(அறிவுக் கதைகள் நூறு – கி.ஆ.பெ.விசுவநாதம் : 30-32 – தொடர்ச்சி)

ஒர் ஊரிலே பெரிய மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அக்கம் பக்கத்திலுள்ள ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கே வந்து வழிபாடு நடத்தினர். வேண்டுதலை நிறைவேற்ற மொட்டையடித்துக் கொண்டனர்.

அவர்களில் ஒருவன், தன் குடும்பத்துடன் மொட்டை அடித்துக்கொண்டு, திருவிழாவையும் கண்டுகளித்துவிட்டு ஊர் திரும்பினான். வழியிலே ஒரு சுங்கச் சாவடி. அங்குப் பலகையில் ஏதோ எழுதியிருந்தது. அருகில் அதிகாரி ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.

இவன் அவனிடம் போய், ‘மொட்டைத் தலைக்குச் சுங்கம் உண்டா?’ என்று கேட்க, அவனும் ‘ஆமாம்! தலைக்குக் காற்பணம்’ என்றான். இவன் தன்னுடன் வந்தவர்களின் தலையை எண்ணிக் கணக்குப் பார்த்துக் காசைக் கொடுத்துவிட்டு ஊர் வந்து சேர்ந்தான்.

தன் ஊரில் திருவிழாவுக்குப் போய் மொட்டையடித்து வந்தவர்களைப் பார்த்ததும், ‘நீங்கள் எவ்வளவு சுங்கம் கொடுத்தீர்கள்?’ என்று விசாரித்தான். அவர்கள் அனைவருமே ‘சுங்கமா? நாங்கள் ஒன்றுமே கொடுக்க வில்லையே’ என்றார்கள். ‘பிறகு எப்படி உங்களை சுங்கச் சாவடியில் வெளியே விட்டார்கள்?’ என்று இவன் கேட்டான். அதற்கு அவர்கள் மொட்டைக்கு யாரும் சுங்கம் வசூலிக்கவில்லையே?’ என்று சொன்னார்கள்.

அப்போதுதான் அவனுக்கு உண்மை புரிந்தது. தவறு நம்முடையதுதான். நான் போய் வலியக் கேட்டதால் தானே அவன் தன் வருமானத்திற்கான வழியைத் தேடிச் செய்துகொண்டான் என்று எண்ணி வெட்கப்பட்டான்.

எத்தனையோ பேர் – இப்படித்தான், வாழ்க்கையிலே தெரியாத செய்திகளில் – தன்னலமே குறியாக உள்ளவர்களிடம் வலியப்போய் ஆலோசனை கேட்டுப் பிற்கு அவதிப்படுவதைப் பார்க்கிறோம்: அப்படித்தான் இவனும்!
————–

நாற்பது ஆண்டுகளுக்கு முன், நண்பர் ஒருவரைத் தேடி, அக்கிராகரம் பக்கமாக நான் போய்க்கொண்டிருந்தேன்.

அங்கே ஒரு வீட்டுத் திண்ணையில் நின்ற பாட்டி: “தம்பி, தம்பி, இங்கே வா” என்று என்னைக் கூப்பிட்டாள்.

நான் அருகில் சென்றதும், “தம்பி! உனக்குப் பெரிய புண்ணியமாகப் போகட்டும். என் பேரனுக்குக் கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா. இரவு பகலாக ஓயாமல் படித்துக் கொண்டே இருக்கிறான். இப்படிப் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படித்தால் அவனுக்கு மூளையல்லவா கலங்கி விடும். அப்படி அவனுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், தாயும் இல்லை, தந்தையுமில்லை நான் மட்டும் என்ன செய்வேன்? ஆகவே, நீ அவனைப் படிக்காதே என்று புத்தி சொல்லிவிட்டுப் போ” என்றாள். எனக்கு ஒரே வியப்பு!

நம் வீட்டுப் பிள்ளைகளை நாம் ஓயாமல் படி படி என்று சொல்லிக்கொண்டே-யிருந்தாலும் அவர்கள் படிப்பதாக இல்லை. இங்கே இந்தப் பாட்டி தன் பேரனைப்பற்றி இப்படிச் சொல்லுகிறாளே என்று எண்ணிக்கொண்டே, அந்தப் பன்னிரண்டு வயதுச் சிறுவனை அழைத்து, “தம்பி பாட்டி சொல்லைக் கேட்டு நடப்பா. படிக்கிற நேரத்தில் மட்டும் படி; மற்ற நேரத்தில் விளையாடு” என்று சொன்னேன்.

உடனே அந்தப் பாட்டி, தன் தலையில் அடித்துக் கொண்டு, “ஐயோ! இன்னொரு முறை என் பேச்சைக் கேள் என்று சொல்லாதே! ஒருநாள் அவனிடம் உனக்குத் தாயும் இல்லை, தந்தையும் இல்லை. நீ நன்றாகப் படித்தால்தான் பட்டம் பெறலாம். பட்டங்கள் வாங்கினால் தான் பெரியபெரிய பதவி கிடைக்கும். அப்போதுதான் பணக்கார இடத்தில் பெண் எடுக்கலாம். மகிழுந்து(கார்), பங்களா எல்லாம் வரும். உத்தியோகம் செல்வாக்கு எல்லாம் உண்டாகும்’ என்று சொன்னேன். அதுமட்டுமல்ல, ‘படிக்காவிட்டால் நீ தர்ப்பைப் புல்லை எடுத்துக்கொண்டு எங்கே கருமாதி என்று அலைந்து தர்ப்பணம் பண்ணித்தான் பிழைக்கணும்’ என்றும் சொன்னேன். என்பேச்சைக் கேட்ட அன்று முதல்தான் இவன் இப்படி ஆகிவிட்டான். நான் என்ன செய்வேன்?” என்று புலம்பினாள்.

நானும் அந்தப் பாட்டிக்கு ஆறுதலும், பையனுக்கு புத்திமதியும் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து என் தமக்கையிடம் நடந்ததைச் சொன்னேன். உடனே என் தமக்கை, “அவர்கள் படிக்கவைக்கும் முறையைப் பார்த்தாயா? அந்தப் பிராமணப் பையனுக்கு உண்டான உணர்ச்சி, தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட குடும்பத்திலுள்ள பிள்ளைகளுக்கு உண்டானால், எதிர்காலம் எவ்வளவு நன்றாக இருக்கும்?” என்று தன் விருப்பதை வெளிப்படுத்தினார்கள்.
———–

காட்டிலே ஒரு சிங்கம் மற்ற மிருகங்களைத் துன்புறுத்தி அடித்துத் தின்று கொண்டிருந்தது. இதனால் பிற வனவிலங்குகள் யாவும் கூடி ஒரு முடிவுக்கு வந்தன. சிங்கத்திடம் சென்று. “இன்று முதல் எங்களை அடித்துத் துன்புறுத்தாதீர்கள். நாங்களே முறைவைத்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக உங்களிடம் வந்து சேர்கிறோம்” என்று, அவை யாவும் விண்ணப்பித்துக் கொண்டன.

அதற்கு மிருகேந்திரனும் சம்மதிக்க, அவ்வாறே நடந்து வந்தது. ஒருநாள் முயலின் முறை வந்தது. அது சிங்கத்தைக் கொல்லத் திட்டுமிட்டுத் தாமதமாகவே சென்றது. சிங்கம் காரணம் கேட்க, ‘இக்காட்டில் வேறு ஒரு சிங்கம் என்னைத் தின்ன வந்தது. நான் ஒடிப்போய் அதனிடமிருந்து தப்பிவரத் தாமதமாயிற்று’ என்று விளக்கியது.

அதைக் கேட்ட சிங்கம் வெகுண்டு, ‘அச்சிங்கத்தைக் காட்டு’ என முயல் பின் தொடர்ந்து சென்றது. முயல் ஒரு கிணற்றைக் காட்டி, ‘இதற்குள் ஒளிந்திருக்கிறது’ என்றதும், சிங்கம் எட்டிப் பார்த்தது. சிங்கத்தின் நிழல் பாழுங்கிணற்று நீரில் தெரியவே, அதுவே தன் எதிரி என எண்ணிக் கிணற்றுக்குள் பாய்ந்து உயிர் நீத்தது.

இது ஒரு நீதிக் கதை. இந்தக் கதை எல்லார்க்கும் தெரியும் ஆனால் நம்மில் பலர் இக் கதையின் நீதியைப் பற்றிச் சிந்திப்பதில்லை. ‘தனக்குத்தானே எதிரி’ என்பதை சிங்கம் உணராததால் அழிந்தது. மனிதரில் பலர், ‘நமக்கு நாமே எதிரி’ என்பதை இன்னும் உணரவில்லை.

சிங்கம் தண்ணீரில் தன் உருவத்தைப் பார்த்து எதிரி என்று பாய்ந்து இறந்தது.
மனிதர்களும் தினமும் கண்ணாடியில் தங்கள் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம், நமக்கு நாமே எதிரியாக இருக்கிறோம் என்று உணர வேண்டும்.

அப்படி உணராததால்தான், பலரை வைது, நாம் வையப் பெறுகிறோம்; சிலரை அடித்து நாம் அடிவாங்குகிறோம்; பலரை ஏமாற்றி நாம் ஏமாற்றம் அடைகிறோம்: பிறரைக் கெடுத்து, நாம் கெட்டுப்போகிறோம்.

இப்படிப் பார்க்கும்போது, ‘நமக்கு நாமே எதிரி’ என்ற உண்மையை மக்கள் என்று உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ அன்றுதான் அவர்களின் வாழ்வில் ஒரு நல்ல திருப்பமும் ஒளியும் உண்டாகும்’ என்பது தெளிவாகிறது.