திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்

(திருக்குறளில் பதவி மேலாண்மை 1/2 தொடர்ச்சி)
திருக்குறளில் பதவி மேலாண்மை 2/2
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். (திருக்குறள், ௫௱௪௰ – 540)
என்கிறார் திருவள்ளுவர். எண்ணியதையே எண்ணி எண்ணத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம் எண்ணத்தை நிறைவேற்றுவது எளிது என்கிறார் திருவள்ளுவர்
அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்
ஒருவரைப் பதவியில் அமர்த்தும்போது, அறங்களை மதித்து நடப்பவனா, நல்வழியில் பொருள் சம்பாதித்து வாழ்க்கை நடத்துகிறவனா, குற்றமான இன்பங்களை விரும்பாதவனா, சமயம் நேர்ந்தால் உயிருக்கு அஞ்சாமல் உதவக் கூடியவனா என்ற நான்கையும் விவரமாக அறிந்து கொண்ட பிறகே ஒருவனை நம்ப வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். (தெரிந்து தெளிதல், குறள் எண்: ௫௱௧ – 501)
ஒரு பதவியாளர் தான் வகிக்கும் பதவி தொடர்பான முதிர்ந்த பட்டறிவை உடையவர் துணையைக் கொள்ள வேண்டும். பதவியாளர் சிறப்பாகச் செயற்பட வினைத்திட்பம் உடையவராக இருக்க வேண்டும்.
பதவி மேலாண்மை குறித்த திருக்குறள்களை விளக்கினால் பக்கங்கள் கூடும். எனவே, ஓரிரு தொடர்களில் சுருக்கமாக அவற்றைப் பார்ப்போம்.
திருவள்ளுவர் உணர்த்தும் பதவி மேலாண்மைக் கருத்துகள்.
வினையுறுதி ஆகிய மனத்திண்மை தேவை. (௬௱௬௰௧ – 661)
பதவிப்பொறுப்பில் செயற்படுத்தும்போது ஏற்படும் இடையூறுகளை முன்பே அறிந்து நீக்கும் திறமை தேவை. (௬௱௬௰௨ – 662)
செயலை இடையில் நிறுத்துவது பதவிக்கு அழகல்ல. (௬௱௬௰௩ – 663)
இப்படிச் செய்யலாம் எனச் சொல்வதை விட சொல்லிய வண்ணம் செய்து முடிக்கும் திறனே பதவியாளர்க்குத் தேவை. (௬௱௬௰௪ – 664)
செயற்பாட்டில் ஊறு நேரும்பொழுது அதனை அழிக்கும் வெல்லும் திறன் பதவியாளர்க்குத் தேவை. (௬௱௬௰௫ – 665) எண்ணியதை எண்ணியவாறு அடையக்கூடிய திறமை தேவை. (௬௱௬௰௬ – 666)
தோற்றம் கண்டு எடைபோடாமல் உண்மையான வினைத்திட்ப முடையாரை அறிந்து பயன்படுத்த வேண்டும். (௬௱௬௰௭ – 667)
மனம் தெளிந்து செய்வதாக மேற்கொண்ட செயலின்கண் தளர்ச்சியின்றிக் காலத்தாழ்வை நீக்கிச் செய்க என்கிறது.(௬௱௬௰௮ – 668)
துன்பம் நேரும்பொழுது உறுதியாக எதிர்த்துப் பணியாற்றி முடிவில் இன்பம் அடையச் செய்ய வேண்டும். (௬௱௬௰௯ – 669)
செயலில் உறுதிப்பாடு இருக்க வேண்டும். (௬௱௭௰ – 670)
ஒரு செயலில் ஈடுபட முடிவெடுக்கும்போது அச்செயலால் விளையும் சாதக பாதகங்கள் பற்றிய ஆராய்ச்சி யறிவும் முடிவெடுத்த பிறகு காலந்தாழ்த்தாது அச்செயலில் இறங்கும் இயல்பும் இருக்க வேண்டும். (௬௱௭௰௧ – 671)
காலந்தாழ்த்தி முடிக்க வேண்டியவற்றைக் காலந்தாழ்த்தியும் உடனே செய்ய வேண்டிய செயலை உடனேயும் செய்யும் திறமை வேண்டும். (௬௱௭௰௨ – 672)
ஒரு செயலை இயல்பாகச் செய்ய முடியாதபோது, அதை முடிப்பதற்குரிய வழி வகைகளை ஆராய்ந்து செய்யும் திறன் வேண்டும். (௬௱௭௰௩ – 673)
ஒரு செயலை அரைகுறையாக விட்டுவிடக்கூடாது. முற்றிலும் நிறைவேற்றும் பண்பு வேண்டும். (௬௱௭௰௪ – 674)
ஒரு செயலில் ஈடுபடுவதற்கு முன்பு, அதற்குத் தேவையான பொருள், ஏற்ற கருவி, காலம், மேற்கொள்ளப் போகும் செயல்முறை, உகந்த இடம் ஆகிய ஐந்தையும் குறையில்லாமல் பார்த்துக் கொள்ளும் திறமை வேண்டும்.(௬௱௭௰௫ – 675)
ஒரு செயலைச் செய்வதற்கு அது முடிவதற்கான முயற்சி, இடையில் வரும் தடை, முடிவில் அடையும் பெரும்பயன் ஆகியவற்றை ஆராயும் அறிவு வேண்டும். (௬௱௭௰௬ – 676)
ஒரு செயல் குறித்து முழுமையாக உணர்ந்தவனின் கருத்தினை முதலில் அறிந்து கொண்டே அச்செயலில் ஈடுபட வேண்டும். (௬௱௭௰௭ – 677)
ஒரு செயலில் ஈடுபடும்போது அது தொடர்பான மற்றொரு செயலிலும் ஈடுபடும் திறமை வேண்டும். (௬௱௭௰௮ – 678)
செயலில் ஈடுபடும் முன் அதனால் வரும் இழப்பு,ஆக்கம், நீண்ட கால ஆதாயம் இவற்றை எண்ணித் திட்டமிட வேண்டும். (௪௱௬௰௧ – 461) செயலை எளிதாகச் செய்ய பதவித் தொழிலுக்குரிய அறிஞர்களின் துணையைக் கொள்ள வேண்டும். (௪௱௬௰௨ – 462)
ஆதாயம் வருவதாகக் கருதி முதலுக்கே தீங்கு நேரும் செயலில் இறங்கக் கூடாது. (௪௱௬௰௩ – 463)
இழிவும் களங்கமும் தரும் செயலில் இறங்கக் கூடாது. (௪௱௬௰௪ – 464). எதிர் அணியினரை நிலைபெறச் செய்யும் வகையில் முன்னேற்பாடுகளை ஆராயாமல் செயலில் இறங்கக் கூடாது. (௪௱௬௰௫ – 465)
கேடு விளையும் வண்ணம் செய்யத்தக்கவற்றைச் செய்யாமலும் செய்யத் தகாதவற்றைச் செய்தும் பணியாற்றக் கூடாது. (௪௱௬௰௬ – 466)
இறங்கியபின் சிந்திக்கலாம் என எண்ணாமல் நன்கு சிந்தித்து முடிவெடுத்த பின்பே செயலில் இறங்க வேண்டும். (௪௱௬௰௭ – 467)
முடிக்கும் வழியறியாமல் செயலில் இறங்கக் கூடாது. (௪௱௬௰௮ – 468)முறையறிந்து மேற்கொள்ளாத முயற்சியில் இறங்கக் கூடாது. (௪௱௬௰௯ – 469)
இகழ்ச்சி வராதபடிச் சிந்தித்தே செயலாற்ற வேண்டும். (௪௱௭௰ – 470)
செயற்கரிய செயல் எனச் சோர்ந்து விடாமல் முயன்று பெருமை காண வேண்டும். (௬௱௰௧ – 611)
எந்தச் செயலாக இருந்தாலும் முழுமையாக முடிக்க வேண்டும். (௬௱௰௨ – 612)
மனையிலும் பணியிலும் உடனிருப்போர் துயர்துடைக்கும் தூணாக இருக்க வேண்டும். (௬௱௰௩ – 613) சிறப்பான செயற்பாடுகள் அமைய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.( (௬௱௰௪ – 614)
ஊழையும் தோல்வியடையச் செய்யும் வகையில் தளராமல் முயல வேண்டும். (௬௱௨௰ – 620) அஞ்சாமையைத் துணையாகக் கொண்டு, செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்ய வேண்டும். (௪௱௯௰௭ – 497)
இவ்வாறாகத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் மக்கட் பணியாற்றுவதற்குரிய பதவிகளில் அமர்வோர் பின்பற்ற வேண்டிய மேலாண்மைக் கருத்துகளை இன்றைக்கும் பொருந்தும் வகையில் திறம்படக் கூறியுள்ளார்.
– இலக்குவனார் திருவள்ளுவன்
thiru2050@gmail.com 98844 81652
வள்ளுவர் கோட்டத் திருக்குறள் உயராய்வரங்கு







Leave a Reply