விருது பெறுபவரை விருதாளர் என்பர். இவரோ தான் நிறைய விருதுகளைப் பெற வேண்டும் என்பதற்காகத் தன் பெயரையே விருதாளர் என மாற்றிக் கொண்டவர். தான் சூட்டிய பெயருக்கேற்ப சிறுகதைகளுக்காகவும் புதினங்களுக்காகவும் நிறைய விருதுகள் பெற்றுப் பாராட்டு பெறுபவர். அண்மையில் இவர் எழுதிய ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ என்னும் புதினம் சிறந்த புதினத்திற்காக அனைத்து இந்திய விருதினைப் பெற்றது. இதற்காகப் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் புகழ்பெற்ற ‘வி’ தொலைக்காட்சி நிறுவனத்தினர் இவரைப் பாராட்ட இவர் வீட்டிற்கு வந்துள்ளனர்.

ஐயா, வணக்கம் ஐயா.

வணக்கம், வணக்கம். வாருங்கள், அமருங்கள்.

ஐயா, நாங்கள் ‘வி’ தொலைக்காட்சியிலிருந்து வருகிறோம்.

‘வி’ தொலைக்காட்சியா? புகழ் பெற்ற நிறுவனமாயிற்றே! நீங்கள் சிறப்பான தொடர்களை வெளியிட்டு வருவதாகப் பலரும் பாராட்டுகின்றனரே!

ஆம் ஐயா. எங்களின் தொலைக்காட்சித் தொடர்கள் மக்களால் விரும்பப்படுகின்றன. கதைக்காகவும் இயக்கத்திற்காகவும் நடிப்பிற்காகவும் எனப் பல விருதுகளைப் பெற்று வருகின்றன. அதுபோல் உங்கள் படைப்பையும் படமாக்கி விருதுகள் பெற விரும்புகிறோம்.

கதைக்காப் பஞ்சம்? குவிகம் போன்ற அமைப்புகள் புதினப்போட்டி, சிறுகதைப்போட்டிகள் நடத்துகின்றனர். நன்னன் குடில், புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கம் போன்ற சில அமைப்புகள் நல்ல தமிழில் சிறுகதை எழுதப் போட்டி நடத்துகிறார்கள். உலகளாவிய நிலையில் வெளிநாட்டினரும் இத்தகைய போட்டிகள் நடத்துகின்றனர். அவற்றில் இடம் பெறுவனவற்றில் ஒன்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே!

உண்மைதான் ஐயா. எங்களுக்கு உங்கள் படைப்பைப் படமாக ஆக்க வேண்டும் என்று ஆசை. அதுதான் உங்களிடம் வந்துள்ளோம்.

என் படைப்பை விரும்புவதற்கு மகிழ்ச்சி. ஆனால், நான் எந்த என படைப்பையும் தொலைக்காட்சித் தொடருக்கு அளிக்கும் எண்ணம் இல்லை.

அப்படிச் சொல்லக் கூடாது ஐயா. உங்களின் ‘வேர்களை மறக்கா விழுதுகள்’ மிகச் சிறந்த புதினமாயிற்றே. எங்கள் குழுவினர் அனைவருக்கும் பிடித்த புதினம் அது. பெருமளவு மக்களால் பாராட்டு பெறும் புதினம் இது. இதனைக் காட்சி வடிவில் மக்களுக்குத்  தொலைக்காட்சித் தொடராக அளிக்கும் பொழுது பல கோடி மக்களை இது சென்றடையும்.

நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் என் கதையைச் சிதைத்து மக்களிடம் காட்ட விரும்பவில்லை. வீட்டில் நான் மட்டுமே இப்பொழுது உள்ளேன். எனவே, உங்களுக்கு அருந்துவதற்குக் கொடுக்க இயலவில்லை. நீங்கள் போகலாம். நன்றி.

ஐயா, நீங்கள் அவ்வாறு சொல்லக் கூடாது. நாங்கள் அனைவருமே உங்கள் படைப்புகளை விரும்பிப் படிப்பவர்கள். உங்கள் சிறுகதையோ புதினமோ வருகிறது என்றால் உடனே வாங்கி முதலில் படித்து முடித்து விடுவோம். எனவேதான், உங்கள் புதினத்தைத் தொலைக்காட்சித் தொடராக மாற்ற விரும்புகிறோம்.

இதற்கு முன்னரே திரைப்பட நிறுவனத்தினரும் இயக்குநர்களும் என் படைப்புகளைப் படமாக்க வேண்டும் என்று வந்து கேட்டுள்ளனர். 2 மணி நேரத்திற்குள் என் புதினத்தை அடைத்துக் கதையைச் சிதைத்து விடுவார்கள் என்று மறுத்து விட்டேன்.

ஆமாம், ஆமாம்! நீங்கள் கூறுவது உண்மைதான். புதினத்தைத் திரைப்படமாக்கும் பொழுது நீங்கள் விவரிக்கும் கருத்துகள் அப்படியே இடம் பெறாது. உங்களின் பல கதைக்களங்களைச் சுருக்கி விடுவார்கள். அல்லது நீக்கி விடுவார்கள். எனவேதான் எழுத்தாளர்கள் தங்கள் புதினங்களைப் படாமக்க விரும்பவில்லை. இந்த முயற்சியில் இதற்கு முன்னர் ஈடுபட்டவர்களும் தோல்விகளையே தழுவியுள்ளார்கள்.

பார்த்தீர்களா? நீங்களே ஒப்புக் கொண்டீர்கள். பிறகு ஏன் என் புதினத்தைப் படமாக்க வருகிறீர்கள்.

ஐயா, நாங்கள் தொலைக்காட்சித் தொடராக ஆக்க விரும்புகிறோம். எனவே, எந்தக் காட்சியையும் நீக்க மாட்டோம். நீங்கள் எழுதியவாறே காட்சிகளை அமைப்போம்.

எப்படி முடியும்? நான் 1600 பக்கங்கள் எழுதியுள்ளேன். நீங்கள் சுருக்கத்தானே செய்வீர்கள்.

இ்ல்லையில்லை. நாங்கள் சுருக்க மாட்டோம். 1600 காட்சிகளாக அமைத்து விடுவோம்.

1600 காட்சிகளா?

ஆமாம். இதற்கு முன்னர் ‘பறக்க மறந்த பறவை’ என்ற தொடரை 5 ஆண்டுகள் ஒளிபரப்பினோம். அதுபோல்  இதனை எடுத்து 6 ஆண்டுகள் ஒளி பரப்ப எண்ணுகின்றோம்.

நீங்கள் சொல்வது கேட்பதற்கு நன்றாகத்தான் உள்ளது. ஆனாலும் நான் இதை விரும்பவில்லை.

அப்படிச் சொல்லக்கூடாது. உங்களின் அன்பர்கள் நாங்கள். நாங்கள் உங்கள் புதினத்திற்கு எந்த ஊறும் நேராமல் பார்த்துக் கொள்வோம். எனவே, சரி என்று சொல்ல வேண்டும்.

என் ஒவ்வொரு படைப்பும் என் குழந்தை மாதிரி. எந்தக் குழந்தையும் அடுத்தவர் கைகளில் சிக்கிச் சீரழிய நான் விரும்பவில்லை.

ஏன் அப்படி எண்ணுகிறீர்கள். நாங்கள் உங்கள் புதினத்திற்கு உரூபத்து இலட்சம் தொகை அளித்துச் சிறப்பிக்கிறோம்.

எப்படி? காசோலை தந்து விட்டு, வங்கியில் போட்டால் பணம் இல்லை என்று திரும்பி வருமே அந்த மாதிரியா?

சே! சே! அப்படி எல்லாம் இல்லை. நீங்கள் சரி என்று சொன்னால் இப்போதே ஐந்து இலட்சம் உரூபாய் முன்பணமாகத் தருகிறோம். தொடர் முடியும் தறுவாயில் மீதி உரூபாய் ஐந்து இலட்சம் தருகிறோம்.

பரவாயில்லையே! எழுத்தாளர்களை மதிக்கிறீர்களே! எனினும் எனக்கு இதில் உடன்பாடில்லை. நன்றி. சென்று வாருங்கள்.

அப்படி எல்லாம் சொல்லக் கூடாது. நீங்கள் பணத்தைப் பொருட்படுத்துபவரில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், உங்கள் எழுத்து மக்களிடம் சென்று சேர வேண்டும் என விரும்புகிறோம்.

எப்படி? மொழிக்கொலை புரிந்தா? நான் பேச்சு வழக்கைக் குறித்தாலும் பிற மொழிக் கலப்பின்றி எழுதி வருகிறேன். தொலைக்காட்சியினர் மொழிக் கொலை மன்னர்களாயிற்றே. உங்கள் மொழிக் கொலையில் என் புதின நடை சின்னாபின்னமாக வேண்டுமா? வேண்டா! வேண்டா! என் புதினத்திற்கு அந்த நிலை வேண்டா!

உங்கள் புதினத்திற்கு வேறு யாரேனும் உரையாடல் எழுதினால்தானே அந்த நிலை ஏற்படும் என அஞ்சுகிறீர்கள்?

ஆமாம் ஆமாம். கண்டிப்பாக. கதை என என் பெயரைப் போட்டுவிட்டு உரையாடல் மூலம் கதையையே மாற்றி விடுவீர்கள்.

அந்தக் கவலையே உங்களுக்கு வேண்டா. இந்தத் தொடருக்கு நீங்களே உரையாடல் எழுதுங்கள். கதையும் நீங்களே! உரையாடலும் நீங்களே! என்னும் பொழுது உங்கள் அச்சத்திற்குத் தேவையே இல்லை அல்லவா?

நானே உரையாடல் எழுத வேண்டுமா? திரைக்கதைக்கு உரையாடல் எழுதும் பழக்கம் எனக்கு இல்லையே! என்னை விட்டு விடுங்கள். 

அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. உங்கள் கை வண்ணத்தை ஒளிவண்ணமாகக் காட்டப் போகிறோம். உங்கள் அன்பர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களுமே மகிழ்ச்சி யடையப் போகிறார்கள். எனவே, நீங்கள் சரி என்று சொல்ல வேண்டும். எங்கள் கதைக் குழுவினர் உங்களுக்கு உரையாடல் எழுத உதவியாக இருப்பார்கள்.

அப்படியா சொல்கிறீர்கள்?

ஆமாம். நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள் என எதிர்பார்த்து ஒப்பந்தம் கூடத் தடடச்சு செய்து கொண்டு வந்துள்ளோம். பாருங்கள்.

இந்த விதியில் என்ன, தொடர் முடிக்க முடியாவிட்டாலும் நீங்கள் எனக்கு முழுத் தொகையும் அளிக்க வேண்டும்  என்றும் நான் இடையில் விலகினாலும் மொத்தத் தொகை பத்து இலட்சம் உரூபாயையும் நான்  தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும் என்றும்  உள்ளதே.

அதற்கான சூழல் வராது. பொதுவாக இவையெல்லாம் உடன்படிக்கையில் உள்ள விதிகள்தான்.

எனக்குப் பாதித்தொகைதான் முன்பணமாகத் தருகிறீர்கள். நான் முடிக்கா விட்டால் வாங்காத தொகையும் சேர்த்துத் தர வேண்டுமா?

அதுதாங்கைய்யா விதி. தொலைக்காட்சித் தொடருக்கு மிகுதியான விளம்பரம் செய்கிறோம். இடையில் நின்று விட்டது என்றால் எங்கள் நற்பெயருக்குக் களங்கம் அல்லவா? மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமல்லவா? அதனால் இவ்வாறு குறிப்பிட்டுள்ளோம்.

அது, இது என்று சொல்லி என்னைச் சம்மதிக்க வைத்து விட்டீர்கள். உங்களுக்கு மகிழ்ச்சிதானே!

ஆமாம். எங்கள் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. எப்பொழுது வெளியிட முடியும் என முடிவெடுத்து விளம்பரம் செய்து விடுகிறோம். நீங்கள் சொல்லும் நாளில் இருந்து உரையாடல் எழுதும் வேலையைத் தொடங்குவோம். இந்தாருங்கள். உங்களுக்கு முன்பணம் உரூ. ஐந்து இலட்சம்.

மிக்க மகிழ்ச்சி. எதில் எதில் கையெழுத்து போட வேண்டும் எனக் குறிப்பிடுங்கள். கையொப்பம் இட்டு விடுகின்றேன்.

இந்தாருங்கள் ஐயா. பணச்சீட்டும் ஒப்பந்தமும். . . . . நீங்கள் கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் ஒரு படி இந்தாருங்கள். உங்களுக்கு.

நன்றி ஐயா. மகிழ்ச்சி.  அடுத்த வெள்ளிக் கிழமை நீங்கள் சொல்லும் இடத்திற்கு நானே வருகிறேன். உங்கள் உதவியாளர்களை என் புதினத்தை நன்றாகப் படித்து விட்டு வரச்சொல்லுங்கள்.

எங்களுக்கும் மகிழ்ச்சி ஐயா. உங்களிடம் பிறகு தொடர்பு கொள்கிறோம். வணக்கம்.

வணக்கம்.

(தொடரும்)