பன்னீர் செல்வத்தின் ‘புதிய புரட்சிக்கவி’- களம் : 1 காட்சி : 1
(‘புதியபுரட்சிக்கவி’: முன்னுரை – தொடர்ச்சி)
புதிய புரட்சிக்கவி – களம் : 1 காட்சி : 1
களம் : 1 காட்சி : 1
அரசன் இருக்க – அமைச்சர் வருகிறார்
அகவல்
அமைச்சர் : ஆல்போல் வளர்க அரசர் கொற்றம்
கடிதில் அழைத்த காரணம் யாதோ?
அரசன் : வருக அமைச்சரே அமர்க ஈங்கே
* அமுத வல்லிஎன் ஆசைக் கொருபெண்
தமிழிலக் கியங்கள் தமிழிலக் கணங்கள்
அமைவுற ஆய்ந்தாள் அயல்மொழி பயின்றாள்
ஆர்ந்த ஒழுக்கநூல் நீதிநூல் அறிந்தாள் *
அமைச்சர் : மக்கள் மதித்திட மன்னர் பின்னே
செங்கோல் நடாத்திடும் செந்நெறி யறிந்த
மங்கையர் திலகமே மற்றெம் இளவரசி
அரசன் : * அனைத்தும் அறிந்தா ளாயினும் அன்னாள்
கவிதை புனையக் கற்றாள் இல்லை *
அமைச்சர் : பண்ணொடு சேர்ந்தநற் பாடல் புனைதல்
மண்ணில் சிலர்க்கே வாய்க்கும் நற்றிறன்
புதைத்துநீர் வார்த்துப் புரையிலா விதையைக்
காத்து வளர்த்தால் கருகியும் அழியும்
காட்டிலும் மலையிலும் பிளவிலும் காற்றோடு
ஊற்றிடும் மழையால் ஓங்கி வளர்ந்து
இனித்திடுங் கனிமரம் காண்குவ மன்றோ
வித்தையும் அப்படி; வினைத்திறன் வெளிப்பட
பயிற்சியும் சூழலும் பக்கத் துணையாம்
அரசன் : * மலரும் பாடும் வண்டும் தளிரும்
மலையும் கடலும் வாவியும் ஓடையும்
விண்ணின் விரிவும் மண்ணின் வனப்பும்
மேலோர் மேன்மையும் மெலிந்தோர் மெலிவும்
தமிழின் அமுதத் தன்மையும் நன்மையும்
காலையம் பரிதியும் மாலை மதியமும்
கண்ணையும் மனத்தையும் கவர்வன அதனால்
என்மகள் அகத்தில் எழுந்த கவிதையைப்
புறத்தில் பிறர்க்குப் புலப்படுத் துதற்கு
செய்யுள் இலக்கணம் தெரிதல் வேண்டுமாம்
ஏற்றவோர் ஆசான் எங்குளான் என்றே
தோற்றிய வாறு சொல்க அமைச்சரே *
எண்சீர் விருத்தம்
அமைச்சர் : * உலகாளப் பிறந்தவரே
எங்கள் மன்னா
சகலகலா வல்லவனிவ்
வுலகோர் போற்றும்
புலவன்உளான் உயர்கவிஞன்
அவன்பேர் உதாரன்
புதல்விக்குத் தக்கஉபாத்
தியாயன் அன்னோன்
இலையிந்த நாட்டினிலே
அவனை யொப்பார்
எனினும்அவன் இளவயதும்
அழகும் வாய்ந்தோன்
குலமகளை அன்னவன்பால்
கற்க விட்டால்
குறைவந்து சேர்ந்தாலும்
சேர்தல் கூடும்
ஆனாலும் நானிதற்கோர்
மார்க்கம் சொல்வேன்
அமுதவல்லி உதாரனிடம்
கற்கும் போது
தேனிதழாள் தனையவனும்
அவனைப் பெண்ணும்
தெரிந்துகொள்ள முடியாமல்
திரைவி டுக்க!
பானல்விழி மங்கையிடம்
உதார னுக்குப்
பார்வையில்லை குருடனென்று
சொல்லி வைக்க
ஞானமுறும் உதாரனிடம்
அமுத வல்லி
நனிகுட்ட ரோகியென
எச்ச ரிக்க! *
அரசன் : சீர்வாய்ந்த சிந்தனையால்
சூழ்ச்சி மிக்கோய்
சிந்தித்தால் ஆகாதது
ஒன்று மில்லை
* பேர்வாய்ந்த உதாரனைப்
போய்அ ழைப்பீர்
பெரும்பொருளும் பீதாம்பரமும்
கொண்டு செல்வீர்
தேர்வாய்ந்த புவிராசன்
போலே அந்தச்
செந்தமிழ்த்தீங் கவிராசன்
உதாரன் * தன்னைப்
பார்வேந்தன் நானழைக்கும்
பான்மை யாகப்
பைந்தமிழ்க்குத் தொண்டுசெயக்
கொணர்வீர் இன்றே!
* ……………………… *இடைப்பட்ட பகுதி பாரதிதாசன் படைப்பு
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம்
புதிய புரட்சிக்கவி
Leave a Reply