(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை – தொடர்ச்சி)

திருவள்ளுவப் பெருந்தகைக்குக் ‘கவிஞர்’ என்னும் சொல்லை அடைமொழியாக்கலாம். ஆக்கினால் அச்சொல் பெருமை பெறும். அதனுடன் ‘அறிவியல்’ என்பதை அடைமொழியாக்கினால் அடைமொழியாக்குவோன் திருவள்ளுவரின் அறிவியல் திறத்தை அணுகியவன் ஆகிறான்.

திருவள்ளுவர் கவிஞரா ?

திருவள்ளுவரைப் ‘புலவர் திருவள்ளுவர்’, ‘மன்புலவன் திருவள்ளுவன்’, ‘முதற் பாவலர்’- எனப் புலவராகவும், பாவலராகவும் ‘மாலை’[1] சூட்டிப் போற்றினர். மணிமேகலை ஆசிரியர் சாத்தனாரும் ‘பொய்யில் புலவன்’[2] என்றார். முந்தையோர் ‘கவிஞர்’ என்று பாடவில்லை.

கம்பருடனும், இளங்கோவுடனும் இணைத்துப் பாடிய நம் காலக் கவிமாமன்னன் பாரதி, ‘யாமறிந்த புலவரிலே’ என்று திருவள்ளுவரைப் புலவராகப் போற்றினார்.

ஆனால், அவரே,

“கம்பன், இளங்கோ, திருவள்ளுவர் முதலிய மகா கவிகளுக்கு ஞாபகச் சின்னமும் வருசோற்சவமும் ஏற்பாடு செய்ய வேண்டும்”[3] என்று கட்டுரையில் ‘கவி’யாகக் குறித்தார். பாரதிதான் திருவள்ளுவரைக் ‘கவிஞர்’ என்று குறித்த முதற் கவிஞர். அவ்வையாரையும் “கவியரசி” என்று போற்றினார்.

புலவர் புலமை உடையவர். புலமையால் பாடம் சொல்லும் ஆசிரியராகவும், எழுதும் ஆசிரியராகவும் விளங்குவார். முற்காலத்தில் எழுதும் புலமை “செய்யுள்’ எழுதுவதாக இருந்தது. பின்னர் உரைநடையும் கூடிற்று. செய்யுளுக்குப் ‘பா, பாட்டு’ எனவும் பெயர். பாவைப் பாடுபவர், எழுதுபவர் பாவலர் எனப்படுவார்.

செய்யுளும் பாவும் பாட்டும் இலக்கணக் கட்டுக் கோப்புடன் அமைபவை. சீரான பலவகை ஓசைகள் உடையவை. ஆற்றுநீரில் மிதந்து செல்வது போன்று பாவின் பொருளை எளிமையாகக் கொள்ளலாம். எதிர்த்து நீந்துவது போன்று மூழ்கி வளப்பொருளை எடுப்பது போன்று முயன்றும் பொருள் கொள்ளலாம்.

‘செய்யுள், பா, பாட்டு’ எனப்படுபவைதாம் ‘கவிதை’ எனப்படுவதும். கவிதை இலக்கண அமைப்பு உடையதே. பாரதியாரும் பாவேந்தர் பாரதிதாசனாரும் செய்யுள் இலக்கணம் வழுவாது எழுதினர். அவர்தம் செய்யுள்களும் பாக்களும் பாட்டும் ‘பாரதியார்கவிதைகள்’, ‘பாரதிதாசன் கவிதைகள்’ எனக் கவிதைப்பெயரில் வழங்கப்படுகின்றன.

பொதுவான ஒரு கருத்து, ‘செய்யுளைப் பாடுபவன் புலவன்; கவிதை எழுதுபவன் கவிஞன் என்பது. இதற்கு மாற்றாக ஓர் அமைதி சொல்வதுபோன்று திருஞானசம்பந்தர் “உரவார் கலையின் கவிதைப் புலவர்[4] என்று “கவிதைப் புலவர்” என்னும் தொடரை வழங்கினார்.

ஒரு கருத்திற்குப் பழமைச்சொல்லும் இருக்கும். புதுமையாகச் சொல்லாக்கமும் அமையும். இவ்விரண்டையும் சங்க இலக்கியங்களிற் காணலாம்.

“புலவர் புல
நாவிற் புனைந்த நன்கவிதை“
[5]

என்று பாடினார். இதிலுள்ள ‘கவிதை’ என்னும் சொல் அக்காலப் புதுமைப் படைப்புச் சொல். புலவர் புலமையால் பாடும் செய்யுளுக்குத்தான் ‘கவிதை’ என்னும் சொல்லை ஆக்குவதாக ஆசிரியர் நல்லந்துவனார் “புலவர், புலம்” எனும் இரண்டு சொற்களையும் முன்னே வைத்துள்ளார்.

இதற்குப் பொருள் விரித்த பரிமேலழகரும்,

“கவிதை-கவியின் தன்மை. அஃது ஈண்டு செய்யுள் மேல் நின்றது” என்றார். இது, ‘செய்யுள்’ என்னும் சொல்லுக்குரிய மாற்றுச் சொல்லாகக் ‘கவிதை’ என்பதைக் காட்டியதாகும்.

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்ச மூலத்தில்,

“செந்தமிழ் தேற்றாதான் கவிசெயல்
நாடின் நகை“
[6]

என்பதில் ‘கவி’ என்னும் சொல் உள்ளது. இதனை எழுதியவர் காரியாசான் என்பவர்.

கவிதை – தமிழ்ச்சொல்

‘கவிதை, கவி’- என்னும் சொற்கள் பற்றி ஓர் ஐயம் எழலாம். பரிபாடலிலும், மாமூலத்திலும் பல வட சொற்கள் உள்ளன. அவைபோன்று ‘இவையிரண்டும் வடசொற்கள் ஆகாவோ(?) என்று வினவலாம். இந்த ஐயம் தோன்றி, நிலைத்து, உறுதியான முடிவாக வடமொழிதான் என்று இக்காலத்தில் கருதப்படுகிறது.

பாரதிதாசனார் புரட்சிக் கவிஞர் என்று புகழப் பட்டவர். இப்புகழ் மொழியில் உள்ள ‘கவிஞர்’ என்பதை வடமொழியாகக் கொண்டு அதனை அவருக்கு வழங்க மனமின்றி ‘பா வேந்தர்’என்று புகழப்படுகிறார். ஆனால், பாவேந்தராம் புரட்சிக் கவிஞர் அவர்களே ‘கவிதை’ தமிழ்ச்சொல் என்று எழுதினார். அவர் கருத்தின்படியும் ‘கவிதை’ என்பது தமிழ்ச் சொல்லே.

எவ்வாறு?

‘கவிதை’ என்னும் தமிழ்ச் சொல்லிற்குப் பகுதி ‘கவி’. இதற்கு மூலச்சொல் ‘கவ்’ என்பது ‘கவ்’ என்றால் கவ்வுதல், கவர்தல் கவர்ச்சித்தல் எனப் பொருள்படும். இதற்குத் திருவள்ளுவரே சான்று தந்தார் :

“கவ்வையால் கவ்விது காமம்” (1144) என்னும் தொடரில் ‘கவ்’ இரண்டு இடங்களைப் பிடித்துள்ளது. முதலில் உள்ள ‘கவ்வை’ என்பதற்குத் ‘துன்பம்’ என்று பொருள். அஃதாவது கவ்வுதலால் ஏற்படும் மனத்துன்பம். இக்குறட்பாவில் கவ்விய, ‘அலர்’ என்னும் பழிச்சொல்லும் துன்பத்தைக் குறிக்கும். இரண்டாவதாக உள்ள ‘கவ்’ என்பது கவர்ச்சியுள்ளது; ‘கவர்ச்சியால் இன்பம் தருவது’ என்னும் பொருள் காட்டுவது.

இஃது இ என்னும் இறுதி இணைந்து ‘கவி’ என்னும் சொல்லாயிற்று, செவ் + இ = செவி: குவ்+இ = குவி (குவியல்); புவ்+இ = புவி என்றெல்லாம் ஆனமை போன்று ‘கவி’ உருப்பெற்றது. (‘பெளவம்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்குக் ‘கடல்’ என்று பொருள். பெளவம், ‘புவ்வம்’ என்றாகும். “புவ்வத்-தாமரை”[7] என்று பாடப்பட்டுள்ளது). ‘புவ்’ என்னும் கடல் நீரை உடையது புவி.

இச்சான்றுகளால் ‘கவி’ என்னும் சொல் தமிழ்ச்சொல். ‘கவி’ என்பது இடையில் ‘த்’ என்னும் எழுத்துப்பேறு பெற்று ஐ இறுதியாகக் ‘கவிதை’ என்னும் சொல் ஆக்கம் பெற்றது. கவ்விக் கவரும் தன்மையை உடையது ‘கவிதை’; தன் சொற்சுவையால் படிப்போர் உள்ளத்தைக் கவ்விக் கவர்வதை உடையது ‘கவிதை’.

‘த்+ஐ=தை’ என்று முடிவுறும் சொற்களாக ஓதை,’அகுதை, மருதை, சிவதை’ என்னும் சொற்கள் தமிழில் உள்ளமையும் சான்றாகும். மொழி மூல அடித்தளத்தாலும், சொல் இலக்கண அமைப்பாலும், சொல்லாக்கக் கருத்தாலும் ‘கவிதை’ என்னும் சொல் புத்தாக்கமான தமிழ்ச் சொல்லேயாகும். இது செய்யுளையும் பாவையும் பாட்டையும் குறிக்கும்.

கவிதையும் பாவும்

இக்காலத்தில் கவிதையுடன் பிற சொற்களும் எந்த அளவில் வழக்கில் உள்ளன? புலவர்களில் சிலரே செய்யுள் என்னும் சொல்லை வழங்குகின்றனர். தனித்தமிழ் உணர்வுடையோர் ‘கவிதை’ என்னும் சொல்லை வடசொல் என்று கருதுகின்றனர், எனவே, பா, பாட்டு இரண்டையும் கொண்டுள்ளனர். பெரும்பாலோர் ‘கவிதை’ என்பதையே வழங்குகின்றனர். இன்று ஆட்சி செய்வது கவிதையே.

இக்காலச் சூழலில் ‘செய்யுள், பா’ என்பன இலக்கணச் செறிவு உடையவை என்றும், முயன்று பொருள் காணப்பட வேண்டியவை என்றும் கருதப்படுவனவாகும். கவிதை “எளிமையானது, சுவையுள்ளது” என்று கொள்ளப்படுகிறது.

செய்யுளையும் கவிதையையும் ஈடுகட்டிப் பார்க்க வேண்டும்.

மயிலின் கால் அடிக்கும் நொச்சி இலைக்கும் மாற்றி மாற்றி உவமைகளை இரண்டு இலக்கியங்களில் காண முடிகிறது.

“மயிலடி இலைய மாக்குரல் நொச்சி“[8]

இது குறுந்தொகை என்னும் சங்க இலக்கியச் செய்யுள்.

“நொச்சிப் பாசிலை அன்ன பைக்தாள் மஞ்சை“[9]

இது திருவிளையாடற் புராணச் செய்யுள்.

‘நொச்சி இலைபோல் மயிலின் கால்’ இது நம் காலத்துக் கவிஞர் சுரதா அவர்களின் கவிதை.

முன்னர் செய்யுளாகக் காணப்படுபவற்றுள் உள்ள உவமைக் கருத்தே இங்குக் கவிதை எனப்படுகிறது. இவ் உவமையைப் பாடியதைக் கருதியும் கவிஞர் சுரதா “உவமைக் கவிஞர்’ என்று பாராட்டப்பட்டார்.

மற்றொன்று:

குளத்து நீரில் செக்கச் சிவந்த ஆம்பல் பூத்ததை முத்தொள்ளாயிர வெண்பாச் செய்யுள்,


“வெள்ளம் தீப்பட்டது” என்கின்றது. இக்காலப்

புதுக்கவிதை ஒன்று முத்தொள்ளாயிரத் தொடரை வட மொழியில் மொழி பெயர்த்தது போன்று.

⁠”ஜலத்தின் ஜுவாலைகள்” என்கின்றது. இதனைப் புதுக்கவிதை என்பர்.

எனவே, ஒரே வகைக் கருத்து அவ்வக்காலத்தில் வழங்கிய சொல்லாட்சிகளாலும், தொடர் அமைப்பு களாலும் ‘செய்யுள்’ என்ற பெயரையும் ‘கவிதை’ என்ற பெயரையும் பெறுகின்றதைக் காண்கிறோம்.

திருவள்ளுவமும் கவிதை நூல்

இவற்றைக் கொண்டு நோக்கினால் ‘தம்கால வழக்குச் சொல்லில் எளிமையாக படித்ததும் கருத்தையும் சுவை நயத்தையும் அறிந்து கொள்ளும் கவர்ச்சியுடையது கவிதை என்றாகிறது.

திருவள்ளுவர்தம் திருக்குறள் படைப்பில் செய்யுள் பாங்கும் உள்ளது; கவிதைப் பாங்கும் உள்ளது.

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண் (1239)

இக்குறளில், முயக்கு, தண்வளி, போழ, பசப்பு’ என்னும் இலக்கியச் சொற்கள் கூர்ந்து பொருள் காணப்பட வேண்டியவை. இவற்றாலும், உள்ளீடான கருத்தாலும் இக்குறள் ஆழ்ந்து கண்டு பொருள் காணும் பாங்குடையதா கிறது. இது செய்யுட் பாங்கு.

இதே கண்ணைப் பற்றிக் குறள் ஒன்று உள்ளது. காதலி தன் காதலனை நோக்கி ஒடும் தன் நெஞ்சைப் பார்த்துப் பேசுகின்றாள்; ‘நெஞ்சே! என் கண்ணையும் கொண்டு செல்’ என்பவள் அதற்குக் காரணமும் கூறுகிறாள்:

கண்ணும் கொளச்சேறி நெஞ்சேஅவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று(1244)

இக்குறளில் ‘என் கண்கள் அவரைக் காணும் துடிப்பில் என்னைக் கடித்துத் தின்னுகின்றன’ என்கின்றாள்: ‘தின்னும்’ என்ற ஒரு சொல்லே சுவையை அள்ளித் தந்து நம்மை மகிழவைக்கிறது. இது கவிதைப் பாங்கு.

எனவே, திருவள்ளுவத்தில் இது போன்று கவிதைப் பாங்குகள் மிக மிக உள்ளன. கவிதையைப் பாடுபவர் கவிஞர்; திருவள்ளுவரும் கவிஞர் ஆகிறார்.

கவிஞர் – சொல்லமைப்பு

‘கவிதை’ தமிழ்ச்சொல் என்று காணப்பட்டது. ‘கவிஞர்’ என்னும் சொல் தமிழ்ப்பாங்கில் உருவானதையும் காணவேண்டும்.

இச்சொல் கவி+ஞ் + அர் என்பதன் கூட்டு உருவம். இடையில் உள்ள ‘ஞ்’ எழுத்துப்பேறு எனப்படும். கவி(ய்)அ ‘கவியர்’ என்று தான் வரவேண்டும். இதில் இடை யில்உள்ள ‘ய்’ உடம்படுமெய் எனப்படும். இது போன்றே அறி+அர்-அறிவர், இளை+ அர்-இளையர், கிளை+அர்- கிளையர், வினை+அர்-வினையர், வலை+அர்-வலையர் என வரும். இவ்வாறும் இலக்கியங்களில் உள்ளன.

இவற்றுடன்,

அறிஞர், இளைஞர் கிளைஞர், வினைஞர், வலைஞர் எனச் சங்க இலக்கியங்களில் அமைந்துள்ளன. இவற்றுள் ல், ய், என்னும் உடம்படுமெய்களுக்கு மாற்றாக ‘ஞ்’ அமைந்துள்ளது. இவ்வமைப்பால் ‘ஞ்’ அமைந்த சொற்கள் ஒரு தனி இன்னோசையுடன் ஒரு மெருகுப் பாங்கு பெற்றன. ‘ஞ்’ அந்த மெருகுப் பாங்கைத் தருகிறது.

இவை போன்றே கவியர் என்பது கவிஞர் என்று சுவையுள்ள மெருகுச் சொல்லாகியது. தமிழ்ப் பண்பாட்டு மொழியமைப்பையும் கொண்டது.

எனவே, திருவள்ளுவர் கவிதைப்பாங்கில் குறட் பாக்களைப் படைத்திருப்பதால் நல்ல மெருகுத் தமிழ்ச் சொல்லாம் கவிஞர்’ என்பதை அடைமொழியாக்கிக் ‘கவிஞர் திருவள்ளுவர் என்று போற்றுவது பொருத்தமே.

(தொடரும்)

++++

  1. மதுரைத்‌ தமிழாசிரியர்‌ செங்குன்றூர்க்கிழார்‌,
    இறையனார்‌, ஆசிரியர்‌ நல்லந்துவனார்‌
    திருவள்ளுவமாலை.
  2. மதுரைக்‌ கூலவாணிகன்‌ சீத்தலைச்‌ சாத்தனார்‌
    மணிமேகலை-22-61
  3. சுப்பிரமணியபார தி, 9, பாரதி கட்டுரை- கலைகள்‌
  4. திருஞான சம்பந்தர்‌ —G gar, பிரமபுரம்‌
  5. நல்லந்துவனார்‌ ய்ரிபஈடில்‌ 6-8
  6. காரியாசான்‌ : சறுபஞ்சமூலம்‌–12
  7. இளம்பெருவழுதியார்‌ ௨ பரிபாடல்‌–15-49
  8. கொல்லன்‌அழிசி: குறுந்தொகை – 138 – 3.
  9. பரஞ்சோதி முனிவர்‌ : திருவிளையாடல் – இந்திரன்‌
    பழிதீர்த்த படலம்‌ – 74-1,