(அகல் விளக்கு – மு.வரதராசனார். 43. தொடர்ச்சி)

அகல் விளக்கு

அத்தியாயம் 18 தொடர்ச்சி

அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். “நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்” என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், “நீங்கள் யார்? எந்த ஊர்?”, என்று என்னையே திரும்பக் கேட்டான். இவனிடம் செய்தி இருப்பதாகத் தெரிகிறது என்று எண்ணி, உண்மையைச் சொன்னேன். “சரி, உட்காருங்கள். கூட்டம் குறையட்டும். பிறகு சொல்வேன்” என்றான். மறுபடியும் அவனே என்னிடம் வந்து, “ஒருவேளை அவனே இப்போது இங்கே வந்தாலும் வரலாம். உங்களை இங்கே பார்த்தால், தப்பித்துக் கொண்டு போய்விடுவான். நீங்கள் இங்கே இருக்காமல், அதோ அங்கே அந்தப் பங்களாவின் சுற்றுச் சுவர்க்குப் பின்னே உட்கார்ந்திருங்கள். நானே அங்கே வந்து சொல்வேன்” என்றான். ஆசிரியரும் சாமண்ணாவும் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பேச்சைக் கேட்டதும், சந்திரனைக் கண்டுபிடித்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. அவன் சொன்னவாறே அங்கேபோய் உட்கார்ந்திருந்தோம்.

ஒரு மணி நேரம் கழித்து அவன் எங்களிடத்திற்கு வந்தான். “சந்திரன் இன்றைக்கு வர நேரமாகுமாம். அந்தத் தோட்டத்திலிருந்து வந்த ஆளைக் கேட்டோம். அவன் இன்றைக்குக் குன்னூருக்குப் போயிருக்கிறானாம். போய்த் திரும்பி வரும் போது கடைக்கு வருவான். நான் அவனிடம் ஒன்றும் சொல்ல மாட்டேன். நீங்களும் நான் சொன்னதாக ஒன்றும் சொல்லக் கூடாது. இப்போது நேராக அந்தக் குடிசைக்குப் போய்ப் பின்பக்கத்தில் ஓர் ஆலமரம் இருக்கிறதே அங்கே இருங்கள். அவனைப்பற்றி அங்கே யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டா. அவன் வந்தபிறகு அந்த வீட்டில் குரல் கேட்கும். அப்போது யாராவது ஒருவர் முன்னே போய்ப் பேசுங்கள். அதற்குமேல் உங்கள் திறமைப்படி நடக்கும். வாருங்கள்; வழிகாட்டுகிறேன்” என்று வெளியே அழைத்துவந்தான்.

வெளியே வந்ததும் ஆசிரியர் அவனைப் பார்த்து, “ஊருக்கு வருவானா?” என்றார்.

“நான் எப்படிச் சொல்வது? இப்போது என்னோடு நெருங்கிப் பழகுவதில்லை. முன்போல் இருந்தால் நானே சொல்ல முடியும். இப்போது சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான்” என்றான் அவன்.

என்னுடைய அனுபவம்போல் இருக்கிறதே என்றும், சந்திரனுடைய பழைய குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே என்றும் எனக்குள் எண்ணிக்கொண்டேன்.

என்னை மட்டும் தனியே அழைத்துச் சென்று, அவனுடைய அப்பாவிடம் சொல்லாதீர்கள். அந்த வீட்டுக்காரி நல்லவள் அல்ல. சந்திரனை நெடுங்காலம் வைத்துக் கொண்டிருக்கமாட்டாள். வேண்டா என்ற எண்ணம் வந்தபோது, யாராவது ஒரு முரடனுக்குச் சொல்லிக் கலகம் உண்டாக்கி அடிக்கச் சொல்வாள். அப்படித்தான் தன் கணவனுக்குப் பகையாகச் சொல்லிக் கலகம் உண்டாக்கி, ஒரு கொலையும் நடக்கச் செய்து, அவனைச் சிறைக்கு அனுப்பிவிட்டாள். எனக்கு அவளிடம் அனுபவம் உண்டு. எருமைபோல் இருப்பாள். பொல்லாதவள். எப்படியாவது பொய் சொல்லியாவது சந்திரனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. இங்கே இருந்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்கக் கற்றுக்கொண்டு அடியோடு கெட்டுப்போய் விடுவான்” என்றான்.

என் மனத்தில் ஒரு குமுறல் ஏற்பட்டது. “வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் என்ன செய்வது?” என்றேன்.

“அப்பாவைக் கண்ணீர்விடச் சொல்லுங்கள். அம்மா காய்ச்சலாக இருப்பதாகச் சொல்லுங்கள்.”

“அம்மா இந்தக் கவலையால் இறந்துவிட்டார்.”

“அய்யோ? அப்படியா? அதைச் சொன்னால் எப்படிப்பட்டவனுக்கும் மனம் மாறிவிடுமே. எதையாவது சொல்லுங்கள். ஊருக்குப்போய் மறுபடியும் திரும்பிவிடலாம் என்று சொல்லி அழைத்துச் செல்லுங்கள். பிறகு அங்கே போனால் மனம் மாறிவிடும். ஒரு கலியாணம் செய்து கட்டு ஏற்படுத்தி விடுங்கள்.”

அவனுக்கு என் வயது, அல்லது இரண்டு வயது கூடுதலாக இருக்கும். இருந்தாலும் நல்ல அனுபவம் உடையவன் போல் பேசினான். துண்டு மீசையும், லுங்கி வேட்டியும் உடையவனாய்த் தேநீர்க் கடைக்குத் தகுந்த தோற்றத்தோடு இருந்தான். அப்படி இருந்தும் நல்ல மனத்தோடு பேசினானே என்று மகிழ்ந்தேன்.

சிறிது தொலைவு எங்களோடு வந்ததும், “அதோ தெரியுதே அந்த வரிசையில் கிழக்கே இருந்து மூன்றாவது வீடு. பயம் இல்லாமல் போகலாம். அவன் வந்து கொஞ்ச நேரம் ஆனபிறகு போய்ப் பாருங்கள். இதோடு நான் நிற்கிறேன்” என்று சொல்லி என்னைப் பார்த்துக் கைநீட்டினான். உடனே குறிப்புத் தெரிந்துகொண்டேன். என்ன செய்வது, வறுமையின் செய்கை என்று எண்ணிக்கொண்டே ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

“வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் வந்து சொல்லுங்கள். ஆனால் நான் சொன்னதாக மட்டும் தெரியக்கூடாது. தெரிந்தால் என்மேல் வருத்தப்படுவான்” என்றான்.

அவன் சொன்னபடியே அந்த வீடுகளின் பக்கமாகச் சென்று, பின்புறத்து வழியில் நடந்து, அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். போகும்போதே அந்த வீட்டை உற்றுப் பார்த்தோம். வீடு பூட்டியிருந்தது. அங்கே யாரும் இல்லை. ஆலமரத்தின் அடியில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது, எங்களை உற்றுப் பார்த்தபடியே ஆண்களும் பெண்களுமாகச் சிலர் போனார்கள். “எந்த ஊர் ஐயா” என்று ஒருவர் கேட்டார். வெளியூர் என்றேன். குன்னூர்ச் சந்தைக்காக இன்றைக்கு வந்திருப்பார்கள்” என்று அவர்களுள் ஒருத்தி சொல்லிக் கொண்டு போனாள்.

கால்மணி நேரம் கழித்துப் பன்னிரண்டு பதின்மூன்று வயது உள்ள சிறுவன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் எங்களை நெருங்கி வந்து, “யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?” என்றான்.

“சும்மா வந்திருக்கிறோம்” என்றார் ஆசிரியர்.

“கணக்குப்பிள்ளையப் பார்க்கவா?” என்றான் அவன்.

“கணக்குப்பிள்ளை யார்?” என்றேன்.

“அதோ அந்த மூன்றாவது வீட்டில் இருக்கிறார்” என்றான்.

அவனுக்கு வேறு ஏதாவது பேச்சுக் கொடுக்காமல் விட்டால், எங்களைப் புலன் விசாரிப்பான் என்று எண்ணி, “இன்றைக்குக் குன்னூரில் சந்தை அல்லவா? நீ போகவில்லையா?” என்றேன்.

“அம்மா அப்பா போகிறார்கள், எனக்கு என்ன வேலை?” என்றான்.

பிறகு என்ன படிக்கிறாய், வயது என்ன, எந்த ஊர், உடன் பிறந்தவர்கள் எத்தனைபேர் முதலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் எழுந்து போவதாகத் தெரியவில்லை. திடீரென்று, அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டி, “அதோ அந்த அம்மா கணக்குப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறாள். கேட்டால் சொல்வாள்” என்று எழுந்தான்.

இது என்ன வம்பாய்ப் போயிற்றே என்று, அவனைத் தடுத்து, “நாங்கள் அதற்காக வரவில்லை. பக்கத்து ஊருக்கு ஒருவர் போனார். அவர் வரும் வரைக்கும் இங்கே காத்திருப்போம்” என்றேன். அப்போதும் அவன் போகவில்லை.

“அப்படியா?” என்று மறுபடியும் எங்களோடு உட்கார்ந்தான்.

“அந்த அம்மா யார்?” என்றேன்.

“அவளுடைய வீட்டுக்காரன் இப்போது இங்கே இல்லை. ஒரு கொலை செய்துவிட்டுப் பத்து வருசம் சிறையில் கிடக்கின்றான்.”

இதற்குமேல் அவனைப் பேசவிட்டால் தொல்லையாய்ப் போய்விடும் என்று அஞ்சினேன். ஆயினும், “யாரைக் கொலை செய்துவிட்டான்?” என்று கேட்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தபோது கவனித்தேன். கட்டான முரட்டு உடலோடு தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்ன பொருத்தங்களோடு இருந்ததைக் கவனித்தேன். இப்படிப் பட்டவளை நாடும் அளவிற்குச் சந்திரனுடைய மனம் கெட்டுவிட்டதே என்று வருந்தினேன்.

“அவனோடு கூடவே இருந்தான் ஒருத்தன். தோட்டத்தில் வேலை செய்து வந்தவன்தான். ஒருநாள் இரவில் குடித்துவிட்டு, இதே ஆலமரத்தடியில்தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். குடிவெறியில் அறிவு இல்லாமல் வெட்டிப் போட்டுவிட்டான்” என்றான் அந்தப் பையன்.

அவனைப் பற்றி ஏதாவது கேட்கலாம் என்று விரும்பினேன். சாமண்ணா இருப்பதால், அவருக்குக் கூடிய வரையில் உண்மை தெரியாமல் இருக்கட்டும் என்று எண்ணித் தடுத்துக் கொண்டேன்.

நல்ல காலமாக, அப்போது வேறொரு பையன் வரவே அவன் சொல்லாமலே எழுந்துபோய் அவனோடு சேர்ந்து அவனுடைய தோள்மேல் கை போட்டுக்கொண்டு நகர்ந்தான்.

எனக்குப் பசி எடுத்தது. ஆசிரியரிடம் சொன்னேன். தேநீர்க் கடைக்காவது போய் ஏதாவது சாப்பிட்டு வரலாமா என்று கேட்டேன். “இப்போது ஒன்றும் வேண்டா. வந்த வேலையை முடித்துக்கொண்டு போனால் போதும்” என்றார் சாமண்ணா. ஆசிரியர் தம் பையிலிருந்த பிசுகட் சுருள் ஒன்றைப் பிரித்தார். அதனால் சிறிது பசி ஆறினேன்.

விளக்கு வைக்கும் நேரம் ஆயிற்று. சந்தைக்குப் போன மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். எங்கள் பார்வை அவர்களிடையே ஊடுருவிச் சென்று தேடியது. அதற்குள் கொலைகாரனுடைய மனைவி எங்கள் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் நடந்து எங்களைக் கடந்து நேராகச் சென்றாள். அவளுடைய முகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவளுடைய பண்புகள் எப்படி இருந்த போதிலும், அடர்ந்த புருவங்களிலும் அகன்ற கூரிய விழிகளிலும் ஒரு தனி அழகு இருக்கக் கண்டேன். கொடியவர்கள், பொல்லாதவர்கள் என்று பழிக்கப்படுவோரும் இருபத்து நான்கு மணி நேரமும் கொடுமையோடு இருப்பதில்லை; இருக்க முடியாது என்பது மனித இயற்கை. அவர்களின் உள்ளத்திலும் ஈரம் உண்டு; குழைவு உண்டு. அப்படிக் குழைந்த நெஞ்சோடு அவள் பழகிய நேரத்தில் சந்திரன் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பான் என்று எண்ணினேன்.

அவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தபோது அவள் மறுபடியும் அந்தப் பக்கம் வந்தாள். அப்போது அவளுடன் ஒரு சிறு பெண்ணும் வந்தாள். “என் கண் அல்லவா? போய் வா அம்மா, மாமா சந்தையிலிருந்து வந்ததும் உனக்கு முறுக்கும் பொரிகடலையும் தருவேன், போய் நான் சொன்னேன் என்று வாங்கி வா, பொழுது போய்விட்டது சீக்கிரம் வா” என்று அந்தப் பெண்ணை வேண்டிக் கொண்டே சென்றாள். நான் எதிர்பார்த்த குழைவும் இனிமையும் நயமும் அவளுடைய அந்தப் பேச்சில் இருந்ததைக் கண்டேன். சந்திரன் பிடிவாதம் செய்தால் அவன் அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டே ஊருக்கு வந்து விட்டாலும் நல்லது தான் என்று என் மனம் எண்ணியது.

அவள் சென்றவுடன், நான் மெல்ல எழுந்து தொலைவில் ஒரு பக்கமாக நின்று, நடப்பது என்ன என்று பார்த்தேன். அந்த மூன்றாம் வீட்டைத் திறந்து ஒரு பையும் காசும் கொடுத்து அந்தப் பெண்ணைக் கடைக்கு அனுப்பியதைக் கண்டேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் சந்தையிலிருந்து வந்துவிடவே, அவர்களோடு பேசிக்கொண்டு கலகலப்பாக இருந்தாள்.

“அதோ கணக்குப்பிள்ளை வருவதுபோல் தெரியுதே”, “இன்றைக்குப் பொழுதோடு வந்துவிட்டாற் போல் தெரியுதே”, “தாயம்மாவுக்கு இன்றைக்குப் பலம்தான். பொட்டலம் நிறைய வரும்” என்று இப்படிச் சில குரல்கள் அந்தப் பெண்களிடையே கேட்டதும், நான் உணர்ந்து பின்வாங்கி ஆலமரத்தடிக்குப் போய் விட்டேன்.

“அதோ சந்திரன் போல் இருக்கிறதே” என்றார் ஆசிரியர்.

உடனே சாமண்ணா எழுந்து நின்றார். அவருடைய கைகளும் உதடுகளும் துடித்தன. “பேசாமல் இருங்கள். மூச்சு விடாதீர்கள். கூப்பிடக்கூடாது. காரியம் கெட்டுப் போகும்” என்று அமைதிப் படுத்தினேன். “கடவுளே கடவுளே” என்று வாயோடு சொல்லிக்கொண்டார். நாங்கள் சந்திரனுடைய கண்ணில் படாதபடி மரத்தின் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்றோம்.

சந்திரனுடைய நடை நன்றாகத் தெரிந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னென்ன மாறுதல்கள் நேர்ந்தாலும் ஒருவருடைய நடைமட்டும் அப்படியே இருக்கிறது. அவனுக்குப் பின் இரண்டு பேர் மூட்டைகளுடன் நடந்து வந்தார்கள். அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு பை நிறையப் பொருள்கள் இருந்தன. சாமண்ணா எப்படியோ அவற்றைக் கவனித்துவிட்டார். “தெய்வமே இவனுக்கு ஏன் இந்தத் தலைவிதி! இவன் இட்ட வேலையைச் செய்ய ஆட்கள் காத்திருக்கிறார்களே! வேலைக்காரன் போல் இரண்டு கைகளிலும் எடுத்துச் சுமந்து வருகிறானே!” என்று வருந்தினார்.

சந்திரனும் பின்வந்த ஆட்களும் வீடுகளை நெருங்கிய பிறகு நான் மெல்ல நகர்ந்து தெருப்பக்கமாகத் தொலைவில் நின்று பார்த்தேன். அந்தப் பைகளை அவள் கை நீட்டி வாங்கியது தெரிந்தது. அவன் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே விளக்கு எரிந்தது. அணுகிச் சென்றேன். அவனுடைய குரல் நன்றாகக் கேட்டது. குரலில் ஒன்றும் மாறுதல் இல்லை. பதினைந்து மாதங்களில் மாறுதல் ஏற்பட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அவனும் அவளும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் நுழைந்தாள். முன்பார்த்த அந்தப் பெண்தான் என்று உணர்ந்தேன். அந்தப் பெண்ணின் கையில் இருந்த பையைத் தாயம்மா பெற்றுக்கொண்டு அவளுடைய கன்னத்தைத் தடவிக் கூந்தலை நீவுவதைக் கண்டேன்.

பெண்ணின் கையில் ஏதோ கொடுத்ததும் தெரிந்தது. பிறகு அவள் எதையோ எடுத்துக் கடித்துத் தின்றதைக் கண்டேன். இருள் விரைவாகப் பரவியது. எனக்கு பின் யாரோ வரும் குரல் கேட்டது. நான் அங்கே வேவு பார்ப்பது தெரியாதபடி ஒரு பக்கமாகத் திரும்பி நடந்து அவர்கள் போன பிறகு மறுபடியும் அங்கு வந்தேன். “யார் அது” என்ற குரல் கேட்டு நின்றேன். சந்திரனுடைய குரல் போலவே இருக்கவே, திகைத்துப் பார்த்தேன். மறுபடியும் “யார் அது” என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வரக் கண்டேன். அவனே வருவதை அறிந்தேன். திடுக்கிட்டு “நான் தான்” என்றேன். “நான்தான் என்றால் யார்?” என்றான். “வேலு” என்றேன். வந்தவன் திடுக்கிட்டுத் தூண்போல் நின்றான். “வேலுவா? நீயா? இங்கே ஏன் வந்தாய்?” என்று அசையாமல் நின்றான். நான் தயங்காமல் நெருங்கிச் சென்று அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, “சந்திரா! மறந்துவிட்டாயே” என்றேன். என் கைகளில் நீர்த்துளி இரண்டு விழுந்தன. அவன் அழுவது தெரிந்தது. “உன் அம்மா இறந்துவிட்டார்” என்றேன். ஓ என்று கதறத் தொடங்கி, உடனே அடக்கிக் கொண்டு, வீட்டை விட்டு விலகி வந்தான். விம்மினான். குமுறினான்.

(தொடரும்)

 முனைவர் மு.வரதராசனார்அகல்விளக்கு