[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28)   தொடர்ச்சி]

ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29

பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார்.

பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில்

பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர்!

கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து

ஞாலம் இன்று ஏல மிடுகிறீர்!

மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி

தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர்!

தன்னலம் இன்றி இந்நாடு உயர

என்ன செய்தீர்? எல்லாம் சுயநல

வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்!

ஆட்டுக்(கு) ஓநாய் காவலா? தீய

பேயை மணந்த பெரும்பிழை யாளரே,

நாயின் வால்நீர், நன்கு நிமிர்த்திட

யாரால் முடியும்?

என்று பாடுகிறார்.

  மக்களின் நிலைமையும் அவருக்கு மனக்கசப்பு அளிக்கிறது. விளக்கின் ஒளியை விரும்பிச் சுற்றும் விட்டில் பூச்சிகள் அவர்கள். அப்போதைக்கப்போது யார் சுவை தரினும் மயங்கிச் சுகிக்கும்  மூங்கை உயிர்கள்.

பெரும்பணி கொண்டலை பேதைகள், என்றும்

திருந்தா மல்வாழ் செயல்மறை கதவுகள்

வருந்தி உழையாதே வளங்கள் தேடிடும்

பொருந்தா வாழ்க்கைப் போலிகள் எவரும்

தடிஎடுத் திட்டால் சத்தமில் லாத

படிவாழத் தெரிந்த பதடிகள்!’ 

(தொடரும்)
வல்லிக்கண்ணன்:
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர்