அரங்கனின் குறள் ஒளி : 6 : சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை: 5/5
சீரழிவைத் தரும் சிற்றினச் சேர்க்கை 5/5
பேராசிரியர் வெ.அரங்கராசன்
புறச்சான்று – 11:
காசி மன்னனின் தேர் இமயமலையை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. வாழ்க்கைமேல் கூடாத வெறுப்புக் கொண்டிருந்தான். அவன். தற்கொலை செய்துகொள்ளச் சென்றுகொண் டிருந்தான். “எல்லாம் இருந்தும், எதுவும் இல்லை” என்னும் மனநிலையில் இருந்தான்; மனத்தில் அமைதி இல்லை.
குழப்பமான சிந்தனைகளுடன் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த ஒரு மாமனிதரைப் பார்த்தான் மன்னன். எளிமையாக இருந்தார் அவர். அவரது முகத்தில் மகிழ்வும் அமைதியும் மலர்ந்திருந்ததை வியப்புடன் நோக்கினான்.
தன் மரணத்திற்குமுன் இந்த மனிதரிடம் ஆறுதலாகப் பேசிக் கொண்டிருக்கலாம் என நினைத்தான். தேரை நிறுத்தி, இறங்கி வந்தான். தம் மூடிய விழிகளை மெல்லத் திறந்தார் அந்த மாம னிதர். தம் முன்னர் நின்ற மன்னனைப் பார்த்தார். “என்ன வேண்டும்?” என அன்பாகக் கேட்டார்.
“நான் ஒரு மன்னன். எல்லாம் இருந்தும்; ஏதும் இல்லாத எண்ணமே என்னை வதைத்துக் கொண்டிருக்கிறது. என் சிக்கலை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. உங்களது ஒளிமிகு முகம் என்னை ஈர்த்தது. நான் சாவதற்கு முடிவெடுத்துள்ளேன். என் சிக்கலை என்ன என்று அதற்கு முன்னர்த் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.” என்றான் மன்னன்.
மன்னன் சொல்வனவற்றை எல்லாம் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், அந்த மாமனிதரின் பார்வை மன்னனது கால்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. மன்னனுக்குச் சிற்றகவை முதலே காலாட்டும் பழக்கம் உண்டு. அந்த மனிதர், தன் கால்களைப் பார்க்கிறார் என்பதை அறிந்தான் மன்னன். உடனே காலாட்டுவதை நிறுத்திவிட்டான்.
“மன்னனே! உனக்கு எவ்வளவு காலமாகக் காலாட்டுகிற பழக்கம் உள்ளது?” எனக் கேட்டார். தனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் காலாட்டுவதாக மன்னன் பதில் கூறினான்.
“இப்போது நீ ஏன் காலாட்டுவதை நிறுத்திவிட்டாய்?”
“நீங்கள் என் கால்களையே கவனித்தீர்கள். அதற்குமேல் என்னால் காலாட்ட முடியவில்லை.
“நான் உன் கால்களையே கவனித்ததால் உன் நீண்ட நாள் பழக்கத்தை நிறுத்திவிட்டேன் என்கிறாய். இனிமேல் நீயே உன்னைக் கவனி. எவற்றை எல்லாம் நிறுத்த வேண்டும் என்பதை நீயே நன்கு உணர்வாய்.”
மன்னனின் இருண்ட மனத்தில் ஓர் ஒளிக்கீற்று மின்னியது. மிகுபணிவோடு, “தாங்கள் யார்..?” எனக் கேட்டான் காசி மன்னன்.
“வருத்தமானன்.” என மறுமொழி வந்தது.
மன்னன் அவரது காலில் விழுந்து வணங்கினான். தன்னைத் தானே கவனித்தலே வாழும் கலை என்பதை நன்கு உணர்ந்துகொண்டான்
அவன் மனத்தில் இருந்த இருள் அடங்கியது; மனச்சிக்கல் ஒடுங்கியது; மன்னனின் தேர் இப்போது அரண்மனை நோக்கி ஓடத் தொடங்கியது.
ஒப்பு நோக்குக:
“உன்னையே நீ அறிவாய்!”
–கிரேக்கத் தத்துவ ஞானி சாக்கிரட்டீசு
புறச்சான்று – 11: திரைப்படப் பாடல்:
உன்னை அறிந்தால். நீ உன்னை அறிந்தால்,
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்!
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான்என்று சொல்வதில்லையா?
தன்னைத் தானும் அறிந்துகொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா?
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா?
பிறர் தேவை அறிந்துகொண்டு
வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின்
பிள்ளை இல்லையா?
மாபெரும் சபையினில் நீ நடந்தால் – உனக்கு
மாலைகள் விழவேண்டும் – ஒரு
மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்!
உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்,
உலகத்தில் போராடலாம்!
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலைவணங்காமல் நீ வாழலாம்!
-வண்ணத் தமிழ்க் கவிஞன் கண்ணதாசன்
புறச்சான்று – 12:
தீயவர் தீயினும் தீமை தருவரால்,
தீயவரைக் காண்பதுவும் தீது.
-கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்
நல்லவர் தேனினும் நல்மனத்தர் ஆதலால்,
நல்லவரைக் காண்பதுவும் நன்று.
-கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்
Leave a Reply