மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 6
(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 5. தொடர்ச்சி)
குறிஞ்சி மலர்
அத்தியாயம் 2
“தீயினுள் தென்றல்நீ பூவினுள் நாற்றம்நீ
கல்லினுள் மணிநீ சொல்லினுள் வாய்மைநீ
அறத்தினுள் அன்புநீ மறத்தினுள் மைந்துநீ
அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ”
-பரிபாடல்
குழந்தை மங்கையர்க்கரசி புத்தகம் பார்த்துக் கொண்டிருந்த இடத்திலேயே படுத்துத் தூங்கிப் போயிருந்தாள். வீட்டுச் சொந்தக்காரர் எழுதியிருந்த கடிதத்தோடு மலைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள் பூரணி. மங்கையர்க்கரசியைப் போல் நானும் குழந்தையாகவே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணிய போது மனமெல்லாம் ஏக்கம் நிறைந்து தளும்பியது அவளுக்கு. படைப்புக் கடவுளைப் போல் கஞ்சத்தனம் உள்ளவர் வேறு யாரும் இருக்க முடியாது. சுக துக்கங்களை அங்கீகரித்துக் கொள்ளாமல் நினைத்தபோது உண்டு, நினைத்தபோது உறங்கி, அந்த வினாடிகளை அந்தந்த வினாடிகளோடு மறந்துபோகும் குழந்தைப் பருவத்தை மனிதனுக்கு மிகவும் குறைவாக அல்லவா கொடுத்திருக்கிறார் அவர். அறிவு, அனுபவம், மூப்பு எல்லாம் துக்கத்தைப் புரிந்து கொள்கிற கருவிகள்தாமா!
பூரணி நெட்டுயிர்த்தாள். எதிரே தெருவாசல் வெறிச்சோடிக் கிடந்தது. பகல் ஏறிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் ஏதோ ஒரு தனி அமைதியில் மூழ்கிப் போயிருந்தது தெரு. காலம் என்ற பெரிய இயந்திரத்தை யாரோ சொல்லாமல் இரகசியமாக ஒடித்துப் போட்டுவிட்டுப் போய்விட்ட மாதிரி தெருவெங்கும், வெறுமை நிழலாடும் நேரம் அது. உச்சி வேளைக்கு மேல் கோயிலும் மூடி விடுவார்கள். எனவே தரிசனத்துக்காகப் போகிற ஆட்கள் கூட திருப்பரங்குன்றம் சந்நிதித் தெருவில் இல்லை அப்போது.
பூரணி வாயிற்புறம் வந்தாள். கம்பிக் கதவைச் சாத்தி உட்புறம் தாழிட்டுக்கொண்டு திரும்பினாள். எங்கோ கோயில் வாயிலில் பூக்கடைப் பக்கமிருந்து வெட்டிவேர் மணம் வந்து பரவியது. அந்த ஊருக்கு மட்டுமே அத்தகையதொரு மணம் சொந்தம். கோயிலுக்கு அருகில் நான்கு தெருக்கள் வரையில் வெட்டிவேர் மணம் கமகமத்துக் கொண்டே இருக்கும்.
‘முருகனுடைய அருள் மணம்போல் இது எங்க ஊருக்குத் தனிச்சிறப்பு அம்மா!’ என்று அப்பா அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். அந்த மணம் பூரணிக்கு இதை நினைவுபடுத்தியது.
வீட்டுக்காரருக்கு ஆறுமாத வாடகைக் கடனை அடைக்கப் பணம் வேண்டும். அடுத்தபடி குடியிருக்கக் குறைந்த வாடகையில் ஓர் இடமும் பார்த்தாக வேண்டும். இந்த இரண்டுக்கும் மேலாகத் தனக்கு ஒரு வேலையும் பார்த்துக் கொள்ள வேண்டும். சீரும் சிறப்புமாக வாழாவிட்டாலும் மானமாகப் பிழைக்க வேண்டுமே. அப்பா போய்விட்டாலும் அவருடைய புகழும், பெருமையும் இந்த வீட்டைச் சுற்றிலும் ஒளிபரப்பிக் கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் புகழினால் மனம்தான் நிரம்பும். வயிறு நிரம்புமா? புகழ் சோறு போடாது. புகழ் குடும்பத்தைக் காப்பாற்றிவிடாது. புகழ் தம்பிகளையும் தங்கையையும் வளர்த்து, படிக்க வைக்காது, வாயால் புகழுகிற மனிதர்களெல்லாம் கைகளால் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதும் தவறு. அப்படியே செய்கிறவர் முன்வந்தாலும் அவர் காலையில் காசோலை அனுப்பியிருந்த வணிகர் மாதிரி நேர்மையற்றவராக இருப்பார். தவறான வழியில் பிறரிடம் உதவிபெற்று நன்றாக வாழ்வதைக் காட்டிலும் முறையான வழியில் உழைத்துச் சுமாராக வாழ்ந்தாலே போதும். வறுமையாக வாழ்ந்தாலும் செம்மையாக வாழ வேண்டும். அப்பாவுக்குப் பிடித்த வாழ்வு அதுதான்.
‘பூரணி! குற்றங்களை மறைவாகச் செய்துகொண்டு வெளியார் மெச்சும்படி செல்வனாக வாழ்வதைவிடக் கேவலமான உழைப்பாலும் வெளிப்படையாக உழைத்து வெளிப்படையான ஏழையாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ சிறந்தது அம்மா!’ என்று அப்பா வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டே இருப்பார். அப்பாவுக்கு அறத்தில் நம்பிக்கை அதிகம். கடவுள் பற்றும் அதிகம். ‘அறத்தின் வெற்றிக்கு அன்பு காரணமாக இருக்கிறது. அந்த அன்பில் இறைவன் இருக்கிறான்’. அதேபோல் மறத்தின் நடுவே அது நிகழக் காரணமான வலிமையில் நின்று அதை அழிக்கவும் இறைவன் ஆணை காத்திருக்கிறது. ‘அனைத்தும் அனைத்தின் உட்பொருளும் இறைவன் மயம்’ என்ற பரிபாடல் தத்துவத்தைத் தம்முடைய மேடை சொற்பொழிவுகளில் எல்லாம் தவறாமல் சொல்வார் அப்பா. அவருடைய வாழ்க்கை அறிவுத் துறையில் வெற்றி பெற்றதற்கு இந்த நம்பிக்கையும் ஒரு காரணம். ‘தீயில் சூடும், பூவில் மணமும், கல்லில் வைரமும், சொல்லில் வாய்மையும், அறத்தில் அன்பும், கொடுமையில் வலிமையும் நீயே’ என வரும் பொருளுள்ள பரிபாடலின் நான்கு வரிகளைத் தம்முடைய படிப்பறையில் புத்தக அலமாரிக்கு மேலே பெரிதாக எழுதித் தொங்கவிட்டிருந்தார் அவர்.
இதை நினைத்ததும் அப்போதே அப்பாவின் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் போய் நிற்க வேண்டும் போல் இருந்தது பூரணிக்கு. அவருடைய படிப்பறைக்குச் சென்றாள். அறையின் நான்கு புறமும் அடுக்கடுக்காகப் புத்தகங்கள் தெரியும். கண்ணாடிப் பேழைகளும்(பீரோக்களும்) அவை காணாததற்குச் சுவரில் அமைந்திருந்த அடுக்குகளும் இருந்தன. வாயிற்கதவுக்கு நேர் எதிரேயிருந்த அடுக்குக்கு மேல், உள்ளே நுழைகிறவர் கண்களில் உடனே படுகிறாற் போல் அவருக்குப் பிடித்த அந்தப் பாடல் வரிகள் எழுதப்பட்டிருந்தன. அதை ஒருமுறை கண்ணால் பார்த்ததும் தூய்மையில் மூழ்கி எழுந்தது போல் புத்துணர்வு பெற்றாள் அவள்.
அப்பாவின் வருவாயில் பெரும் பகுதி புத்தகங்கள் வாங்குவதிலேயே செலவழித்துக் கழிந்தது. அவர் ஆயிரக்கணக்கில் பணம் சேர்த்து வைத்துவிட்டுப் போகாவிட்டாலும் புத்தகங்கள் சேர்த்து வைத்துவிட்டுப் போயிருந்தார். பதினைந்து நாட்களாக ஆள் நடமாடாது தூசி படிந்திருந்தது அந்தப் படிப்பறை. அதோ அந்த நாற்காலியில் உட்கார்ந்துதான் அவர் தமிழ் ஆட்சி புரிந்தார். மேசை மேல் கிடக்கிறதே கறுப்புப் பேனா, அதுதான் அவர் எழுதியது. அதோ மேசைக்கு அடியில் ஊதுவத்திக் கிண்ணம், கடைசி நாளன்று காலையில் அவர் கொளுத்திய வத்தியின் சாம்பற்கரி இழைகள் கூட இன்னும் அழியவில்லை. மணத்தைப் பரப்பிக் கொண்டே தான் கரைந்து வருகிற ஊதுவத்தி போல்தான் அவரும் வாழ்ந்து போய்விட்டார்.
அந்த அறையில் ஒவ்வொரு பொருளாகப் பார்க்கப் பார்க்க பூரணிக்கு துக்கம் மேலெழுந்தது. இன்னும் சிறிது நேரம் அங்கு இருந்தால் இதயமே வெடித்துக் கொண்டு அழுகை பீறிட்டு வரும்போல் தோன்றியது. அவள் துக்கத்தை மறைக்க முயல்கிறாள். துக்கம் அவளைத் தன்னுள் மறைக்க முயல்கிறது. மரணத்தை எண்ணிக் கலங்கும் துக்கத்துக்கு முன் துணிவும் நம்பிக்கையும் எம்மாத்திரம்?
குறைந்த வாடகையில் குடியிருக்க இடம் மாறினால் அவ்வளவு புத்தகங்களையும் எங்கே கொண்டு போய் வைத்துக் கொள்வது? என்ற கேள்வி அவள் மனதில் எழுந்தது. மாதம் ஐம்பது ரூபாய் வீதம் ஆறுமாத வாடகைப் பணம் முந்நூறு ரூபாயைக் கொடுத்து முடித்துவிட்டால் அல்லவா வேறு இடம் பற்றிச் சிந்திக்க வேண்டும். கல்லூரியிலிருந்து அப்பாவின் ‘சேமநிதி’ (பிராவிடண்ட் பண்டு) கொஞ்சம் வரும். அது அவ்வளவு விரைவில் கிடைக்காது. புதிதாகப் பார்க்கிற வீட்டையும் இவ்வளவு பெரிதாக இவ்வளவு வாடகையில் பார்க்க முடியாது. கையில் எட்டணாக் காசையும் மனத்தில் வேலை தேடும் நோக்கத்தையும் வைத்துக் கொண்டுதான் தன் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறாள் அவள்.
மூத்த தம்பி ஐந்தாம் பாரமும், அடுத்தவன் மூன்றாம் பாரமும் படிக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களுடைய உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிகிற வரையாவது அவள்தான் வளர்த்துக் காப்பாற்றியாக வேண்டும். மங்கையர்க்கரசியையும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட வேண்டும். வருகிற தையோடு அவளுக்கு ஆறு வயது நிறைகிறது. ஆரம்பப் பள்ளிக்கூடம் வீட்டுக்கு அருகிலேயே இருக்கிறது.
அப்பாவின் மறைவுக்குப் பின் தன்னை நம்பியிருக்கும் பொறுப்புகளை மனத்தில் ஒழுங்குபடுத்தி வரிசையாக நினைத்துப் பார்த்துக் கொண்டாள் பூரணி. இவற்றுக்கெல்லாம் உடனே ஏதாவதொரு வழி செய்தாக வேண்டும். சிக்கல்கள் வாயிற்படியில் வந்து நின்றும் கதவை அடைத்துக் கொண்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து இருக்க முடியாது. தைரியத்தோடும், நம்பிக்கையோடும் அவள் தெருவில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் கால்களில் அழுக்குப்படுமே என்று பார்த்துக் கொண்டிருக்க முடியாது! மனத்தில் மட்டும் அழுக்குப் படாமல் பார்த்துக் கொண்டால் போதும்.
நாவுக்கரசனுக்கும் சம்பந்தனுக்கும் பசுமலையில் பள்ளிக்கூடம். இரண்டுபேரும் நடந்து போய்விட்டு நடந்தே திரும்பி வருவார்கள். அதனால் இடைவேளைக்கு வீட்டுக்குச் சாப்பிட வருவதில்லை. காலையில் போகும்போதே ஏதாவது கையோடு கட்டிக் கொடுத்து அனுப்பிவிடுவாள் பூரணி. மாலையில் அவர்கள் வீடு திரும்ப நாலரை மணிக்கு மேலாவது ஆகும்.
Leave a Reply