(பேரறிஞர் அண்ணாவின் குமரிக் கோட்டம் 5 இன் தொடர்ச்சி)

குமரிக் கோட்டம்

அத்தியாயம் 2 தொடர்ச்சி


“ஏண்டி ! என்னமோ காணாததைக் கண்டவங்க மாதிரி முழிச்சிட்டு இருக்கறிங்க.”

“ஒண்ணுமில்லையே, அக்கா.”

” அக்காவா நானு? இவ கொழந்தை ! வயசு பதினாறு.”

இவ்விதம் வேடிக்கையாகப் பேசுவாள் மற்றப் பெண்களிடம், சிறுகல், தலையில் கட்டிய பாகை, வெத்திலைப்பை, இவை அடிக்கடி மீனா மீது தான் விழும். மேசுதிரி இவற்றை அடிக்கடி வீசுவார், அவள் ஏச மாட்டாள். அவளுக்கு அவன் கொடுத்து வந்த எட்டணா கூலி, இந்த விளையாட்டுக்கும் (விபரீதமற்ற) சேர்த்துத் தான்.


ஒரு கெட்ட வழக்கம் மீனாவுக்கு ; முடி போட்டு விடுவாள். திடீர் திடீரென்று தன் மனம் போன போக்கிலே ஜோடி சேர்த்து விடுவாள், – கற்பனை யாகவே ! அவளுடைய ‘ ஆரூடம்’ பல சமயங்களிலே பலித்ததுண்டு. “உன் பல் ரொம்பப் பொல்லாதது. ஒன்றும் சொல்லி விடாதேயடியம்மா” என்று கெஞ்சுவார்கள் மற்றவர்கள். “இல்லாததை நான் சொல்ல மாட்டேன் ” என்று கூறுவாள் மீனா.

மீனாவின் கண்களுக்குத்தான் முதலில் தெரிந்தது. குமாியின் மீது செட்டியாரின் நோக்கம் செல்வது! குமரிக்குத் தெரிவதற்கு முன்பே, மீனாவுக்குத் தெரிந்து விட்டது ! குமரி, எந்தப் பக்கத்திலே வேலை செய்து கொண்டிருந்தாலும் அந்தப் பக்கம்தான் செட்டியார் அடிக்கொரு தடவை வருவார். மற்றவர்களை, இதைச் செய் அதைச் செய் என்று நேரிலே கூப்பிட்டுச் சொல்வதற்குப் பதில், குமரியைக் கூப்பிட்டனுப்பி அவள் மூலமாகவே சொல்லி அனுப்புவார். அதாவது, குமரியை அடிக்கடித் தம் பார்வையிலே வைத்துக் கொண்டிருக்கச் செட்டியார் ஆசைப்பட்டார்.

எத்தனை நாளைக்குச் செடியிலே இருக்கும் மலரைப் பார்த்து மகிழ்வதோடு இருக்க முடியும்? ஒருநாள் பறித்தே விடுவது என்று தீர்மானமாகித்தானே விடும்! உலகமறிந்தவள் மீனா. ஆகவே உருத்திராட்சம் அணிந்தால் என்ன, விபூதி பூசினா லென்ன, நல்ல முகவெட்டுக்காரியிடம், மனம் தானாகச் சென்று தீரும். அதிலும், கள்ளங்கபடமற்ற குமரியடம் காந்தசக்தி இருக்கிறது, என்பதை அவள் அறிவாள்.


ஆகவே செட்டியார், குமரியைக் கூப்பிட்டு அனுப்புவது போதாதென்று, மீனாவே சில சமயங்களிலே, குமரியைச் செட்டியாரிடம் போய்ச், சுண்ணாம்பு அரைத்தது சரியா இருக்கா என்று கேட்டுவா, நாளைக்குப் பிள்ளையார் பூசைக்கு மகிழம்பூ வேண்டுமா என்று கேட்டு வா என்று ஏதாவது வேலைவைத்து அனுப்புவாள். பாபம், ஒவ்வொரு தடவையும் குமரி தபால் எடுத்துக் கொண்டு மட்டும் போகவில்லை, மையலையும் தந்துவிட்டு வந்தாள் அந்தப் பக்தருக்கு, தன்னையும் அறியாமல். அவள் சோதியைக் கூறுவாள், அவரோ அவளுடைய சுந்தரத்தைப் பருகுவார். எவ்வளவு இயற்கையான அழகு! கண்களிலே என்ன பிரகாசம் ! உடல் எவ்வளவு கட்டு. இவ்வளவுக்கும் ஏழை ! அன்றாடம் வேலை! அழுக்கடைந்த புடவை ! உப்பிரசாதி (ஒட்டர்)! மாளிகையிலே உலவவேண்டிய சௌந்தரியவதி, என்று எண்ணிப் பரிதாபப்படுவார்.


ஒருநாள், கையில் சுண்ணாம்புக்கறை படிந்திருந்ததைக் கழுவ எண்ணி, “குமரி ! கொஞ்சும் தண்ணீர் கொண்டு வரச்சொல்லு” என்றார் செட்டியார். வழக்கமாக, மேசுதிரிதான் தண்ணீர் கொட்டுவார். அவர் முதலியார் வகுப்பு, அன்று மேசுதிரிக்கும் மீனாவுக்கும் பலமான பேச்சு, “ஆண் உசத்தியா, பெண் உசத்தியா” என்று. ஆகவே, குமரி கூப்பிட்டும் அவர் வரவில்லை. சரேலெனத் தண்ணீர்ச் செம்பை எடுத்துக்கொண்டு குமரியே போனாள். செட்டியாரும் எங்கேயோ கவனமாக இருந்ததால், தண்ணீர் எடுத்துவந்தது யார் என்று கூடக் கவனிக்காமல் கையை நீட்டினார். குமரி தண்ணீர் ஊற்றினாள். “போதுண்ட ” என்றார் செட்டியார். அவருடைய நினைப்பு தண்ணீர் கொட்டியது மேசுதிரி தான் என்பது. குமரிகளுக்கென்று சிரித்துவிட்டாள்.


செட்டியாருக்கு அப்போதுதான் விசயம் விளங்கிற்று. அதுவரை அவர் உப்பிரசாதியாள் தொட்ட தண்ணீரைத் தொட்டதில்லை. என்ன செய்வது? அவள் அன்போடு அந்தச் சேவை செய்தாள் ; எப்படிக் கோபிப்பது? நீயா? என்று கேட்டார் ‘ஆமாங்க! மேசுதிரிக்குத்தான் வேலை சரியாக இருக்கே ! அதனாலே தான் நான் எடுத்து வந்தேன். தப்புங்களா? கையைத்தானே கமுவிக்கொண்டிங்க, உள்ளுக்குச் சாப்பிட்டாதானே, தோசம் ” என்று கேட்டாள். தொட்ட நீரைத் தொடுவது கூடத் தோசம் என்பது தான் செட்டியாரின் சித்தாந்தம். ஆனால் அந்தப் பெண், சூதுவாதறியாது சொன்னபோது என்ன செய்வார்? செட்டியார் ஒருபடி முன்னேறினார்; உள்ளுக்குச் சாப்பிட்டாத்தான் என்னாவாம்? குடலா கறுக்கும்!” என்றார். எல்லாம் மனசுதானுங்களே காரணம்!” என்று கொஞ்சுங் குரலில் கூறினாள் குமரி. “அது சரி! ஆமாம்!” என்று கூறுவிட்டு ! விரைவாக உள்ளே போய் விட்டார். அவள் விட்டாளா ! கூடவே சென்று, செட்டியாரின் நெஞ்சிலே புகுந்து கொண்டாள். எல்லாம் மனம் தானே ! சிவப்பழமாக இருந்தால் என்ன? மனந்தானே அவருக்கும்.

(தொடரும்)

கா.ந. அண்ணாதுரை

குமரிக்கோட்டம்