அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 5. ஈ. இன்பம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 4 இ. விளைவு-தொடர்ச்சி)
அறிவியல் திருவள்ளுவம்
ஈ. இன்பம்
மனத்தின் இயக்க விளைவுதான் உணர்ச்சி.
“மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி” (453) என்றார் திருவள்ளுவர். உணர்ச்சி உடம்பில்-மெய்யில் வெளிப்படுவதை (மெய்யில் படுவதை) ‘மெய்ப்பாடு’ என்றனர் தமிழ்ச் சான்றோர்.
உணர்ச்சி வெளிப்பாடாம் ‘மெய்ப்பாடுகள்’ எட்டு.
“நகையே அழுகை இளிவரல் (இழிவு) மருட்கை (வியப்பு)
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம் மெய்ப்பாடு என்பு“[26]
என்றார் தொல்காப்பியர். எட்டுள் இறுதியாகச் சொல்லப் பட்ட உவகைதான் ‘இன்பம்’ எனப்படுவது.
எனவே, இன்பம் என்பது உள்ள நிகழ்ச்சி. இவ்வின்பம் உள்ளத்தில் எழுந்து உடலிலும் உணரப்படும்.
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்“(1330)
என்றதில் ‘கூடி முயங்கப் பெறும் இன்பம்’ உடலால் நேர்வது. ஊடும் காம இன்பம் உள்ளத்தால் நேர்வது. உடலால் நேர்வதும் உணர்வாக உள்ளத்தால்தான் வெளிப்படும்.
எனவே, எவ்வகையிலும் இன்பம் என்னும் உணர்வு உள்ளத்திற்கு உரியது.
உளவியலை ஆராய்ந்து இக்காலத்தில் காணப்பட்ட முடிவும் இவ்வாறே கூறுகிறது. ஆனால் இவ்வின்பத்தை வெளிப்படுத்தும் உள்ளம் என்பது உடலில் எங்கு இருக்கிறது(?), இருக்கும் இடம் எது(?) என்பதை இன்றைய அறிவியலால் இன்றளவும் காணமுடியவில்லை. திருவள்ளுவர் அதனை வெளிப்படுத்தினார்.
உள்ளத்தைக் குறிக்கத் தமிழில் மனம், நெஞ்சம், (அகம்) எனும் சொற்களும் உள்ளன. இவற்றைத் திருவள்ளுவர் ‘வாய்மை’ அதிகாரத்தில் அடுத்தடுத்து வைத்துள்ளார்.
“தன் நெஞ்சு அறிவது பொய்யற்க” (293)
“உள்ளத்தால் பொய்யாது ஒழுகின்” (294)
“மனத்தொடு வாய்மை மொழியின்” (295)
“அகம் தூய்மை வாய்மையால்’ (293)
நான்கு சொற்களில் ‘அகம் இடத்தைக் குறிக்கும். அவ்விடம் நெஞ்சம் என்று குறிக்கப்பட்டுள்ளது.
உள்ளம் – உள்ளே அமைந்தது.
மனம் (மன் + அம்) – நிலைத்தது (மன்-நிலைப்பு)
அகத்தே (உள்ளே) மனம் – (உள்ளம்) உள்ளது என்று பொதுவாக இடம் குறித்தார். இடம் என்றால் எந்த உறுப்பு என்னும் இடம் ? அதற்கு விடைதான் ‘நெஞ்சம்’ என்பது. நாம் இப்போது வடமொழியில் குறிக்கும் ‘இதயம்’ என்பதே நெஞ்சம். நெஞ்சில் கைவைத்துச் சொல்’ என்கிறோம். எங்கே கை வைப்பது? மார்பின் மையத்தில் கைவைப்போம். இவ்வழக்கிலும் நெஞ்சம் மார்புப் பகுதியில் அமைந்தது’ என்று அறிகிறோம். தனி உருவின்றி உணர்வே உருவாக நெஞ்சக இயக்கத்தோடு பிணைந்திருக்கிறது. இதன்படி “நெஞ்சம்” என்ற சொல்லை வைத்து உணர்ச்சியைத் தரும் உள்ளம் தெஞ்சகத்தில் உள்ளது என்றார். இன்று காணப்படாத ஒர் உண்மை அன்று திருவள்ளுவரால் ஓர் அதிகாரத்தில் நான்கு சொற்களைப் பெய்து காட்டப்பட்டுள்ளது.
உணர்ச்சிகளில் இன்பம் ஒன்று.
“இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன்” (628)
என்னும் திருக்குறள் இன்பத்தைப் பற்றிய மூன்று கருத்துக்களைக் கொண்டுள்ளது.
“இன்பம் விருப்பத்தைத் தரும்.
இன்பத்தையே எதிர்பார்த்து இல்லாமல் அதனை விரும்பாதிருக்கவும் வேண்டும்.
இன்பத்திலேயே விருப்பம் கொள்ளாதிருந்தால் துன்பம். வராது” இவை உள்ளத்தால் எழும் உணர்ச்சித் தொடர்புடையவை.
“இன்பம் பயக்கும் வினை” (669) என்றதில் இன்பத்தை ஒருவன் “செய்யும் செயல் தரும்” என்று. செயல் தொடர்பு உள்ளது.
மேற்காணப்பட்ட நான்கையும் பொருத்தி நோக்கினால் உடன்பாட்டுப் பொருளாக ‘விரும்பிச் செயலாற்றினால் இன்பம் தோன்றும்’ என்பது கிடைக்கிறது.
பொதுவாக இன்பம் என்றால் முடிவில் மாந்தர்க்குத் தோன்றுவது உடலுறவு இன்பமாக உள்ளது. இதனைச் ‘சிற்றின்பம்’ என்றனர் இடைக்காலத்தார். திருவள்ளுவர்க்கு இது கருத்தன்று. கருத்தாயிருப்பின் ‘காமத்துப் பால்’ பாடிக் காதலினைச் சிறப்பித்திருக்கமாட்டார்.
“சிற்றின்பம் வெஃகி (அவாவி) அறணல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்“(173)
என்னும் திருக்குறளில் உள்ள “சிற்றின்பம்” என்பது. ,சிறிதளவான இன்பம்’, ‘சிறு நேர இன்பம்’ எனப் பல்வகை. அவாவாலும், அவாக்கொண்டு செய்யப்படும் செயல்களாலும் உண்டாகும் உணர்வுகளையே குறிக்கும். காம இன்பத்தை மட்டும் குறிக்காது. மற்றும் “இன்பம் இடையறாது ஈண்டும்” (369) என்றார். இது இன்பம் சிறு அளவிலோ சிறுநேரத்திலோ மட்டுமன்று, தொடர்ந்தும் இருப்பது என்பதையும் குறிக்கிறது. மேலும் “பேரறிவு” (215). “பேராண்மை” (148) என்றெல்லாம் பாடியவர் ‘பேரின்பம்’ என்னும் சொல்லமைப்பையும் காட்டவில்லை.
எனவே, இன்பம் என்பது ஒரு நிலையை மட்டும் குறிப்பதன்று.
“தாம் இன்புறுவது உலகு இன்புறக்கண்டு” (239) என்றதால்,
“காமுறுவர் கற்றறிந்தார்” (399) என்னும் கல்வி யின்பம் குறிக்கப்பட்டது.
“ஈத்துவக்கும் இன்பம்” (228) என்றதால் இல்லாதவர்க்குக் கொடுத்து அவர் மகிழ்வதைப் பார்த்து உவப்பது இன்பமாகிறது.
“செறுவார்க்கும் சேண் இகவா இன்பம்” (869) என்றதால் எதிரியின் அச்சத்தால் போரிலும் மற்றவனுக்கு இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம்” (156) என்றதால் பிறரை ஒறுப்ப (தண்டிப்ப) தாலும் இன்பம் தோன்றுவது குறிக்கப்பட்டது.
“இன்பம் பயக்கும் மாசறு காட்சியவர்க்கு” (352) என்றதால் அறிவால் இன்பம் தோன்றுவது குறிக்கப் பட்டது.
இவை போன்று ஒன்றாக,
“இன்பம் கூடி முயங்கப் பெறின்” (1330) என்று உடலுறவு இன்பம் குறிக்கப்பட்டது.
இவ்வாறெல்லாம் இன்பத்தை விளக்கும் திருவள்ளுவர் இன்பத்துடன் துன்பத்தைத் தொடர்புபடுத்திப் பாடியுள்ளமை இங்கு நோக்கத்தக்கது.
“இன்பம் இடையறா தீண்டும், அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்” (369)
"இன்பம் விழையான்; இடும்பை இயல்பென்பான்;
துன்பம் உறுதல் இலன்" (628)
"இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்” (629)
"துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை” (669)
"இன்பக் கடல் மற்றுக் காமம்; அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது’’ (1166) என்றெல்லாம்
துன்பத்துடன் தொடர்புபடுத்தி இன்பத்தை விளக்கினார். துன்பத்திற்குரிய பிற சொற்களாகிய ‘இடும்பை’ (628) ‘இன்னாமை‘ (630) என்பவற்றையும் உடனமைத்துக் காட்டினார்.
இவ்வாறு இன்பத்தோடு துன்பத்தை இணைப்பதும் இன்பம் பல்வகை உணர்வுகளால் எழுவதும் எனும் கருத்துக்களைக் கருத்தில் நிறுத்தி இக்கால அறிவியலுக்கு வருவோம்.
செருமனி நாட்டு உளவியல் வல்லுநர் உண்டி (Wundi) உணர்ச்சிகளை ஆராய்ந்து உண்மை கண்டவர். அவர் கண்ட கீழ்வரும் உண்மை இங்கு காணத்தக்கது.
“இன்பம், துன்பம், ஊக்கம், ஒய்வு, கிளர்ச்சி, அமைதி என ஆறும் உணர்ச்சிக்கு அடிநிலைகள்” – இவ்வாறு உணர்ச்சியின் அடிநிலைகளைக் கண்டவர் இன்பத்தை அடுத்துத் துன்பத்தை வைத்துள்ளமை திருவள்ளுவத்துடன் ஒப்பு நோக்கத்தக்கது.
திருவள்ளுவர் தம் திருக்குறளில் இன்பத்துடன் துன்பத்தை இணைத்துக் குறித்தமை ஐந்து குறட்பாக் களில் கண்டோம். அவற்றுள்ளும் “இன்பத்துள் இன்பம்” என்றும், “துன்பத்துள் துன்பம்” என்றும் துணுக்கமாகக் கூறியமை இரண்டின் அடிநிலைக் கிளைகள் ஆகும்.
வல்லுநர் உண்டி அவர்கள் ஆறு அடிநிலைகளை, மேலும் ஆய்ந்து ஒரு கருத்தை வெளிப்படுத்தினார் :
“அடிநிலையாகக் கூறப்பட்ட ஆறில்
எவையேனும் மூன்று இணைந்தே
காணப்படும்” என்றார். சான்றாக,
- இன்ப ஊக்கக் கிளர்ச்சி
- துன்ப ஊக்க அமைதி – எனக் காட்டினார். இவை இரண்டை வைத்துத் திருவள்ளுவத்தைக் காணலாம். இரண்டில் முதலில் உள்ள இன்ப ஊக்கக் கிளர்ச்சியில் இன்பத்துடன் ஊக்கம் தோன்றிக் கிளர்ச்சி உணர்வாகிறது.
திருவள்ளுவத்தில்,
“துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை” (669)
என்னும் குறட்பா
“இன்பம் பயக்கும் வினை செய்க;
துன்பம் உறவரினும் செய்க;
துணிவு ஆற்றிச் செய்க–“
என அறிவிக்கின்றது.
இக்குறளில் எடுத்துக் கொள்ளப்பட்டது இன்பம். அதனைத் துணிவு ஆற்றி என்றது, நெஞ்சத்துணிவைத் துண்டுவதாகிய ஊக்கத்தைக் குறிக்கும். நெஞ்சத் துணிவால் எழுந்த ஊக்கத்துடன் செய்க என்றது, இன்ப ஊக்கத்தில் கிளர்ச்சியால் நேர்வது. எனவே, வள்ளுவர் குறள், உளவியல் வல்லுநர் அடிநிலை விளக்கத்தைப் பின் வருமாறு குறித்துக் காட்டுவதாகிறது.
வள்ளுவர் : வல்லுநர் :
இன்பம் பயக்கும் : இன்ப
துணிவு ஆற்றி : ஊக்க
செய்க : கிளர்ச்சி
இது போன்றே வல்லுநர் காட்டிய ‘துன்ப ஊக்க அமைதி’யை வள்ளுவக் குறள்
“இன்பம் விழையான், இடும்பை இயல்பென்பான்
துன்பம் துடைத்துான்றும் தூண்” (628)
என்பது காட்டியது. இக்குறளில் துன்பத்தைப் போக்கும் உறுதிப்பாடு கூறப்பட்டது.
துன்பம்,
அஃது ‘இடும்பை இயல்பென்று கொண்டு உள்ளத்தின் ஊக்கத்தால்
துடைக்கப்படுவது;
துடைக்கப்பட்டதைக் கலக்கமில்லாத உறுதித்தூணில் வைப்பது’-என மூன்று கருத்துகள் உள்ளன. இவை “உளவிய அறிவிய”லில் பொருந்துகின்றன.
வள்ளுவர் வல்லுநர்
துன்பம் : துன்ப
(மன ஊக்கத்தால்) துடைத்து : ஊக்க
இடைவளிமண்டிலம் (Microsphere) : ஊக்க
ஊன்றும் தூண் : அமைதி
18ஆம் நூற்றாண்டளவில் ஆய்ந்து காணப்பட்ட இன்ப துன்ப விரிவுகள் திருவள்ளுவத்தில் முறையே ஒவ்வொரு குறளில் அமைந்தவையாகின்றன. திருவள்ளுவம் ஓர் உளவியல் அறிவியலில்தன் பங்களிப்பை வைத்துள்ளமைக்கு இஃதொரு சான்று.
இன்பம் சீர்குலையாமல் அமைய வேண்டும். அதற்கு இடையூறு வராமல் பாதுகாப்பு வேண்டும். அப்பாது காப்பாம் ‘ஏமம்’ இன்றியமையாதது.
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
Leave a Reply