அதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்!

 ஒரு  செயல் சரியா அல்லது தண்டனைக்குரியதா? என்பது அச்செயலைப்பற்றி மட்டும் முடிவெடுப்பதல்ல! அதனை ஒத்த பிற  செயலைச் செய்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்தே முடிவெடுக்கப்படுகிறது. அதுபோல் நல்ல  செயலும் அதிகாரத்தினரிடம் உள்ள  செல்வாக்கின்மையால் குற்றச் செயலாக மாறுவதும் நிழ்கிறது. எனவே, எந்த ஒரு  செயலின் மதிப்பும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றது என்பதே  இன்றைய நம் நாட்டின்   இலக்கணமாக மாறிவிட்டது.

 சசிகலா குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள், பணியாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடந்த, நடக்கின்ற வருமானவரித்துறையின் அதிரடி ஆய்வுகள் ஊழலை ஒழிக்க  வேண்டும் என்போர்களிடமும் எதிரான பல வினாக்களை எழுப்பியுள்ளது.

 முறையற்ற வழிகளில் செல்வத்தைப் பெருக்கியது ஓரிரு நாளில் நடந்திருக்காது. அப்படி யென்றால்  இதுவரை  தொடர்பான துறைகள்  தூங்கிக் கொண்டிருந்தமை ஏன்?

 எந்த அரசுப்பொறுப்பிலும் இல்லாமல் தவறுகள் நடந்திருக்கின்றன என்றால் அமைச்சர்களும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தால்மட்டும்தானே நிகழ்ந்திருக்கும்அவர்களுக்கு என்ன தண்டனை?

  முன்னாள் முதல்வருக்கு  நெருக்கமாக இருந்ததால் பயன் அடைந்தனர் என்றால். ஆதாயம் அடைந்த அல்லது உடந்தையாக  இருந்த அல்லது கண்டும் காணாமல் இருந்த அவரும் தண்டனைக்குரியவர் என்று சொல்வதில் என்ன தவறு?

 கோயிலில் குற்றச்செயல் நடந்திருந்தால் அல்லது குற்றச் செயல் நடந்திருக்கும் என ஐயம் வந்தால்,  கோவிலில் உசாவல்-விசாரணை-மேற்கொள்வதில் என்ன தவறு? கோவிலே உசாவல் வரம்பிற்குத் தப்பாது என்னும்  பொழுது ஒருவரின் வாழ்விடத்தில்அவர் என்னதான் உயர்ந்த  பொறுப்பில் இருந்தாலும் அல்லது இருந்திருந்தாலும்குற்ற உசாவல்  மேற்கொள்வதில் என்ன தவறு?

  அரைமணிநேரம் அல்லது ஒரு மணிநேரத்திற்குமேல் உசாவலை  மேற்கொள்ள இயலாமல், வெறுமனே இருந்துவிட்டு அதனைப் பின்னாள்களிலும்  தொடர்ந்ததாகக் கூறுகிறார்களே! அப்படியானால், பழிவாங்குவதற்குரிய ஆவணங்கள் கிடைக்கவில்லையா?

  தனி ஒருவரிடம் வருமானவரித்துறை  மேற்கொண்ட அதிரடி ஆய்வில் உரூ.300 கோடி, உரூ.650 கோடி, உரூ.750 கோடி, உரூ.1450 கோடி  என்றெல்லாம் பணத்தைக் கைப்பற்றியுள்ளது. ஆனால் 187 இடங்களில்  அதிரடி ஆய்வு மேற்கொண்டும் உரூ. 1430 கோடி  அளவில்தான்  கண்டறிந்துள்ளனர்.  1800 அதிகாரிகள் அதிரடியில்  இறங்கியும் சராசரியாக ஆளுக்கு ஒரு கோடிகூடக் கண்டறியவில்லை. அப்படியானால், கச்சிதமாகத்திட்டமிட்டு மேற்கொண்ட முயற்சி வீணானதா?

  இதுவரை வருமானவரித்துறை அதிரடி ஆய்வு  மேற்கொண்டதன் தொடர் நடவடிக்கை என்னவாயிற்று? அப்படியானால் இவற்றின் நோக்கம், குற்றவாளிகளைக் கண்டறிதல்  இல்லையா?

  சசிகலா குடும்பத்தினர் பாசகவின் தாள் பணிந்திருந்தால் தொடர்ந்து வழக்கமான பாதையிலேயே அவர்கள்  சென்றிருப்பார்களா?

  ஊழல் குற்றச்சாட்டிற்காக உரிய துறையினர் செல்லும்பொழுது  மூன்றாமவரை உடன் சான்றாளராக அழைத்துச் செல்ல  வேண்டும். அப்படி 187 இடங்களுக்கும் சென்ற உடனாளர்கள் யாவர்?

  அதிரடி ஆய்விற்குப்பின்னர் கைப்பற்றிய ஆவணங்கள், உடைமை விவரங்கள் ஆகியவற்றை வெளியிடாமல், மூடுமந்திரமான செய்திகளை வெளியிட்டுத் தோல்வியை மறைப்பதேன்?

 இவற்றின் காரணமாகக், கட்சி வேறுபாடின்றி, அனைத்துக் கட்சியினரும், சசிகலா, தினகரனுக்கு எதிராகக் குரல் கொடுத்தோரும் ஊடகத்தினரும் நடுநிலை அரசியலாளர்களும் பாசகவின் தகா நடவடிக்கை என்றே கூறுகின்றனர்.

 மத்திய மாநில அரசுகளே, ஆகாதவர்களை ஒடுக்குவதற்காக, எதிர்த்தரப்பினரை உங்கள் பக்கம் இழுப்பதற்காக அல்லது இல்லாது ஒழிப்பதற்காக அரசின் துறைகளைப் பயன்படுத்தாதீர்!  இவ்வாறு செய்வதும் ஊழல்தான்! நீங்கள் தூய்மையாக இருந்து நாட்டில் தூய்மையும் நேர்மையும் நிலவ உதவ வேண்டும்.

 அதிகாரத்தில் உள்ளவர்களும் அதிகாரத்தால் பயனடைவோர்களும் பிற மக்களும் நேர்மையாகச் செல்வம் திரட்ட வேண்டும் என்பதில் உண்மையிலேயே வருமானவரித்துறையினருக்கு உடன்பாடு உள்ளதா? அப்படியாயின், ஆளுங்கட்சி, ஆளுங்கட்சியினருக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடுகளைவிட்டு ஐயத்திற்குரிய அனைவர் இல்லங்கள், அலுவலகங்கள், தோட்டங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

  இதுவரை மேற்கொண்ட அதிரடி ஆய்வுகளின் தொடர் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும்.

 அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் பிறரும் நேர்மையையே வாழ்க்கைப் பாதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

  குறுக்கு வழியில் பணம் சேர்க்க எண்ணுவது பச்சை மண் பானையில் நீரைச்  சேமித்து வைக்க எண்ணுவது  போன்றதாகும்.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்

கலத்துள்நீர் பெய்திரீஇயற்று. (திருவள்ளுவர், திருக்குறள் 660)

எனவே, குறுக்கு வழியில் செல்வம் சேர்க்க எண்ணுவோரே! நல்வழியில் பணம் திரட்டுங்கள். திரட்டிய பணத்தை நல்லறவழியில்  செலவிடுங்கள்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை அகரமுதல 213, கார்த்திகை 03- கார்த்திகை 09,  2048 /  நவம்பர் 19  – நவம்பர் 25,  2017