பிற கருவூலம்

 

அனலும் புனலும் :

வழக்காடு மொழி

இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா?

 

பன்னாட்டு மன்றமான ஐ.நா. உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல உரிமைகளைத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு மன்றத்தின் பொது அவையால் பாரிசு நகரில் 1948 இல் ஏற்கப்பெற்ற இச்சாற்றுரை அடிப்படையில் உலகநாடுகள் பலவும் தம் மக்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளன.

மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிடத்தக்கன, கருத்து வெளிப்பாட்டு உரிமை, மொழி உரிமை, நேர்மையான உசாவலுக்கான உரிமை, சட்டத்தின் முன் சமநிலை உரிமை ஆகும்.

இவற்றின் அடிப்படையில் இந்திய அரசியல் யாப்பு இந்திய மக்களுக்குக் கருத்தை வெளிப்படுத்துவதற்கான பேச்சுரிமையையும் எழுத்துரிமையையும் ஏட்டளவில் வழங்கியுள்ளது. இந்தியா, அரசியல் யாப்பில் சமவுடைமை நாடாகக் குறித்துக்கொண்டுள்ளது. சமவுடைமை என்றால் நாம் பொருளாதார அடிப்படையில் மட்டும் பார்க்கிறோம். மொழிசார் சம உடைமையையும் அது குறிக்கின்றது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், இந்தி, சமற்கிருதம் தவிரப் பிற மொழிகள் உள்ளன என மத்திய அரசு எப்பொழுதும் நினைப்பதில்லை. பாதிப்பிற்குள்ளாகும் தமிழ்மொழி, தமிழர்கள் கண்ணோட்டத்தில் நாம் கூறினாலும் பிற தேசிய மொழிகளுக்கும் இது பொருந்தும்.

தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தில் – தமிழர்கள் நீதி வேண்டும் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றத்தில் – தமிழ்நாட்டு மக்களுக்காக வாதாடும் உயர்நீதிமன்றத்தில் – தமிழில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று கேட்கின்றோம்.

அரசியல் யாப்பின் பிரிவு 14 சட்டத்தின் முன் அனைவரும சமம் என்று குறிக்கிறதே, அது தமிழ்மக்களுக்கும் பொருந்தும் அல்லவா?

எந்தக் குடிமகனையும் இனம், பிறப்பிடம் முதலான எதையாவது காரணம் காட்டிப் பாகுபாட்டுடன் நடத்தக்கூடாது என்று பிரிவு 15 கூறுவது தமிழ்மக்களுக்கும் பொருந்தும் அல்லவா?

மக்களாட்சிக் குடியரசாக இந்தியஅரசமைப்பு யாப்பு அறிவிக்கிறதே, நாட்டு மக்களுக்கான அடிப்படை உரிமையான நீதி மன்றங்களில் தாய்மொழியில் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை அளிக்காத பொழுது இவர்களெல்லாம் இந்தியரல்லர் என்று எடுத்துக் கொள்வதா?

அரசியல் நீதி வழங்குவதாகக் கூறுகிறதே! அறமன்றத்தில் தமிழுக்கான அறம் மறுக்கப்படுவதுதான் அரசியல் நீதியா?

தகுநிலையிலும் வாய்ப்பிலும் சமத்துவம் கொடுப்பதாக இந்திய அரசியலமைப்பு உறுதி கூறுகிறதே! நயன்மை கூறும் வழக்குமன்றங்களில் மொழிச்சமநிலை தர மறுப்பதுதான் அந்த உரிமையை நிலைநாட்டுவதா?

அலகாபாத்து, பாட்னா, மத்தியப் பிரதேசம், இராசத்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி இருக்கும்பொழுது தமிழ்நாட்டின் உயர்நீதி மன்றத்தில் தமிழ் இருக்கத் தடை ஏன்?

பாசக அரசு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே உணவு எனத் திணிப்பதற்கு வாய்ப்பாக நாட்டின் தேசிய மொழிகள் பெற வேண்டிய உரிமையை மறுத்து வருகிறது. தமிழ் முதலான மொழிகள் மறுக்கப்படும்பொழுது இந்திய மொழி என்ற போர்வையில் இந்தியைத் திணிக்கும் பணி எளிதாகும் எனக் கருதுகிறது. எனவேதான் தமிழர்கள் தங்கள் மொழிக்கான சமவாய்ப்பைத் தொடர்ந்து வேண்டியும் மறுத்து வருகிறது.

தமிழ்நாட்டு-புதுச்சேரி உயர்நீதிமன்றமான சென்னை உயர்நீதிமன்றத்திலும் அதன் மதுரை அமர்வு நீதிமன்றத்திலும் வழக்காடுமொழியாகத் தமிழை ஏற்க 2006இல் தமிழகச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இதனை உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11.10.2012 இல் மறுத்துள்ளது. அதன் பின்னரும் இதற்கு எதிராகத் தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடுமொழியாக ஏற்குமாறு தமிழன்பர்களும் வழக்குரைஞர்களும் பொதுமக்களும் போராடி வருகின்றனர். மேலும், மதுரை வழக்கறிஞர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு ஆளுநர் உரையிலும் மத்திய அரசின் ஆட்சிமொழியாகவும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் தமிழையும் ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால், மத்திய அரசு பழையகுப்பையைக் காட்டி இதை மறுப்பதாக அறிவிக்கிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புட்பா இது குறித்து எழுப்பிய வினாவிற்கு மத்திய சட்டத்துறை இணைஅமைச்சர் பி.பி.சௌதரி(P.P.Choudhary), பழைய மறுப்புச் செய்தியைக் கூறித் தமிழை உயர்நீதி மன்ற வழக்காடு மொழியாக்க முடியாது என மறுத்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் அடிப்படை உரிமையான கொந்தளிப்பை ஏற்படுத்தும் சிக்கலுக்கு இணையமைச்சர் எளிதாக எழுத்து மூலமான மறுப்புரையைத் தெரிவித்துள்ளார். இச்செயல், அவர்களின் முகவரான ஆளுநரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களையே இழிவு படுத்துவதாகும். தமிழக அரசிற்கு உயர்நிலையில் இருந்து இந்த மறுப்பைத் தெரிவித்திருக்கலாம். தமிழக முதல்வரிடம் தெரிவித்திருக்கலாம். தமிழக நலனில் கருத்து செலுத்துவதுபோல் காட்டிக் கொள்ளுவதால், தமிழக மக்கள் நலனுக்காக அக்கருத்தை மறுத்து வழக்காடுமொழியாகத் தமிழை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கலாம்.

குடியரசுத்தலைவர், தீர்ப்புகள் தமிழில் வரவேண்டும் என்பனபோல் பேசி வருவதால் மக்கள் மொழிகளை மதிக்கும் அவரிடம் சிக்கலை எடுத்துரைத்து அவரது ஒப்புதலைப் பெற்றுத் தமிழை உயர்நீதிமன்ற வழக்காடுமொழியாக அறிவித்து இருக்கலாம்.

ஆனால், அவ்வாறு செய்யவில்லை. அடிப்படை உரிமைகளை ஒவ்வோர் இந்திய குடிமகனுக்கும் வழங்குவதாகக் கூறிக் கொண்டு தமிழர்களுக்கு அடிப்படைஉரிமைகளை வழங்க மறுக்கிறதே! அப்படியானால், இந்தியஅரசு தமிழர்களுக்கான அரசு இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

தமிழ் மக்களுக்கான மொழி உரிமையை இந்திய அரசு வழங்க மறுக்கிறதே! இந்திய அரசுக்குத் தமிழர்கள் அயலவர்கள் எனக் கருதலாமா?

தமிழர்களுக்கான மொழிச்சமநிலை வழங்கப்படாததால் அதற்கான தகுதியற்றவர்கள என இந்திய அரசு கருதுவதாக நம்பலாமா? இதன் மூலம் தமிழர்களுக்கான அரசு இந்திய அரசு அல்ல என மத்திய அரசு சொல்லாமல் சொல்வதாக அறிவிக்கலாமா?

இந்தியாவில் தமிழ்நாடு உள்ளதா? இல்லையா? என மத்திய அரசு அறிவித்தால் நாம் முடிவெடுக்க எளிதாகும்! நாம், நமக்கான மொழி உரிமையைக் காக்க சரியான வழியை தேர்வு செய்து, அதனை நோக்கிச்செல்வோம்!

குவியாடி

 இஎதமிழ்

ietamil