(அறிவுக்கதைகள் நூறு – கி. ஆ. பெ. விசுவநாதம்: 18-20- தொடர்ச்சி)

அறிவுக்கதைகள் நூறு

காட்டில் அலைந்து திரிகிறது நரி, ஒரு சமயம் நகரத்துக்கு வந்து, ஒரு பூனையைக் கண்டு அதனுடன் நட்புக் கொண்டது.

நட்பு முற்றவே ஒருநாள் நரி பூனையைக் காட்டுக்கு அழைத்து, முயல்கறி படைத்து விருந்து வைத்தது.

சுவையாக விருந்துண்ட மகிழ்ச்சியில் பூனை நரியைப் புகழ்ந்து ஆடிக் களிப்புற்றது.

மற்றொருநாள் பூனை நரியை நகரத்திற்குள் விருந்துக்கு அழைத்தது. நகரத்திற்குள் வர நரி முதலில் தயங்கினாலும், பூனை கூறிய ஆட்டு இறைச்சியைச் சுவைக்கும் ஆசையால் ஒப்புக்கொண்டது. பூனையும் நரியைத் தன்னுடன் மெத்தைக்கு மெத்தை தாவச் செய்து அழைத்துச் சென்று ஒரு வீட்டு மாடியில் விருந்து படைத்தது. வயிறார உண்ட நரி, முன்பு பூனை செய்ததைப் போல்பாட ஆரம்பித்தது.

அதைக்கண்டு பயந்த பூனை, “பாடாதே! பாடினால் நம் இருவருக்கும் ஆபத்து” என்று சொல்லியும் கேளாமல் நரி ஊளையிடவே, வீட்டுக்காரர் வந்து உலக்கையால் தாக்கி, நரியைக் கொன்று குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தார். பூனை தப்பி ஓடிவிட்டது.

காட்டில் தம் நண்பனைக் காணாத நரிகள் ஒன்றுகூடி இந்த நரியைத் தேடி வந்தன. செய்தியைக் கேள்விப் பட்டுக் குப்பைத் தொட்டியில் கிடந்த நரியின் பிணத்தைக் கண்டு அழுதன: அலறின.

அவற்றுள் வயதான கிழ நரி ஒன்று, “நாம் இனி அழுது என்ன பயன்? இஃது எப்படி நடந்தது. என்று சிந்திக்க வேண்டாமா?” என்றது. அப்போது ஒரு நரி “ஆமாம், கூடாதாருடன் கூடலாமா?” என்றது. மற்றொரு நரி கேட்டது “கூடாதாருடன் கூடினாலும் கூடங்கள் மாடங்கள் ஏறலாமா?” என்று. மூன்றாவது நரி “கூடங்கள் மாடங்கள் ஏறினாலும் இராகங்கள் சங்கீதங்கள் இழுக்கலாமா” என்றது. கடைசியாகக் கிழநரி “இராகங்கள் சங்கீதங்கள் இழுத்ததனால்தான் தாளங்கள் தப்புகள் நடந்துள்ளன” என்று கூறியது.

இப்போது எல்லா நரிகளும் உண்மையை உணர்ந்து, “நாமும் இப்படிப் போனால் நம் கதியும் இப்படித்தான் முடியும்” என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டு, காட்டை நோக்கி ஒட்டம் பிடித்தன.
—————–

ஐப்பசி கார்த்திகை அடைமழை பெய்து ஒய்ந்தது. அடுந்து மார்கழியில், ஓணான் கொடி ஒன்று முளைத்த வேகத்தில் பக்கத்திலுள்ள பனைமரத்தின்மேல் பற்றிப் படர்ந்து வளைந்து வளைந்து மேலே சென்று ஓங்கிப் படர்ந்தது.

தை மாதத்தில், பனைமரத்து மட்டைகளையும் ஒரு சுற்றுச்சுற்றி மேலும் வளைந்து வளர்ந்து தொங்கியது. அப்போது அது பனைமரத்தைப் பார்த்து,

“ஏ – பனைமரமே! பனைபரமே 25 வருடமாக நீ என்ன வளர்ந்திருக்கிறாய்? என்னைப்பார். இருபத்தைந்து நாளிலேயே உனக்கு மேலே வளர்ந்துவிட்டேன்” என்று எக்காளமிட்டது.

ஒணாங் கொடியின் செருக்கைக் கண்ட பனைமரம், எதுவும் சொல்லாமல் மனத்திற்குள் சிரித்துக்கொண்டு சும்மாயிருந்துவிட்டது.

அடுத்து வந்த பங்குனி சித்திரை மாதங்களில் ஒணாங்கொடி வாடிப்போய்த் தலை சாய்ந்து கீழே விழத் தொடங்கியது. கடைசியில் பனைமரத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியாமல், இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிற்று.

இதைப்பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் முன் போலவே நிமிர்ந்து நின்று கொண்டிருந்தது பனைமரம்.

ஆற்றலும் அறிவும் உடையவர் எப்போதும் ஒரே தன்மையாக இருப்பர். மற்றவர் எப்படி விரைந்து வளர்கிறார்களோ, அப்படியே தளர்வர்” என்று எண்ணித் தான் பனைமரம் அப்போது மனதுக்குள் சிரித்ததோ?

இதிலிருந்து, அற்பர் வாழ்வு அவ்வளவுதான் என்று மட்டும் நமக்குப் புரிகிறது.
———-

காய்கறி, சாம்பர், இரசம் என்று எல்லா உணவுப் பொருள்களையும் சமைக்கும்போது அவையெல்லாம் கமகமவென்று மணப்பதற்கு, மலைக் கறிவேப்பிலையாகப் பார்த்து வாங்கிவந்து, நன்றாக அதனைத் தாளித்துச் சமையல் செய்வர், விருந்து வைப்பவர்.

தன் வாசனையையெல்லாம் சமைக்கும்போது கலந்து மற்ற காய்கறிகளுக்குத் தந்து விட்டு மகிழ்ந்திருக்கும் கறிவேப்பிலையை மக்கள் உண்ணும்போது முதலில் கீழே எடுத்து எறிந்துவிடுகின்றனர்.

“இப்படித்தான் – எங்கள் உழைப்பின் பலனை எல்லாம் பெற்றுக்கொண்டபிறகு, மேல் சாதிக்காரர்கள் தங்களது நலனுக்காக எங்களைப் பயன்படுத்தி, எண்ணிக்கையிலே சேர்த்துக் கொண்டும் எண்ணிக்கையிலே பயன் படுத்திக் கொண்டும், காரியம் முடிந்ததும் எங்களைத் தூக்கி எறிந்து விடுகின்றனர். நாங்கள் என்ன செய்வது?” என்று தாழ்த்தப்பட்டவர் மனம் வேதனையுறுகின்றனர். இது சிந்திக்கத் தக்கவைகளில் ஒன்றாகும்.
————-