(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 7 உ.3. கல்வி ஏமம், 4.கேண்மை ஏமம்- தொடர்ச்சி)

நட்பாம் கேண்மை போன்றது இனம். இங்கு இனம் என்றால் ஒருவருடன் அவருக்கு இனமாக அஃதாவது துணையாகக் கூடியிருப்பவரைக் குறிக்கும். சாதி என்பதை அன்று. கேண்மை இருவர் தொடர்ந்து ஒன்றிப் பழகுவது. இனம் கூடியிருப்பது; தொடராமலும் அமையும். நட்பு இடையறாத் தொடர்பு, இனம் ஒரு கூட்டு; செயற் பாட்டிற்குத் துணையாக உதவுவதும் பழகுவதும் இனமாதல் ஆகும்.

நட்பில் தீநட்பும் உண்டு; கேண்மையில் புன்கேண்மையும் உண்டு. இனத்திலும் நல்லினமும் உண்டு; தீயினமும் உண்டு. இதனைத் திருவள்ளுவர்,

             “நல்லினத்தின் ஊங்குங் துணையில்லை; தீயினத்தின்
             
அல்லல் படுப்பது உம் இல்” (460)

என்ற குறளில் காட்டினார். இத்துடன், நல்லினம் துணையாகும் (பாதுகாப்பாகும்), தீயினம் அல்லல் தரும் என்று ‘இன நல ஏம’த்தைக் குறித்தார்.

பெரியாரைத் துணைக்கோடல்’ என்னும் அதிகாரத் தால் நல்லினத்தின் நலத்தையும் சிற்றினஞ் சேராமை’யால் தீயினத்தின் தீமையையும் விளக்கினார். ‘சிற்றினஞ் சேராமை”யாம் எதிர்மறையில் நல்லினத்தில் ஏமத்தை அழுத்தமாக விரித்தார்.

மக்கட் கூட்டம் இலக்கியங்களில் ‘மன்பதை’[27] எனப் படும். அதனைத்தான் ‘சமுதாயம்’ என்கின்றனர். தமிழில் ‘குமுகாயம்’ என்று குறிக்கின்றோம். குமுகாய அமைப்பு இந்த இனநலத்தால்தான் உருவாகிறது. இன மாகக் கூடுவது தனியொருவர்க்கும் வேண்டியது; பொது மக்களுக்கும் வேண்டியது; நாட்டிற்கும் வேண்டியது. இனநலத்தால் அந்நலம் பெற்றவரோ, நாடோ ஏமம் பெறும். திருவள்ளுவர்.

இனம் என்னும் ஏமம்” (306) என்று இனத்தையே ‘ஏமம்’ என்றார்.

ஆன்று அவிந்து அடங்கிய சான்றோர்க்கும் ‘இனநலம்’ ஒரு பாதுகாப்பு. சான்றோர்க்கு மனநலம் நன்றாக அமைந்திருக்கும். ஆயினும்,

          “மனநலம் நன்குடைய ஆயினும் சான்றோர்க்கு
          
இனகலம் ஏமாப்பு உடைத்து” (458)

சான்றோனாயினும் பொதுமக்களில் ஒருவனாயினும் உயிரோடு வாழும் வாழ்வு இம்மை வாழ்வு. உயிர் போனாலும் அவன் வாழ்நாளில் பெற்ற புகழ் உலகில் நின்று நிலவும். அப்புகழ் வாழ்வு அவனது மறுமை வாழ்வு. அண்ணல் காந்தியடிகள், வள்ளலார், பெரியார், சவகர்லால் தேரு, அறிஞர் அண்ணா முதலியோர் இயற்கை யெய்தினாலும் இன்றும் மக்கள் நெஞ்சில் புகழுடன் வாழ்கின்றனர். இவ்வாழ்வு அன்னாரின் மறுமை வாழ்வு. இந்த மறுமையைத்தான் திருவள்ளுவர் “உளதாகும் சாக்காடு” (235) என்றார். மறுமை வாழ்வு எவ்வாறு தொடர்கின்றது? அவர்களோடு நல்லினமாக இருந்தோர் இன்றும் வாழ்வதாலும், அவர்தம் கொள்கைகளை ஏற்று அவர்களுக்கு இன்றும் நல்லினமாக உள்ளோர் வாழ் வதாலும் மறுமை வாழ்வு நீடிக்கிறது. இவ்வகையில் இனநலம் மறுமை வாழ்விற்கும் ஏமம் ஆவது, இது,

“மனநலத்தின் ஆகும் மறுமை; மற்றஃதும்
இனநலத்தின் ஏமாப்பு உடைத்து” (459)

என்னும் குறளில் பதியப்பட்டுள்ளது.

‘இனநலம் ஏமம்’ என்று திருவள்ளுவர் காட்டிய கருத்துகள் குமுகாய அறிவியலில் (Social Science) வெளிப்படுத்தப்பட்டுள்ளமை வியக்கத் தக்கதாகும்.

உயிரினத்தோற்றம் அதன் படிமலர்ச்சி (Evolution)யை ஆய்ந்து ஒரு சட்டகம் அமைத்தவர் தார்வின் என்பார். இவர் கொள்கை தார்வின் கொள்கை’ எனப்படும். இக் கொள்கை வழி ஆய்ந்தோர் பின்வரும் கருத்தை வெளியிட்டனர் :

          “குமுகாயப் படிமலர்ச்சியில் போரும்
          
போட்டியும் வேண்டாதவை அல்ல;
                                                 
முறையானவையே

என்றனர்.

ஆனால், இதனை மேலும் ஆராய்ந்த குமுகாயவியலார் அக்சிலி (Huxley) என்பார் இக்கொள்கை தவறு என்று மறுத்து,

          ‘மாந்தருக்குள் (இனமாகக் கூடும்) கூட்டுறவும்,
          ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும்
          குமுகாய நலத்திற்கு உதவும்’
என்றார்.

இந்தக் குமுகாயவியல் (Social Science) கொள்கை. மேலே கண்ட திருவள்ளுவ இன ஏமக் கருத்தில் மிளிர்கின்றது.

இனம் இல்லாமைஏமம்

இனம் ஏமமாவது போன்று இனம் இல்லாமையும் ஏமமாகும். இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை மற்றையக் கட்சியுடனோ, கட்சிகளுடனோ கூட்டு சேர்ந்து தேர்தலில் ஈடுபட வேண்டியுள்ளது. இக்கூட்டு அரசியல் இனம் ஆகும். கூட்டில் கொள்கை ஒற்றுமை, குறிக்கோள் ஒற்றுமை பார்ப்பதும் மறைந்து வருகின்றது. கூட்டு சேர்வது வெற்றிக்கு மட்டும் அன்றிக் கட்சிக்கும் ஏமம் ஆக வேண்டும். இதற்கு மாறாக,

‘ஒரு கட்சியுடன் கூட்டு சேராதிருத்தலே வெற்றிக்கும் கட்சிக்கும் ஏமமாக அமையும். காரணம் கூட்டு சேரத் தகுதியின்மை பலவகையால் அமையலாம். அவற்றுள்ளும் இக்காலம் குறிப்பிடத்தக்கதாக ஒரு கட்சியின் தலைமை அதற்குரிய தகுதியைக் கைவிட்டதாகலாம். கட்சித் தலைமை பெருந்தகவான குணம் இல்லாமல் தன் மூப்பு கொண்டதாகுமானால் கூட்டின் ஏமம் குறையும், தலைமையின் தனி வாழ்விலும், பொறுப்பு நடை முறைகளிலும் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பது மாகிய குற்றங்கள் பலவாக இருப்பினும் கூட்டின் ஏமம் கெடும்.’

இவ்வாறு இக்காலத்தில் பொதுவாகக் கருதப்படுகிறது. இக்கருத்து நடைமுறைச் செயற்பாட்டிற்கும் பொருந்தும் நிலை உள்ளது.

இந்நிலை பற்றிய திருவள்ளுவரின் கருத்து

குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனன் இலனாம் ஏமாப்பு உடைத்து (868)

சள குணமின்மையும் குற்றம் பல உண்மையும் இனம் ஆகாமலே மாற்றாரை ஏமத்தில் வைத்து விடுகின்றன. இக் கருத்து இன்றையக்கட்சி அரசியல் (Partism Political) என்று தோன்றிக் கொண்டிருக்கும் புதுமை அறிவியலின் முன் னோட்ட அடையாளமாகின்றது.

பெண்ணினத்தையும் அடக்கியே திருவள்ளுவர் ஆண்பாலிலேயே அறிவுரையும் கருத்துரையும் வழங்கியுள்ளார். இம்முறையில் இக்குறளிலும் பெண்களையும் குறிப்பிட்டே குறித்துள்ளார். இக்காலத்தில் தலைமை அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும் மகளிர் அமர்ந்துள்ளமையால் இஃது இருபாலார்க்கும் உரிய குறளாகும். படிப்போர் நாட்டு நடப்பறிந்து பொருள்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமறையான திருக்குறட் கருத் துக்கள் திறனாய்வு செய்யப்படும்போது எந்த ஒரு கட்சியையும் பொதுவாகச் சுட்டாது போவதே திறனாய்வுக்கு ஏமமாகும்.

(தொடரும்)