அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 74-76

(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 71-73-தொடர்ச்சி)
74. மரக்கவிப் புலவர்
சென்ற நூற்றாண்டிலே மரக்கவிப்புலவர் என்று ஒருவர் வாழ்ந்தார். அவர் எதனைப் பாடினாலும் மரத்தை வைத்துப் பாடுவது வழக்கம். – –
ஒருமுறை, மன்னர் ஒருவரைப் பார்த்துப் பாடிப் பரிசில் பெற எண்ணிச் சென்றார். அப்போது மன்னர் அங்கு இல்லை. வேட்டைக்குப் போயிருந்தார். மன்னர் திரும்பி வரும்வரை காத்திருந்த புலவர், அவர் வந்த பின்பு தாம் இயற்றிய கவிதையைப் பாடினார்.
‘மரமது மரத்திலேறி மரமதைத் தோளில்வைத்து
மரமது மரத்தைக் கண்டு மரத்தினால் மரத்தைக்குத்தி
மரமது வழியே மீண்டு வன்மனைக் கேகும்போது
மரமதைக் கண்ட மாதர் மரமொடுமரம் எடுத்தார். அரசனும் கேட்டு மகிழ்ந்தான்.
பொருள் தெரியாமல் புலவர்கள் விழித்தனர். அரசனோ பெரும்பொருள் பரிசாக அளித்து, மரக்கவிப் புலவரை மரியாதை செய்து அனுப்பிவைத்தான்
பொருள் தெரியாமல் விழித்து, பொறாமையால் வெதும்பி நின்ற மற்றப் புலவர்களை அழைத்து, அவர்கள் அறியாமை நீங்க மரக்கவிப் புலவரின் பாட்டுக்கு அரசனே பொருளை விளக்கினான்.
மரமது மரத்திலேறி அரசன் குதிரை மீது ஏறி
(அரசமரம் – மா மரம்)
மரமது தோளில்வைத்து – தோமரத்தைத் தோளில் வைத்து
(தோமராயுதம்)
மரமது மரத்தைக் கண்டு – அரசன் வேங்கையைக் கண்டு
(வேங்கை மரம்)
மரத்தினால் மரத்தைக் குத்தி – தோமரத்தால் வேங்கையைக் குத்தி
மரமது வழியே மீண்டு – அரசன் சென்ற வழியே திரும்பி
வன்மனைக் கேகும்போது – அரண்மனைக்கு வந்த போது
மரமதைக் கண்ட மாதர் – அரசனைக்கண்ட பெண்கள்
மரமொடு மரம் எடுத்தார் . (ஆல் – அத்தி) ஆலத்தி எடுத்தார்கள்.
அக்காலத்து மன்னர்கள் தாம் புலவர்களாக இருந்த தோடு, புலவர்களை வாழவைக்கும் புரவலர்களாகவும் இருந்தனர் என்பதற்கு இஃது ஒரு சான்றாகும்.
————
7. மருத்துவம்
75. அகத்தியரும் தேரையரும்
தீராத தலைவலியால் தன்னிடம் வந்த நோயாளியின் மண்டையை அறுவைச் சிகிச்சை முறையால் பிளந்து பார்த்தார் அகத்திய மாமுனிவர். அவன் மூளையிலே ஒரு தேரை – கையால் எடுக்க வரவில்லை. அவன் மூளையைக் காலால் பற்றிக் கொண்டிருந்தது. எடுக்கவும் இயல வில்லை; நசுக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தபோது, அவர் அருகில் இருந்த மாணாக்கர்களில் ஒருவர் – கொட்டாங்குச்சியிலே நீரைக் கொண்டுவந்து தேரையின் முன்னே காட்டினார். அது மூளையை விட்டுத் தண்ணிரிலே தாவிக் குதித்தது. நோயாளிக்கு வலியும் தீர்ந்தது.
முனிவருக்குப் பெரிதும் வியப்பு – நோயாளியை அறுவைச் சிகிச்சை முடித்து அனுப்பிவைத்தார்.
அதிலிருந்து அம் மாணக்கர்க்கு ‘தேரையர்’ என்றே பெயர் வழங்கலாயிற்று –
தம்மைவிடத் தம் மாணாக்கர் சிறந்திருப்பதா? அதை விரும்பாத அகத்தியரும், வடக்கே வெகு தொலைவில் உள்ள ஊருக்குத் தேரையரை மருத்துவம் செய்ய அனுப்பி விட்டார்.
ஆண்டுகள் பலவாயின. தன் மாணாக்கர் (தேரையர்) இன்னும் உயிரோடு – இருக்கின்றாரா என்று அறிய வேண்டி, அறிந்துவரும்படி மற்றொரு மாணவரை அனுப்பினார். போகும்போது அவரிடம், நீ சாலையிலே போகுங்காலத்துப் புளியமர நிழலில் தங்கி இளைப்பாறு: புளியங்குச்சியால் பல்துலக்கு; புளிய விறகைக் கொண்டு சமைத்து உண்டு செல் என்றார்.
அம் மாணவரும் குரு கட்டளைப்படியே முப்பது நாளாக நடந்துசென்று தேரையர் இருப்பிடம் சேர்ந்தார். வந்தவர் எலும்பும் தோலுமாக உடல் இளைத்திருப்பது கண்டு ‘என்ன காரணம்?’ என்று தேரையர் அவரை விசாரித்தார் அவர் அகத்தியர் சொல்லியனுப்பிய முறையை நவின்றார். (புளியங்கதை)
தேரையர் அவருக்கு ஆறுதல் கூறி, தன் வணக்கத்தை அகத்தியருக்கு தெரிவிக்கும்படி சொன்னார். அவர் புறப்படும்போது, நீ வேப்பமர நிழலில் தங்கி இளைப்பாறு; வேப்பங்குச்சியால் பல்துலக்கு, வேப்ப விறகு கொண்டு சமைத்து உண்ணு” என்று சொல்வி அனுப்பிவைத்தார்.
திரும்பும்போது அப்படியே செய்துகொண்டு நடந்து அகத்தியரை பார்த்தார் அவரிடம் பேச வாயைத் திறந்தார் அந்த மாணவர்.
அதற்குள் அகத்தியர், மாணவரை நோக்கி, “நீ ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை. எனக்கு எல்லாம், தெரியும். தேரையர் உயிரோடு இருக்கிறான். நன்றாகவும் இருக்கிறான். மருத்துவத்தில் சிறந்து விளங்குகிறான். நீ அவனைக் காணும்போது மிகவும் இளைத்திருந்தாய் – காணாவிட்டால் திரும்பி இங்கே வந்திருக்கமாட்டாய்; இறந்திருப்பாய்; அவன் சொல்லித்தானே. வேப்பமர நிழலில் தங்கி, வேப்பங்குச்சியால் பல்துலக்கி, வேம்பு விறகால் சமையல் செய்து உண்டு நலமாக இங்கு வந்து சேர்ந்திருக்கிறாய்’ – என்றார்.
சித்த மருத்துவத்திலே இப்படி ஒரு வரலாறு உண்டு.
இது சித்தமருத்துவ வரலாற்றையும், சித்த மருத்துவர்களின் போக்கையும், புளியின் கொடுமையையும், வேம்பின் நன்மையையும் நமக்குக் காட்டுகிறது.
———–
76. கடுக்காய் வைத்தியர்
ஒரு குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக கொள்ளுத் தாத்தா, தாத்தா, அப்பா, மகன் என்று எல்லாரும் வைத்தியம் செய்து பிழைத்து வந்தனர். கடைசியில் ஒருபேரன் அதைக் கவனிக்காமல் ஊர் சுற்றி வந்தான். பிறகு ஒருநாள் திருந்தி, நாமும் வைத்தியம் செய்து பிழைக்கலாமே என எண்ணி, பழைய மருந்துகளை தேடினான். கடுக்காய் மூட்டை ஒன்றுதான் கிடைத்து, இதை வைத்தே பிழைக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.
ஒரு சமயம், இரண்டு பெண்டாட்டி கட்டிய ஒருவன் எப்போதும் மூத்தவளுடன் சண்டை போட்டான். மூத்தவள் இவனிடம் வந்தாள்.இவன் யோசித்து, ‘இந்தா, எட்டுக் கடுக்காய். இதைக் கொண்டுபோய் நன்றாக அரைச்சு, உன் வீட்டுக்காரருக்குக் கொடுத்துப் பாரு’ என்று சொல்லி அனுப்பினான்.
என்ன செய்வது என்று கேட்க, அரைத்து உள்ளுக்கு குடிக்க கொடுக்கச் சொன்னான்.
அவள் அப்படியே செய்தாள். அவள் கணவனுக்கு ஒரே பேதி நிற்காமல் போய்க்கொண்டிருந்தது. இளையவள் பார்த்தாள். துர்நாற்றம் தாங்கவில்லை. நம்மால் இதைச் சகிக்க முடியாது என்று போய்விட்டாள். மூத்தவள் அவன் உடனிருந்து வேண்டிய உதவிகள் செய்து காப்பாற்றினாள். ஆகவே அவனுக்கு மூத்தவள் மேல் பரிவும் பாசமும் ஏற்பட்டு அவளுடனேயே வாழ்ந்து வந்தான். இந்த செய்தி ஊருக்குள் பரவியது.
இன்னொரு சமயம், பக்கத்து ஊரில் ஒரு எருமை மாடு காணாமற் போய்விட்டது. மாட்டுக்குச் சொந்தக் காரன் வந்து வைத்தியனிடம் முறையிட்டான். அவனுக்கும் 8 கடுக்காயைக் கொடுத்து அரைச்சுக் குடிக்கும்படி சொன்னான். அவனும் அப்படியே செய்ததும் வயிற்றுப்போக்கு அதிகமாகியது. தாங்க முடியாமற் போகவே ஏரிக் கரையிலேயே உட்கார்ந்து விட்டான். அப்போது அவனது காணாமற்போன எருமை தண்ணிர் குடிக்க அங்கே வந்தது. அதைக் கண்டதும் மகிழ்ச்சியோடு பிடித்து வீட்டுக்குக் கொண்டுவந்தான். இந்தச் செய்தியும் ஊரில் பரவி, வைத்தியருக்குப் பெருமை சேர்த்தது.
மற்றொரு சமயம் பக்கத்து ஊர் அரசன் பட்டாளத் துடன் படையெடுத்து வந்தான். எல்லோரும் என்ன செய்வது என்று பயந்து இருந்தனர். கடுக்காய் வைத்தியரோ பத்துக் கடுக்காய்களை அரைத்துப் படைவீரர்களுக்குக் கொடுத்தான். அவ்வளவுதான், எல்லோருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட உடன். அரசன் பார்த்தான், ‘இந்த ஊரில் காலரா பரவுகிறது’ என்று பயந்து, சண்டை போடும் எண்ணத்தையே கை விட்டுவிட்டு அவ்வூரை விட்டே தனது படையுடன் திரும்பிப் போய்விட்டான்,
இப்படியாகப் பெயரும் புகழும் பரவிக் கடுக்காய் வைத்தியனுக்குப் பாராட்டுகள் குவிந்தன. அவ்வூர் அரசனும் வைத்தியனை அழைத்துப் பாராட்டிச் சிறப்பித்தான்.
இதைக் கேள்விப்பட்ட மற்றொரு வைத்தியர் இவரிடம் வந்து “உங்களுக்கு எப்படி வைத்திய ஞானம் வந்தது? இவ்வளவு குறுகிய காலத்தில் பெயரும் புகழும் கிடைத்தது?” என்று கேட்டார்.
கடுக்காய் வைத்தியர் சொன்னார்
‘இளம் பெண்டாட்டிக்காரனுக்கும் எட்டுக்கடுக்காய்
‘எருமை கெட்டவனுக்கும் எட்டுக் கடுக்காய்’
‘படை எடுத்த மன்னனுக்குப் பத்து கடுக்காய்’
என்று தனக்குப் புகழ்வந்த விதம் அவ்வளவுதான் என்று தன் கதையைக் கூறினார்.
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Leave a Reply