துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 3/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

 சமுதாயம் சார்ந்தவற்றுள் மருத்துவம் சார்ந்த ஒர் உண்மை நிகழ்வு:

 தம்முயிரைப் பற்றிச் சிந்திக்காமல்,

பல்லுயிர்களைக் காத்த நல்லறத்தர்:

 குடியேற்றம் [குடியாத்தம்] மண்ணுக்குப் பெருமையைக் குடியேற்றிய நல்லறத்தர் செவிலியர் செயக்குமார்.

 பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்றிய செவிலியர் செயக் குமாரை நேரில் அழைத்து,  மாண்பமை முதல்வர் முத்து வேல் கருணாநிதி இசுதாலின் அவர்கள் பாராட்டிப் பெருமைப்படுத்தி, அகம் மகிழ்ந்த அரிய உண்மை நிகழ்வு. 

 வேலூர் மாவட்டம் குடியேற்றம் நெல்லூர்ப்பேட்டைப் பாவோடும்தோப்பு, நீலிக் கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் செயக் குமார் (36). இவர் கோசா மருத்துவ மனை என அழைக்கப் படும்  சென்னை திருவல்லிக்கேணி கத்தூரிபா காந்தி மகப் பேற்று நல அரசு மருத்துவ மனையில் ஆண் செவிலியராக அரிய பணி புரிந்துவருகிறார்.

  இந்த மருத்துவமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த 2021 ஆண்டு மேத் திங்கள்  26ஆம் நாள் மின்கசிவு காரணமாகத் திடீரெனத் தீ நேர்ச்சி(விபத்து) ஏற்பட்டது. உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத்  தகவல் தெரிவிக்கப்பட்டது.

 தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர்.  விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்தனர்.  முன்னதாகத் தீ நேர்ச்சி ஏற்பட்டபோது பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பு  அறையில் [இன்கு பேட்டர்] இருந்த,  36 பச்சிளங் குழந்தைகளையும் வேறு ஒரு பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பு  அறையில் இருந்த  11 குழந்தைகளையும்  தாய்மார்களையும் என 47 பேர்களையும் அங்குப் பணி யில் இருந்த செவிலியர்கள் உடனடியாகத் துணிவுடன்  மிக மிக விரைந்து செயல்பட்டு அப்புறப்படுத்தினர். 

 தீப் பிடித்த பச்சிளங் குழந்தைகள் பாதுகாப்பு  அறை கண்ணாடியால் மூடப்பட்டிருந்தது. எனவே, அதை அங்குப் பணியில் இருந்த செவிலியர் செயக்குமார் காலதரின் [சன்னல்] கண்ணாடிகளை உடைத்தார். தீயணைப்பான்களைக் கொண்டு தீயை அணைத்தார். தம் உயிரைப் பணயம் வைத்து உடனடியாகச் செயல் பட்டு, அனைவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டார்.

 தீயணைப்புப் படைவீரர்கள் வரும் முன்னர் மிக விரைவாகச் செயல்பட்டார். தீயை அணைத்து, அங்கு மருத்துவக் கவனிப்பில் இருந்த குழந்தைகளின், தாய்மார்களின் உயிர்களைப் பத்திரமாகக் காப்பாற்றினார். அவரது உயிர்க்காப்பு நடவடிக்கை பெரிதும் அனைவராலும் பாராட்டப்பட்டது.

 இந்த நிலையில், 36 குழந்தைகளின்,  தாய்மார்களின் உயிர்களைக் காத்த செவிலியர் செயக்குமாரை மாண்பமை முதல்வர் முத்துவேல் கருணாநிதி  இசுதாலின் அவர்கள் தமது வீட்டிற்கு அழைத்தார்; அகம் மகிழ்ந்து பாராட்டினார்; பரிசுகள் அளித்துப் பெருமைப்படுத்தினார்.

 மாண்பமை முதல்வர்  முத்துவேல் கருணாநிதி இசுதாலின் அவர்கள் சுட்டுரையில்(டிவிட்டரில்) பதிவிட்டுள்ளதாவது:

 “36 பச்சிளங் குழந்தைகள் மருத்துவம் பெற்றுவந்த சென்னை கத்தூரிபாய் மருத்துவமனைத் தீ விபத்தின் போது, தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்துக் குழந்தைகளின்.   தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் திரு. செயக்குமாரை நேரில் அழைத்துப் பாராட்டினேன். உயிர் காப்பதே அறம்.”

 இதுபற்றி வேலூர் மாவட்டச் சித்த மருத்துவப் பிரிவு ஒருங் கிணைப்பாளர் சோ. தில்லைவாணன் அவர்கள்,

“எனது பள்ளித் தோழர் செயக்குமார். அவரும் நானும் குடியாத்தம் சந்தைப்பேட்டையில் உள்ள வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். தம் உயிரையும் துச்சமென நினைத்துப் பல உயிர்களைக் மெச்சத் தகுமுறையில் காப்பாற்றிய செயக்குமாரின் துணிச்சல், மருத்துவத் துறையில் மணிமகுடம். செயக்குமார் முதல்வரிடம் விருது பெற்றது குடியாத்தம் மக்களுக்குக்‌ கிடைத்த பெருமை. எனக்கும் பெருமை அளிக்கிறது.” எனப் பெருமிதத்துடன் கூறினார்.

 வள்ளார் மேல்நிலைப் பள்ளியில் படித்ததால்தான் அருள் வள்ளல் வள்ளளாரைப்போல் செவிலியர் செயக்குமார் உள்ளத்திலும் அருள் நிறைந்திருந்ததுபோலும்!

 ஒப்பு நோக்குக:

            தன்னுயிர்க்[கு] இன்னாமை தான்வரினும்

                                                  செய்கவே

            மன்னுயிரைக் காக்கும் வினை.               

                       –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

 4.நாடு சார்ந்தது:

            தாம் அறம் சார்ந்த செயல்களை தம் நாட்டிற்காகச்  செய்யும் போது தமக்குத் துன்பம் வரினும், நாட்டிற்கு இன்பம் தரும் அச் செயல்களைத் துணிவோடும் மனஉறுதியோடும் முயன்று வெற்றியுடன் முடிக்க வேண்டும்.

 அகச் சான்று:

            புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின், சாக்காடு

            இறந்துகோள் தக்கத் உடைத்து.                                   [குறள்.780]

பொருள் உரை:

            தம்மைப் போற்றிப் பேணிக் காத்தவர்தம் கண்களில் கண்ணீர் மல்கும்படி போர்க் களத்தில் வீரச் சாவு ஒரு போர் வீரருக்கு அமையுமானால்,, அந்த வீரச் சாவு கெஞ்சிக் கேட்டுப் பெற்றுக் கொள்ளத் தக்க பெருமிதத்தை உடையதாகும். 

தீராத வீரம் உடையவர் போராளிப் பெண் குயிலி:

 குயிலி 18ஆம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராகப் படைக்கருவியை ஏந்திப் போராடிய  வீரப் பெண் போராளி. இவர் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்தவர்.

 மெய்க்காப்பாளர்

சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை ஆங்கிலேய அரசு சுட்டுக் கொன்றது. 8 ஆண்டுகள் அவரது மனைவி  வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்காக உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரைக் குயிலி என்ற பெண் குத்திக் கொன்றார். அதனால், வேலு நாச்சியார் தம் மெய்க்காப்பாளராகக் குயிலியைப் பணியமர்த்திக்கொண்டார்.

 1780இல் வேலு நாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்புவனம் போன்ற இடங்களை மீட்டார்.

மருதுபாண்டியர்,  ஐதர் அலி ஆகியோரின் உதவியுடன்  சிவகங்கையை மீட்கப் படையெடுத்தார் வேலு நாச்சியார். குயிலி வேலு நாச்சியாரின் போர்ப் படையில் பெண்கள் படைக்குத் தலைமை ஏற்றிருந்தார்.  

 ஆங்கிலேயரின் படைக்கருவிக் கிடங்கு:

 வேலு நாச்சியாரின் நம்பிக்கைக்கு உரிய பெண்ணாக இருந்தவள் குயிலி. வெள்ளையரை எதிர்த்துப் போரிடும் போது சிவ கங்கை அரண்மனையில் வெள்ளையரின் படைக்கருவிக் கிடங்கு ஒன்று இருந்தது.

 எனவே, அப்பகுதிக்குள் யாரும் செல்ல இசைவு இல்லை. சிவகங்கை அரண்மனையில் உள்ள இராசராசேசுவரி அம்மன் கோயிலுக்குள் ஒன்பான் இரவு (நவராத்திரி)  விழாவிற்காக  வெற்றிநாள்(விசயதசமி) அன்று  கொலுவைக் காணப்  பெண்களுக்குமட்டும் இசைவு இருந்தது.

 வீரம்மிகு தற்கொலைப் படையாக மாறிய குயிலி:

 இதைப் பயன்படுத்திப் பெண்கள் படையில் முதற்கட்டச் செயற்பாடாகக் குயிலியைத் தற்கொலைப் படையாக அமர்த்தி அ னுப்பினார். தன் உடலில் எண்ணெய் பூசிக்கொண்டு, வெள்ளையரின் படைக்கருவிக் கிடங்கிற்குள் புகுந்தார். அங்குத் தம்மீது தாமே தீ வைத்துக்கொண்டு, அந்தக் கிடங்கை அழித்தார்.

  குயிலியின் ஈடு இணை இல்லா உயிர் ஈகம்:

 குயிலி என்னும் போராளி தற்கொலைப் படையாக மாறி ஆங்கிலேயரின் படைக்கருவிக் கிடங்கை அழித்தது, சிவகங்கையை மீட்கும் முயற்சி, அது நாட்டு விடுதலைக்காக நடந்த போரின் ஒரு பகுதிதான் என்பதில் ஐயப்பாடு இல்லை.

 துன்பமும் இன்பமும்:

          குயிலியின் உயிர் ஈகம் துன்பம் தந்தாலும், ஆங்கிலேயரது படைக்கருவிக் கிடங்கை அவர் அழித்தது சிவகங்கைச் சீமை மக்களுக்குமட்டும் அன்று, நாட்டு விடுதலைப் போரளிகள் அனை வருக்குமே  இனபம் தரும் செய்தியாகத்தானே இருக்க முடியும். 

 ஒரு பக்கம் குயிலியின் ஈகம் கண்ணீரைப் பெருக்கினும்; மறு பக்கம் மகிழ்ச்சிக் கண்ணீரைத் துளிர்க்கச் செய்கின்றது. 

 6.உலகம் சார்ந்தது:

            தாம் அறம் சார்ந்த செயல்களை உலக உயிர்களின் நன்மைகளை உணர்ந்து  செய்யும்போது தமக்குத் துன்பம் வரினும், உலகத்திற்கு இன்பம் தரும் அச்செயல்களைத் துணிவோடும் மன உறுதியோடும் முயன்று வெற்றியுடன் முடித்தல் வேண்டும்.

 அகச்சான்று:

          சுழன்றும்ஏர்ப் பின்ன[து] உலகம்; அதனால்,

            உழந்தும் உழவே தலை                        [குறள்.1031]

 பொருள்கோள் விரிவாக்கம்:

            சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்;

            அதனால், உழந்தும் உழவே தலை.

பரிமேலழகர் உரை:

            உழுதலான் வரும் மெய்வருத்தம் நோக்கிப் பிற தொழில்களைச் செய்து திரிந்தும் முடிவில் ஏருடையார் வழியதாயிற்று உலகம்; ஆதலான், எல்லா வருத்தமுற்றும், தலையாய தொழில் உழவே. 

பரிமேலழகரது விளக்க உரை:

           ஏர் ஆகுபெயர். பிற தொழில்களான் பொருள் எய்திய வழியும் உணவின் பொருட்டு உழவர்கண் செல்ல வேண்டுதலின், ‘சுழன்றும் ஏர்ப்பின்ன துலகம்’ என்றும்  வருத்தம் இலவேனும், பிற தொழில்கள் கடை என்பது போதர ‘உழந்தும் உழவே தலை’ என்றும் கூறினார். இதனால், உழவி னது சிறப்புக் கூறப்பட்டது.       

 பொருள் உரை விரிவாக்கம்:

பேராசிரியர் வெ.அரங்கராசன்

            உலகோர் எவ்வகைத் தொழில்களைச் சுழன்று சுற்றித் திரிந்து செய்தாலும் அவ்வகைத் தொழில்கள் எல்லாம் உழவுத் தொழி லின் பின்நிற்கும் தொழில்களே. அவ்வகைத் தொழில்களைச் செய்வோர்கள் எல்லாருமே உழவுத் தொழிலாளர்களின் பின் தான் வந்து நிற்க வேண்டும்.

             அதனால், உழவுத் தொழில் செய்யும்போது எத்துணைத் துன் பம் வரினும் கலங்காமல், அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண் டு, உழவுத் தொழிலைச் செய்தே ஆக வேண்டும்.

             ஏனெனில், உலகத் தொழில்கள்  எல்லாவற்றிலும் தலை சிறந்த தொழில் இந்த உழவுத் தொழிலேயாகும்.

 (தொடரும்) 

கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்