நீலவானத்தில்…. – கோ.மோ.காந்தி, கலை.மு.,
என் வாழ்வின் நிலை என்னைக் கலங்க வைத்தது. அதற்காக நானே இரங்கினேன்.
திருமணமாகி எட்டு மாதங்கள் தாம் ஆகின்றன…. ஆனால் அதற்குள்… எவ்வளவு மாறுதல்கள்…! என் நிலையே மாறிவிட்டதுபோல் தோன்றுகின்றதே! எப்படி வளர்ந்தேன்… ஆனால் இப்போது..?? எவ்வளவு மாறிவிட்டேன். என் உள்ளமே அடியோடு மாறிவிட்டதா…?? எத்தனை மாறுதல்கள்!! இப்படி மாறிவிடுவேன் என்பதை நினைத்துப்பார்க்க முடியவில்லையே.
எல்லாம் கனவு மாதிரித்தான் தோன்றுகிறது ஆம்…! தன் சட்டையைக் கழற்றும் பாம்பு மாதிரி நானும் என் உள்ளத்தின் நிலையை மாற்றியமைத்துக் கொண்டிருக்க வேண்டும் ஆம்! என்னையறியாமலேதான் அப்படிச் செய்திருக்க வேண்டும். எப்படிச் செய்தேன் என்று எனக்கே தெரியவில்லை… ஆம்… தெரியமுடியவில்லை.
திருமணமாவதுவரை நடந்துவந்த என் வாழ்வுக்கும் அதன் பின்னர்த் தொடங்கிய வாழ்வுக்கும் எத்தனை வேறுபாடுகள்..!? வாழ்வை மலர வைப்பதுதான் திருமணமென்கிறார்களே! ஆனால் அது என் வாழ்வைப் பொறுத்தவரையில்…??
எவ்வளவு அன்பாக வளர்ந்தேன். என் தந்தையும் தமையனும் என்னிடம் தங்கள் உயிரையே வைத்திருந்தார்கள் என்று தான் கூறுவேன். தங்கள் கண்களின் இமைகளுள் வைத்துத்தான் என்னைக் காத்து வந்தார்கள். என் உள்ளம் கலங்க எதையும் செய்யத் துணியார்கள்.. ஆம்! என் நினைவு எழுந்த காலத்திலிருந்தே இதுதான்.. ஒரே அன்பு! ஒரே பாசம்! தங்கள் அன்புணர்ச்சியால் என்னைத் தங்களுடன் பிணைத்துவிட்டார்கள்..
ஆம்! அதனால் தான் வந்த வினை.? ஏன் இத்தனைப் பாசம்? ஏன் இவ்வளவு அன்பு…? இன்று நான் படும் துன்பத்திற்கு இவர்கள்தான் காரணம் எனக் கூறுவேன்.. ஆம்! இவர்கள்தாம்…! உண்மையான உலகத்தைத் தங்கள் அன்பைக் காட்டி வேறு வகையாகச் சித்தரித்தனர். துன்பத்தைத் தர மறுத்தனர்… அதனால்தான் இத்தனை துன்பம்.. நானும் அறியாத பேதையானேன்.
உலகம் அன்பு மயம் என்றுதான் எண்ணினேன். என் அன்பு அண்ணா, என் அருமைத் தந்தை, என்னையே தேடிக் கொண்டிருக்கும் என் தாய் யாவரும் இதையேதான் கூறினர். இதையேதான் என்னிடம் காட்டினர். இதனால்தான் இந்தப் பயங்கர உலகத்தை நான் மறந்தேன். வாழ்வெல்லாம் இன்பமயமாகவே எப்போதும் விளங்கும் என்று கருதினேன். உலகமக்களனைவரும் தம் பெற்றோர்போன்று தானிருப்பர் என்று கனவுகள் பல கண்டேன். ஆனால்…
விரைவிலேயே உலகம் அன்புமயமானதல்ல என்று உணர்ந்தேன்; யாவரும் என் பெற்றோர் போன்றவர்கள் அல்லர் என்பதை உணர்ந்தேன்; வாழ்வு இன்பமயமானது என்பது பொய் என்பதையும் நன்குணர்ந்தேன்.
ஆம்! இதுவரையிலும் என் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த ஒரு திரை விலகியது; என் உள்ளத்தை மறைத்துக் கொண்டிருந்த ஒரு வகை இருள் வெருண்டு வெருண்டு ஓடியது; அதன் நடுவே என் உயிர் துடித்தது; அதன் துடிப்பிலிருந்து ஒளியுள்ள சிவந்த இரத்தத்துளிகள் பளபளக்கும் கண்ணீர்த்துளிகளாக மாறி சொட்டுச் சொட்டாக இந்த உலகத்தின்மேல் வடிந்து கொண்டிருந்தன.
என் கணவர் வீடுவந்த சில நாட்களிலேயே இந்த உண்மை விளங்க ஆரம்பித்தது. என் மாமியும் நாத்தனாரும் கூர்மையாகப் பார்த்தனர். திருடனைப் பார்க்கும் காவல் அதிகாரியும் அவ்வாறு தான் பார்ப்பார். நான் திகைத்தேன். என் இதயம் நின்று நின்று அடித்துக் கொண்டது. கொடிய வேடன் கையில் சிக்கிய அழகிய வெண்புறா தனது இறக்கையை படபடவென்று அடித்துக் கொள்ளுவது போலிருந்தது என் நிலை. என் உள்ளம் திணறியது! சூழலில் அகப்பட்டுக் கொண்ட என் வாழ்வின் நிலையைப் பார்த்து நானே இரங்கினேன்.
என் மாமிதான் என் முகத்தை மறைத்துக் கொண்டிருந்த திரையைக் கிழித்தெறிந்தார்கள்.
‘‘பார்வதி! இது உங்கள் வீடு என்று நினைத்து விடாதே! பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சிறு பிள்ளைத்தனமாக நடக்க இது இடமில்லை… எப்படியோ உன்னை வளர்த்து விட்டார்கள். எதற்காக வளர்த்தார்கள் என்றே தெரியவில்லை.’’
என் மனம் தளர்ந்தது… ஆனால் என் மாமி தொடர்ந்தார்கள்.
‘‘ஆனால் இங்கு எச்சரிக்கையுடன் நடக்க வேண்டும். என்ன தெரிகிறதா…?
எதற்காக அடிக்கடி இவ்வளவெல்லாம் கூறுகிறார்கள் என்று கருதுவேன். ஒரு வேளை வீட்டுவேலையில் நான் தகுதியில்லையென்றா? அல்லது அவர்களிடம் வயதில் குறைந்த என் நாத்தனாரிடம் கூட பணிவுடன் நடந்து கொள்ளவில்லை என்றா? அல்லது… எனக்கே காரணம் புரியவில்லையே. வயதிற் பெரியவர்கள் என் கணவரின் தாய். என் மனதை அடக்கிக் கொள்வேன். என் அமைதியால் அவர்கள் பேச்சு வளர்ந்து கொண்டே போகும். என் அன்னை தந்தையைக் குறைகூறுவார்கள். திருமணத்தில் நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் குறையாகக் கூறுவார்கள். என் நாத்தனார் தூபம் போடுவார்கள். என் தந்தையைப் பற்றியும் அன்பான அண்ணாவையும் அவர்கள் குறையாகக் கூறும் போது என் மனம் வேதனையால் துடிக்கும். என் மேல்தோலை சிறிது சிறிதாக உரிப்பது போலிருக்கும். என் வேதனை தாங்கமுடியாமல் என் கணவரைப் பார்ப்பேன். என் கணவர் தன் தலையைக் குனிந்து கொண்டே, தன் நிலையினின்றும் விடுபட விரும்பாதவர்போல் தோன்றுவார். திக்கற்ற நிலையில் நிற்பதுபோல் உணருவேன்.. ஆழமான பாதாளத்தில் விழுந்து கொண்டிருப்பது போன்ற உணர்வு என்னுள் எழும். எனக்கு உதவியாக ஒருவர் கூட இல்லையே என்பதை அறிய என் மனம் பதறும். என்னைச் சூழ்ந்து வளர்ந்திருக்கும் ஒரு வகை இருள் என்னைத் தாக்க வருவது போல் தோன்றும். காற்றுமாடம் வழியே வெளியே பார்ப்பேன். பரந்த வானம் நீல நிறத்துடன் தெளிவாகத் தெரியும். அதையே கூர்ந்து நோக்குவேன்.
சட்டென்று என் தந்தையின் நினைப்பு வரும். என் உணர்ச்சிகள் மாறும். என் நெஞ்சில் யாரோ எதையோ அடைப்பது போல் தோன்றும். ‘ஓ’வென்று அழுவேன்… விக்கி விக்கி அழுவேன்… மனதின் கொடிய பளு பாகாய் உருகி கண்களினின்றும் பாயும் அருவியாக மாறும். ஒரு கணம் என் கணவர் வீடே அமைதியாக இருக்கும். ஆனால் மறுகணம் என் மாமியின் குரல் வெறியுடன் எதிரொலிக்கும்.
‘‘என்ன? இதற்கா அழுகிறாள்… கண்ணீர் வடிக்கிறாளாம்… எல்லாம் நீலிக் கண்ணீர்… ஏன் இந்தக் கண்ணீர்… இங்குள்ள யாவரையும் இந்தக் கண்ணீரால் ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணமா..? பாரடா உன் மனைவியை..! இப்படிப்பட்டவள் என்று முன்னரே தெரியாமற் போயிற்றே..! இப்போதே இப்படியிருக்கிறது… இனிமேல் என்னவெல்லாமோ…!!’’ என்று என் கணவரைப் பார்த்துக் கூறுவார்கள். என் நாத்தனார் எதையோ ‘முணமுண’ப்பார்கள்.
என் கணவர் இதையெல்லாம் கேட்டுக் கொண்டு தானிருப்பார். மெதுவாகத் தன் தலையை என் பக்கமாகத் தூக்குவார். ஏனோ மீண்டும் தலையைக் கவிழ்ந்து கொள்ளுவார். அவர் வலதுகை அவர் சிதறிய கேசத்தை வருடிக் கொண்டிருக்கும்… நான் என் அமைதிக்குள் புதைந்து கிடப்பேன்.
ஆம்! இத்தகைய கணவருடன் வாழ வேண்டும்! படித்திருக்கிறார்… பட்டம் பெற்றிருக்கிறார்… நல்ல வேலை… ஆனால் என்ன? தன் மனைவி படும் துன்பத்தை அறிய விரும்பாதவர் என்று தான் கூற வேண்டும். எனது அமைதியையே இவரால் அறிய முடியவில்லையே.. அல்லது அறியத் தெரியாதா? தன் கண்களையும் காதுகளையும் நம்பாது அமைதியில் வாழ்வை நடத்தும் தன் மனைவியிடம் அன்பான சொல்… ஆறுதலான சொல்…? ஏன்தான் இப்படியிருக்கிறார்…? தன் தாயின் அறிவற்ற சொல்லுக்கு முன் தன் அறிவைப் பணயம் வைக்க முயலுகிறாரே… இவரும் திருமணமானவராம்… ஒரு பெண்ணைப் பற்றி – அதுவும் அவர்களுக்காக மாடாக உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றி, அவள் உள்ளத்தைப் பற்றித் தெரியாத, தெரிய முடியாத ஒருவர்…! என் மீது குறையிருந்தால் கண்டிக்கட்டுமே… பார்வதி ஏன் இப்படிச் செய்தாய்? ஏன் அப்படிச் செய்யவில்லை…? என்று என்னிடம் கூறலாமே! ஆனால் அவர் கூறுவதற்குத்தான் என்னவோ அவர் தாய் கூற முற்படுகிறார்கள் போலும்! ஒரே பேச்சு… நச்சுப்பாம்பு தன்விடமனைத்தையும் ஒரே வேளையில் கக்குவது போல்தான் அவர்கள் பேச்சு வெளிப்படும். நான் நடுங்குவேன். அத்தனை கொடிய பேச்சு. அவர்கள் பேச்சைப் பார்த்தால் வேண்டுமென்று கூறுவதுபோல் தானிருக்கும். ஏதோ ஒன்று அவர்களுக்குள்ளிருந்து கொண்டு அவர்களையே துன்புறுத்துவது மாதிரியிருக்கும். ஒரு வேளை நான் என் கணவரை என் கைப்பாவையாக்கிவிடக் கூடாதே என்ற அச்சமாக இருக்கலாம். அல்லது தன் மகளின் நச்சுக் குணங்களை வெளிக் காட்டவிடாமற் செய்ய என்னைக் குறை கூறலாம். அல்லது தன் ஆணவத்தை காட்டவுமிருக்கலாம்.. ஏன் இப்படித் தன்னையே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று எண்ணிக் கொள்வேன். நான்தான் எந்த வகைத் தீமையையும் நினைக்கவில்லையே…!
திருமணமாவதற்கு முன்னர் என்னவெல்லாமோ எண்ணினேன். எங்கள் கல்லூரி உளவியல் ஆசிரியர் மணவாழ்க்கையைப் பற்றிக் கூறும்போது என் மனம் சிலிர்க்கும். என் வாழ்வைச் சிறந்த வகையில் நடத்த வேண்டும் என்று என்னிடம் கூறிக் கொள்வேன். இயைந்த வாழ்வு! கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அறிந்து ஒழுகும் வாழ்வு! மற்றவர்களின் குறைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் நலனையே கருதி பெருந்தன்மையாகப் பழகும் வாழ்வு… இதயத்திற்குகந்த வாழ்வு… இதயத்தை வளர்க்கும் வாழ்வு.. இன்ப வாழ்வு ஆனால்…??
என் எண்ணங்களெல்லாம் சிதறி விட்டன. கண்ணாடி உடைந்து சிதறுவது போல் சிதறி விட்டன. நான் என்ன நினைத்தேன்..? ஆனால் இன்று நடப்பது…?
ஆம்! சோதனையாய்த்தானிருக்க வேண்டும்! என் உள்ளத்தைச் சோதனை செய்வதற்குத்தான் இந்த வாழ்வு அமைந்திருக்கிறது போலும்! கந்தகக் காடியில் துத்தநாகம் விழுந்தவுடன் ஏற்படும் கொந்தளிப்புப் போன்று தான் என் வாழ்வு அமைந்திருக்கிறது! ஒரே வேதனை… என் அறிவைச் சோதனையிடுவது போன்றுதான் என் சூழ்நிலை அமைந்திருக்கிறது. அது ஓர் இருள் போன்று என்னை நேருக்கு நேர் பார்ப்பது போல் உணர்ந்தேன். என் வலுவனைத்தையும் சோதனை செய்வது போலிருந்தது அது…
நாட்கள் ஒன்றன் பின் ஒன்றாக மறைந்து கொண்டிருந்தன. எண் நிலையிலும் பல வகை மாறுதல்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன. முன்னர் துன்பத்தைக் கண்டு வெருண்ட நான் இப்போது வெருளவில்லை. என் மாமியின் விடச் சொற்கள் என்னை முன்பு விரட்டின. கத்தரிப்பிஞ்சுத் துண்டுகளை எண்ணெயிலிட்டு வாட்டும் போதெல்லாம் என் நிலையை நான் எண்ணிக் கொள்ளுவேன். ஒரு வினாடியில் ‘சர்ர்ர்…’ என்று துவண்டு விடும். பின்னர் ஒரு நிலையை அடைந்ததும் சுருண்டு வதங்கி அமைதியாகிவிடும். அதே போன்றுதான் என் நிலையும் என்று எனக்குள் கூறிக் கொள்வேன்.
என் நாத்தனார் நேரடியாகவும் மறைமுகமாகவும் என்னை வதைத்தார்கள். ஆம்! அது முன்னர்தான்! இப்போது அவர்கள் கூற்று என்னை வருத்துவதாகத் தெரியவில்லை.
என் கணவரின் செயலற்ற நிலையும் என்னை வருத்தவில்லை. தன் மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி வெறி கொண்டு எழும் போதெல்லாம் என் உடலை அவர் தேடுவார். ஆனால் அந்த உடலில் புதைந்திருக்கும் என் உள்ளம் அவர் கண்களில் தென்படாது போலும்! இருட்டில் ஒளிந்திருக்கும் திருடன் போல நடந்து கொள்ளுவார். அவர் செய்கைக்காக என் அறிவு வெட்கித் தலை குனியும்.
யாரையும் குறை கூற நான் விரும்பவில்லை…. அவர்கள் தரும் துன்பமும் என்னை வருத்துவதாகத் தெரியவில்லை. என் உள்ளத்தைச் சுற்றிலும் ஒரு வகைக்கவசம் அமைந்திருந்து எனக்கு வரும் துன்பத்தை என்னை அணுகச் செய்ய விடாது என்னைக் காப்பாற்றுவது போல் ஒரு சில வேளைகளில் உணருவேன். என் தனிமையில் என் இறைவனைப் பணிவேன். என் ஆதரவற்ற நிலையில் எனக்கு ஆறுதல் கூறும் தெய்வம் என்னைக் காத்து நிற்பது போல் உணருவேன். என் அறிவு அவன் முன்பு பணியும்; மனம் ஒன்றும்; உடல் புல்லரிக்கும்.
நாட்கள் செல்லச்செல்ல என் உடல் நிலையில் பல மாறுதல்களேற்பட்டன. வலு குறைந்து விட்டது! சிறு குழந்தைபோல் எங்கும் ஓடியாடி வளர்ந்த நான் இப்போது காற்றோட்டமில்லாத வீட்டில் அடைபட்டுக் கிடந்தேன். என் மாமியும் நாத்தனாரும் ஏறத்தாழ நான்கு மணிக்கே வெளிச் சென்றுவிடுவர். கோயிலுக்குச் செல்லுவதாகத்தான் கூறிக் கொள்ளுவர். ஆம்! அவர்கள் கோயிலைத் தேடிச் செல்வர். என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்ததும், தன் கோபத்தை என்னிடம் காட்டுவார். பின்னர் ‘காபி’ அருந்தியதும் சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு வெளியே சென்று விடுவார். என்னைப்பற்றி எவரும் கவலைப்படுவது கிடையாது. ஆனால் அவர்களுக்கு ஏதாவது குறை ஏற்படும் போது என்னை அதட்ட எவரும் தயங்கியதில்லை. நான் எதுவுமே கூறுவதில்லை. மிக மிக அமைதியாகி விடுவேன். யாவரும் வெளிச்சென்றவுடன் பின் வாசலைத் திறப்பேன். அங்கு ஓடும் சாக்கடை என்னை விகாரமாகப் பார்க்கும் தேங்கிச் தேங்கிச் செல்லும் அந்தச் சாக்கடையைப் பார்க்க பரிதாபகரமாக இருக்கும்! அதைப்பார்க்க மனமில்லாமல் வானத்தைப் பார்ப்பேன். வானம் நீலமாக எங்கும் மலர்ந்து விரிந்து தெரியும். அதையே பார்ப்பேன். ஏனோ என் கண்கள் மங்கும்; கண்ணீர் சுரங்கும். என் தாய் தந்தையரின் மென்மையான அன்பு வானத்தினின்றும் என் நிலையைப் பார்த்து ஏங்குவது போலிருக்கும். சட்டென்று என் அண்ணாவின் முகம் வானத்தில் தெரியும். ‘‘பார்வதி! எங்களையெல்லாம் மன்னித்துவிடு அம்மா!’’ என்று அவன் உதடுகள் அசையும். என் நெஞ்சம் விம்மும். உள்ளம் கொந்தளிக்கும். என் இதயத்தினின்றும் பல மின்னல்கள் தெறிக்கும். விம்மி விம்மி அழுவேன். அழுது கொண்டேயிருப்பேன். மலர்ந்த வானம் நான் அழுவதைப் பார்த்துக் கொண்டே இருக்கும்…
மீண்டும் வானத்தைப் பார்ப்பேன். நீலவானம் என்னை ஊன்றி பார்ப்பது போல் உணருவேன். ஏனோ என் கண்களில் சுரக்கும். நீர் வற்ற ஆரம்பிக்கும் மனம் அமைதி பெறும். கொடிய புயலுக்குப் பின்னர் எழும் அமைதி போல் ஒருவகை நிம்மதி என்னை வந்தணுகும். அந்த அமைதி நீலவானத்தின் அமைதியை என்னுடன் பிணைக்கும். என்னை மறந்த நிலையில் அதையே பார்த்துக் கொண்டிருப்பேன். என்னுள் எழும் ஓர் ஒளி இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து பரந்த வானத்தில் நீண்டு சென்று கொண்டிருப்பது போல் உணருவேன். அவ்வொளி ஓர் உணர்வாகவும் தென்படும். அவ்வுணர்வில் இன்பமில்லை. துன்பமுமில்லை, இரண்டுமற்ற ஒன்று அல்லது இரண்டுக்குமப்பாலாய் விளங்கும் ஒன்றாகயிருக்க வேண்டும். அது எதுவென்றே தெரியவில்லை. ஒரு வேளை என்னைக் காத்து வரும் இறைவன் இந்தப் பாழுலகத்தினின்றும் என்னை அழைக்க நீட்டும் கையாகவும் ஏன் இருக்கக் கூடாது…?
அப்போதெல்லாம் நீல வானத்தில் திகழும் விண்மீன்கள் என்னைப் பார்த்துத் தன் கண்களைச் சிமிட்டும்!
– குறள்நெறி: மாசி 18, தி.ஆ.1995, மார்.1 கி.ஆ.1964
Leave a Reply