thirukkural03

 வாழ்க்கையில் நண்பர்கள் – பகைவர்கள் என்று இரு பிரிவுகளைக் காணுகின்றோம். பகைவர்களைக் காணுகின்றபோது, கண்டுகொள்ளமுடியாத கொடியவர்கள், பகைவர்களாக இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்களை நாம் கண்டுகொள்ளவும் முடிவதில்லை; புரிந்துகொள்ளவும் முடிவதில்லை; தெரிந்து கொள்ளவும் முடிவதில்லை. ஏன்? இவர்கள் நம்முடைய நெருங்கிய நண்பர்கள் போலவே பழகி வருகிறார்கள்! இவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள்? இவர்களெல்லாம் தனிப்பட்டதொரு இனத்தைச் சேர்ந்தவர்கள்! நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர்; இது திருவள்ளுவரின் வாக்கு; விளக்கம்.

  இந்த இனத்தினர் யாருடன் பழகுகின்றனரோ அவருக்கு முடிவான தீங்கினை உண்டாக்குவதற்கே பழகுகின்றனர்; அப்படிப்பட்ட தீங்கினைச் செய்கின்ற காலம் வரும் வரையில் நண்பர்களாகவே இருப்பர்; இவர்களைக் கண்டுகொள்ளமுடியாதபடியால் இவர்களின் கொடிய திட்டத்திற்கு ஆளாகி ஆபத்திற்குள்ளாகி, துன்புறுகிறார்கள்; இந்த இனத்தினரை அறவே நீக்கி ஒழித்தால்தான் மக்கள் நலமாக வாழமுடியும். இந்த இனத்தினரைக், ‘கூடா நட்பு’ என்ற பகுதியில் ஆசிரியர் தெளிவாக விளக்குகின்றார். ‘கூடா நட்பு’ என்பதற்குத் தெளிவான பொருள் கொடிய பகைவர்கள் என்பதேயாகும். மனத்தால் – எண்ணத்தால் – எவ்வித அன்பும் நட்பும் கொள்ளாமல் தீங்கு செய்வதற்காகவே – அக்காலம் வாய்ப்பு வரும் வரை நண்பர்கள் போல பழகிக் கொண்டிருப்பவர்கள்.

  ‘இனம் போன்று இனமல்லார்’ என்ற தொடர் ‘கூடா நட்பு’ என்ற பகுதியில் வருகின்ற குறட்பா அடியின் முதற் பகுதியாகும். நம்முடைய இனத்தைச் சேர்ந்தவர்கள் போலத்தான் காட்சியளிப்பார்கள்; பேசுவார்கள்; பழகுவார்கள்; ஆனால் நிலைத்து நிற்கின்ற பகைமை எண்ணமே அவர்கள் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் இப்படிப்பட்ட இனத்தவர்களை நல்லவர்களாகச் செய்ய முடியாதா என்று கேட்டால், முடியாது என்று ஆசிரியர் குறிப்புத் தருகின்றார். ‘‘ஓரீஇவிடல்’’ என்றொரு குரல் இந்த அதிகாரத்தின் குறட்பாவில் ஒலிக்கிறது. அஃதாவது இவர்களை நம்மிடம் அணுகாதவாறு நீக்கிவிடுதலே தான் வழியாகும்.

  இந்த இனத்தினரைக் குறித்துப் பேசுகின்ற மற்றொரு இடத்தில் ‘மனத்தின் அமையாதவரை’ என்று சொல்லுகின்றார். மனத்தில் எள்ளளவும் பொருத்தம் இல்லாத இனத்தார் என்றால் அவர்களைப் பிறவிப் பகைவர்கள் என்றுதானே கொள்ளுதல் வேண்டும்?

  இந்த இனத்தினர் நம்முடன் பேசும்போது மிகமிகப் பணிவுடன் பேசுவார்கள்; நயமாகப்பேசுவார்கள்; அதிக வணக்கத்தினைக் காட்டுவார்கள்; எப்படி எப்படியாக வணங்கிப் பேசினாலும் நம்பாதே என்கின்றார் ஆசிரியர். அதிக வணக்கத்தினைக் காட்டினால் விரைவில் நமக்குத் தீங்கு செய்யவே இருக்கிறார்கள் என்பதாகும். ஏன்? இவர்கள்தான் ‘கூடா நட்பு’ இனத்தவர்களாயிற்றே! ‘வில்’ அதிகமாக வளைய வளைய அதிகமானதாகத் தீங்கினைச் செய்யும் என்கின்ற எடுத்துக்காட்டை இந்த இனத்தினரின் வணக்கத்திற்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர். சிந்திக்கவும்!

  நாமே தேடிக்கொள்ளுகின்ற துன்பம்,  என்கின்ற பேச்சினை நடைமுறையில் பலர் பேசுவதை நாம் கேட்காமலில்லை. அதற்குக் காரணம் கூடா நட்பினராகிய இந்த இனத்தினரைக் கண்டு கொண்டு நாம் ஒதுக்கித் தள்ளாததேயாகும்.

  இந்த இனத்தினரின் முகத்தோற்றம் நன்றாகக் கூட இருக்குமாம்! அதாவது இனிமையான முகத்தினை நம்மிடம் காட்டுவார்களாம். புன்முறுவலுடன் நகைத்துப் பழகுவார்களாம். ‘முகத்தின் இனிய நகா’ என்ற சொற்களை ஆசிரியர் கூறுகிறார். அப்படிக் கூறிவிட்டு அதற்கு அடுத்து ‘வஞ்சகர்கள்’ என்று எடுத்துக் காட்டுகிறார். இந்தக் கூட்டத்தினரை நாம் வைத்துக் கொண்டிருக்கும்வரை நமக்கு வாழ்வேது! ஆசிரியர் வள்ளுவனார் இவர்களைப் பற்றிப் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் நம்மை நடுங்க வைக்கின்றது. ஏனென்றால், தனிப்பட்ட பகைவனைப்பற்றியதாக இருந்தாலும் நாம் அவ்வளவுக் கவலைப்படவேண்டியதில்லை. ‘இனம்’ என்று கூறி இப்படியாக ஒரு இனமே- கூட்டமே வாழ்கின்றதென்று குறிப்பிட்டால் நாம் எவ்வளவு தூரம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதனை உணர வேண்டும்.

  ‘கும்பிடுதல்’ ‘தொழுதல்’ என்று சொல்லுகிறோமே அதுவும் இந்த இனத்தாரிடையே இருக்குமாம்; இருகை கூப்பித் தொழுகின்றனர் என்று எண்ணி ஏமாறாதே. அந்த இருகைகளினுள் ‘கத்தி’ இருக்குமாம்; ஆம்; அந்தHands together in prayer 02 இனத்தார் அப்படித்தான் இருப்பார்கள்! ‘தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்’ என்று விளக்கம் தருகின்ற குறட்பாவும் இப்பகுதியான ‘கூடா நட்பில்’ தான் சொல்லப்படுகின்றனது. ‘தீ நட்பு’ என்றொரு பகுதி திருக்குறளில் உண்டு; அதற்குப் பொருள் தீய பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் என்பதாகும். அவர்களுடன் பழகுவது ஒருவிதத்தில் நல்லதாகும்! ஏனென்றால், அத்தகைய தீய குணங்கள் உள்ளவர்களை நாம் மாற்றிவிடலாம்; தீ நட்பினர் தமது தீய பழக்கங்களில் இருந்து காலத்தினால் மாறிவிடவும் கூடும். ஆனால் கூடா நட்பினர் பிறவிப் பகைவர்கள்; நம்முடைய மக்கள் இனத்தவர்களே அல்லர்.

 திருவள்ளுவர் அருளிய ‘கூடா நட்பு’ப் பகுதியினை ஒவ்வொருவரும் ஊன்றிப் படித்து உணர்தல் வேண்டும்.

– குறள்நெறி:  பங்குனி 19, தி.ஆ.1995, ஏப்.1 கி.ஆ.1964