(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11. தொடர்ச்சி)


குறிஞ்சி மலர்

அத்தியாயம் 4 தொடர்ச்சி

 

பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். “இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?”

“நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?”

“மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்.”

“மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக இருக்கிறது பார் கமலா. தன் முதுகுக்குப் பின்னால் உயிரைத் திருடிக்கொண்டு போக எமன் வந்து கொண்டிருப்பது தெரியாமல் உன் முதுகுக்குப் பின்னால் சங்கிலியைத் திருட ஓடி வந்திருக்கிறானே இந்தக் கிழவன். மனிதன் பொருளைத் திருடினாலே அகப்பட்டு அவமானமும் தண்டனையும் அடைய வேண்டியிருக்கிறது. எமன் இத்தனை உரிமையோடு உயிர்களைத் திருடிவிட்டு இந்தத் திருட்டு உரிமையால் தெய்வமாகவும் வாழ்கிறானே?”

“திருடனாயிருந்தாலும் அவன் செத்த விதத்தை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது, பூரணி!”

“மரணத்துக்கே இந்த ஆற்றல் உண்டு. பக்கத்து வீட்டில் சுவரை இடித்தால் நம் வீடு அதிர்கிற மாதிரிச் சாகின்றவர்கள் வாழ்கின்றவர்கள் மனத்திலுள்ள உயிர் நம்பிக்கையில் அதிர்ச்சியை உண்டாக்குகிறார்கள்.”

“அதிருக்கட்டும்! மேலே உன் திட்டம் என்ன? எங்கேயாவது வேறு வீடு பார்த்தாயா? உன் தம்பி ஏதோ மரமேறி விழுந்து கையை ஒடித்துக் கொண்டானாமே, நீ என்னிடம் சொல்லவே இல்லையே?”

“சொல்லவில்லைதான். எனக்கு எத்தனையோ கவலைகள் கமலா. அத்தனையையும் உன்னிடம் சொல்லி உன்னைக் கவலைப்படுத்த வேண்டுமா? முள்ளோடு பிறக்கிற செடிக்கு அந்த முள்ளே பாதுகாப்பாகிற மாதிரி இப்போது எனக்கு இருக்கிற ஆதரவு என் கவலைகள் மட்டும்தான். இந்தா, உன் சங்கிலி இதைச் சரிப்படுத்திவிட்டேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. முடிந்தால் சாயங்காலம் நீ கொஞ்சம் விட்டுப் பக்கம் வந்து போ! நான் வரட்டுமா?”

கமலாவிடம் சங்கிலியைக் கொடுத்துவிட்டுப் பூரணி வீடு திரும்பினாள். தேரடியில் ஓதுவார்க் கிழவர் எதிர்ப்பட்டார்.

“மூஞ்சி முகரையெல்லாம் கறுத்துப் போகிறாற்போல் இப்படி வெய்யிலில் அலைவாளா ஒரு பெண்? அப்படி என்ன அம்மா தலைபோகிற காரியம்?”

“ஒன்றுமில்லை தாத்தா! இங்கே பக்கத்துத் தெருவில் கமலா என்று ஒரு பழைய சிநேகிதி இருக்கிறாள். அவளைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கிழவரின் அனுதாப விசாரிப்புக்குப் பதில் சொல்லிவிட்டு மேலே நடந்தாள் பூரணி. தெரு நடுவிலிருந்த கல்மண்டபத்தருகே தயிர்க்காரி எதிரே வந்து பிடித்துக் கொண்டாள்.

“நான் காசு பணம் சேர்த்து வைத்துக் கொண்டு பிழைக்கிறவள் இல்லை அம்மா! அப்பப்போ நீங்க கொடுக்கிறதை வாங்கித் தான் தவிடு, பிண்ணாக்கு என்று வாங்கணும். பூராப் பாக்கியும் தர முடியாவிட்டாலும் ஏதாவது ஒண்ணு ரெண்டு கொடுங்கம்மா.”

கையில் மீதமிருந்த இரண்டு ரூபாய் இரண்டரை அணாவில் ஒன்றரை ரூபாயை அவளிடம் கொடுத்து அவளுக்கு நல்லவளானாள் பூரணி. அந்தப் பதினொண்ணே முக்கால் மணி வெய்யிலில் திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் சுறுசுறுப்பும் இல்லை, கலகலப்பும் இல்லை. வெற்றிலைப் பாக்குக் கடைக்காரர்கள் கூட பொழுது போகாமல் ஈயோட்டிக் கொண்டிருந்தார்கள். தெருவும், கோபுரமும், மலையும் பரம சுகத்தோடு வெய்யிலில் காய்ந்து கொண்டிருந்தன. மேற்கே இருப்பூர்திப் பாதையில்(இரயில்வே லயனில்) தூத்துக்குடி விரைவி(எக்ஸ்பிரசு) ஓடிச்சென்று நின்றது. அந்த வழியாகச் செல்லுகிற மூன்று விரைவிகளில்(எக்சுபிரசுகளில்) அதற்கு மட்டும் தான் முருகன் மேல் பற்று. மூன்று விநாடிகள் நின்று கரும்புகையை மலை நோக்கி அள்ளி வீசிவிட்டுப் பின் போய்விடும். வேறு விரைவிகளுக்கு(எக்சுபிரசுகளுக்கு) அந்தப் பற்றும் இல்லை.

வீட்டில் காலையில் குடித்த ஒரு வாய் காப்பியோடு தம்பி, தங்கைகள் பட்டினிக் கிடப்பார்களென்ற நினைவு பூரணிக்கு வந்தது. உணவகத்தில் நுழைந்து எட்டணாவிற்குச் சிற்றுண்டி வாங்கிக் கொண்டு சென்றாள். குழந்தை மங்கையர்க்கரசி, “அக்கா ரொம்பப் பசிக்கிறது” என்று ஓடிவந்து வாயிற்படியிலேயே பூரணியின் காலைக் கட்டிக் கொண்டாள். வாடிப்போன சூரியகாந்திப் பூ மாதிரி குழந்தையின் முகத்தில் பசிச் சோர்வு தென்பட்டது. நாவுக்கரசும் சிறிய தம்பி சம்பந்தனின் படுக்கையருகே துவண்டு களைத்துப் போய் உட்கார்ந்திருந்தான். நன்றாக இரசம் பூசிய கண்ணாடியில் எதுவும் தெளிவாகத் தெரிகிற மாதிரி இளம் முகங்களில் பசிதான் எவ்வளவு விளக்கமாகத் தெரிகிறது. மூப்பில் அவதிகள் பயின்று பழகி மரத்துப் போவதால் உணர்வைத் தெரியாமல் மறைத்துக் கொள்ள முடிகிறது. இளமையில் அப்படி மறைக்க முடிவதில்லை.

உணவகத்தில் வாங்கி வந்த சிற்றுண்டிப் பொட்டலத்தைப் பிரித்து மூன்று பேருக்கும் தனித்தனி இலைகளில் வைத்தாள்.

“நீ சாப்பிடலையா அக்கா?” என்று நாவுக்கரசு தனக்கு முன் இலையிலிருந்ததைத் தொடாமல் பூரணியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துக் கேட்டான்.

“சாப்பிட்டாயிற்று. கமலா வீட்டுக்குப் போயிருந்தேன். விடமாட்டேன் என்று பிடிவாதமாக வற்புறுத்தினாள். அங்கே சாப்பிடும்படி நேர்ந்துவிட்டது; நீங்கள் சாப்பிடுங்கள்.”

பொய்யைப் போல சமயத்தில் உதவி செய்கிற நண்பன் உலகில் வேறு யாருமே இல்லை.

“உன் முகத்தைப் பார்த்தால் சாப்பிட்ட மாதிரி தெரியலையே அக்கா.”

“போடா அதிகப் பிரசங்கி, சாப்பிட்ட மாதிரி தெரியறதுக்கு முகத்தில் ‘சாப்பிட்டாயிற்று’ என்று எழுதி ஒட்டியிருக்க வேண்டுமோ?”

-இப்படிக் கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. அந்தச் சிரிப்பினால் அக்காவின் மேல் அவர்களுக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. இலையில் இருந்ததை சாப்பிடத் தொடங்கினார்கள். அவர்களுடைய இலையில் உணவுப் பொருள் குறையக் குறைய பூரணியின் மனத்திலும் முகத்திலும் ஏதோ நிறைந்து மலர்ந்தது.

“அக்கா! அஞ்சல்காரர் கொடுத்துவிட்டுப் போனார்” என்று சில கடிதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான் திருநாவுக்கரசு.

வழக்கம்போல் அனுதாபக் கடிதங்கள்தான். அந்த மாபெரும் தமிழறிஞருக்கு திருப்பரங்குன்றத்திலேயே ஒரு நினைவு மண்டபம் எழுப்பியாக வேண்டும் என்று ஆவேசத்தோடு வரிந்து எழுதியிருந்தார் உணர்ச்சிமிக்க இளைஞர் ஒருவர். பூரணி தனக்குள் நகைத்துக் கொண்டாள்.

“நினைவு மண்டபமாம்; நினைவு மண்டபம்! மனிதனை மறந்துவிட்டு மண்டபத்தைக் கட்டி நினைவு வைத்துக் கொள்ளப் பார்க்கிறார்களே! அந்த மண்டபத்துக்குத் தோண்டுகிற அடித்தளத்தில் எங்களையும் தள்ளிவிட்டால் கவலை தீர்ந்தது. இன்னும் நெடுங்காலம் வாழ்ந்து பசியோடும் பண்புகளோடும் போராட வேண்டியிராது” என்று வெறுப்போடு வாய்க்குள் மெல்ல இப்படிச் சொல்லிக் கொண்டாள்.

சிறுகுடலைப் பெருங்குடல் விழுங்குவது போல் பசி வயிற்றைக் கிள்ளியது. குளித்துவிட்டால் சோர்வு குறையுமென்று குளிக்கப் போனாள்.

கிணற்றில் நீர் இறைக்கும் கயிறு பாதியில் நைந்திருந்தது. எப்போது அறுந்து விழுமோ? எதற்கென்று தனியாகக் கவலைப் படுவது? வாழ்க்கையே அப்படிப் பாதியில் நைந்த கயிறு போல்தான் இருக்கிறது.

பானையில் அரிசி இல்லை; பரணில் விறகு இல்லை. கையில் இரண்டரை அணாவுக்கு மேல் காசு இல்லை. அவற்றைப் பிறரிடம் சொல்லிக் கடன் கேட்க விருப்பமும் இல்லை. பூரணி அழுதுகொண்டே குளித்தாள். குளிக்கும் போது அழுதால் யாரும் கண்டுகொள்ள முடியாதல்லவா? அழுகையும் குளிப்பு தானே? துக்கத்தில் குளிப்பதுதானே அழுகை! நீரில் குளித்துக் கொண்டே துக்கத்திலும் குளித்தாள் அவள். அநாதையாக விட்டுப்போன அம்மாவின் இலட்சுமிகரமான முகத்தை மனக்கண்களுக்கு முன் நினைவுக்கு கொணர முயன்றாள். அப்பாவின் முகமோ முயற்சியில்லாமல் நினைவில் வந்தது. குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றியும் உடம்பு குளிர்ந்ததே யொழிய நெஞ்சின் சூடு தணியவில்லை.

அம்மாவின் முகம் நினைவில் சிக்கிய போது நெஞ்சில் கனல் பிழம்பு போல் ஒரு சுடர் எழுந்தது. மீனாட்சியம்மனின் முகம் போல் தமிழ்ப் பண்பில் வந்த தாய்மை கனியும் அந்த முகம். ‘பெண்ணே! நீ வாழு! வாழச்செய்!’ என்று சொல்வதுபோல் உறுதியை உமிழ்ந்தது.

குளித்து முடித்ததும் பூரணி வெளியே புறப்படுவதற்குத் தயாரானாள். அழுகையின் காரணமாகக் கெண்டை மீனுக்குச் செந்நிறம் தீட்டினாற்போல் அவள் எழில் நயனங்கள் சிவந்திருந்தன. விரிந்து மலரும் செவியைத் தொடுவதுபோல் அகலும் அழகு அந்தக் கண்களுக்கு உண்டு.

“சாயங்காலம் வைத்தியர் வந்தால் தம்பியைப் பார்க்கச் சொல்லு. குழந்தை வெய்யிலில் தெருவில் அலையாமல் பார்த்துக் கொள். நான் வருவதற்கு அதிக நேரமாகும்” என்று திருநாவுக்கரசிடம் சொல்லிக் கொண்டு குடையை எடுத்துக் கொண்டுப் புறப்பட்டாள் பூரணி. நகரத்தில் எங்காவது ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டுதான் வீடு திரும்புவது என்று அப்போது அவள் உள்ளத்தில் ஒரு வைராக்கியம் பற்றியிருந்தது. வயிற்றில் பசி, மனத்தில் வைராக்கியம், கண்களில் ஒளி, கையில் சிறியதாய் நளினமாய்ப் பெண்கள் பிடித்துக் கொள்கிற மாதிரிக் குடை. மண்ணையும் வெப்பத்தையும் அதிகமாக உணர்ந்தறியா அந்த அனிச்சப்பூ கால்கள் நொந்தன. நோவை அவள் பொருட்படுத்தவில்லை.

கையிலிருந்த காசுக்கு எவ்வளவு தூரம் பேருந்தில் போக முடியுமோ, அவ்வளவு தூரம் போய் இறங்கிக் கொண்டு நடந்தாள். மனத்தில் தெம்பும், நடையில் வேகமும் கொண்டிருந்தாள் பூரணி. அவளுக்கு இப்போது வாழும் வெறி வந்திருந்தது.

நியாயமான வாழ்வைத்தேடி ஓர் இளம்பெண் இந்தப் பெரிய நகரத்தின் தெருக்களில் இப்படி அலைவதில் வெட்கமும் வேதனையும் படவேண்டியதில்லை. இதே மதுரையின் தெருக்களில்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஒற்றைச் சிலம்பும் கையுமாக ஒரு சோழ நாட்டுப் பெண் நியாயம் தேடினாள். பூரணி நியாயமான வாழ்வைத் தேடுகிறாள்.

அவளுடைய கண்கள் அந்த நான்கு கோபுரங்களையும் சுற்றி வாழ்வைத் தேடின. உதவி செய்து உழைப்பை வாங்கிக் கொள்ளும் கண்ணியமான மனிதர்களைத் தேடின. கண்ணோட்டமுள்ள (தாட்சண்யம்) நல்ல மனிதர்களைத் தேடின. வயிற்றுப் பசிக்கு வழி தேடின.

ஆனால் அங்கே கோபுரங்கள் தான் பெரிதாகத் தெரிந்தன. அதைச் சுற்றி மனிதர்கள் எல்லாம் மனங்கள் உட்படச் சிறியவர்களாகத்தான் இருந்தார்கள். எங்கும் வேலை காலியில்லை. வேலை காலியிருந்தாலும் அதைக் கொடுக்க மனமில்லை. அப்படியே கொடுத்தாலும் அதை ஒரு பெண்ணுக்கு கொடுக்க மனம் இல்லை. “நீ கோபித்துக் கொள்ளாதே அம்மா! நீ என் பெண் மாதிரி நினைத்துக் கொண்டு சொல்கிறேன். உன்னைப் போல் இலட்சணமாக இருக்கிறவர்கள் இந்த மாதிரி நாலு பேர் நாலுவிதமா இருக்கிற இடத்தில் வேலை பார்க்க வரக்கூடாது. அதனால் வரும் உபத்திரவங்களை என்னால் தாங்க முடியாது” என்று உபதேசம் செய்து அனுப்பினார் ஒரு வயதான மேலாளர். இலட்சணமாயில்லா விட்டால் அதுவும் குறை; இலட்சணமாக இருப்பதும் குறை. அதிகத் திறமையும் குறை; அதிகச் சோம்பலும் குறை. நாக்கும் அதில் நரம்பும் இல்லாத இங்கிதம் கெட்ட உலகம் இது. நியாயத்தை யார் யாரிடம் இங்கே விசாரிப்பது? நியாயம் என்று ஒன்று இருந்தால்தானே விசாரிப்பதற்கு?

ஏமாற்றமும் பசியும் சோர்வுமாக மேலக்கோபுர வாசலும் நகரவைச்சாலையும்  சந்திக்கிற இடத்தில் வீதியைக் கடந்து கோபுர வாசலுக்காக நடந்து கொண்டிருந்தாள் பூரணி.

அந்த இடத்தில் – அது ஒரு நாற்சந்தி. தெற்கேயிருந்து ஒரு சுமையூர்தியும்(லாரியும்) வடக்கேயிருந்து இன்னொரு சுமையூர்தியும்(லாரியும்) மற்ற இரு புறமும் மகிழுந்து(கார்)களுமாகத் திடீரென்று பாய்ந்தன. மின்வெட்டும் நேரத்தில் அப்படி ஒரு நெருக்கடி அங்கே நேர்ந்தது. பூரணிக்கு எங்கே விலகுவது என்றே தெரியவில்லை. கண்கள் இருண்டன. தலை சுற்றியது. அப்படியே கையில் குடையோடு நடுவீதியில் அறுந்து விழும் முல்லைக்கொடி போல் சாய்ந்துவிட்டாள்.

இதே நகரத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன் இப்படி ஓர் இளம்பெண் நடு வீதியில் தடுமாறி விழுந்திருந்தால் எத்தனை மகாகவிகளின் உள்ளங்கள் துடித்துக் கொதித்துப் பாட முனைந்திருக்கும்? ஒரு பெண்ணுக்குத் துன்பம் வந்தால் ஓராயிரம் கவிகளுக்கு உள்ளம் துடிக்குமே? கண்ணகிக்கும் சகுந்தலைக்கும் துன்பம் வந்ததை இளங்கோவும், காளிதாசனும் காவியமாக்கினார்களே! அதற்கென்ன செய்யலாம்? பூரணி கவிகள் வாழும் தலை முறையில் பிறக்கவில்லையே? வெறும் மனிதர்கள் வாழ்கின்ற தலைமுறையில் அல்லவா அந்தப் பேதைப்பெண் வந்துவிட்டாள்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி