பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் – 8
(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 7 இன் தொடர்ச்சி)
குமரிக் கோட்டம்
அத்தியாயம் 2 தொடர்ச்சி
ஏதுமறியாத குமரி, செட்டியார் ஏதோ கவலையாக இருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு வருந்தினாள்.
“என்னாங்க உடப்புக்கு? ஒரு மாதிரியா இருக்கறிங்க.”
“ஏன்! அதெல்லாம் ஒண்ணுமில்லையே! “ரொம்பக் களைச்சாப்போல இருக்கறிங்க”
“எனக்கென்ன களைப்பு ! நான் என்ன, உன் போல வெயிலிலே வேலை செய்கிறேனா?”
“உங்களுக்கு ஏனுங்க, தலை எழுத்தா என்ன, கூலி வேலை செய்ய? நீங்க மகாராசா.”
“உனக்கு மட்டும் தலை எழுத்தா, இவ்வளவு இளம் பிராயத்திலே சேற்றிலேயும் மண்ணிலேயும் இருக்க. குமரி! உனக்கு ஒரு பணக்காரனாப் பார்த்துக் கலியாணம் செய்துவிட்டா. கூலி வேலை ஏன் செய்யப் போறே பிறகு.”
“வேடிக்கையாப் பேசறிங்க. அது அதுக்குன்னு ஆண்டவன் அளவு போடாமலா அனுப்புவாரு.”
இப்படி ஏதாவது பேசுவாள் குமரி. மாடிக்குச் செல்வதற்கு, ஒவ்வோர் படிக்கட்டாகக் கால் வைப்பது போலச் செட்டியாரும், ஒவ்வோர் தடவை பேசும் போதும், ஒவ்வொரு வாசகமாகத் தம் நிலையை உணர்த்துவிக்கக் கூறி வந்தார். குமரி, செட்டியாரிடம் இப்படிப்பட்ட நிலை ஏற்படும் என்று துளியும் எதிர்பார்த்தவளல்ல. ஆகவே அவர் பேசின தன் உட்கருத்தை அவள் உணர்ந்து கொள்ளவே இல்லை .
ஒருமுறை செட்டியார், தம் சோகநிலைமையைக் கூறினார். அவருக்குப் பரிந்து பேச விரும்பிய குமரி, “ஆமாங்க, எனக்குக் கூடச் சொன்னாங்க, உங்க மகன் கதையை. யாரோ ஒரு துட்ட முண்டே, அவரைக் கெடுத்து விட்டாளாம்” என்றாள்.
“குமரி ! அந்தப் பெண்ணைத் திட்டாதே. பெண்கள் என்ன செய்வார்கள்? அவன் அவள் மீது ஆசை கொண்டால், அவள் என்ன செய்வாள் பாவம்” என்று செட்டியார், தம் மருமகள் சார்பிலே ஆசரானார்! மற்றோர் நாள் “உன் அழகுக்கும் குணத்துக்கும், நீ எங்க சாதியிலே பிறந்திருந்தா, உன் தலையிலே, மணல் கூடையா இருக்கும்!” என்று சொல்லிப் பெருமூச்செறிந்தார். மற்றும் ஓர் நாள், மார்பு வலிக்குத் தைலம் தடவும் படி சொன்னார். கொஞ்சம் கூச்சம் இருந்தாலும் ‘கல்மிசம் அற்ற’ மனத்துடன் அவருடைய மார்புக்குத் தைலம் பூசினாள் குமரி. சதா சர்வகாலமும் அவள் நினைப்பு நெஞ்சிலே இருந்ததே தவிர, ஒருநாளும் அவள், அன்று அமர்ந்திருந்தது போலத் தம் அருகே உட்கார்ந்திருந்ததேயில்லை ; அவள் கை, செட்டியாரின் மார்பிலே பட்டபோது புள காங்கிதமானார். கண்களை மூடிக்கொண்டார்.
அவளுடைய ‘மூச்சு ” அவருக்குத் தென்றல் வீசுவது போலி ருந்தது. என்னென்னமோ எண்ணினார். உடலே பதறிற்று அவருக்கு. மார்பு வலி மட்டுமில்லை. செட்டியாருக்குக் குளிர் சுரம் என்று குமரி எண்ணிக் கொண்டாள், அவருடைய உடல் பதறுவதைப் பார்த்து. சுரம், ஆம் – ஆனால், அந்த நோயைக் கிளறியது அவளுடைய அழகு என்பதை அவள் அறிந்து கொள்ள வில்லை. ஆபத்து வேளை; ஆனால் தப்பித்துக்கொண்டார் செட்டியார், மீனா அங்கு வந்ததால். “மார்வலி, தைலம் தடவினேன், சுரம் வரும் போலிருக்கு” என்றாள் குமரி ”பார்த்தாலே தெரியுதே” பச்சைச் சிரிப்புடன் கூறிக்கொண்டே போய்விட்டாள் மீனா.
தைலம் பூசிக் கொண்ட பிறகு, செட்டியாரின் தாபம் பன்மடங்கு அதிகமாகிவிட்டது. இனி இங்கிருந்தால், எந்தநேரத்தில் என்ன ஆபத்து நேரிடுமோ, வெறி மீறி என்ன விபரீதமான செயல் புரிந்துவிடும்படி நேரிட்டு விடுமோ என்ற திகில் அதிகரித்தது. இனி இங்கிருக்கக் கூடாது இரண்டோர் நாட்கள், வெளியூர் போய் வருவது நல்லது என்று எண்ணி, மறையூரை விட்டுக் கிளம்பினார். மனச்சாந்திக்காக இம்முறையைக் கையாண்டார். ஆனால் எந்த ஊர் சென்றாலும், அவள் பின் தொடர்ந்தாள். அதோ செட்டியார், அந்தியூர்க் கடை வீதியில் அருணாசலச் செட்டியார் கடையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். புதிதாக வந்த பம்பாய் பட்டுச் சேலையின் நேர்த்தியை அருணாசலச் செட்டியார் வாடிக்கைக்காரருக்குக் கூறுகிறார். குழந்தைவேலச் செட்டியாரோ அந்தச் சேலையைக் கண்ட உடனே அதைக் குமரிக்குக் கட்டி அழகு பார்க்கிறார் ! அதாவது அந்தச் சேலையைக் கட்டிக்கொண்டு குமரி, தன் எதிரில் நின்று காட்சி தருவது போலத் தோன்றுகிறது செட்டியாருக்கு. எங்கே போனாலும், எதைக் கண்டாலும், விநாடிக்கு விநாடி அவள் வருகிறாள். ஒவ்வோர் தடவை யும் ஒவ்வோர் படி அதிகரிக்கிறது அவருடைய ஆசை. பித்தம் பிடித்தவர் போல மீண்டும் மறையூர் வந்து சேர்ந்தார்.
செட்டியாரின் நிலையை மீனா நன்றாக உணர்ந்து கொண்டாள். சமயமறிந்து செட்டியாரைத் தனியாகச் சந்தித்து. வெளிப்படையாகவே கேட்டு விட்டாள். அவர் முதலில் நடுநடுங்கிப் போனார். பிறகு இல்லை என்று கூறிப் பார்த்தார். கடைசியில் கண்களில் மிரட்சியுடன், “ஆமாம் எனக்கு, அந்தப் பெண்மீது அமோகமான ஆசைதான் ; ஆனால் …..” என்று பிச்சை கேட்பதுபோலப் பேசினார்.
“பயப்படாதிங்க செட்டியாரே ! அந்தப் பெண் ஒரு மாதிரி. இந்த மாதிரி காரியத்துக்குத் தலைபோனாலும் ஒப்பமாட்டாள்” என்றாள் மீனா.
“அது தெரிந்துதானே, நான் இப்படிப் பைத்தியம் பிடித்தது போலாகிவிட்டேன்” என்று செட்டியார் கூறினார்.
“அவள் சம்மதிக்கவே மாட்டாள் ; நாம்தான் சாமர்த்தியமாக நடந்துகொள்ள வேண்டும். நாளை இரவு, சொக்கனை ஏதாவது வேலையாக வெளியூருக்கு அனுப்பிவிடுங்கள். நான் முடித்துவிடுகிறேன்” என்றாள் மீனா. இட்டதேவதை பிரசன்னமாகி வரம் கொடுத்தால் எவ்வளவு சந்தோசம் வருமோ அவ்வளவு ஆனந்தம் செட்டியாருக்கு. சொக்கனை வெளியூர் அனுப்புவது சிரமமில்லை, அனுப்பினார். மீனா, ஏற்பாட்டின்படி செட்டியாரிடம் வந்தாள் ; கச்சக்காய் அளவுக்கும் குறைவு ஏதோ லேகியத்தைக் கொடுத்தாள் செட்டியாரிடம். “குமரியைக் கூப்பிட்டனுப்பி இந்த லேகியத்கைத் தின்று விடும்படி செய்யுங்கள். பிறகு அவள் உங்கள் பொருள், விடிஞ்ச பிறகுதானே சொக்கன் வருவான்!” என்று யுக்தியும் சொல்லித் தந்தாள். நடுங்கும் கரத்திலே லேகிய உருண்டையை வாங்கிக்கொண்டு செட்டியார், “இது என்ன மருந்து? ஆபத்துக் கிடையாதே’ என்று கேட்டார். “இது என்ன மருந்து என்று நீங்கள் நாளைக் காலையிலே என்னிடம் சொல்வீர் செட்டியாரே ! நான் போய் குமரியை அனுப்புகிறேன், லேகியம் செய்யும் வேடிக்கையைப் பார்த்துக் கொள்ளுங்கள் நீங்களே என்று மீனா கூறிவிட்டுப் போய்விட்டாள்.
(தொடரும்)
கா.ந. அண்ணாதுரை
குமரிக்கோட்டம்
Leave a Reply