கலைச்சொல் 109. சல வெருளி-Hydrophobia

 தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் (பரிபாடல் : 90)

சல சல என்று ஓடிச் செல்வதால் நீருக்குச் சலம் எனப் பெயர் வந்ததென்பர் அறிஞர்கள். சலத்தைக்கண்டு ஏற்படும் இயல்பிற்கு மீறிய வெறுப்பு அல்லது பேரச்சம்

சல வெருளி-Hydrophobia

[சல வெருளி என்பது நாய்க்கடிக்கு உள்ளானவர்களுக்குத் தண்ணீரைக் கண்டால் ஏற்படும் பேரச்சம். இதனைச் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி சல பய ரோகம் என்று குறிக்கிறது.]

கலைச்சொல்  110. சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia

 சாதல் அஞ்சேன்; அஞ்சுவல், சாவின்

பிறப்புப் பிறிது ஆகுவதுஆயின் (நற்றிணை : 397.7)

கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது (புறநானூறு :137 : 5)

சாவா மரபின் அமரர்க்காச் சென்ற நின் (பரிபாடல் : 2:71)

இறப்பு வரும் என்ற அச்சத்தால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம்

சாவு வெருளி -Necro Phobia/Thanato Phobia/ Thantophobia

(‘இறப்பு அருங் குன்றம் இறந்த யாமே’ எனக் குறுந்தொகை(209.3) அடியில் இறப்பு என்பது கடத்தல் என்னும் பொருளில்தான் வருகின்றது. பிறகுதான் உலக வாழ்வைக் கடத்தலையும் இறப்பு குறிக்கின்றது. எனவே இப்போதைய வழக்கில் இறப்பு வெருளி என்றும் சொல்லலாம்.)

கலைச்சொல் 111. சிவப்பு வெருளி-Erythro Phobia

 சிவந்த(22), சிவந்தன்று(1), சிவந்தன(3), சிவந்தனை(2), சிவந்து(15), சிவப்ப(14),

சிவப்புற(1) எனச் சங்க இலக்கியங்களில் இடம் பெற்றிருந்தாலும், சிவப்பு என நான்கு இடங்களில் இடம் பெற்றுள்ளது. அவற்றில் ஒன்று சினம் என்னும் பொருளில் வந்துள்ளது. நிறத்தைக் குறிக்கும் பிற:

 

சிவப்பாள் அன்று (நற்றிணை : 120.10)

சிவப்புஆனாவே (புறநானூறு : 100.11)

உன்கண் சிவப்புஅஞ்சுவாற்கு (பரிபாடல் : 6.96)

செந்நிறத்தைக் கண்டால் ஏற்படும் இயல்பு மீறிய பேரச்சம் ஆகிய

சிவப்பு வெருளி-Erythro Phobia

கலைச்சொல்  112. சூன்று வெருளி-Wiccaphobia

 நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை (அகநானூறு : 381.6)

நிழலினை அகழ்ந்து உண்ட செல்லத் தொலையாத நீண்ட இடத்திலுள்ள என்பது பொருள். சூன்று என்பது அகழ்ந்துஎடுப்பதை தோண்டுவதைக்குறிக்கின்றது. நாலடியாரில்(44) நுங்கு சூன்றிட்டன்ன கண்ணீர்மை என்னும்பொழுது தெளிவாகப் பொருள் புரிகிறது. மண்ணைத் தோண்டி அதில் தகரம் அல்லது ஏதாவது ஒன்றைப் புதைத்துத் தீவினை ஆற்றுவதால் சூனியம் எனப் பெயர் வந்துள்ளது.

சூனியம் பற்றிய பேரச்சம்

சூன்று வெருளி-Wiccaphobia