அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 44-46
(அறிவுக்கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 41-43-தொடர்ச்சி)
அறிவுக்கதைகள் நூறு
44. செட்டியாரும் காகமும்
செட்டியாரின் கடையிலே தெரியாமல் ஒரு வடையை எடுத்துக்கொண்டு போனது காகம்.
மரத்தில் இருந்துகொண்டே அதைத் தின்னத் தொடங்கியபோது ஒரு நரி பார்த்துவிட்டது.
நரி – “காக்கா காக்கா – உன் குரல் எவ்வளவு அழகாக – இனிமையாக இருக்கிறது, ஒரு பாட்டுப் பாடேன்” என்றது.
காகம் அதை நம்பி,
வாய்திறந்து – கா கா என்றது.
உடனே மூக்கிலிருந்த வடை விழவே – அதை நரி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டது. காகம் ஏமாந்தது –
இது கேட்ட என் பேத்தி –
“தாத்தா – உங்க காலத்து காக்கா கதை அது. இந்தக் காலத்து காகம் –
நரி பாடச் சொன்னபோது, வடையை காலில் வைத்துக்கொண்டு காகா – என்று பாடியது. நரி ‘உன் பாட்டு நன்றாக இருக்கிறது. ஒரு ஆட்டம் (டான்சு) ஆடு’ – என்றது. உடனே காகம்.
வடையை மூக்கில் வைத்துக்கொண்டு (டான்சு) ஆட்டம் ஆடியது.
அதுகண்ட நரி, மறுபடியும், ‘’ஏ. காக்கா – உன் பாட்டும் ஆட்டமும் நன்றாக இருக்குது. அதனால் கொஞ்சம் பாடிக் கொண்டே ஆடு’’ என்று கேட்டது. அதற்குக் காகம், சற்று நிதானித்து, வடையை முழுதும் தின்றபின்பு, காகா என்று கத்திப் பாடியும்,
தா தை என்று ஆடிக் காட்டியும், பறந்து ஓடிப் போய்விட்டது. .
– என்று பேத்தி கூறவே, நான் இது நவீன காலத்துக் காக்கைக் கதை போலும் – என்றேன்.
இது பழங்காலக் காக்கை, நரியை மட்டும் பொறுத்த தல்ல.
இக்காலத்துக் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியினையும் நமக்குக் காட்டுகிற கதையாகும்.
————-
45. தன்னம்பிக்கை
வன விலங்குகளிலே புலி சிறுத்தை முதலியன வாழும் குகைகள் மிகவும் நாற்றமடிக்கும். அழுகல் இறைச்சியும் தோலும் முடியும் சிதறிக் கிடக்கும்.
ஆனால், சிங்கம் வாழும் குகையோ தூய்மையாக இருக்கும். அதற்குக் காரணம், நாளைக்கு வேண்டுமென்று இன்றைக்கே உயிர்களைக் கொன்று குகையில் கொண்டு வந்து இறைச்சிகளைச் சிங்கம் சேர்த்து வைப்பதில்லை. குகையினுள் பல நாள் படுத்து உறங்கும். இனி பசி தாங்காது என்றதும் மெல்ல எழுந்து குகையின் வாயிற் படிக்கு வந்து உடலை அசைத்து தலையை ஆட்டி – ஆ என்று கருச்சிக்கும்.
அந்த ஒலி எதிர்மலையிலே தாக்கித் திரும்பவரும். அங்கே காடு முழுதும் பரவியுள்ள மானும் முயலும் இதோ சிங்கம் – அதோ சிங்கம் என்று பயந்து நடுங்கிக் குறுக்கும் நெடுக்குமாக ஓடிவரும். அப்போது,
தன் குகை வாயிலண்டையிலே வருகிற ஒரு விலங்கை அடித்துத் தின்று, மீதியை அங்கேயே போட்டுவிட்டு. உள்ளே போய்ப் படுத்துக்கொள்ளும்.
எந்தக் கணம் தேவைப்படுகிறதோ அந்தக் கணமே தனக்கு உணவு தன் வாயண்டை வரும் என்ற திடமான நம்பிக்கை அதற்கு உண்டு. அவ்வளவு நம்பிக்கை சிங்கத்திற்கு!
பகுத்தறிவில்லாத வனவிலங்குகளுக்குள்ள இந்தத் தன்னம்பிக்கை – பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் பலரிடத்திலே இருப்பதில்லை.
தன் அறிவை நம்புவது; தன் பலத்தை நம்புவது; தன் பொருளை, தன் சமுதாயத்தை நம்பி வாழ்வது; இதுதான் தன் நம்பிக்கை!
இதைப் படிக்கிற நாம். இனியாவது தன்னம்பிக்கை கொண்டு வாழ்க்கை நடத்துவோமாக.
————
46. எனக்கு என்ன சொல்கிறீர்கள்?
ஒரு பெரிய குடும்பத்திலே பெருஞ் செல்வனாக வாழ்ந்த தலைவன், நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்தான்.
அவனுக்குப் பல பிள்ளைகள், பேரன் பேத்திகள். எல்லாரும் அவனைச் சூழ்ந்து கொண்டனர். “அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? அப்பா எனக்கு என்ன சொல்கிறீர்கள்? தாத்தா எனக்கு… …”
அவர் மனைவியும் அருகில் நின்று கதறி, “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று
பதைபதைக்கின்றாள். இனி பிழைக்கமாட்டான் என்று நிலைமை வந்ததும், ஒவ்வொருவராகச் சென்று “எனக்கு என்ன சொல்கிறீர்கள்?“ எனக் கேட்கின்றனர்.
நாள் முழுவதும் கண் மூடி, வாய் மூடிக் கிடந்த அவன் சற்று நினைவு வந்து, வாய் திறந்து, இவ்வளவு. நாளா சொன்னேன்! யார் கேட்டீர்கள்? இப்பொழுது மட்டும் கேட்க”…என்று சொல்லி நிறுத்திவிட்டான்.
இதிலிருந்து – தன் வாழ்நாள் எல்லாம் சொல்லுவதை சொல்லி வந்ததை எவரும் கேட்பதில்லை; கேட்காமல், சாகப்போகிற சமயத்தில் சொல்லுவதைத்தான் கேட்க விருப்பம் என்று தெரிகிறது – அது எந்த அளவுக்குப் பயன்படும் என்பதை –
எண்ணிப் பார்ப்பது நல்லது!
(தொடரும்)
முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்,
அறிவுக்கதைகள் நூறு
Leave a Reply