(அகநானூற்றில் ஊர்கள் 5/7 இன் தொடர்ச்சி)

 

 

அகநானூற்றில்  ஊர்கள்  – 6/7

   

நீடூர்

                எவ்வி என்று குறுநில மன்னனின் ஊர். குறிதப்பாத வாட்படையை உடையவன். யாழ் ஒலிக்கும் தெருக்களையுடைய நீடூரின் தலைவன் என்பதை,

                யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்

                …………..எவ்வி ஏவல் மேவார்                           (அகநானூறு 260)

                பொலம்பூண் எவ்வி நிழல் அன்ன            (அகநானூறு 366)

என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன.

பவத்திரி

                தினரயன் ஊர்களுள் ஒன்று. சோலைகள் சூழ்ந்த பவத்திரி நல்லழகு பெற்றுத் திகழ்கின்றது என்பதை,

                பல்பூங் கானற் பவத்திரி அன்ன இவள்

                நல்எழில் நல்இசை, பொலம்பூன் திரையன்    (அகநானூறு 340)

என்பதால் அறியமுடிகிறது.

பாரம்

                நிலைத்து நிற்கக் கூடிய நல்ல புகழையும், ஈகைக் குணமும், பரிசிலர்க்குக் களிறுகளை வழங்கி மகிழும் வள்ளன்மைத் தன்மை கொண்ட தலைவன் வாழும் பாரம் என்ற ஊரினை,

                இசைநல் ஈகைக் களிறுவீசு வண்மகிழ்

                பாரத்துத் தலைவன்……………….”                                  (அகநானூறு 152)

என்று குறிப்பிடுவதால் உணர முடிகிறது.

பாழி

                அறநூலும் நீதிநூலும் சொல்லும் நெறியினை வழுவாது கடைமைகளைச் செய்யும் நன்னனின் ஊர் பாழி. இதனை,

                “……………நன்னன்

                பாழி அன்ன கடியுடை வியல் நகர்ச்”                         (அகநானூறு 15)

 அகநானூற்றில் 142,208, 258,375,396 ஆகிய பாடல்களில் பாழி என்னும் ஊர் இடம்பெற்றுள்ளது.

புகாஅர் (புகார்)

                கொடுஞ் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கி (அகநானூறு 110) என்ற வரி புகாரின் தெய்வம் வருணன் என்பதைக் குறிப்பிடுகின்றது.

புறந்தை

                புறையாற்றின் மரூஉ, புறையாறு,  பொறையாறு என்று வழங்கப்படுகிறது. புன்னை மரங்கள் சூழ்ந்தது. அழகிய கடற்கரை சோலையைச் சூழ்ந்தது புறந்தையாகும்.

                “புன்னைஅம் கானல் புறந்தை முன்துறை”       (அகநானூறு 100)

என்பதால் இதன் சிறப்பு வெளிப்படுகிறது.

பொதினி

                பழமை வாய்ந்ததும் பொன் மிகுந்ததுமான பெரிய நகரமாகிய பொதினி வேளிர் குலத்தைச் சார்ந்த ஆவி என்பவரின் ஊராகும். இதனை,

“………………ஆவி

 பொன்னுடை நெடு நகர்ப் பெறின் அன்னநின்                          (அகநானூறு 61)

என்பதால் உணர முடிகிறது.

போஒர்

                பழையன் என்பவரின் ஊர். இவன் வெற்றி வேலினையும், யானைப் படையும் உடைய சோழ மன்னனின் படைத்தலைவன்.

                புனல்மலி புதவின், போஒர் கிழவோன்

                பழையன் ஒக்கியவேல்போல்”                                         (அகநானூறு 326)

என்பதால் இதன் உயர்ந்த சிறப்பு புலப்படுகிறது.

                “வெண்கோட்டு யானைப் போஓர் கிழவோன்

என்று நற்றிணைப் பாடலும் போஓர் என்ற ஊரினைக் குறிப்பிட்டுள்ளது.

மரந்தை

                சேரனின் ஊர். இது மாந்தை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அழகிய வளைந்த பிடரியினைக் கொண்ட குதிரையையுடைய குட்டுவனது நல்ல மரந்தை என்பதனை,

                “நல்நகர் மரந்தை முற்றத்து ஒன்னார்”                  (அகநானூறு 127)

                “மரந்தை அன்ன என் நலம்தந்து சென்மே        (அகநானூறு 376)

என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன.

மருங்கூர்ப் பட்டினம்

                தழும்பன் என்பாரின் மருங்கூர் என்பது அவனது காவல் பொருந்திய மதில் சூழ்ந்த ஊனுருக்கு அப்பால் உள்ள பட்டினமாகும். இதனை,

                கடிமதில் வரைப்பின் ஊணுர் உம்பர்

                 ……………………………………

                 இழிங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து               (அகநானூறு 227)

என்ற அடிகள் குறிப்பிட்டுள்ளன.

மாங்காடு

                தெய்வ மகளிர் வாழும் மாங்காடு.

                மகளிர் மாங்காட்டு அற்றே”                                                 (அகநானூறு 288)

என்று மகளிரின் சிறப்பை வெளிப்படுத்தும் ஊராக இ ஃது அமைந்துள்ளது.

முசிறி

                துறைமுகத்தை உ டைய சேரநாட்டில் ஊர், யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கரியொடு பெயரும் தன்மை கொண்ட வளங்கெழு முசிறியாகும்.

                முதுநீர் முன்துறை முசிறி முற்றி                                              (அகநானூறு 53)

                வளம்கெழு முசிறி ஆர்ப்புஎழ வளைஇ                              (அகநானூறு 149)

இதனால் முசிறியின் வளம் போற்றப்பட்டுள்ளது.

வஞ்சி

பழைமைச் சிறப்பும் பெரும்புகழும் கொண்ட ஊர் வஞ்சியாகும். பொங்கிச் சினந்தெழுந்து ஆரிய மன்னர்கள் அலறுமாறு அவர்களைத் தாக்கி இமயலையின் மீது விற்கொடியைப் பொறித்து வெஞ்சினப் பெருவேந்தரைப் பிணித்துக் கொண்டு வந்த சேரனின் வஞ்சிமாநகராகும்.

                வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்

                வஞ்சி அன்ன, என் நலம் தந்து சென்மே                              (அகநானூறு 396)

                வஞ்சி அன்னஎன் வளநகர் விளங்க                       (அகநானூறு 263)

என்பதால் சேரனின் வெற்றிச்சிறப்பும், வஞ்சியின் வளமும் வெளிப்படுகிறது.

    தி. இராதா,

முனைவர் பட்ட ஆய்வாளர்(பகுதிநேரம்),

அரசு மகளிர் கலைக்கல்லூரி, கிருட்டிணகிரி

(தொடரும்)