(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 6 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 2 தொடர்ச்சி


“யாரை நிறுத்தினாலும் நிறுத்தி விடுவார், குமரியை மட்டும் நிறுத்தவே மாட்டார். “

“ஏன்? என்னா விசயம்?”

“செட்டியாருக்கு அவளைப்பார்க்காவிட்டா உசிரே போயிடும்.”

” அம்மா, அவ்வளவு சொக்குப்பொடி போட்டு விட்டாளா அந்தச் சிறுக்கி.”

“பொடியுமில்லை, மந்திரமுமில்லை ! அவளைக் கண்டவன் எவன் தான், தேனில் விழுந்த ஈபோல் ஆகாமலிருக்கிறான் அவகூடக் கிடக்கட்டும்; கொஞ்சம் மூக்கும் முழியும் சுத்தமா ஒரு பெண் இருந்தா, எந்த ஆம்பிள்ளை, விறைக்க விறைக்கப் பார்க்காமே இருக்கிறான்? செட்டியார், என்னமோ கோயில் கட்டலாமென்று தான் வந்தார். அவர் கண்டாரா, இங்கே இந்த குண்டு மூஞ்சி இருப்பா ளென்று? “

“செட்டியார் மேலே பழிபோடாதே. அந்த ஆசாமி ரொம்ப வைதிகப் பிடுங்கல். அவ கைப்பட்ட தண்ணீ ரைக் கூடத் தொடமாட்டார். ஒரே மகன் அவருக்கு சாதியை விட்டு சாதியிலே சம்பந்தம் செய்கிறானென்ற உடனே, போடா வெளியே என்று கூறிவிட்டவர். “

“மவனுக்குச் சொன்னாரு, அப்பாவா இருந்த தாலே. இவருக்கு எந்த அப்பன் இருக்காரு, போ வெளி யேன்னு சொல்ல?”

மேசுதிரி, மீனாவிடமிருந்து தெரிந்து கொண்ட இரகசியத்தைச் சமயம் வரும்போது தனக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளலாம் என்று எண்ணி, மேற் கொண்டு தகவல்களைக் கேட்டறிய விரும்பினான். மீனா, மேசுதிரியின் ஆவலைத் தெரிந்து கொண்டு சிரித்தபடி, “செச்சே, நீ, அதுக்குள்ளே எல்லாம் முடிஞ்சி போச்சின்னு நினைக்காதே. செட்டியாருக்கு அவ கிட்ட கொள்ளை ஆசை இருக்கு. ஆனா பயமோ மலையத்தனை இருக்குது. மேலும், குமரி வேடிக்கையாகப்பேசுவாளே தவிர, ரொம்ப ரோசக்காரி. அதனாலே, செட்டியார் ஏதாவது இளிச்சா, அவ அண்ணனிடம் சொல்லிவிடுவா. சும்மா, பார்க்கறதும், சிரிச்சுப் பேசறதுமா இருக்க வேண்டியது தான்” என்று கூறினாள். உண்மையும் அதுதான், செட்டியார் குமரியின் பார்வையையே விருந்தாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் சாதி குலபேதங்கள் அருத்தமற்றவை என்று பழனி எவ்வளவோ ஆதாரத்தோடு கூறியும், கேட்க மறுத்த செட்டியாரின் மனத்திலே, அந்தப் பெண்ணின் ஒரு புன்னகை எவ்வளவோ புத்தம் புதுக்கருத்துகளைத் தூவிவிட்டது. ‘சாதியாம் மகாசாதி ! இந்தப் பெண்ணுடைய இலட்சணத்துக்கும் குணத்துக்கும் ஒருவன் இலயிப்பானே தவிர, இவள் சாதியைக்கண்டு பயப்படுவானோ என்ன!” என்று கூட நினைத்தார் ஒரு கணம் அவ்விதம் நினைப்பார், மறுகணமே மாறிவிடுவார்.

“இதுதான் சோதனை — மாயை என்னை மயக்க வந்திருக்கிறது – இதிலிருந்து தப்பித்தாக வேண்டும் ‘ என்று தீர்மானித்து, தேவார திருவாசகத்தையும் அடியார்கள் கதைகளையும் முன்பு படித்ததை விட மேலும் சற்று அதிக ஊக்கமாகப் படிக்கத் தொடங்கினார். அந்தப் பாவையை மறந்துவிட வேண்டும் என்ற திட்டம் அவருடையது. பாபம், அவருக்கு அதுவரை தெரியாது. காதல் பிறந்தால் . அதன் கனலின் முன்பு எந்தத்திட்டமும் தீயந்து போய் விடும். என்ற உண்மை .
தோடுடைய செவியன் ” என்ற பதிகத்தை அவர், அதற்கு முன்பு எத்தனையோ நூறுமுறை படித்ததுண்டு. அப்போதெல்லாம், இருசபம் ஏறிக்கொண்டு, சடையில் பிறையுடன் சிவனார் வருவது போலவே, அவருடைய அகக்கண் முன் சித்திரம் தோன்றும்; பரமனுக்குப் பக்கத்திலே, பார்வதி நிற்பதும் தெரியும்.

ஆனால், அப்போதெல்லாம், ஐயனுடைய அருள் விசேசத்தைப் பற்றியே செட்டியார் கவனிப்பார். குமரியின் மீது ‘ஆசை’ உண்டான பிறகோ, பதிகம் பாடியானதும், பார்வதியும் பரமசிவனும் அவர் மனக் கண்முன் தோன்றுவதும், பார்வதி பரமசிவனை அன்புடன் நோக்குவதும், அந்த அன்புப் பார்வையால் ஐயனுடைய அகம் மகிழ்ந்து முகம் மலர்வதும் ஆகிய காதல் காட்சியே அவருக்குத் தெரியலாயிற்று. பதிகம் பாடி, பிரேமையை மாய்க்க முடிய வில்லை – வளர்ந்தது. ஏகாந்தமாக இருந்து பார்த்தார் – தீ கொழுந்து விட்டெரியத் தொடங்கிற்று. அவரையும் அறியாமல் அவர் மனத்திலே ஒருவகை அச்சம் குடி புகுந்து விட்டது. “எப்படி நான் தப்பமுடியும்” என்ற அச்சம் அவரைப் பிடித்துக்கொண்டது. துறைமுகத் தருகே நின்றுகொண்டு, தன் கப்பலின் வரவுக்காகக் காத்து கொண்டிருக்கும் வணிகர் போல, அவர் மனம் பாடுபட்டது. குமரியின் கள்ளங்கபடமற்ற உள்ளம் அவருக்குத் தெரியும். பணிவுள்ளவளாக அவள் தன்னிடம் நடந்து கொள்கிறாள் ; பசப்பு அல்ல என்பதையும் அறிவார்; தம் மனத்திலே மூண்டு விட்ட தீயை அவள் அறியாள், அறிந்தால் திகைப்பாள் என்பதும் தெரியும்.

கொடியிலே கூத்தாடும் முல்லையைப் பறிக்கும் நேரத்தில் வேலிப் பக்கமிருந்து தோட்டக்காரன் ‘ஏ! யாரது? கொடியிலிருந்து கையை எடு’ என்று கூவினால், எவ்வளவு பயம் பிறக்கும் ? தோட்டக்காரன் கூவாமல் முல்லையே ” நில்! பறிக்காதே ! உனக்காக அல்ல நான் பூத்திருப்பது” என்று கூவினால் பயம் எவ்வளவு இருக்கும்? அவ்விதமான அச்சம் செட்டியாருக்கு. அடக்கமுடியவில்லை. அவளோ அணுவளவும் சந்தேகிக்கவில்லை. செட்டியாரின் உண்மை நிலை தெரிந்தால் அவள் உள்ளம் எவ்வளவு வாடும் ? எவ்வளவு பயப்படுவாள்? மதிப்புத்துளியாவது இருக்குமா? “கொடியிலிருந்து முல்லை பேசுவது போல அந்தக்குமரி, ‘ஏனய்யா ! இதற்குத்தானா கோயில் கட்டுகிறேன் குளம் வெட்டுகிறேன் என்று ஊரை ஏய்த்தாய்? கட்டுக்கட்டாக விபூதி – காலை மாலை குளியல் – கழுத்திலே உருத்திராட்சம் – கந்தா முருகா என்று பூசை. கல் உடைக்க வருபவளைக் கண்டால், கை பிடித்து இழுப்பது, இதுதான் யோக்கியதையா ஊருக்கெல்லாம் உபதேசம் செய்கிறாயே, உன்னுடைய வெளி வேசத்தை நானும் நம்பினேனே ! ஏதோ, வயிற்றுக்கில்லாத கொடுமையால் கூலி வேலை செய்ய வந்தேன். என்ன தைரியம் உனக்கு, வேலை செய்ய வந்தவளை, வாடி என்று அழைக்க!’ என்று கேட்டுவிட்டால் ! செ! பிறகு இந்தச் சென்மத்தை வைத்துக்கொண்டும் இருப்பதா? குளம் குட்டை தேட வேண்டியதுதான். ஆண்டவனே! என் சபலம் போக ஒரு வழியும் இல்லையா?” என்று செட்டியார் சிந்திப்பார். சிவனாரைத் துதிப்பார்; நாளாகவாக, காதல் தன்னைப் பித்தனாக்கிக் கொண்டு வருவதைத் தெரிந்து பயந்தார்.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்