காதற்பாக்களின் இலக்கிய மரபுகள் – புலவர் கா.கோவிந்தன்
(கி.மு. இரண்டாவது ஆயிரத்தாண்டில் தமிழர் நாகரீகம்-தொடர்ச்சி)
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு 8
காதற்பாக்களின் இலக்கிய மரபுகள், உண்மையான வாழ்க்கை நிகழ்ச்சிகளிலிருந்து பிறந்தனவே
உலக நிலப்பரப்பின் மக்கள் வாழத்தக்க பகுதிகள், ஐந்து வகையாகப் பிரிக்கப்படும். மனிதன் முதன் முதலில் வாழத் தொடங்கி, வேட்டையாடி உயிர் வாழ்ந்த, மரம் செடி, சொடிகளைச் சிறிய அளவிலேயே கொண்ட சிறு மலைப்பகுதி, தண்ணீர் கருதி, மரம், செடி, கொடிகள், அங்கொன்றும் இங்கொன்றுமாகி, மனிதன், முதன்முதலில், வீர ஒழுக்கங்களையும், கொள்ளையடித்து வாழும் உள்ளுணர்வையும் வளர்த்துக் கொண்ட மணல்செறிந்த பாலை; மனித வாழ்க்கையில் ஆனிரை மேய்க்கும் கூட்டத்தை, முதன் முதலில் கண்ட காட்டுப்பகுதி, மனிதன். மீன் பிடிக்கவும், படகுகளில் கடல்மேல் செல்லவும், உணவுப் பொருள்களுக்காக, மீனையும், உப்பையும் பண்ட மாற்றம் செய்யவும் கற்றுக் கொண்ட கடற்கரைப் பகுதி ; உழவும் நெசவும் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட ஆற்றுப்பள்ளத் தாக்கு எனப் பழந்தமிழ்ப் புலவர்களால் ஐந்து திணைகளாக அது பிரிக்கப்பட்டது, என்பது முதல் அதிகாரத்தில் முன்பே குறிப்பிடப்பட்டது. ஒரு நாகரீகத்திலிருந்து மற்றொரு நாகரீகத்திற்கு, மனிதன் மேற்கொண்ட பயணம், காலத்தின் நீண்ட பருவங்களை எடுத்துக் கொண்டது. ஒரு நிலப்பகுதி யிலிருந்து பிறிதொரு நிலப்பகுதிக்கு மனிதனின் குடி பெயர்ச்சியே இதற்குத் தலையாய காரணம். ஆனால் அடுத்து வேறு வகை நாகரீகம் தன்னில் இடங்கொள்ளும் போது, ஒவ்வொரு நிலப்பகுதியும், தத்தமக்குரிய நாகரீகத்தை விடாமல் மேற்கொண்டிருந்தது. அவ்வகையில், மனித நாகரீகத்தின், முதல் நிலை உருப்பெற்ற, குறிஞ்சி அல்லது மலைநாட்டில், மனிதன், பாதி நாடோடி வாழ்க்கையாம், வேடன் வாழ்க்கையை நடத்தி வந்தான். காதல் உறவு, சமுதாய மரபுகளால் தடுக்கப்படவில்லை, கண்டதும் கொண்ட காதலைத் தொடர்ந்து உடனடிக் கூடலே அக்கால வாழ்க்கைச் சட்டமாம். குலமுறைப்படியான விருந்து பின் தொடர மணந்த இருவரைப் பொதுமக்கள் வரவேற்கும் திருமண விழா. மிகவும் பிற்பட்ட காலத்தில் எழுந்தது. ஆனால், மணவிழாவிற்கு முந்திய காலாகாலமாக இருந்து வரும் வழக்கமாம். களவுக்காதல் ஒழுக்கம் மலைநாட்டுப் பழங்குடியினரிடையே இக்காலத்தும் இடம் பெற்று இருப்பதுபோல், கைவிடப்படாமல் அவ்வாறே கடை பிடிக்கப்பட்டது. மலைநாட்டு ஆடவரும் பெண்டிரும் குறைந்த ஆடையில் நிறைவு கண்டனர். மனிதனை மறைக்க, கழுத்திலிருந்து தொங்கும், எண்ணற்ற கிளிஞ்சல் சரடுகள் (பிற்காலத்தில் அரைக்கச்சை அணியாம் மேகலை தோன்றுவதற்குக் காரணமாய் அமைந்த) மலர்களாலும் இலைகளாலும் ஆன மாலைகள், இவையே போதுமானவையாயின. குறிஞ்சிநாட்டு உட்பகுதியில் வாழும் குறவரிடையே, இந்த ஆடை கைவிடப்படாமல் இன்றும் உளது. இக்குறவர் மலைகளிலிருந்து இறங்கிக் கீழ் நாடுகளுக்கு வரும்போது, உடை வகையில் மேற்கொள்ளும் ஒரே மாற்றம், மலர்களாலும் இலைகளாலும் ஆன அரைக்கச்சைக்குப் பதிலாகக் கிழிந்த துணியின் சிறு துண்டை மேற்கொள்வது ஒன்றே. குறவரிடையே பாக்கள் முதல் முதலில் எழுந்தபோது, பாவாணர்கள் மலைநாட்டுத் தலைவர்களின், புணர்ச்சிக்கு முந்திய கள்ளக்காதலை, அவர்கள் தங்கள் காதலியர்க்குத் தழை உடை எனப்படும் இலை ஆடைகளையும், அம்மலை நாட்டுத் தலைவர்கள் வேட்டையில் கொன்ற புலிகளின் பற்களையும் கொடுப்பதையே இயல்பாகப் பாடினர். இப்பற்கள், மாலையாகக் கோக்கப்பட்டு கழுத்திலிருந்து தொங்க அணியப்பட்டு, புலிப்பல் தாலி என அழைக்கப்படும். (புலிப்பல்லால் செய்யப்பட்டு, மணம் ஆவதற்கு அறிகுறியாகக் கழுத்திலிருந்து தொங்கும், இப்புலிப்பல் தாலி, இளஞ்சிறுவர்களாலும் அணியப் பட்டது) பிற்காலத்தில் இதிலிருந்தே பொன்தாலி உருப்பெற்றது. பிற்காலத்தில் புணர்ச்சிக்கு முந்திய களவுக்காதல், குறிஞ்சித் திணைப்பாடல் கள் என்ற ஒருவகை பாடல்களுக்கு மட்டுமே கருப்பொரு ளாதல் வேண்டும். மலைநாட்டு மாவின் மரவினங்களோடும், இலை ஆடைகளைத் தருவதோடும், காதல் நோய்க்கு, அப்பெண்ணைக் கொண்டுவிட்ட மலைநாட்டுக் கடவுளாம் முருகனையே காரணம் காட்டி , வெறியாடல் மூலம், அந்நோய் தீர்த்தலோடும் மட்டுமே தொடர்புபடுத்தல் வேண்டும் என்பது இலக்கியமாகிவிட்டது. உண்மைக்காதல் ஒழுக்கத்தின் ஒரே சீரான போக்கில் அமையாத இந்நிகழ்ச்சிகளெல்லாம், குறிஞ்சித்திணைப் பாக்களின் கருப்பொருளாக வகைப்படுத்தி வகுக்கப்பட்டன.
அதுபோலவே, கால்நடைகளைக் காத்தற் பொருட்டு ஆயன் பிரிந்து செல்வது போலவும் சிறு பிரிவுகளால் நேரும் கடுந்துயரும், இருவரும் பின்னர் இணைந்த வழிப் பிறக்கும் பெருமகிழ்ச்சியும் (காட்டோடும் காடு சார்ந்த நிலத்தோடும் தொடர்புடையதான முல்லைத் திணைப் பாடல்களின் கருப்பொருள்களாக) முடிவு செய்யப்பட்டன. முல்லைத் திணைப்பாக்கள், தம்முடைய கற்பனைகளை, அம்மேய்ப் புலத்து இயற்கைப் பொருள்கள் பழக்கவழக்கங்களிருந்தே பெற்றுக் கொண்டன.
நெய்தல் திணைப்பாடல்கள், மீன்பிடி பெருந்தொழில் இன்றியமையாததாக ஆக்கிவிட்ட நெடும் பிரிவு, உலர்ந்த மீனாம் கருவாட்டு நாற்றத்தை இடைவிடாது வெளிப்படுத்தும், கருமை நிறம் மின்னும் மேனி அழகியாள் பால் அன்புகாட்டல் ஆகியவற்றைப் பாடற் பொருளாக்குகின்றன. வறண்ட பாலைத்திணைப்பாடல்கள், பெருமணல் பரந்து, இடையீடின்றி நீண்ட, வறண்ட நிலப்பரப்பில் வாழ்வோரின், கொள்ளையடித்துண்ணும் வாழ்க்கையின் இடை நிகழ்வாம் நெடும் பிரிவின் தொடர்பாகப் பிறந்தன. ஆகவே, நெடும் பிரிவு தரும் கடுந்துயர் பாலைபாக்களின் கருப்பொருள் ஆயின.
தமிழ்க் கவிதை உலகின் ஆட்சி எல்லைக்குள் அவல நிகழ்ச்சி எனப்படுவன, தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே, பழந்தமிழர் மனப்போக்கு தாங்கிக் கொள்ளக்கூடிய துன்பியல் பாக்களின் மிக நெருங்கிய அணுகு நிலை இவ்வளவே.
முடிவாக, முறையான திருமணம், அத்திருமண உறவைத் தொடர்ந்த அன்பு வாழ்க்கையாம் கற்பு நெறி, அதன் பாதையில் முள் உறுத்தும், பரத்தையர் ஒழுக்கத்தால், மனைவாழ்க்கையின் சீர்கேடு, அதன் விளைவாம் , மணங்கொண்ட காதலரிடையே ஊடல், அவ்வூடலைத் தொடர்ந்து வரும் மகிழ்ச்சி தருகூடல் ஆகியவை, ஆற்றுப் பள்ளத்தாக்குப் பாடல்களாம். மருதத்திணைப்பாக்களின் கருப்பொருள்களாம். நீர் நிறைந்த நெல்வயல்களில் சிலமாதக் கடின உழைப்பை அடுத்து, நெற்கதிர் முற்றும் பருவத்திலும், நெல்மணிகள் களஞ்சியத்தில் சேர்க்கப்பட்டு, அடுத்த ஆண்டு உழவிற்குப் பக்குவப்பட்டுக் கிடக்குமாறு நிலம், ஓய்வுக்கு விடப்பட்ட பின்னரும், இயல்பாகவே திணிக்கப்பட்ட ஓய்வு தொடர்ந்து கிடைக்கும் உழவுத் தொழில் நடைபெறும் நிலப்பகுதியில், நாகரீகத்தின் மெருகேற்ற மலர்ந்து வளர்ந்ததை உணர்ந்து கொள்வது எளிது. இவ்வோய்வுப் பருவத்தில், காதலர்களின் ஊடலும், இன்பலீலைகளுமே, கிடைக்கக்கூடிய இன்பப்பொழுது போக்குகளாகும்.
(தொடரும்)
புலவர் கா.கோவிந்தன்
ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு
Leave a Reply