடந்தேன். ஆசிரியருக்கும் பிறருக்கும் கவலை
அதிகமாயிற்று. இனி அங்கே இருந்தால் எல்லோருக்கும் அசௌகரிய
மாயிருக்குமென்பதை உணர்ந்த நான் ஆசிரியரிடம், “என் ஊருக்குப் போய்
மருந்து சாப்பிட்டுக் குணமானவுடன் திரும்பி வருகிறேன்” என்று சொன்னேன்.

அதைக் கேட்டவுடன் அவருக்குத் துக்கம் பொங்கியது. “பரமசிவம்
நம்மை மிகவும் சோதனை செய்கிறார் நீர் சௌக்கியமாக இருக்கும்போது
இங்கே இருந்து உதவி செய்கிறீர். இப்போது அசௌக்கியம் வந்ததென்று
ஊருக்கு அனுப்புகிறோம். அசௌக்கியத்தை மாற்றுவதற்கு நம்மால்
முடியவில்லை. உம்முடைய தாய் தந்தையர் என்ன நினைப்பார்களோ!”
என்றார்.

“அவர்கள் ஒன்றும் நினைக்க மாட்டார்கள். ஐயா அவர்களின்
பேரன்பை அவர்கள் நன்றாக அறிந்தவர்கள்” என்று சொன்னேன். ஆசிரியர்
என் யோசனையை அங்கீகரித்தனர்.

உத்தமதானபுரத்திற்குச் சென்றது

தக்க ஏற்பாடுகள் செய்து என்னை உத்தமதானபுரத்திற்கு அனுப்பினார்.
என்னுடன் துணையாக வெண்பாப்புலி வேலுசாமிப் பிள்ளை என்னும்
மாணாக்கரை வரச்செய்தார். சுப்பிரமணியத் தம்பிரானிடம் தெரிவித்து
வழிச்செலவுக்காக எனக்குப் பத்து உரூபாய் அளிக்கச் செய்தார். நான்
பிரிவதற்கு மனமில்லாமலே ஆவுடையார் கோயிலைவிட்டு உத்தமதானபுரம்
வந்து சேர்ந்தேன்.

என் தாய் தந்தையார் உத்தமதானபுரத்தில்தான் இருந்தனர்.
கோபுராசபுரத்திலிருந்த காத்தான் என்ற சிறந்த வைத்தியன் என் தேக நிலையைப் பார்த்தான். சுரக்கட்டியிருப்பதாகச் சொல்லி மருந்து
கொடுக்கலானான். சங்கத் திராவகமென்னும் ஒளசதத்தைக் கொடுத்தான். கட்டி
வரவரக் கரைந்து வந்தது. சுரமும் தணிந்தது; “காத்தான் என்னை
நோயினின்றும் காத்தான்
” என்று சொல்லி அவனை நான் பாராட்டினேன்.

குடும்ப நிலை

சிரீமுக வருசம் மாசி மாதம் முதலில் (1874 பிப்பிரவரி) நான்
உத்தமதானபுரத்திற்குச் சென்றேன். அங்கே ஒரு மாதகாலம் பரிகாரம்
பெற்றேன். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்ட நூல்களைப் படித்துக்
கொண்டே பொழுது போக்கினேன்.

அயலூர்களிலுள்ள மிராசுதார்கள் என்பாலும் என் தந்தையார்பாலும்
அன்பு வைத்து அடிக்கடி நெல் அனுப்பி வந்தார்கள். ஆயினும் குடும்ப
காலட்சேபம் சிரமந் தருவதாகவே இருந்தது. அதனோடு என் கலியாணத்தின்
பொருட்டு வாங்கிய கடனில் 150 உரூபாய் கொடுபடாமல் நின்றது. அத்தொல்லை
வேறு துன்பத்தை உண்டாக்கியது. உடலில் இருந்த நோய் வரவரக் குறைந்து
வந்தாலும் உள்ளத்தே ஏற்பட்ட நோய் வளர்ந்து வந்தது
. அதுகாறும் குடும்பப்
பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் நான் இருந்து வந்தேன். என் தந்தையாரும்
வர வர விரக்தி உடையவராயினர். சிறிய தகப்பனாரோ குடும்பப் பாரத்தைச்
சுமக்க இயலாமல் தத்தளித்தார்.

“இந்நிலையில் நாம் ஒன்றும் செய்யாமல் இருப்பது தருமமன்று” என்று
கருதினேன். “இனி, குடும்பக் கடனைப் போக்குவதில் நம்மால் இயன்றதைச்
செய்ய வேண்டும்” என்ற எண்ணம் வலியுற்று வந்தது. “பிள்ளையவர்களை
விட்டு வந்தோமே, மீண்டும் அங்கே போக வேண்டாமோ! குடும்பப் பாரத்தைச்
சுமப்பது எப்பொழுதும் உள்ளது பிள்ளையவர்களிடமிருந்து கல்வி அபிவிருத்தி
பெறுவதற்குரிய இச்சந்தர்ப்பத்தை நாம் விடக்கூடாது” என்று வேறொரு
யோசனை தோற்றியது. “நாம் கடனாளி என்றால் அவர்களும் கடனாளியாகத்
தானே இருக்கிறார்கள்? எப்படியாவது கடனை நீக்கிக் கொண்டால் பிறகு
பழையபடியே அவர்களிடம் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். கடனை வளர
விடக்கூடாது” என்ற எண்ணமே விஞ்சி நின்றது.

நான் அடைந்த ஏமாற்றம்

ஒருநாள் உத்தமதானபுரத்திலிருந்து கும்பகோணம் சென்று தியாகராச
செட்டியாரைப் பார்த்தேன். மீட்டும் எனக்கு ஏதேனும் உத்தியோகம் தேடித் தர வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவர், “நான் ஒரு மாசம் ஓய்வெடுத்துக்கொள்வதாக
எண்ணியிருக்கிறேன். அப்போது என் தானத்தில் இருந்து வேலை
பார்ப்பீரா?” என்று கேட்டார். நான் தைரியமாகப், “பார்ப்பேன்” என்றேன்.

“சரி; கோபாலராவு அவர்களிடம் சொல்லுகிறேன்” என்று அவர்
சொன்னார். நான் அதுகேட்டுச் சந்தோசமடைந்தேன். ஆனால் அந்த
யோசனை நிறைவேறவில்லை. கோபாலராவு, “இவர் பால்யராக இருக்கிறார்;
பிறகு பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். நான் ஏமாற்றமடைந்து
ஊருக்குத் திரும்பி வந்தேன்.

உத்தமதானபுரத்தில் இருப்பதைவிடச் சூரியமூலையிற்போய் இருந்தால்
ஆகார விசயத்திலாவது குறைவில்லாமல் இருக்கு மென்று கருதி நானும் என்
தாய்தந்தையரும் பங்குனி மாதம் அங்கே போய்ச் சேர்ந்தோம். என் தேக
சௌக்கியம் இயல்பான நிலைக்கு வாராமையால் எங்கேனும் செல்வதற்கோ
பொருள் தேட முயல்வதற்கோ இயலவில்லை. “எப்படிக் கடனைத் தீர்ப்பது?”
என்ற யோசனை என்னைப் பலமாகப் பற்றிக் கொண்டது.

தந்தையார் கூறிய உபாயம்

என் தந்தையார் ஓர் உபாயம் சொன்னார். “செங்கணம் முதலிய
இடங்களுக்குச் சென்று ஏதேனும் புராணப் பிரசங்கம் செய்தால் பணம்
கிடைக்கும்; அதனைக் கொண்டு கடனைத் தீர்த்து வரலாம்” என்று அவர்
கூறினார். அவர் தம் அனுபவத்தால் அறிந்த விசயம் அது. தாம்
அப்பக்கங்களில் சஞ்சாரம் செய்து கதாப் பிரசங்கங்கள் செய்ததுபோல் நானும்
செய்தால் நன்மை உண்டாகுமென்று அவர் நினைத்தார்; தாம் செய்த
காரியத்தை நானும் ‘வாழையடி வாழை’யாகச் செய்ய வேண்டுமென்று அவர்
முன்பு எண்ணிய எண்ணம் அப்போது நிறைவேறக் கூடுமென்பது அவர்
நம்பிக்கை.

எனக்கு அவர் கூறியது உசிதமாகவே தோற்றியது. புதிய உத்தியோகம்
ஒன்றை வகித்துப் புதிய மனிதர்களுடன் பழகுவதைக் காட்டிலும் பழகிய
இடத்திற் பரம்பரையாக வந்த முயற்சியில் ஈடுபடுவது சுலபமன்றோ?
செங்கணம்
முதலிய இடங்களில் உள்ளவர்களின் இயல்பை நானும் உணர்ந்திருந்தேன்.
தமிழ் நூல்களைப் பிரசங்கம் செய்தால் மிக்க மதிப்பும் பொருளுதவியும்
கிடைக்குமென்பதையும் அறிவேன். ஆயுள் முழுவதும் புராணப் பிரசங்கம் செய்து புண்ணியத்தையும் புகழையும் பொருளையும் ஒருங்கே பெறலாம்.

எல்லாம் உண்மைதான். ஆனால், என் தமிழ்க் கல்வி அதனோடு
நின்றுவிட வேண்டியதுதானா? கிடைத்தற்கரிய பாக்கியமாகப்
பிள்ளையவர்களுடைய அன்பையும் அவர் மூலமாகத் திருவாவடுதுறை யாதீனப்
பழக்கத்தையும் பெற்ற பின் அவற்றை மறந்து ஊர் ஊராய் அலைந்து வாழ்வது
நன்றா? இறைவன் இந்த நிலையிலே விட்டு விடுவானா?

என் மனம் இப்படியெல்லாம் பலவாறு பரந்து விரிந்துசென்று
எண்ணமிட்டது. “இப்போது கழுத்தைப் பிடித்து இறுக்கித் துன்புறுத்தும் கடன்
தொல்லையைத் தீர்ப்பது முக்கியமான காரியம்” என்ற நினைவினால்,
செங்கணத்திற்குப் போகலாமென்று தந்தையாரிடம் சொன்னேன். அவருக்கு
உண்டான திருப்திக்கு எல்லையில்லை. கடன் தீர்வதற்கு வழி ஏற்பட்டதென்பது
மாத்திரம் அத்திருப்திக்குக் காரணம் அன்று; தாம் பழகிய இடங்களை மீட்டும்
பார்க்கலாமென்ற ஆவலே முக்கியமான காரணம்.

(தொடரும்)