உ.வே.சா.வின் என் சரித்திரம் 103 – தேசிகர் சொன்ன பாடங்கள்
(உ.வே.சா.வின் என் சரித்திரம் 102 – அபய வார்த்தை-தொடர்ச்சி)
என் சரித்திரம்
அத்தியாயம்—65
தேசிகர் சொன்ன பாடங்கள்
மாசி மாதம் மகாசிவராத்திரி புண்ணிய காலம் வந்தது. என் தந்தையார் இராத்திரி நான்கு சாமத்திலும் அபிசேக அருச்சனைகள் செய்வார். அவருடைய பூசைக்கு வேண்டிய தேங்காய்களை மடத்திலிருந்து பெறுவதற்காக நான் தேசிகரிடம் சென்றேன். விசேட காலங்களில் அவ்வூரிலுள்ளவர்கள் தங்கள் தங்கள் வீட்டிற் செய்யும் பூசை முதலியவற்றிற்கு உபயோகித்துக் கொள்ளும்படி இளநீர் தேங்காய் பழம் வத்திரம் சந்தனக்கட்டை முதலியன மடத்திலிருந்து அவர்களுக்கு அளிக்கப்படும். கடையில்லாமையால் அவற்றை வேறு எங்கும் வாங்க இயலாது.
சிவராத்திரி நிகழ்ச்சிகள்
நான் தேசிகரிடம் சென்றபோது அங்கே தியாகராச சாத்திரிகள் இருந்தார். ஏதோ சம்பாசணை நடந்தது. எனக்கு வேண்டிய பொருளைக் கேட்கத் துணிவின்றி அங்கே நிற்கவே என் முகக் குறிப்பினால் நான் எதையோ பெறும் பொருட்டு வந்திருக்கிறேனென்பதை அறிந்த தேசிகர், “என்ன விசேடம்? ஏதாவது வேண்டுமா?” என்று கேட்டார். நான் என் தந்தையாரது பூசைக்கு இளநீர்களும் தேங்காய்களும் வேண்டுமென்பதை அறிவித்தேன்.
தேசிகர், “அப்படியா?” என்று சொல்லி விட்டு ஒடுக்கத் தம்பிரானை அழைத்து, முதல் நாள் இருவர் தனித்தனியே கொண்டு வந்து கொடுத்த ஒரு தேங்காயையும் விநாயகரையும் கொண்டு வரும்படி கட்டளையிட்டார். அப்படியே அவர் அவ்விரண்டையும் கொணர்ந்து வைத்தார். அவ்றைச் சுட்டிக் காட்டி, “இவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளும்” என்று தேசிகர் என்னை நோக்கிச் சொன்னார்.
அவற்றைக் கண்ட நான், “தேங்காய் நமக்குப் பல வேண்டுமே ஒன்றைக் கொடுக்கிறார்களே. நாம் விநாயகர் திருவுருவத்தைக் கேட்கவில்லையே! தகப்பனார் பூசையிலேயே விநாயக மூர்த்தி இருக்கிறாரே! இவ்வளவு பெரிய பிள்ளையாரை வைப்பதற்கு இடமில்லையே” என்று திகைத்தேன்.
தேசிகர், “என்ன யோசிக்கிறீர்? தேங்காயை அசைத்துப்பாரும். இளநீர் இருக்கிறதா, கொப்பரையா என்று தெரியும்” என்றார்.
அசைத்துப் பார்த்தேன். உள்ளே சலம் இருப்பதாகத் தோன்றியது. “கொப்பரை யன்று; இளநீர் இருக்கிறது” என்றேன்.
“நார் நன்றாக உரித்திருக்கிறார்களா?” என்று புன்சிரிப்புடன் கேட்டார்.
“செவ்வையாய் உரித்திருக்கிறது” என்றேன். உடனே அவர் அருகிலிருந்த தியாகராச சாத்திரிகளை நோக்கி, “உரூபா இருபது கொடுத்து இப்பிள்ளையாரையும், உரூபா பத்துக் கொடுத்து இத் தேங்காயையும் நேற்று வாங்கினோம்” என்றார்.
சாத்திரிகள்:— அவ்வளவு விலையா? பிள்ளையாருக்குக் கொடுத்தாலும் கொடுக்கலாம்; தேங்காய்க்குக் கொடுக்கலாமா? இப்போது அவ்வளவு தேங்காய்ப் பஞ்சம் வந்து விட்டதா?
தேசிகர்:— இதற்குக் கொடுக்கலாமென்று நமக்குத் தோற்றியது. இதைக் கொடுத்தவன் நம்மிடத்தில் அதிக விசுவாசமுள்ளவன்.
சாத்திரிகள்:— அப்படியானால் இந்தத் தேங்காய்க்கு விலையென்று சொல்வானேன்? அவனுக்கு இனாம் கொடுத்ததாக வைத்துக் கொள்ளலாமே.
தேசிகர்:— இல்லை; இல்லை; இத் தேங்காய்க்காகவே கொடுத்தோம்.
சாத்திரிகள்:— பிருதுவியில் இல்லாத தேங்காயா இது? இதற்குள்ளே மாணிக்கமா இருக்கிறது? எல்லாத் தேங்காயையும் போலவேதான் தேங்காயும் இளநீருந்தானே இருக்கின்றன!
தேசிகர் :— உடைத்துப் பார்த்தால் தெரியும்.
சாத்திரிகள் உடனே அத்தேங்காயை எடுத்து உடைக்க ஆரம்பித்தார். தேசிகர் சிரித்துக் கொண்டே, “வேண்டாம்; உடைக்க வேண்டாம். விடயத்தைச் சொல்லுகிறோம்” என்று தடுத்து விட்டுச் சொல்லத் தொடங்கினார்: “மடத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள குடியானவர்களில் கரும்பு வைத்துப் பயிராக்குவோன் ஒருவன் வெல்லத்தால் தேங்காயைச் செய்வித்து இங்கே கொண்டு வந்து சேர்ப்பித்தான். வேறொருவன் வெல்லத்தைக் கொண்டு விநாயக மூர்த்தி செய்வித்துக் கொணர்ந்து சேர்ப்பித்தான். இந்த இரண்டினுடைய வேலைப்பாட்டையும் அறிந்து தேங்காய் கொணர்ந்தவனுக்கு உரூபா பத்தும், விநாயகரைக் கொணர்ந்தவனுக்கு இருபது உரூபாயும் கொடுத்து அனுப்பினோம்”
பிறகுதான் எங்களுக்கு உண்மை விளங்கியது. மிக்க ஆச்சரியத்தை அடைந்தோம். “இவற்றை உம்முடைய பிதா அவர்களிடம் கொடும். நீர் கேட்ட தேங்காய் முதலியவை பின்பு வரும்” என்று தேசிகர் என்னை அனுப்பினார்.
அவற்றை எடுத்துச் சென்று தந்தையாரிடம் கொடுத்து விடயத்தைச் சொல்லும்போதே இரண்டு கூடை நிறைய இளநீர்களும் தேங்காய்களும் கருப்பந்துண்டங்களும் வேறு பொருள்களும் வந்தன.
அன்று என் தந்தையார் அதற்குமுன் அடையாத திருப்தியை அடைந்தார்; தன் மனமாரச் சிவராத்திரி பூசை செய்து இன்புற்றார்.
தேசிகர் கட்டளை
திருவாவடுதுறை மடத்தில் படித்து வந்தவர்களுள் மேலகரம் சண்பகக் குற்றாலக் கவிராயரும் நானும் சகோதரர்களைப் போலவே பழகி வந்தோம். நாங்கள் இருவரும் பெரும்பாலும் சேர்ந்து படிப்பதும் சேர்ந்தே இருப்பதும் வழக்கம். ஒருநாள் எங்கள் இருவரையும் தேசிகர் அழைத்து, “நீங்கள் இரண்டு பேரும் நம்மிடத்திற் பகலிலும், இராத்திரி ஆகாரஞ் செய்த பின்பும் வந்து படிக்க வேண்டிய நூல்களைப் படித்து வாருங்கள். இதுவரை படியாத நூல்களை மற்றக்காலங்களில் இருவருமாகச் சேர்ந்து உழைத்துப் படியுங்கள். படிப்பதற்காக இங்கே வந்திருப்பவர்களுக்கு அவர்கள் எந்த எந்த நூலைப் பாடங் கேட்க விரும்புகிறார்களோ அவற்றை அறிந்து தகுதிக்கேற்றபடி பாடஞ் சொல்லி வாருங்கள். பாடஞ் சொல்லுவதால் உங்கள் கல்வி அபிவிருத்தி அடையும்” என்று சொல்லி அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தனர். என் சகபாடியாகிய குமாரசாமித் தம்பிரான் முதலியவர்களிடத்தும் இவ்வாறே கட்டளையிட்டார். அவ்வாறே செய்து வரலானோம்.
கம்பராமாயணம்
நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் பிறரும் பிள்ளையவர்கள் தங்கியிருந்த வீட்டையே எங்கள் இடமாகக் கொண்டு படித்தும் பாடஞ் சொல்லியும் வந்தோம். பாரதம், பாகவதம், திருக்குற்றாலப் புராணம் முதலிய காவியங்களையும் பலவகையான பிரபந்தங்களையும் படித்து ஆராய்ந்தோம். கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டத்தில் ஒரு பகுதி வரையில் முன்பு பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டிருந்தோம். மேலே அந்நூலை முற்றும் படித்து விடவேண்டும் என்ற ஆவல் எங்களுக்கு எழுந்தது. அதனால் பிள்ளையவர்களுடைய ஏட்டுப் பிரதியையும், மடத்தில் உள்ள ஏட்டுப் பிரதிகளையும் வைத்துக்கொண்டு இரண்டு தடவை முற்றும் படித்தோம். படித்த காலத்தில் கண்ட பாடபேதங்களைக் கைப்புத்தகத்திலும் வேறு கடிதத்திலும் தனித்தனியே குறித்து வைத்தோம்.
நன்னூற் பாடம்
சுப்பிரமணிய தேசிகரிடம் நாங்கள் இலக்கண நூல்களையும் சைவ சித்தாந்த சாத்திரங்களையும் சில இலக்கியங்களையும் பாடம் கேட்டோம். நன்னூல் விருத்தியுரையைப் பாடம் கேட்க விரும்பியபோது சுப்பிரமணிய தேசிகர் அதன் சம்பந்தமாகச் சில விடயங்களைச் சொல்லலானார்; “நன்னூலுக்கு முதலில் சங்கர நமச்சிவாயர் உரை எழுதினார். பிறகு சிவஞான முனிவர் அதைத் திருத்தியும் புதுக்கியும் விருத்தியுரையை அமைத்தார். அவர் தாம் எழுதிய சிவஞானபோத திராவிட மகாபாசியத்தில் அமைத்துள்ள அரிய வடமொழி தென்மொழிப் பிரயோகங்களை எளிதிற் பிற்காலத்தவர்க்குப் புலப்படுத்த நினைந்து இலக்கணக் கொத்து, தொல்காப்பியச் சூத்திரவிருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூல்களிலும் பிறவற்றிலும் உள்ள முக்கியமான சிலவற்றை அவ்வுரையில் அங்கங்கே சேர்த்தார். சில இடங்களில் சிலவற்றைக் குறைத்தும் சிலவற்றை மாற்றியும் எழுதி நிறைவேற்றினார். இலக்கணக் கொத்து முதலிய மூன்றையும் பாடம் கேட்ட பிறகுதான் விருத்தியுரை தெளிவாக விளங்கும்” என்று சொல்லிச் சிவஞான முனிவர் தம் கரத்தாலேயே திருத்திய ஏட்டுப் பிரதி ஒன்றை எடுத்துக் காட்டினார். அப்பிரதியில் அங்கங்கே அடித்தும் கூட்டியும் மாற்றியும் அம்முனிவர் எழுதியவற்றைப் பார்த்து மகிழ்ந்தோம்.
தேசிகர் கட்டளைப்படியே இலக்கணக் கொத்து முதலிய மூன்று நூல்களையும் பாடம் கேட்டுப் பிறகு நன்னூல் விருத்தியுரையைக் கேட்கத் தொடங்கினோம். சங்கர நமச்சிவாயர் உரைமாத்திரம் இருந்த ஏடொன்று மடத்தில் இருந்தது. அதையும் வைத்துக் கொண்டு எங்கெங்கே சிவஞான முனிவர் விருத்தியுரையில் திருத்தம் செய்திருக்கிறாரோ அங்கெல்லாம் ‘சி’ என்ற அடையாள மிட்டுக் குறித்துப் படித்தோம்.
வேறு இலக்கண நூல்கள்
யாப்பருங்கலக் காரிகை பாடம் கேட்டபோது அந்நூலின் அவதாரிகையிலே உள்ள விடயங்களை விரிவாக எடுத்துச் சொல்லி விளக்கினார். அதுவரையில் யாரும் அவ்விடயங்களைத் தெளிவாகச் சொன்னதில்லை. தண்டியலங்காரம் கேட்டோம். காவியாதர்சமென்ற வடமொழி நூலின் மொழி பெயர்ப்பாகிய அதனைப் பாடம் சொல்லும்போது வடமொழி நூலிலுள்ள சுலோகங்களை எடுத்துச் சொல்லி விளக்குவார். விசாகப் பெருமாளையர் எழுதிய அணியிலக்கணத்தைப் பாடங் கேட்டோம். அது வடமொழியிலுள்ள குவலயானந்தத்தைத் தழுவியது. அதன் அமைப்பையும் உதாரணச் செய்யுட்களையும் தேசிகர் பாராட்டுவார்.
அணியிலக்கணங்களைப் படித்து வருகையில் அவற்றிற் கூறப் பெற்ற அணிகளை நான் அமைத்துத் தேசிகர் விடயமாகப் புதிய செய்யுட்களை எழுதி அவரிடம் காட்டுவேன். அவர் கேட்டு மகிழ்ந்து பிழையிருப்பின் எடுத்துரைத்துத் திருத்துவார்.
தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை, சொல்லதிகாரம் சேனாவரையர் உரை, இலக்கண விளக்கம் என்பவற்றை நாங்களாகப் படித்து, சில சந்தேகங்களை நீக்கிக் கொண்டோம். சேனாவரையர் உரையில் உள்ள சந்தேகங்களை விளக்கும்போது தேசிகருக்கு அளவிறந்த உற்சாகம் உண்டாகும். “இவர் உரை எழுதுவதைப் போல் இலக்கண நூலுக்கு யாரும் எழுதமுடியாது. சம்சுகிருத ஞானம் நன்றாக இருப்பதால் பல அருமையான விடயங்களைக் காரண காரியத்தோடு நியாயங் காட்டி எழுதுகிறார்” என்று அவ்வுரையைப் பாராட்டுவார்.
அகமும் புறமும்
எழுந்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் இலக்கண நூல்களைத்தான் பாடம் கேட்போம். அகப்பொருள் இலக்கணத்தைக் கேட்கவில்லை. திருச்சிற்றம்பலக் கோவையாரை உரையுடன் கேட்டபோது அவ்விலக்கியத்திலிருந்தே இலக்கணத்தை அறிந்துகொண்டோமே யன்றித் தனியே அகப்பொருள் இலக்கண நூலைப் பாடம் கேட்கவில்லை. அக்காலத்தில் அவ்விலக்கணத்தைத் தனியே படிப்பார் மிகக் குறைவு. பொருளிலக்கணத்தின் மற்றொரு பிரிவாகிய புறப்பொருளைப்பற்றிய ஆராய்ச்சியே இல்லை. அகப்பொருளிலக்கணத்தை ஒருவரும் படியாவிடினும் அகப் பொருளிலக்கியங்களைப் படித்தார்கள். புறப்பொருள் விடயத்திலோ இலக்கியமும் வழக்கில் இல்லை; இலக்கணத்தைத் தேடுவாரும் இல்லை.
யாப்பருங்கலக்காரிகை கேட்டபோது செய்யுள் வகைகளுக்கு உதாரணமாக அந்நூலில் அமைந்திருக்கும் சில பாடல்களுக்குத் தக்கவாறு பொருள் விளங்கவில்லை. சைன சமய சம்பந்தமான செய்திகள் அவற்றில் வருகின்றன. நான் முன்பு விருத்தாசல ரெட்டியாரிடம் அதனைக் கேட்ட கால முதலே அச்சந்தேகங்கள் விளங்காமலிருந்தன. தேசிகர், “காரிகையிலுள்ள இலக்கணங்களுக்கு இலக்கியமாக சிரீ குமரகுருபரர் சிதம்பரச் செய்யுட்கோவை என்ற பிரபந்தம் ஒன்றை இயற்றியிருக்கிறார். சைவ சம்பந்தமான நூலாதலின் நன்றாக விளங்கும். செய்யுளிலக்கணத்தைத் தெரிந்து கொள்ள அந்த நூல் மிக்க உபகாரமாக இருக்கும்” என்று சொல்லி எங்களுக்கு அதைப் பாடஞ் சொன்னார்.
பரிமேலழகர்
திருக்குறளைப் பரிமேலழகருரையுடன் பிறகு பாடம் கேட்டேன். இலக்கண நூல்களுக்கு உரை செய்வதில் சேனாவரையர் எப்படி இணையற்றவரோ அப்படியே இலக்கிய நூல்களுக்கு உரை எழுதுவதில் பரிமேலழகர் இணையற்றவரென்பது தேசிகர் கருத்து. “இந்த இடத்தில் ஒரு விசேடமும் இராதென்று நாம் ஒரு குறளைப் பார்த்து நினைப்போம். அங்கே பரிமேலழகர் ஏதேனும் ஒரு விசேடத்தை எடுத்துக் காட்டுவார். பதசாரங்களை எழுதுவதிலும் சுருக்கமாக விடயங்களைத் தெரிவித்தலிலும் அவருக்கு மிஞ்சியவர்கள் இல்லை” என்று அடிக்கடி பாராட்டுவார். பல நுணுக்கமான விடயங்களைக் குறட்பாடம் நடந்தபோது தெரிந்துகொண்டேன்.
சித்தாந்த நூல்கள்
சைவசித்தாந்த சாத்திரங்களைக் கேட்க விரும்பிய என்னை முதலில் சிவப்பிரகாசக் கட்டளையையும் திருவாலவாய்க் கட்டளையையும் படிக்கச் சொன்னார். பிறகு சிவஞான போதச் சிற்றுரையையும் அப்பால் சிவஞான சித்தியாருரை முதலியவற்றையும் பாடம் சொன்னார்.
(தொடரும்)
என் சரித்திரம், உ.வே.சா.
Leave a Reply