எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3: இலக்குவனார் திருவள்ளுவன்

(எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 26. இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -2: தொடர்ச்சி)
எண்ணுவோம் தமிழில்! எழுதுவோம் தமிழில்! – 27.
இதழ்களில் இடம் பெறும் தமிழ்க்கொலைகள் -3
இலக்கணக் குறிப்புகளையும் சொல்லாக்கங்களையும் தெரிவிக்கும் பாதையில் இனிச் செல்லலாம் என எண்ணினேன். ஆனால், நாளும் படிக்கின்ற செய்திகளைப் பார்க்கும் பொழுது உள்ளம் நாளும் வேதனை யுறுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழ்நாட்டில் தமிழே இல்லாத நிலை விரைவில் வந்து விடும் என்று கவலையாக உள்ளது. ஆங்கிலவழிச் சிந்தனையாலும் ஆங்கிலவழியாகத் தமிழ்த் தட்டச்சை மேற்கொள்வதாலும் வரும் பிழைகளும் மண்டியுள்ளன. எழுதுபர்கள்தாம் கவனக் குறைவாலும் அறியாமையாலும் தவறாக எழுதுகிறார்கள என்றால் அவர்களுக்கு மேல்நிலையில் உள்ளவர்கள் அவற்றைப் பார்த்துத் திருத்த மாட்டார்களா? அல்லது செய்தி வந்தபின்னராவது படித்துப் பார்த்துத் தவறுகளைத் திருத்தமாட்டார்களா? இக் கொடுமைகளுக்கு எப்படித்தான் முற்றுப்புள்ளி இடுவது. ஊடகக்கொலைகளையே பார்த்தால் நாளும் நூற்றுக்கணக்கில் குறிப்பிட வேண்டும். எனவே, இந்தக் கட்டுரையுடன் இதற்கு நாமாவது முற்றுப்புள்ளி யிடலாம் என எண்ணுகிறேன்.
இப்போது நாம் மின்னிதழ்களில் காணும் சில கொலைச்செய்திகளைப் பார்ப்போம்.
“ஆனால், தற்போது வெளியாகியுள்ள சங்கீதா ஏப்ரல் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்திக்கவில்லை என்று அவரது தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.”
ஏப்பிரல் 20ஆம் நாள் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்று இருக்க வேண்டும். ஆனால், “தற்போது வெளியாகியுள்ள சங்கீதா” என்றால் என்ன பொருள்? சங்கீதா என்பது திரைப்படத்தின் பெயரா? பாடற்தொகுப்பின் பெயரா? “இப்போது வெளியாகியுள்ள சங்கீதாவின் அறிக்கையில்” என்பதுபோன்று வந்திருந்தால் சரியாக இருந்திருக்கும்.
“சரிதாவைப் பொறுத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ அல்லது அவரது மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய ஒரு நடிகரோ அல்ல”
‘ஓ காரம்’ வந்தால் ‘அல்லது’ இடையில் தேவையில்லை. சரிதாவைக் குறிப்பிட்டு விட்டு அவரது மனைவியாக என்று குறிப்பிட்டால் சரிதாவின் மனைவியாக என்றல்லவா பொருள் வருகிறது. “சரிதாவைப்பொருத்தவரை, நான் ஒரு தேசிய நட்சத்திரமோ என் மனைவியாக இருப்பதற்காக அவர் பெருமைப்பட வேண்டிய நடிகரோ அல்லன்” என்று இருக்க வேண்டும்.
“இரட்டை இலை சின்னத்துடன் செக் மாதிரிகளை கைப்பற்றிய தேர்தல் ஆணையம்”
“இரட்டை இலைச் சின்னத்துடன் உள்ள காசோலை மாதிரிகளைக் கைப்பற்றிய தேர்தல் ஆணையம்” என எழுதியிருக்கலாமே.
“மோடி கவர்மெண்ட் ஒரு ஃபெயிலியரை சந்திக்கும், டிபீட் ஆகும் இந்தப் பில்லுன்னு நினைச்சீங்களா?”
மோடி அரசு ஒரு குலைவைச் சந்திக்கும். இந்த வரைவம் தோல்வியுறும் என நினைத்தீர்களா? என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
bill என்றால் மசோதா என்கிறோம். தமிழில் சட்டவரைவு > வரைவம் என்பதே சரியாகும்.
“ஒரு பைனல் வார்னிங் அப்படின்னு சொன்னீங்க.”
(ஓர்) இறுதி எச்சரிக்கை என்று சொன்னீர்கள்.
“எதுவா இருந்தாலும் மெஜாரிட்டி இருக்கும்ன்னு நிறைவேத்திருவாங்க. ஆனா ஃபர்ஸ்ட் டைம் ஒரு பெரிய தோல்வியைச் சந்திச்சிருக்காங்க.”
எதுவாக இருந்தாலும் பெரும்பான்மை இருப்பதால் நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், முதல் தடவையாக ஒரு பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள் – என எழுதுவதே சரி.
“மோடியால் கண்ட்ரோல் பண்ணவே முடியாது.”
மோடியால் கட்டுப்படுத்தவே முடியாது.
“டிலிமிட்டேசன் விவகாரத்தில, நாடாளுமன்றத்தில் முதல் முறையாக தோல்வி அடைந்த பதட்டத்தில அவர் இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிறார்.”
தொகுதி மறுவரையறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் முதல் முறையாகத் தோல்வி அடைந்த பதற்றத்தில் இவர் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறார் – இவ்வாறு எழுதுவதுதானே சரியாக இருக்கும்.
delimitation என்றால் வரையறை எனப் பொருள் என்றாலும் தொகுதி வரையறை என்ற பொருளிலேயே குறிக்கப்படுகின்றது. பதட்டம் என்பது தவறு. பதற்றம் என்றே குறிக்க வேண்டும்.
“திமுக கூட்டணியில் அதிமுக சார்பில் ஒருவரும் ….”
செய்தியைப் படித்ததுமே தவறு தெரிந்து விடுகிறது. அதிமுக கூட்டணியில் என்று இருக்க வேண்டும். ஆனால், இது போன்ற தவறுகளை நாளும் காணலாம்.
“ராஜ்யசபா எம்.பி”
மாநிலங்களவை உறுப்பினர் எனத் தமிழில் குறிப்பிடலாமே!
“மாஜி மந்திரிகள்”
முன்னாள் மந்திரிகள் அல்லது முன்னாள் அமைச்சர்கள் என்று குறிக்கலாமே!
“ஊட்டி, கொடைக்கானலுக்கு பாய் சொல்லிட்டு.. இந்த சம்மருக்கு பிளான் பண்ணவேண்டிய சூப்பரான மலைவாசஸ்தலங்கள்!”
பாய், படுக்கை என்று சொல்ல வேண்டுமா?
தலம் என்னும் தமிழ்ச்சொல்லுடன் ஸ் சேர்த்து ஸ்தலம் என ஆரியச் சொல்லாக்கி விட்டனர். எனினும் ஊட்டி, கொடைக்கானலுக்கு விடை கொடுத்துவிட்டு, இந்தக் கோடைக்குத் திட்டமிடவேண்டிய சிறப்பான மலைவாழிடங்கள் என்பதே சரியாகும்.
“தேயிலை தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணார்.”
மூணாறு, அடையாறு, பெரியாறு என்று குறிப்பிடாமல் மூணார், அடையார், பெரியார் என்றே தவறாக எழுதியும் பேசியும் வருகின்றோம். ஆறு எப்படி ஆர் ஆகும்.
தேயிலைத் தோட்டங்களால் சூழப்பட்ட குளுமையான இடம் மூணாறு என்று இருக்கவேண்டும்.
“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்தால் வரவில்லை.”
“அவரை 5 வருடங்கள் ஒப்பந்தம் செய்ததால் வரவில்லை” என்று இருக்க வேண்டும்.
“மே நாலந்தேதி சன்டை போட்டுக்கலாம்.”
நாலாந்தேதி -நாலாம் நாள் என்றெல்லாம் குறிக்காமல் அஃதென்ன நாலந்தேதி. அதென்ன சன்டை? சண்டை என்று கூட எழுதத் தெரியாதா?
“தமிழீசையின் வாக்கு பலிக்குமா?”
தமிழிசையின் வாக்கு பலிக்குமா? என்றுகூட குறிக்கத் தெரியாதா?
“அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வென்றுள்ளார்.”
இரு முறை பெயரைக் குறிப்பிட்டுச் செய்தியைக் குழப்புவானேன்?
எனது மகன், அவரது மகன் என்று சொல்லக் கூடாது. மகன் உடைமைப் பொருளல்ல. எனக்கு மகன், அவருக்கு மகன் என்றுதான் வரவேண்டும். அவர் மகன் என்று சொன்னால் போதும்.
அவர் மகன் உதயநிதி தாலின், தான் போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வென்றுள்ளார் எனலாமே!
“மாலை 6 மணி வரை நான் விஜய்யுடன் வீட்டில் தான் இருந்தார்.”
நான் எனத் தன்மையில் குறிப்பிட்டு விட்டு இருந்தார் எனப் படர்க்கையில் முடித்துள்ளது ஏன்?
மாலை 6 மணி வரை நான் விசய்யுடன் வீட்டில் தான் இருந்தேன் என்று வர வேண்டும். அல்லது மாலை 6 மணி வரை விசய் வீட்டில் தான் இருந்தார் என வர வேண்டும்.
“இதன் காணமாகவே ‘
இதன் காரணமாகவே என்பதில் ‘ர’ எழுத்தைக் காணாமல் போக்கி விட்டார்கள்.
“என்னை வலுக்கட்டாயமாக கருவை செய்தார்.”
கருவை செய்தாரா? கருக்கலைப்பு செய்தார் என்றுதானே இருக்க வேண்டும்.







Leave a Reply