– தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்

ilakkuvanar

தமிழ்நாட்டில் தமிழ் இன்னும் தனக்குரிய இடத்தை அடையவில்லை. ஆங்கிலேயர் ஆட்சி அகன்றுவிட்டபோதும் ஆங்கில மொழியாட்சி இன்னும் அகன்றிலது. ஆங்கிலேயர் ஆண்டகாலத்தைவிட இன்று ஆங்கிலம் போற்றப்பட்டும் மதிக்கப்பட்டும் வருகின்றது. தமிழை இந்நாட்டின் ஆட்சிமொழி என ஒப்புக்கொண்டுள்ள போதிலும் தமிழைக் கற்றுப் புலமையடைந்தோர்களைத் தக்கவாறு பயன்படுத்தும் சூழ்நிலை இன்னும் உண்டாகவில்லை. தலைமையிடத்தில் இருப்போரெல்லாரும் ஆங்கிலப் பற்று மிகுந்தோராய்த் தமிழ்ப்பற்றும் அறிவும் குறைந்தோராய் இருப்பதனால் தமிழை எள்ளி இகழ்ந்து ஒதுக்கும் நிலையிலேயே உள்ளனர். ஆகவே இச்சூழ்நிலையில் தமிழைப் போற்றிவளர்த்து, அதற்குரிய இடத்தை அடையுமாறு செய்வதற்குரிய பொறுப்பும் கடமையும் தமிழ்ப் புலவர்களையே சாரும்.

தமிழ்ப் புலவர்கள் தாம், தமிழால் தமிழுக்காக வாழ்பவர்கள் என்று கருதப்படுகின்றனர். தமிழர் அனைவர்க்கும் தமிழ் உரியது என்றாலும் தமிழ், தமிழ்ப் புலவர்க்குத்தான் உரியது எனத் தமிழ்ப்புலவர் அல்லாதார் கருதித் தமிழைப் புறக்கணித்து வருகின்றனர். ஆதலின் தமிழ்புலவர்கள் விழிப்புடன் இருந்து அயராது தமிழ்ப் பணியில் ஈடுபட வேண்டும் எனக் குறிப்பிட விரும்புகின்றோம். மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் நல்ல தமிழ்வாரத்தை உண்டுபண்ணித் தமிழ் நூல்களைக் கற்றுக் தெளியுமாறு செய்தல் வேண்டும். சிறப்பாகத் தொல்காப்பியத்தையும் திருக்குறளையும் தமிழர் யாவரும் கற்றுணரத் தம்மாலியன்ற பணியைச் செய்தலைப் பிறவிக் கடனாகக் கொள்ளுதல் வேண்டும். புலவர்கள் தம் கல்வி அறிவு ஒழுக்கங்களால் மக்களிடையே செல்வாக்குப் பெறுதல் வேண்டும். தம்மோடு ஒத்த புலவர்களைப்பற்றிப்புறம் கூறுதலும் பழித்துரைத்தலும் கனவிலும் கருதுதல் கூடாது.

இன்றைய புலவர்களில் சிலரிடம் இவ்விழி குணங்கள் இருப்பதாகச் சிலர் எண்ணுகின்றனர். இவ்வெண்ணத்தை மாற்றி எல்லாப் புலவர்களும் ஓருடல் போன்ற ஒற்றுமையினராய்த் தமிழின், உயர்வுக்காக வாழத் தலைப்படுதல் வேண்டும்.

தமிழிப்பெருநூல்களையும், தமிழ்ப்புலவர்களையும் குறை கூறினால்தான் தம் அறிவுநலம் வெளிப்படும் எனக்கருதி, சிலர் அவ்வாறு செய்ய முற்பட்டுத் தம் அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். தமிழ்ப் பகைவர்க்குப் பயன்படு கருவியாய் அமைந்து, தம்மைப் பாழ்படுத்திக் கொள்வதோடு தமிழின் அழிவுகும் அடிகோலுகின்றனர்.

ஒரு மொழிக்கு உயர்வும் தாழ்வும் அம்மொழியாளர்களால்தான் ஏற்படுதல் வேண்டும். ஆங்கில மொழிக்கு உயர்வு ஆங்கிலேயர்களால்தானே ஏற்பட்டது. அதுபோல் நம்மொழிக்கு உயர்வும் நம்மால்தான் உண்டாக வேண்டும் தமிழ்மொழி உயர்நிலை பெறவில்லையென்றால் நாமும் இன்னுமும் உயர்நிலை பெறவில்லை என்று கருதிடல் வேண்டும். ஆதலின், ஒல்லும் வகையால் உறுபணியாற்றத் தமிழ்ப் புலவர்கள் முந்துறுதல் வேண்டும்.

வம்மின் புலவீர்! வண்டமிழ் காக்க எழுமின்!

– குறள்நெறி மாசி 18. 1995 / 01.03.1964