(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 17. தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்
அத்தியாயம்  7

பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
என் வழி உணர்வு தான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்தடி வருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்தனே கொலாம்
      —
கம்பன்

பூட்டியிருந்த வீட்டின் முன்பு கையில் அரவிந்தன் வைத்துச் சென்றுவிட்ட ஏட்டுப் புத்தகத்தோடு தெரு வாசலில் நின்றாள் பூரணி. அவள் நிற்பதைத் தன் வீட்டு வாசற்படியிலிருந்து பார்த்து விட்டாள் ஓதுவார்க் கிழவரின் பேத்தி காமு. அவள் வந்து கூறினாள்: “பூரணி! சாயங்காலம் கமலா வந்திருந்தாள். நீ வருவாய் என்று காத்திருந்து பார்த்தாள். உன்னைக் காணவில்லை. இருட்டுகிற நேரத்துக்குச் சிறிது முன்னால் தான் ஒரு குதிரை வண்டி வைத்து உங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போனாள். போகும் போது ‘பூரணி வந்தால் என் வீட்டுக்கு வரச்சொல் அவளை’ என்று என்னிடம் சொன்னாள்.”

“அது சரி காமு, அவள் தான் போனாள்; எங்கள் வீட்டைப் பூட்டிக்கொண்டு தம்பிகளையும் குழந்தைகளையும் எதற்காக அழைத்துக் கொண்டுப் போகவேண்டும்?”

“அதென்னமோ எனக்குத் தெரியாதம்மா. வண்டி வைத்து அழைத்துக் கொண்டுப் போனாள். பார்த்தேன். அதுதான் எனக்குத் தெரியும்.”

“இந்தக் கமலாவே இப்படித்தான். புரியாமல் ஏதாவது செய்து வைப்பாள்” என்று கமலாவை மனத்தில் கடிந்து கொண்டே அவளுடைய வீட்டுக்கு விரைந்தாள் பூரணி. சந்நிதிக்கு முன்புறம் சில புதிய கார்கள் சிறிதும் பெரிதுமாகப் பளபளக்கும் நிறத்தோடு நின்றுகொண்டிருந்தன. புதிதாக விலைக்கு வாங்கிய வண்டிகளையும், சுமையூர்திகளையும் முருகன் சந்நிதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்திச் சந்தனமும், குங்குமமும் அப்பி மாலை போட்டு வெள்ளோட்டம் விடுவது அங்கு ஒரு வழக்கம். நான்கு டயர் சக்கரங்களுக்கும் நான்கு எலுமிச்சை பழங்களைப் பலியாக வைத்து அது நசுங்கிச் சிதறும்படி புதிய வண்டிகளை ஓட்டிக் கொண்டு போகும் அழகே அழகு.

பூரணி, கமலாவின் வீட்டுக்காகச் சந்நிதி முகப்பில் திரும்பிய போது அன்னப்பறவை சிறகசைத்துப் பறப்பது போல் ஓர் அழகிய நீண்ட புது வண்டி கீழே சக்கரங்களில் எலுமிச்சம் பழங்களை நசுக்கி மெல்ல நகர்ந்தது. புது வண்டி வாங்கிய பெருமை முகத்தில் தெரிய அதற்குள் உட்கார்ந்திருந்த ஆளைப் பார்த்த பூரணி இருளில் ஒதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு நடந்தாள். அந்த மனிதர் தன்னைக் காணும்படி நேர்வதை விரும்பவில்லை அவள். அப்படி அவளுடைய வெறுப்பைக் கொட்டிக்கொண்ட அந்த மனிதர் யார் தெரியுமா? அப்பாவின் தன்மானம் இந்தக் குடும்பத்திலிருந்து இன்னும் சாகவில்லை என்று எழுதி ‘செக்‘கைத் திருப்பி அனுப்பினாளே, அந்தப் புதுப் பணக்காரன் தான் இப்போது இந்தப் புது வண்டிக்குள் உட்கார்ந்திருந்தார்.

இவருடைய புது வண்டியின் சக்கரங்களில் இன்று எலுமிச்சம் பழங்கள் நசுங்குகின்றன. இதற்கு முன்பு எத்தனை ஏழைகளின் உள்ளங்கள் இவர் காலடியில் நசுங்கி இருக்கின்றன? உள்ளக் குமுறலோடு இவ்வாறு போகிற போக்கில் நினைத்தாள் அவள். சந்நிதி வாயிற் பிச்சைக்காரக் கும்பல் புது வண்டி ‘வள்ளலை’ மொய்ப்பதையும் அவர் முகம் கடுத்துச் சீறி அவர்களை விரட்டுவதையும் கூடப் பூரணி கண்டாள். அன்று நடுப்பகல் வரை மதுரை நகரத்துப் பெரிய கட்டடங்களிலெல்லாம் நுழைந்து தான் ஒரு வேலைக்குப் பிச்சை கேட்பது போல் மன்றாடிக் கொண்டு திரிந்தது நினைவில் உறுத்திற்று அவளுக்கு.

பூரணியைப் பார்த்ததும் கமலா மிகவும் கோபித்துக் கொண்டாள். “வரவர நீ மிகவும் பெரியவளாகிக் கொண்டு வருகிறாய். உனக்குத் தன்மானம் அதிகம். எவ்வளவு துன்பமானாலும் நெருங்கிப் பழகியவர்களிடம் கூடச் சொல்லாமல் மறைத்துக் கொள்ளத் தெரிகிறது. நிலைமையைத் தெரிந்து கொண்ட பிறகு எங்களால் அப்படி இருக்க முடிகிறதா, அம்மா? நீதான் கல்மனம் உடையவள். எதையும் சொல்லாமல் பல்லை இறுகிக் கடித்துக் கொண்டு இருந்து விட முடியும் உனக்கு. எங்களுக்குப் பூஞ்சை மனம். உதவி செய்வதும் உதவி பெறுவதும் தான் அன்புக்கு அடையாளம் என்று நாங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். காலையிலிருந்து நீ பட்டினி கிடக்கிறாய். எனக்குத் தெரியும் பூரணி எங்கள் வீட்டில் சாப்பிட்டதாக உன் தம்பியிடம் பொய் சொன்னாயாம். சாயங்காலம் அங்கே உன் வீட்டில் எல்லாம் பார்த்தேன். இப்படி மறைத்துக் கொண்டு எங்களை ஏமாற்றுவதில் உனக்கு என்ன தான் பெருமையோ?”

கமலாவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் பூரணி தலை குனிந்தாள். குழந்தை மங்கை உள்ளேயிருந்து ஓடி வந்தாள்.

“அக்கா, நீங்க பேசாம விட்டுட்டுப் போயிட்டீங்க. கமலா அக்கா சாயங்காலமா எங்களை இங்கே அழைச்சிட்டு வந்து சோறு போட்டாங்க.” மானத்தையும் வயிற்றையும் காப்பாற்றிக் கொள்வதற்காக வயதானவர்கள் சொல்லுகிற பொய்யை எல்லாம் குழந்தையும் சொல்ல முடியுமா? குழந்தையின் வாயில் உண்மை வந்தது. தன் நிலைமை தெரிந்துவிட்டதே என்ற நாணமும் கூடவே நன்றியும் ஒளிரக் கமலாவைப் பார்த்தாள் பூரணி.

“இங்கே அழைத்துக் கொண்டு வந்து சாப்பாடு போட்டதற்காக என்மேல் கோபித்துக் கொண்டு விடாதேயம்மா. உரிமை இருக்கிறதாக நினைத்துக் கொண்டுதான் செய்தேன். உன் வீட்டுக் குழந்தைகள் உனக்குக் கொஞ்சமும் இளைத்தவர்கள் இல்லை. நான் இங்கே கூப்பிட்டபோதே, ‘அக்காவைக் கேட்காமல் நாங்களாக வரமாட்டோம்’ என்று மறுத்தார்கள். அக்காவுமாயிற்று தங்கையுமாயிற்று. இப்படியா கொலைப்பட்டினி கிடப்பார்கள். எல்லாம் நான் சொல்லிக் கொள்கிறேன் உங்கள் அக்காவிடம்; பேசாமல் என்னோடு வாருங்கள் என்று உன் வீட்டுக் கதவைப் பூட்டி அழைத்து வந்தேன்.”

“உன் அம்மா, அப்பா, ஒருவரையும் காணவில்லை போலிருக்கிறதே? அவர்கள் எங்கே போயிருக்கிறார்கள் கமலா?” என்று பேச்சை வேறு வழியில் திருப்பினாள் பூரணி.

“அப்பாவும் அம்மாவும் மத்தியானம் ஊருக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார்கள். திரும்புவதற்கு இரண்டு மூன்று நாட்கள் ஆகும்.”

“ஊரில் என்ன காரியமோ?”

பூரணியின் இந்தக் கேள்விக்குக் கமலா மறுமொழி கூறவில்லை. முகம் சிவக்க மெல்லச் சிரித்தவாறே தலை குனிந்தாள். செந்தாமரைப் பாதத்தின் சிறு விரல்கள் தரையில் விளையாட்டுப் பயின்றன.

பூரணிக்குப் புரிந்துவிட்டது. கமலாவின் முகத்தில் நாணம் மலர்ந்து நளினம் பரப்புகிற அழகைப் பார்த்துக் கொண்டே சொன்னாள் பூரணி.

“ஓ! அப்படியா செய்தி? தை பிறக்கப் போகிறதல்லவா? இந்த அருமைப் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டு வரப் புறப்பட்டு விட்டார்களாக்கும்?”

மலர மலரச் சிரிப்பு அதிகமாகிக் கொண்டு வளருகிற ஒருவட்டப் பூப்போல் கமலாவின் முகம் சிவந்தது. பெண்ணின் முகத்தில் நாணம் பிறக்கும்போதே கவிகளின் மனங்களில் கவிதைகள் பிறப்பதாகச் சொல்கிறார்களே, அது உண்மைதான் என்று கமலாவின் முகத்தில் அப்போது கொஞ்சி நின்ற அழகைக் கண்டபோது பூரணிக்குத் தோன்றியது.

கமலாவின் வீட்டுக்கு வந்து சாப்பிட்டதற்காக அக்கா கோபித்துக் கொள்வாளோ என்று பயந்து போய்ச் சம்பந்தனும் திருநாவுக்கரசும் பூரணியின் முன்னால் வந்து அவள் முகத்தைப் பார்ப்பதற்கே கூசினர்.

“சரி, நான் இவர்களையெல்லாம் கூட்டிக் கொண்டு வீட்டுக்குப் புறப்படுகிறேன்” என்று பூரணி புறப்படுவதற்கு முற்பட்டபோது கமலா சண்டைக்கே வந்துவிட்டாள்.

“வீட்டுக்காவது, புறப்படுகிறதாவது? வீட்டில் என்ன வைத்திருக்கிறது? எனக்குத் தெரியும் பூரணி, அடுக்கு அடுக்காகப் புத்தகங்களைத் தவிர இப்போது உன் வீட்டில் வேறு ஒன்றும் இல்லை. ‘என்னை இன்னும் ஏமாற்றப் பார்க்காதே. புத்தகங்களைப் படித்தால் அறிவுப்பசி தீரும். வயிற்றுப்பசி தீராது. எல்லாம் பார்த்துச் சிந்தித்து தீர்மானம் பண்ணிதான் நான் இவர்களை இங்கே கூட்டிக் கொண்டு வந்தேன். இங்கே அம்மா, அப்பா கூட ஊரில் இல்லை. வருகிறவரை உன்னைத்தான் துணைக்கு வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். எனக்குத் துணையாக இருந்தாற் போலவும் ஆகும். நீயும் இவர்களும் சில நாட்களுக்கு இங்கேதான் இருக்க வேண்டும். வீட்டுக்குப் போய்விட்டால் யாருக்கும் தெரியாதபடி இவர்களையும் உன்னையும் பட்டினி போட்டுக் கொண்டு கிடக்கலாம் என்று நினைக்கிறாய் போலிருக்கிறது. நான் அதற்கு விடமாட்டேன்.”

“விடவேண்டாம் கமலா! நான் உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன். அதற்குப் பதில் சொல்வாயா நீ?”

“கேளேன், என்ன கேள்வியோ?”

“வேறொன்றுமில்லை. என்னையும் இவர்களையும் இப்படி எத்தனை நாளைக்கு உன்னால் காப்பாற்றி விட முடியுமென்று நினைக்கிறாய்?” கேட்டுவிட்டுச் சிரித்தாள் பூரணி. துன்பங்களைச் சீரணிக்கும் சிரிப்பு அது.

“அதுவா பேச்சு? ஏதோ உனக்கு வேலை கிடைக்கிறவரை இங்கே இருக்கலாம். மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமயங்களில் விட்டுக் கொடுக்காமல் உதவி செய்யத்தான் இருக்கிறோம். ஒன்றும் தலையில் கட்டிக் கொண்டு போய்விடப் போவதில்லை பூரணி.”

“என்னவோ நீ சொல்கிறாய் கமலா. எனக்கும் மறுக்கத் தோன்றவில்லை. விட்டுக்கொடுக்காமல் உதவுவதற்கும் அன்பு செலுத்துவதற்கும் இன்றைய வாழ்க்கையின் வேகத்தில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. கண்களுக்கு மூடியிட்டு ஓட்டப்படுகிற சட்கா வண்டிக் குதிரையைப் போல் வழியைத் தெரிந்து கொள்ள முடியாததொரு அசுர வேகத்தைத்தான் வாழ்க்கையில் பார்க்கிறோம்.”

தம்பிகளும், குழந்தையும் தூங்கிய பின் கமலாவும் பூரணியும் வீட்டு மொட்டை மாடியில் போய் சில நாழிகைகள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். மனம் நெகிழ்ந்து அன்பு உறவோடு பேசிக் கொண்டிருந்ததால் அன்று வேலை தேடி அலையும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை கமலாவிடம் கூறினாள் பூரணி. மங்களேசுவரி அம்மாளைச் சந்தித்துப் பேச நேர்ந்ததை எல்லாம் சொன்னாள். தெருவில் மயங்கி விழுந்ததை மட்டும் கூறாமல் வேறுவிதமாகத் திரித்துச் சொல்லிவிட்டாள்.

கமலாவின் வீட்டு மாடியிலிருந்து கோபுரம் பக்கத்தில் தெரியும். இருளில் மேலேயிருந்து கீழ்நோக்கித் தொங்கும் மின்சார மல்லிகைச் சரம்போல் தென்படும் வரிசையான கோபுர விளக்குகளையும் ஒளிப்புள்ளிகளாய்ப் பரந்து தோன்றும் ஊரின் அடங்கிய தோற்றத்தையும் பார்த்துக் கொண்டே அங்கு உட்கார்ந்து நேரம் போவது கூடத் தெரியாமல் பேசினாள் பூரணி. எதிர்கால வாழ்க்கையைப் பற்றிப் பேசினாள். இருளோடு கலந்து நிற்கும் குன்றின் உச்சியில் ‘ஓம்’ சிரித்துக் கொண்டிருந்தது. இரசம் பூசிய கண்ணாடித் துண்டுகள் பாளம் பாளமாக ஆகாயத்திலிருந்து துண்டு துண்டாகப் பூமியில் நழுவி விழுந்தாற்போல் ஊரைச்சுற்றியிருந்த ஏரிகளில் இருளிடையே நீர்ப்பரப்பு மின்னிற்று.

தன் பேச்சைக் கேட்டுக்கொண்டே உணர்வு நழுவி சுவரில் சாய்ந்து தூங்கத் தொடங்கியிருந்த கமலாவை எழுப்பிக் கொண்டு தூங்கப் போனாள் பூரணி. கமலா படுத்தவுடன் தூங்கிவிட்டாள். பலவிதமான கவலைகளால் பூரணிக்குத் தூக்கம் உடனே வரவில்லை. ‘ஒவ்வொரு நாளும் உலகத்துக்குப் பொழுது விடிகிறது. எனக்கும் என் வீட்டுக்கும் என்றைக்கும் விடியப்போகிறதோ? முருகா! நான் வாழ்வதற்கு ஒரு வழியைத் திறந்துவிடு! அப்பா, மனிதர்களை நம்பி என்னைவிட்டுப் போகவில்லை. உன்னுடைய ஊரில் உன் திருக்கோயிலுக்கு முன்னால் உன் அருளில் நம்பிக்கை வைத்துத்தான் என்னையும் இந்தச் சிறுவர்களையும் விட்டுவிட்டுப் போயிருக்கிறார். நீ காப்பாற்று; கைவிட்டுவிடாதே. வாழ ஒரு வழியைக் கொடு.’

பூரணி படுக்கையில் கண்களை மூடி அமர்ந்து மேற்கண்டவாறு நெஞ்சுக்குள் தியானித்துக் கொண்டாள். குனிந்த புருவமும், கோவைச் செவ்வாயும், அருள் குலவும் முகமுமாக வேலேந்திய தாமரைக் கையோடு இளங்கதிரவன் தோன்றினாற் போலத் தோன்றும் பால முருகனை அவள் அகக்கண்கள் உணர்ந்தன.

காரணமோ, தொடர்போ புரியாமல் அதையடுத்தாற்போல் மாலையில் தேடி வந்தானே, அந்த இளைஞனின் முகம் நினைவில் படர்ந்தது. இனிப்பு மிட்டாயை யாரும் அறியாமல் சுவைக்கும் குழந்தையைப் போல் ‘அரவிந்தன்’ என்று மெல்ல சொல்லிப் பார்த்துக் கொண்டாள் அவள். அப்படிச் சொல்லி பார்ப்பதில் ஒரு திருட்டு மகிழ்ச்சி இருந்தது. கள்ளக் களிப்பு இருந்தது. சொல்லித் தெரியாத அல்லது சொல்லுக்குள் அடங்காத சுகம் இருந்தது. அந்த இளைஞனின் அழகு முகம் அப்போது, எப்படி எதற்காக நினைப்பு வந்ததென்று காரண காரியங்களைக் கூட்டிப் பார்த்துத் தீர்மானம் செய்ய அவளாலேயே முடியவில்லை. நாதத்தை எழுப்ப வேண்டுமென்ற கருத்தே இல்லாமல், நாத லட்சணமே தெரியாமல் தற்செயலாக விரல்கள் பட்டு வருட நேர்ந்தாலும் வீணையில் நாதம் பிறப்பதில்லையா? அப்படித் தற்செயலாய்த் தவிர்க்க முடியாததால் அந்த முகம் அவளுடைய நினைவுக்குள் நழுவி வந்து விழுந்தது.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி