தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள். இ. சீகன்பால்கு, ஈ. இரேனியசு, உ. காலுடுவெல் – பா.வளன் அரசு
தமிழுக்கு வளம் சேர்த்த அயல்நாட்டுத் தமிழறிஞர்கள்
3. செருமானியத் தமிழ்ச் சான்றோன் சீகன்பால்கு (1682-1719)
கடற்கரை மணலில் கைவிரலால் எழுதிப் பழகி, அழகப்பன் உதவியுடன் எட்டே மாதங்களில் தமிழ் கற்ற சீகன்பால்கு(Bartholomäus Ziegenbalg), அலைபாடிக் கலை வளர்க்கும் தரங்கம்பாடியில் பதின்மூன்று ஆண்டுகள் மாண்புமிகு தமிழ்ப் பணி புரிந்துள்ளார். நேர்மையாளருக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும் என்று கிறித்தவம் என்னும் நூல் வழியாக நவின்ற சீகன்பால்கு, தாய்மொழி வாயிலாகப் பிறமொழியைக் கற்று புலமைபெற வழிகாட்டியுள்ளார். 1707ஆம் ஆண்டு புதிய எருசலேம் திருக்கோவிலை உருவாக்கிய சீகன்பால்கு, விவிலியத் திருநூலைத் தமிழாக்கிய முதல்வர் ஆவார். சிறைச்சாலையிலும் கப்பல் பயணத்திலும் விவிலியத் தமிழாக்கத் தொண்டில் ஈடுபட்ட சீகன்பால்கு, உரூத்து ஆகமம் வரை தமிழில் தந்துள்ளார். 1712 ஆம் ஆண்டு பதினேழாயிரம் சொற்களுடன் செய்யுள் அகராதி ஒன்றையும் தொகுத்துள்ளார்; உரைநடை அகராதியினையும் இருபதாயிரம் சொற்களுடன் நல்கியுள்ளார். தாய்மொழி வாயிலாகவே சிந்திக்கத் தூண்டிய சீகன்பால்கு, வீரமாமுனிவரின் வேதியர் ஒழுக்கம் அச்சாகவும் கிறித்தவரிடையே ஒன்றிப்பு உணர்வை உருவாக்கவும் அயராது செயலாற்றியுள்ளார். செருமானிய நாட்டு நூலகத்திற்கு நூற்று அறுபத்தைந்து தமிழ் நூல்களை வழங்கியுள்ளார்; மலிவு விலையில் பள்ளிப் பாட நூல்களை மாணவருக்கு நல்கிய முன்னோடியாகவும் ஒளியுடன் மிளிர்கிறார்.
4. செருமானியத் தமிழ்ச் செம்மல் இரேனியசு (1790-1838) :
ஏட்டுத் தமிழாகிய செந்தமிழையும் நாட்டுத் தமிழாகிய பேச்சுத் தமிழையும் பேணிப் போற்றிய எவாலுடு இரேனியசு (Charles Tleoplilus Ewald Rhenius)திருநெல்வேலித் திருத்தூதர் என்று போற்றப்பட்ட பெருமைக்கு உரியவர். எழுநூற்று இருபத்தெட்டுப் பக்கங்களுடன் இவர் வழங்கிய பூமி சாத்திரம் என்னும் தமிழ் அறிவியல் ஏடு உலக வரலாற்றுப் புவியியல் நூலாகத் திகழ்கிறது. இராமாநுசக் கவிராயர் வாயிலாகத் தமிழ் பயின்ற இரேனியசு, தாம் வாழ்ந்த வாடகை வீட்டையே பள்ளிக் கூடமாகவும் வழிபாட்டுத் தலமாகவும் விளங்கச் செய்தார். நெல்லை முருகன்குறிச்சியில் ஆடவர்க்கும் மகளிர்க்கும் தனித்தனியே குருத்துவக் கல்லூரிகளை உருவாக்கியுள்ளார். 1826ஆம் ஆண்டு இரேனியசு உருவாக்கிய சிற்றாலயமே மூவொரு கடவுள் பேராலயமாக விளங்குகிறது. தெய்வீக சாராம்சம், ஏசாயா ஆகிய நூல்களை நல்கியுள்ள இரேனியசு, மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளை விளம்பும் அறிவியல் அறிஞராகவும் திகழ்கிறார். சென்னை, காஞ்சிபுரம், நெல்லை ஆகிய இடங்களில் கல்விப் பணி தழைத்தோங்கப் பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளார். சாதி ஒழிப்பும் தமிழ் வளர்ச்சியும் சேர்ந்தே அமைய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் விழைந்து உழைத்துள்ளார். தமிழ் இலக்கணத்தை எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல் என மூவகையாகப் பகுத்து வழங்கியுள்ளார்.
5. அயர்லாந்து அறிஞர் இராபர்ட்டு காலுடுவெல் (1814-1891) :
ஐம்பத்து மூன்று ஆண்டுகள் தமிழகத்தில் திருமறைக்கும் தீந்தமிழுக்கும் தொண்டாற்றிய இராபர்ட்டு காலுடுவெல்Robert Caldwell)(, இடையன்குடியிலும் (1880), கொடைக்கானலிலும் (1886), திருக்கோவில்களை உருவாக்கிய பெருமை பொருந்தியவர்; திருநெல்வேலித் திருத்தொண்டர் வரலாற்றையும் திருநெல்வேலி மாவட்ட வரலாற்றையும் எழுதி வழங்கிய ஏந்தல். கொற்கைத் துறைமுகம் ஆகிய கபாடபுரத்தின் பழம்பெருமையினை அகழாய்வு வாயிலாக உணர்ந்த கால்டுவெல், தொல்பொருள் ஆய்வுத் துறையின் முன்னோடியாக மிளிர்கிறார். இயேசு பெருமான் சிலுவையில் தொங்கியபோது கூறிய ஏழு திருமொழிகளை எல்லாரும் படித்து மகிழும் வண்ணம் வழங்கியுள்ளார்; இருநூற்று நாற்பத்து மூன்று வினாக்களுக்கு விளக்கம் வழங்கும் சிற்றறிஞர் குறிப்பிடம் என்ற நூலையும் தந்துள்ளார். பதினைந்து ஆண்டு உழைப்பால் உருவாகிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856) திருந்திய மொழிகள் ஆறு, திருந்தாத மொழிகள் ஆறு என்று பன்னிரு மொழிகளின் இலக்கணச் சீர்மையைச் செப்புகிறது. கிளாசுகோ பல்கலைக் கழகம் இந்நூலுக்காக அறிஞர்பட்டம் வழங்கிப் பெருமை செய்துள்ளது. “தனித்தியங்கும் தன்மை தமிழ் மொழிக்கு உண்டு, தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு” என்று பாவேந்தர் போற்றிப் புகழும் வகையில் தகுதி மிகுதி வாய்ந்தவர் காலுடுவெல். இலக்கண அமைப்பில் திராவிட மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உள்ள வேறுபாடுகள் பதின்மூன்றை விளம்பிய வித்தகர் கால்டுவெல்.
(தொடரும்)
பேராசிரியர் முதுமுனைவர் பால் வளன் அரசு,
தலைவர், உலகத் திருக்குறள் தகவல் மையம்
3, நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை.- 627002.
கைப்பேசி : 7598399967
Leave a Reply