பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3
(பன்னீர்செல்வத்தின்புதியபுரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 2 தொடர்ச்சி)
பன்னீர் செல்வத்தின் புதிய புரட்சிக்கவி: களம் : 4 காட்சி : 3
அரண்மனையினொருபுறம், அல்லியும், பிற தோழியரும்
அறுசீர் விருத்தம்
குழலி : அணங்கே அல்லி அறியாயோ
அரசன் மகளை உணராயோ
இணங்கி நாமும் ஏற்றிட்டோம்
இளையாள் காவல் பூண்டிட்டோம்
சுணக்கம் அதிலே நேர்ந்ததுவோ
சூழ்ச்சி முற்றும் அழிந்ததுவோ
பிணக்கம் நம்மில் வேண்டாது
பிழையைத் தடுத்தல் வேண்டுமன்றோ
அல்லி : நமது காவல் தொலைந்தது
நங்கை காதல் வளர்ந்தது
உமது சொல்லும் மெய்யாகும்
உற்ற துரைத்தல் சரியாகும்
குமரி உள்ளம் மாற்றிட்டாள்
குதித்து விட்டாள் காதற்கடல்
நமது காவல் பிழைப்பெண்ணி
நாளும் பொழுதும் துடிக்கின்றேன்
அறத்தைப் பொய்த்து மறைவாக
அல்லது செய்வார் மனமாக
மறத்தைத் துறந்து புறமாக
மறித்தோ டியவன் நிலையாக
புறத்தே சிரித்து மகிழ்ந்தேநான்
புலம்பு கின்றேன் அகத்தேதான்
திறத்தே நீவீர் வழியொன்றைத்
தேர்ந்தே உரைப்பீர் எனக்கின்றே
வாணி : யாருக்குக் காவல் பூணுகின்றீர்
யாருடைய நன்மை நாடுகின்றீர்
பேருக்கா யரசைக் காப்பமென
பிணைகின்ற இணையைப் பிரிக்காதீர்
வேருக்குள் வெந்நீர் ஊற்றாதீர்
விளைகின்ற காதல் வெட்டாதீர்
பாருக்குள் காதல் இல்லையெனில்
பருத்தியொடு புல்லைத் தின்னலாகும்
கவிதா : மழலை மொழியும் வஞ்சனையாம்
மாதர் காதல் நஞ்சென்றால்
குழலும் யாழும் தீக்கலனே
கொள்ளுங் காதல் வேம்பென்றால்
விழலுக் கிரைத்த நீராகும்
விழையுங் காதல் இல்லென்றால்
நிழலே யில்லாப் பாலையன்றோ
நெஞ்சங் கிளருங் காதலின்றேல்
எழுசீர் விருத்தம்
அல்லி : நாடாளும் மன்னவனின் ஆணைப்படி
நாம்கொண்டோம் காவற்பணி
மறுப்ப துண்டோ
ஈடாமோ எம்முயிரும் இளையாளுக்கு
இதயத்தில் நமக்கிதிலே
மாற்ற மில்லை
கூடாவான் குலம்பிழைத்தால் மன்னவனும்
கொள்ளியிலே விழுந்திட்ட
தமிழ்ப தித்த
ஏடாவாள் காதலின்றேல் இளவரசி
என்னவழி இருதலையாய்க்
குழம்பு கின்றேன்
அறுசீர் விருத்தம்
வாணி : பழியைப் பிறர்பால் போடாதீர்
பாவை வாழ்வை அழிக்காதீர்
விழியைப் படைத்த கவிஞனவன்
வெல்லும் அழகு மங்கையவள்
நழுவும் மேகம் வானிலவை
நாளும் முற்றும் மறைத்திடுமோ
பொழியும் இளமைத் தீபட்டுப்
பொசுங்கக் கண்டீர் சூழ்ச்சியெலாம்
ஒன்பது சீர் விருத்தம்
குழலி : விரைபரி தாவி யேறி
விசையுடன் வாள்சு ழற்றி
வீரமும் விளைக்கும் போழ்தில்
பொறையுடன் முதுகின் மேலாய்ப்
புதல்வரைத் தாங்கி நிற்றல்
பூவிழி மங்கைக் காகும்
கறையினை மங்கைக் காக்கிக்
கற்பினைப் பார மாக்கிக்
காவியம் புனைந்தார் முன்னோர்
நிறையினை இருவர்க் காக்கும்
நெறியினை அழுத்திக் கூற
நெஞ்சிலே துணிவு வேண்டும்
அறுசீர் விருத்தம்
காதலை யிருவர் துய்க்கின்றார்
கன்னியர் மட்டும் சுமக்கின்றார்
வேதனை யிதுவே முக்காலும்
விடிவு முண்டோ எக்காலும்
காதல் மட்டும் துய்த்திடவும்
கன்னியர் சுமையை மாற்றிடவும்
ஆதல் கண்டால் மண்ணுலகில்
அன்றே பெண்மை ஒளியாகும்
பாரதி: அச்சம் நாணம் மடப்பமென
அருமைக் குணங்கள் மூன்றுந்தான்
நிச்சம் பெண்பாற் குரியவென
நீள உரைத்தார் காப்பியனார்
கொச்சை யாக்கிப் பின்னாளில்
குறித்து விட்டார் பெண்ணடிமை
எச்ச மின்றி அதனுட்பம்
எண்ணிப் பார்த்தல் கடனாகும்
செறிவு நிறைவே செம்மையென
செப்பம் அறிவே அருமையென
உறுதி யாகும் பெண்மைக்கென
உரைத்தார் பின்னும் அவரன்றோ
செறிவா யிணைத்து நோக்காது
சீற்றம் அவர்மேல் கொளலாமோ
அறிவே ஆய்தல் என்றன்றோ
அன்றே சொன்னார் வள்ளுவனார்
காதல் உறவில் ஆடவன்தான்
கழற்றிக் கொண்டால் துன்பமெலாம்
பேதைப் பெண்ணைப் பின்தொடர்தல்
பெரும்புவி யாரும் மறுப்பதுண்டோ
ஆதலால் காதல் உறவில்தான்
அச்சம் நாணம் பெண்ணுக்கெனக்
காதல் சொல்லும் களவியலில்
கழறினார் முன்னோர் தவறென்ன
அகத்துறை சொன்ன நற்கருத்தும்
அரிவையர்க் கன்றோ பெருங்காப்பு
அகத்துறை யன்றிப் புறத்துறைக்கும்
அதுவே பெண்மைக் கேற்குமென
இகம்பரம் பேசும் மதவாதி
ஏய்த்த தற்கு யார்பொறுப்பு
அகம்புறம் பிரித்துப் பொருள்கொண்டால்
அருந்தமிழ் மரபே நன்றாகும்
அல்லி: குற்றம் செய்தாள் இளவரசி
கொடுமை அவளே துய்ப்பளெனப்
பற்றும் பதைப்பும் இல்லாமல்
பார்த்தி ருத்தல் ஆகாதே
மற்றும் சிக்கல் தொடராமல்
மன்னன் மகளாம் இருபேர்க்கும்
உற்றது செய்தல் அதுவன்றோ
உரிய தாகும் நமக்கேதான்
கவிதா: அல்லி சொல்வழி எவ்வழி
அதுவே நமக்கு நல்வழி
கல்லில் இரண்டு கனியாய்க்
காக்க வேண்டும் பணியை
சொல்லா திருத்தல் குற்றம்
சொல்ல நினைத்தால் வருத்தம்
சொல்லி வைப்போம் நடப்பை
சூழ்ந்து நிற்போம் முடிவில்
(தொடரும்)
புலவர் சா.பன்னீர்செல்வம், புதிய புரட்சிக்கவி
Leave a Reply