(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 43 : பூங்கொடி தெளிதல்)

பூங்கொடி

  1. திருக்குறள் கற்றுத் தெளிந்த காதை

நாவலர் வருகை

அந்நகர் மக்கள் அறியா மையிருள்
வெந்நிட அறிவொளி விரித்தெழு செஞ்சுடர்ப்
பரிதி என்னப் பாவை விளங்க,
உரிமை வேட்கையும், உன்னும் பண்பும்,
உன்னிய தஞ்சா துரைக்கும் உரனும், 5
முன்னூ லாகிய முத்தமிழ் வகைக்கும்
விரித்துறை திறனும், வியனுறு குறள்நூல்
உலகெலாம் பரவ உழைக்கும் செயலும்,
உடையார் அறிவுப் படையார் ஒருவர்
நடையால் உயர்ந்த நாவலர் அந்நகர் 10
வருமவர் பூங்கொடி வந்துள தறிந்து
பெரும்பே ராசான் அருங்குண அறிஞர்
திருமா மகளைத் தேடி வந்தனர்;

பூங்கொடி நிகழ்ந்தன கூறல்

 வணங்கினள் தொழுதனள் வாழ்த்தினள் எழுந்து   
 மணங்கமழ் மாலை சூட்டிப் `பெரியோய்,   15
 நின்மொழி ஏற்று நெடுநாள் பயின்று

மன்னிய குறள்நூல் மாசறத் தெறிந்தேன்;
குறளகம் கண்டார் குமணன் போன்றார்
அருளறம் பூண்டார் மலையுறை யடிகள்
அவர்தம் துணையால் அறிவொளி பெற்றேன்; 20
உவர்நீர்க் கடல்நகர் உவந்தீண் டுற்றேன்,
மொழியுணர் வூட்ட முனைந்தேன், சிலரால்

பழியுரை பெற்றேன், பகுத்தறி வில்லான்

+++

 வெந்நிட - புறமுதுகிட, உரன் - வலிமை, நடையால் - ஒழுக்கத்தால், உவர்நீர் - உப்புநீர்.

++

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி