(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 82 : பூங்கொடி இசைவு தருதல்-தொடர்ச்சி)

          எழிலி பயிற்றிய இசைத்திறம் பூண்ட

விழிமலர்ப் பூங்கொடி வியன்புகழ் ஊர்தொறும்

பரவிப் பரவிப் பாரகம் அடங்கலும்

விரவி மலர்ந்தது விளைந்தது நற்பயன்;

          தான்புனை கவியைச் சான்றோர் ஏத்திட         5

          ஈன்றநற் கவிஞன் ஏமுறல் போல

ஈன்றாள் அருண்மொழி இவள்புகழ் செவிப்பட

ஈன்ற ஞான்றினும் பெரிதுவந் தனளே;  

          இசையின் அரசியாம் எழிலிதன் கொழுநன்  

          விசையுறு மரக்கலம் சிதைவுறு காலை 10

          விளிவில னாகி மீளுதல் கண்ட

காலையின் மிகவே களிகூர்ந் தனளே;  

          குறளகங் கண்ட மலையுறை யடிகள்

உறுபுகழ் பூங்கொடி உறுவது காணலும்         

          நெஞ்சம் குளிர்ந்து நேரிழை வாழ்த்தி    15

          `வஞ்சி! தமிழிசை வளர்வான் வேண்டி

நிலையம் ஒன்று நிறுவுதல் விழைந்தனென்;

பலரும் வந்திவண் பயிலிகள் ஆவர்;

இசைகெழு தமிழின் ஏற்றம் உணர்வோர்       

          திசைதொறும் திசைதொறும் சென்றிசை பரப்புவர்;         20

—————————————————————

          பாரகம் – உலகம், அடங்கலும் – முழுவதும், ஏமுறல் – மகிழ்தல், ஞான்றினும் – பொழுதினும், காலையின் – பொழுதைவிட, பயிலிகள் – பயிற்சியாளர்கள், இசை – புகழ்.

++++++

கொள்கை தழீஇய நல்லிசைப் பாடல்

உள்ளங் கவர்வன தெள்ளிதின் யாக்கும்

நற்றிறல் உடையாய் நங்கைநீ யாதலின்

சொற்றமிழ்க் கொள்கை முற்றவும் தொகுத்துப்      

          பகுத்தறி வூட்டும் பாடல்கள் புனைந்து   25

          வகுத்தவை பயிற்றின் வந்திவண் பயில்வோர்

நாடெலாம் பரப்புவர் நம்முயர் கொள்கை;     

          ஈடிலா இப்பணி இருபயன் விளைக்கும்;

பகைவர் மறைத்த பழந்தமிழ் இசைத்திறன்  

          பகலவன் கதிரொளி பரவுதல் போலப்    30

          புத்துயிர் பெற்றுப் புவிமிசை யாங்கணும்

மெத்தவும் பரவி மேம்படும்; அதன்றலை

விளக்கொளி இன்றி வீங்கிருள் மூழ்கித்

துளக்குறும் மாந்தர் நிகர்த்தன ராகி     

          உளத்தொளி யின்றி ஓங்கிருட் கிடந்து    35

          நொந்திடும் மாந்தர் உய்ந்திட யாண்டும்

சிந்தனைச் சுடரொளி வளர்ந்திடும் அன்றோ?’

என்றன ராக இயைந்தனள் பூங்கொடி;  

          நன்றுளங் கொண்ட குன்றுறை யடிகள் 

          இமிழ்கடல் வரைப்பில் தமிழிசை கூட்டும்       40

          கமழ்மணம் பரவக் கண்டனர் பள்ளி;

பள்ளித் தலத்துள் பயிற்றும் பொறுப்பினைக்

கள்ளிதழ்க் கோதை கருத்துடன் ஏற்றனள்;

நாற்றிசை வாழுநர் பாட்டிசை வேட்டுக்

          கோற்றொடி தன்னுழைக் குழுமின ராகப்        45

          பொன்னியின் செல்வன் புகழ்பெறு மீனவன் 

—————————————————————

          தழீஇய – தழுவிய, யாக்கும் – இயற்றும், வரைப்பு – உலகம், உழை – இடம்.

+++++++++++++

பன்னரும் துயரப் பாடுகள் அடைந்து

தேடிக் கொணர்தரும் பீடுயர் ஏடு

நாடிப் புகலும் நற்றமிழ் இசையின்        

          நுணுக்கம் அனைத்தும் நுவன்றனள் இருந்துழி;        50

(தொடரும்)