(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 95: பூங்கொடியை அடையும்வழி -தொடர்ச்சி)

          எள்ளத் தனையும் எழுச்சியில் விழாஅது

தெள்ளத் தெளிந்து திருமணம் ஒரீஇ

இனமும் மொழியும் ஏற்றமுற் றோங்க

மனம்வைத் துழைத்திட வாழ்வு கொடுத்துளேன்,    

          அருளறம் பூண்டது குறளகம், ஆதலின்   290

          தெருளும் அனையொடு சேர்ந்தவண் உறைவேன்; 

          நிறைஎனப் படுவது இருதிறத் தார்க்கும்

பொதுவென நினையாப் புன்மனம் தாங்கி

ஆடவர் திரியின் யானென் செய்வல்?    

—————————————————————

          முரணினர் – மாறுபட்டனர், உரி – தோல் ஆடை, கான் – காடு, எழூஉம் – எழும், விழாஅது – விழாமல், ஒரீஇ – நீக்கி.

++++++++++++++++++++++++++++++++++++++++

ஒருதலைக் காமம் உடையவர் தாமே     295

          வருதுயர்க் கடலுள் மடிவது திண்ணம்

மற்றவர் மனத்தை மதியா ராகிச்

சுற்றுதல் இழிதகைத் தொழிலே அன்றோ?     

          காதல் என்றுல கோதும் பெயர்தான்       

          `ஏது வாக இயற்றும் கொடுமைகள்         300

          எத்துணை எத்துணை! கானல்நீர் இதனை

நத்தின ராகி நலிவது பேதமை;

பெண்மை பெண்மைஎனப் பேசி மகளிரைக்

கண்ணை மறைத்துக் கருவியென் றடிமையென்    

          றெண்ணுங் கொடுமை ஏகுவ தெந்நாள்?         305

          காமங் கடந்த காரிகையர் தம்மைத்

தீமனம் கொண்டோர் பழிமொழி செப்பிக்

காப்பிலாப் பொருளெனக் கருதிக் கவர்ந்திட

மோப்பம் பிடிக்க முயலும் கள்வர்

          பல்கினர்; இளையோய்! பண்பிலா இம்மொழி          310

          சொல்லுதல் இனிமேல் தொலைகநீ பெரும!

எண்ணித் துணிந்ததே இப்பணி’ எனச்சொலக்        

          கண்ணும் முகமும் கருத்துத் தலைகவிழ்த்

துள்ளம் கலங்கி உறுநடை தளர்ந்து       

          பிறிதொரு பாங்கர்க் குறுகின னாக,       315

          முறுகிய காமம் குறைந்திலன் இவன்எனக்

கருதிய பூங்கொடி கலங்கிய மனத்தள்

ஆடவர் மனநிலை அறிகுநர் யாரெனத்

தோடலர் மாலை சூடிய சண்டிலி  

          துணியிற் பிரியா திருந்தனள் அவளே.   320

—————————————————————

          காப்பிலா – காவலில்லாத, தோடலர் – இதழ்விரிந்த.