தலைப்பு-பருமாவில் தமிழ், திரு ; thalaippu_burmaavil-thamizh-illaiyaam_thiru

அதிர்ச்சி அடையாதீர்கள்! – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்!

 

  நண்பர்  நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால்,  இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

  தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும்  ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும் பட்டியலிலும், ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக’ என்னும் பட்டியலிலும் பருமா/மியன்மா  அல்லது இரங்கூன்/யாங்கூன் இடம் பெறவில்லை. ‘தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் தலைப்பில் இலங்கையிலும் ஈழத்திலும் உள்ள கொழும்பு, யாழ்ப்பாணம் முதலான நகரங்களே குறிக்கப்பெறவில்லை என்னும் பொழுது மியன்மாவிலுள்ள இரங்கூன்/யாங்கூன் குறிக்கப்பெறாததில் வியப்பில்லைதான்

  “புலம்பெயர் தமிழர்” என்னும் தலைப்பிலும்கூடப் பருமா/ மியன்மா இடம் பெறவில்லை. ஆனால், இதன் ஆங்கிலச்செய்தியில் (Tamil diaspora} பருமாவிலிருந்து இந்தியாவிற்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய குறிப்புமட்டும் உள்ளது.

  ‘மியான்மர் மொழிகள்’ என்னும் தலைப்பிலும் பருமாவில் ஒரு பகுதியினர் – தமிழர்கள் – பேசும்மொழியாகத் தமிழ் உள்ளமை குறிக்கப் பெறவில்லை.  புள்ளிவரப்படி பார்த்தால் மியன்மா நாட்டில்  தமிழ்மொழி பேசுவோர் 4 ஆம் இடத்தில் உள்ளனர். ஆனால் பிற நாடுகளில், 1000 தமிழர்கள் இருப்பதைக் குறிக்கும் புள்ளிவிவரங்கள் பெருமளவு எண்ணிக்கையில் தமிழர் வாழ்வதையும் தமிழ் பேசப்படுவதையும் குறிக்கவில்லை.

  இனவியல்: மொழிகளின் உலகம்(Ethnologue: Languages of the World)  என்பது மொழிகள் விவரம் பற்றிய பதிப்பாகும்; 19 பதிப்புகள் (2016 இல் ) வந்துள்ளன என்பதன் மூலம் இதன் சிறப்பை உணரலாம். 2010 இலிருந்து இணையப் பதிப்பாக வருகிறது.  இதில் 7,457 மொழிகள் குறித்த தகவல்கள்  உள்ளன. இவற்றுள் 7,097 மொழிகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், 360 அழிந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சிறப்புமிக்க பதிப்பில் ‘மொழிகள்’ என்னும் பிரிவில் ‘தமிழ்’ என்னும் தலைப்பில் தமிழ் பேசப்படும் நாடுகளில் ஒன்றாகப் பருமா அல்லது மியன்மா குறிக்கப் பெறவில்லை.

  இதன் ‘நாடுகள்’ பிரிவில் ‘மியான்மர்’ என்னும் தலைப்பில் மியன்மாவில் உள்ளதாக 118  மொழிகளின் பட்டியலை அளித்துள்ளது;  ஆனால், தமிழ் குறிக்கப் பெறவில்லை.  பிறந்த நாட்டிலேயே மதிப்பிழந்து போகும் தமிழை வாழும் நாடுகளில் குறித்து என்ன பயன் என்ற எண்ணம் வந்துவிட்டதோ?

  தஞ்சை நலங்கிள்ளி,  பருமாத்தமிழர்களின் முதுகில் இந்திய அரசு குத்துவதைக் குறிப்பிட்டு  சூலை 2002 இல் எழுதியுள்ளார்[www.tamiltribune.com : TAMIL TRIBUNE, July 2002 (ID.2002-07-02) Thanjai Nalankilli : How the Indian Government Stabbed Myanmar (Burma, Burmese) Tamils in the Back].  பி.ஒ.நி.(பி.பி.சி.) பருமாத் தமிழர்கள் தமிழைத் துறந்துவருவதுபற்றி கடந்த ஆண்டில் குறிப்பிட்டுள்ளது. மற்றபடி யாரும் பருமாவில் உள்ள தமிழர் நிலை குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

 பருமாவில் ஏறத்தாழ 15 நூறாயிரம்(இலட்சம்) தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாகக் கூறுகின்றனர். எனினும் இந்த உண்மையை அங்குள்ள தமிழர்கள் வெளிப்படையாகக் கூறத் தயங்குகின்றனர். தங்கள் இருப்பை வெளிப்படுத்துவது தங்களை இல்லாமல் செய்துவிடுமோ என்ற அச்சம் அவர்களிடையே உள்ளது.பருமாவில் பருமிய மொழி மட்டுமே’ என்ற நிலைப்பாட்டைப் பருமியப்படையாட்சி (இராணுவஆட்சி) எடுத்தது. அதன்பின்னர், பள்ளிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன; பருமிய மொழி தவிர பிற மொழிகள் கற்றுத்தருவது நிறுத்தப்பட்டன. பயிற்றுமொழியும் பருமிய மொழியில்தான்., உயர்நிலைப்பள்ளியில் மட்டும் ஆங்கிலம் கற்பிக்கப்படுகின்றது. 93 விழுக்காடு கல்வியறிவு உள்ள பருமிய நாட்டில் உயர்நிலைப்பள்ளியின் இடையிலேயே கல்வியை நிறுத்திக்கொள்வோர் -குறிப்பாகச் சிறுமியர் – பெரும்பான்மையர் உள்ளனர். (சூக்கியி அம்மையார்,  நாட்டில் பெண் கல்வி முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முதன்மை அளிக்க வேண்டும்.) எனவே, ஆங்கிலம் பெரும்பாலோர் அறியா மொழிதான். எனினும் “பருமாவில் இருந்த100க்கும் மேற்பட்ட மொழிகளின் கல்வி நிறுத்தப்பட்டது. அவற்றில் தமிழும் ஒன்று. நாங்கள் என்ன செய்ய இயலும்” என்கின்றனர் பருமியத் தமிழர்கள்.

  குடியரசு மலர்ந்துள்ள இன்றைய சூழலில்  நீறுபூத்த நெருப்பாக இருந்த தங்கள் தமிழ்ப்பற்றை  வெளிப்படையாகக் காட்டி வருகின்றனர் பருமியத்தமிழர்கள்.

மொழியும் இனமும் நமதிரு விழியாம்!

தமிழ்நெறி ஒன்றே தமிழர்க்குத் துணையாம்!”

“தமிழால் ஒன்றிணைவோம்! தமிழராய் உணர்வோம்!”

பாட்டன் தமிழை வீட்டில் பேசுவோம்”

தமிழனாய்ப் பிறந்ததில் பெருமை கொள்வோம்!

தாய்மொழியைக் கற்பதில் கடமை உணர்வோம்!”

முதலான முழக்கங்களைத் தமிழர்களிடையே தமிழ் அமைப்பினர் பரப்பித் தமிழுணர்வை ஊட்டி வருகின்றனர். தமிழ்க்கல்விப் பள்ளிகளையும் நடத்தி வருகின்றனர். எனினும் இவ்வாறு பயில்வோர் ஆண்டிற்கு ஐயாயிரத்தைவிடக் குறைவு என்னும் பொழுது  வீட்டிலும் வெளியிலும் பருமிய மொழி பேசி அதனையே படித்துவரும் இக்காலத்தலைமுறையினர்  தமிழ்க்கல்வியில் ஈடுபாடு காட்டவில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  வெளிநாட்டு இதழ்கள் தடைசெய்யப்பட்டதால் இங்கிருந்து எந்த  தமிழிதழும் அங்கே செல்ல முடிவதில்லை. அரசின் நெறியாளரும்  அயல்துறை, கல்வித்துறைகளின் அமைச்சருமான ஆங்கு சான் சூக்கியி (Aung San Suu Kyi) வெளிநாட்டினருக்கான வாயிலைத் திறந்து வைத்துள்ளார்; உரிமைக்காற்று வீச நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே அவர் பருமிய  மொழியின் மூல மொழிகளின் தாய்மொழியான தமிழ் மொழி பருமாவில் கற்பிக்கப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  புள்ளிவிவரங்களின்படிப் பருமாவில் இல்லாதுபோன தமிழரும் தமிழும் உண்மையிலேயே இல்லாமல்போகும் நிலை வரக்கூடாது!

ஃகிந்தியாவாகத்(‘Hindi’ya) திகழும் இந்தியா(India)வை நம்பிப்பயனில்லை. சமற்கிருதத்தையும் இந்தி்யையும் திணிப்பதே இலக்கென வாழும் மத்திய அரசு தமிழ் வளரத் துணைபுரியவில்லை, துணைபுரியப்போவதுமில்லை.  மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கும் தமிழகக் கட்சிகளும், தமிழ்நலம்என்பதை வாய்ப்பேச்சாகக் கொண்டுள்ளதால் ஒரு துரும்பும் எடுத்துப் போடப் போவதில்லை. எனவே, தாயகத் தமிழர்களும் உலக நாடுகளில் வாழும் தமிழர்களும் பருமியஅரசை வலியுறுத்தித் தமிழ்  கற்பிக்கப்பட வகை  செய்ய வேண்டும்.

   ஊடகங்களில் தமிழ் வாழ்வது மக்களிடையே தமிழை வாழச் செய்யும். எனவே, பருமாவில் நாளிதழ்களும் இலக்கிய இதழ்களும் தமிழ்த்தொலைக்காட்சி நிறுவனங்களும் தொடங்கப்பெற உதவி செய்ய வேண்டும்.

   பருமாத்தமிழர்கள் மறைந்த தலைவர்களில் சுபாசு சந்திரபோசையும் வாழும் தலைவர்களில் ஆங்கு சான் சூக்கியி(Aung San Suu Kyi)யையும் பெரிதும் போற்றுகின்றனர். நாட்டிலுள்ள பிறரும்  வெளியுறவு, கல்வியமைச்சர், அரசு நெறியாளர் ஆங்கு சான் சூக்கியி மேல் பெரும்மதிப்பு வைத்துள்ளனர். பாதுகாப்பும் உள்துறையும் படைத்துறைக்கட்டுப்பாட்டில் இருந்தாலும் நாட்டில் விடுதலை காற்று வீச சூக்கியி பெரிதும் முயன்று வருகிறார்.  அவர் மேல் உள்ள நம்பிக்கையால்தான் தமிழ்ப்பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. எனவே,  மிகவும் தொன்மையான செம்மொழியாம் தமிழ், தமிழர்கள் வாழும் பகுதிகளில் இரண்டாம் மொழியாகவும் பிற பகுதிகளில் விருப்ப மொழியாகவும் கற்றுத் தரப்பட  அவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர்!

தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்!

 என்னும் பேராசிரியர் இலக்குவனாரின் பொன்மொழியை உணர்வோம்!

பருமாவில் தமிழையும் தமிழரைத் தமிழராகவும் வாழச் செய்வோம்!

 “எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம்;” (பாரதிதாசன்) ஆனால், தமிழ் உலகெங்கும் நிலைக்க யாதும் செய்யவில்லை. தாய்த்தமிழகத்திலேயே தமிழ் துரத்தப்படுவதைக் கண்டும்  அமைதி காக்கின்றோம்.

தாய்நாட்டில் தமிழைக் காப்பது முதற்பணி!

அயலகங்களில் தமிழை நிலைக்கச் செய்வது இரண்டாம் பணி!

எனக் கொண்டு நற்றமிழை நாடுதோறும் வளர்ப்போம்!

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

      மெய்வருத்தக் கூலி தரும் (திருவள்ளுவர், திருக்குறள் 619)

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

இதழுரை: அகரமுதல 158, ஐப்பசி 14 , 2047 / அட்டோபர் 30, 2016

அட்டை, மொழிகளின் உலகம் ; attai-cover_ethnologue

இதனையும் படியுங்கள் : பருமாப்பயணம் உணர்த்தும் கசப்பான உண்மைகள் – இலக்குவனார் திருவள்ளுவன்