முடியும் என்றால் எதுவும் முடியும்!(தொடர்ச்சி)

 பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

1.6.0.0.அறம் உணர்த்தும் அகச்சான்றுகள்- 14

 

1.6.1.0.தோன்றின், புகழொடு தோன்றுக: அஃ[து]இலார்

        தோன்றலின், தோன்றாமை நன்று                [குறள்.236]

1.6.1.1.பொருள் உரை:

            எந்தவொரு துறையிலும் புகழ்வரும்படி தோன்றுக;

            அவ்வாறு தோன்ற முடியாவிட்டால்,         

           தகுதிகளை வளர்த்துக்கொண்டு தோன்றுக.

             

1.6.2.0.சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம்

        சுடச்சுடர் நோற்கிற் பவர்க்கு                      [குறள்.267]

1.6.2.1.பொருள் உரை:

            சுடச்சுடத்தான் தங்கமும் ஒளிரும்;

            துன்பம் சுடச்சுடத்தான் தவத்தர், ஞானியர். 

1.6.3.0.உள்ளிய[து] எல்லாம் உடன்எய்தும், உள்ளத்தால்

        உள்ளான் வெகுளி எனின்                  [குறள்.309]

1.6.3.1.பொருள் உரை:

            மனத்தாலும் சினத்தை நினையார்

            நினைத்தன நினைத்தபடி அடைவர்.

1.6.4.0.அரும்பொருள் யா[து]ஒன்றும் இல்       [குறள்.462]

1.6.4.1.பொருள் உரை:

               செய்ய முடியாத செயல் என்று ஒன்றும் இல்லை

1.6.5.0.அருவினை என்ப உளவோ?         [குறள்.483]

1.6.5.1.பொருள் உரை:

              செய்தற்கு அரிய செயல்கள் என்று உள்ளனவா?

1.6.6.0.அரியஎன்[று] ஆகாத இல்லை             [குறள்.537]    

1.6.6.1.பொருள் உரை:

             செயற்கு அரிய செயல்கள் என எதுவும் இல்லை. 

1.6.7.0.உள்ளிய[து] எய்தல் எளிதுமன், மற்றும்தன்

        உள்ளிய[து] உள்ளப் பெறின்                     [குறள்.540] 

1.6.7.1.பொருள் உரை:

              அடைய நினைத்தவற்றை நினைத்துக்கொண்ட              

              இருந்தால், அடைய நினைத்தவற்றை நினைத்தபடி

              அடைதல் எளிது.    

1.6.8.0.ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும், அசை[வு]இலா

        ஊக்கம் உடையான் உழை                                           [குறள்.594]

1.6.8.1.பொருள் உரை:

              வளங்களும் நலங்களும் வழிகேட்டுத்  

              தளராத ஊக்கத்தான் இடத்திற்கே செல்லும்.

1.6.9.0.உள்ளத்[து] அனைய[து] உயர்வு           [குறள்.595]                                                          

1.6.9.1.பொருள் உரை:

            உள்ளத்தில் உள்ள ஊக்கத்தின்

          அளவுதான் உயர்வும் அமையும்.

1.6.10.0.உள்ளுவ[து] எல்லாம் உயர்[வு]உள்ளல்; மற்[று]அது

         தள்ளினும் தள்ளாமை நீர்த்து                         [குறள்.596]

1.6.10.1.பொருள் உரை:

               உயர்வானவற்றையே எண்ணுங்கள்;            

               அவ்எண்ணங்கள் கைகூடாவிட்டாலும்,

                 அவை கைவிடக்கூடாத  அளவிற்குச்

                 சிறப்பும் சீர்மையும் மிக்கனவாம்.                               

1.6.11.0.முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்          [குறள்.619]

1.6.11.1.பொருள் உரை:

            ஒருவன் முயற்சி செய்யும் போது தன் உடலை

          எந்த அளவிற்கு வருத்தி முயல்கின்றானோ

            அந்த அளவிற்குப் பயனை அளிக்கும்.   

1.6.12.0.ஊழையும் உப்பக்கம் காண்பர், உலை[வு]இன்றித்

         தாழா[து] உஞற்று பவர்                           [குறள்.620]

1.6.12.1.பொருள் உரை:

               தளர்ச்சி இல்லாது மிகக் கடுமையாக உழைப்பவர்,

                 தன்முன் நிற்கும் ஊழிடமும் வெற்றியைக் காண்பர். 

1.6.13.0.வெள்ளத்[து]  அனைய இடும்பை, அறி[வு]உடையான்

          உள்ளத்தின் உள்ளக் கெடும்                          [குறள்.622]

1.6.13.1.பொருள் உரை:

               வெள்ளம் போன்ற பெருந்துன்பம் வந்தாலும்

                 அறிவாளர் உள்ளத்தால் ஆழ்ந்து சிந்தித்தால்,

                 வெள்ளம் போன்று வந்த பெருந்துன்பமும் நீங்கும்

1.6.14.0.பெருமை உடையவர் ஆற்றுவர், ஆற்றின்

         அருமை உடைய செயல்.                            [குறள்.975]

1.6.14.1.பொருள் உரை:

               பெரிய முயற்சி செய்வதில் பெருமை மிக்கவர்

               அரிய செயல்களை அறவழிகளில் செய்து முடிப்பர்.

1.7.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று –  4

           இதனைக் கவிஞர் தாராபாரதியின் வரிகளில் பின்வருமாறு கூறலாம்.

வெறுங்கை என்பது மூடத்தனம் – உன்

விரல்கள் பத்தும் மூலதனம்!

கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும்;

கைகளில் பூமி சுழன்றுவரும்.

விழிவிழி உன்விழி நெருப்பு — உன்

விழிமுன் சூரியன் சின்னப் பொறி;

எழுஎழு தோழா..! உன்எழுச்சி — இனி

இயற்கை மடியில் பெரும்புரட்சி.

கட்டை விரலை விடவும் இமயம்

குட்டை என்பதை எடுத்துச்சொல் — உன்

சுட்டு விரலின் நகமாய் வானம்

சுருங்கியது என்று முழங்கிச் சொல்.

1.8.0.0.அறம் உணர்த்தும் புறச்சான்று – 5

                            முயற்சி தரும் உயர்ச்சி

எடுக்கும் முயற்சியை முடிக்க வேண்டும்;

            எடுக்கும் முன்னே எண்ண வேண்டும்;

            தடுக்கும் தடைகளைத் தகர்க்க வேண்டும்;

            ஒடுக்கும் நிலைகளை அடக்க வேண்டும்.

            படுக்கும் நேரமும் பயன்பட வேண்டும்;

            கெடுக்கும் பகையைக் கெடுக்க வேண்டும்;

            கொடுக்கும் நட்பைச் சேர்க்க வேண்டும்;

            நடுக்க இயல்பை ஒடுக்க வேண்டும்.

            விடுக்கும் சவால்களை வீழ்த்த வேண்டும்;

            கொடுக்குத் தேள்பேச்சைத் தள்ள வேண்டும்;

            முடுக்கவரும் மனங்களை முடுக்க வேண்டும்.      

அடுக்கிவரும் துயரங்களை ஒடுக்க வேண்டும்.

            கடுக்காய் கொடுப்போரைக் கழிக்க வேண்டும்;

            துடுக்குச் சுடுசொல்லைத் துரத்த வேண்டும்;

            விடுக்கும் கணைகளை வீழ்த்த வேண்டும்;

            எடுக்கும் வினையினை முடிக்க வேண்டும்.    

                    -கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

1.9.0.0.நிறைவுரை:

    “இந்தச் செயலை என்னால் செய்ய முடியாது” என மயங்கியும் தயங்கியும் எந்தச் செயலையும் செய்யாமல் வாளா இருந்தவர்கள் பற்பலர் 

அவர்கள் எல்லோருக்கும் தன்னம்பிக்கை, நம்பிக்கை,  துணிவு, ஆற்றல், ஆர்வம் போன்ற பலவற்றை உருவாக்கும் வகையில் இந்தக் குறளைக் குறளாசான் வடிவமைத்து வழங்கியுள்ளார்.

            இந்தக் குறளை ஒருவர் மீண்டும் மீண்டும் ஓதினாலே  போதும். “இந்தச் செயலை என்னாலும் செய்ய முடியும்” தன்னம்பிக்கை தோன்றும். மேலும் நம்பிக்கை,  துணிவு, ஆற்றல், ஆர்வம் போன்ற விழுமியங்கள் மனத்தில் பழுதற மலரும்.

            ஓலைச் சுவடியில் செதுக்கப்பட்ட இந்த  ஒப்பற்ற குறள், ஞாலம் முழுவதும் பரவினால், எத்தையோ சிகரச் சாதனைச் செயல்கள் அரங்கேறும்.

      வள்ளுவ வாழ்வு; வழங்கும் உயர்வு.  

பேராசிரியர் வெ.அரங்கராசன்