துன்பம் துரத்தினாலும் துணிந்து நில்! 4/4:பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

விளக்க உரை:

பேராசிரியர் வெ.அரங்கராசன்

                1031ஆவது குறள் உழவின் இன்றியமையாமையை உரைக்கின்றது. இதில் உள்ள ஈற்றுச் சீர் தலை என்பதுதான் உழவின் இன்றியமையாமையை மிகத் தெளிவாக இயம்புகின்றது.

                 அஃதாவது, உடலுக்குத் தலை எத்துணை அளவு  இன்றியமையாமையாதது  என்பதைச் சொல்ல வேண்டுவதில்லை; தலை உள்ளவர்கள் அனைவரும் நன்குணர்வர்.   

   அதுபோலவே, உலகம் என்னும் உடலுக்குத் தலையாக அமைவது உயிர் கொடுக்கும்  உயர்தொழில் உழவே; உயிர்த்தொழிலாம்.

 உலகம் சார்ந்தது:

அகச்சான்று:

                சுழன்றும் ஏர்ப்பின்ன[து] உலகம்; அதனால்,

                உழந்தும் உழவே தலை                                                  [குறள்.1031]

  

புறச்சான்று – 1, மேற்கோள் உரை:

 துன்பம் உறவரினும் செய்க, துணிவாற்றி

இன்பம் பயக்கும் வினை                                                              [குறள்.669]

 

    நாம் எத்தகைய வினைகளைச் செய்ய முற்படுதல் வேண்டும்; செய்யும் வினைகளால், செய்பவருக்கும்  குடும்பத்திற்கும் சுற்றத் தார்க்கும் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் நிறைவில் உலகிற்கும் நன் மை இருக்க வேண்டும்; வளர்ச்சி இருக்க வேண்டும்; முன்னேற்றம் இருக்க வேண்டும்; புகழும் பெருமையும் கிட்ட வேண்டும்; சுருங்கச் சொன்னால், இன்பமாகிய பயன் கிடைக்கும் வினைகளையே செய்ய வேண்டும்.

 நன்றி: புலவர் மு.படிக்கராமு,

வள்ளுவ வளம், பொருட்பால், பகுதி — 2, பக்.106, 

வளவன் பதிப்பகம், 2, சிங்கார வேலர் தெரு,

தியாகராயர்நகர், சென்னை — 600017.

 

புறச்சான்று – 2, மேற்கோள் உரை:

                உலகில் இன்று நடைபெறும் தொழில்கள் வகைகள் இத்தனை என்று கணக்கிட்டுச் சொல்ல முடியாத அளவிற்குத்  தொழில்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றன.

               உலகில் வாழ்வாரும் அனைவரும் ஏதாவது ஒரு தொழில் செய்தே வாழ்ந்துவருகின்றனர். அவ்வாறு மக்கள் செய்துவரும் தொழில்களின் இயக்கத்தாலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக் கின்றது.

 தன் இயக்கியத்தில் சுழன்றுகொண்டிருக்கும் உலகம் தொழிலாலும் சுழனறுகொண்டிருக்கின்றது. அவ்வாறு உலகில் சுழன்று கொண்டிருக்கும்  அனைத்துத் தொழில்களுக்கும் அடிப்படையா னதும் முன்னணியானதும் உயர்வானதாகவும் விளங்கும் தொழில் உழவுத் தொழிலே.

 உழவுத் தொழில் எளிமையாக உடல் அலுப்பு இன்றியும் செய்யக் கூடிய தொழில் அன்று. காடு மேடு, மழை வெயில், பகல் இரவு, பனி – காற்று, ஊண் உறக்கம் என்றெல்லாம் பாராமல், உட லை வருத்திச் செய்யக் கூடிய தொழிலாக  இருந்தாலும் அதுவே தலைமையான தொழிலாகும்.

               பிற தொழில்களைச் செய்து தேடிய பின்பும் உயிர் வாழ்க்கைக்கு மிக இன்றியமையாத உணவின் பொருட்டு உழவரிடமே செல்ல வேண்டியதிருக்கின்றது. அதனால்தான், சுழன்றும்  ஏர்ப் பின்ன[து] உலகம் என்றார் செந்நாப் போதார். 

பிற தொழில்களில் பல வருத்தப்பாடு இல்லாமல் செய்ய இயலும். எனினும் அவை கடைப்பட்டவையே என்பதைப் புலப்படுத்தும் நோக்கத்துடனே உழந்தும் உழவே தலை எனவும் உ ரைத்துள்ளார். 

சீரைத் தேடின், ஏரைத் தேடு” என்னும் பழமொழியும் எண்ணிப் பார்க்கத் தக்கது. ஏர் நிலத்தை உழுது பண்படுத்தப் பயன்படுத்தப்படும். அது கலப்பை என்னும் கருவியைக் குறிக்கும். ஏர் அழகும் பெருமையும் ஆகும்..

 எல்லை இன்றி மிகுபொருளை

ஈட்டிஉயர்ந்[து] இருந்தாலும்

தொல்லை இன்றி உயிர்வாழா

நீ[டு]ஆழி உலகத்தே

 என்னும் சான்றோர் மொழியும் ஒப்பு நோக்கத் தக்கதே.

 புறச்சான்று [மேற்கோள் உரையில் உள்ளது]

                ஒரு முறை மதுர கவியார், வள்ளல் ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களைக் கண்டு, பொருள் பெற்றுவரப் புதுச்சேரி சென்றார். புலவர் சென்றபோது ஆனந்தரங்கனார் வீட்டில் இல்லை. அவர் வயலுக்குச் சென்றிருக்கின்றார் என அறிந்தார். புலவரும் வயலுக்குச் சென்றார். 

அறுவடையான வயல்களில் சிதறிக் கிடந்த நெல் மணிகளை அவர் பொறுக்கிக்கொண்டிருந்தார். மதுர கவியாரைக் காத்திருக்கும்படி சொன்னார். மீண்டும் நெல் மணிகளைப் பொறுக்கத் தொடங்கிவிட்டார்.

தாம் பசியோடு காத்திருக்க, உதிர்ந்து கிடக்கும் அற்பமான நெல்மணிகளைப் பொறுக்கிக்கொண்டிருக்கின்றாரே என மனத்துக்குள் எண்ணினார்; பொறுமையை இழந்த நிலையில் அவ ரைப் பார்த்துக்கொண்டே இருந்தார் புலவர்.     

         வேலை முடிந்தது. புலவரை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு  வந்தார் ஆனந்தரங்கனார். புலவர்முன் தலைவாழை இலை விரிக்கப்பட்டது. அதில் வெள்ளித் தட்டு நிறையத் தங்கக் காசுகளைக் கொண்டுவந்து கொட்டினார். புலவர் மதுர கவியாரை  உண்ணும்படி  வேண்டினார்.

 புலவர் தங்கக் காசுகளை எப்படி உண்பது எனத் திகைத்தார். ஆனந்தரங்கனார்,

 நான் சிதறிக் கிடந்த நெல் மணிகளைப் பொறுக்கியபோது  அற்பமாக நினைத்தீர்களே..! நான் பொறுக்கியவை நெல் மணிகள் அல்ல. பசிப் பிணிக்கு மருந்து. அவை  பசியைப் போக்குமா..? இத்தங்கக் காசுகள் பசியைப் போக்குமா? என வினவினார்.

 பிழையை உணர்ந்தார் புலவர். தம்மைப் பொறுத்தருளும்படி வேண்டினார். ஆனந்தரங்கனார் வேறு ஓர் இலையைக் கொண்டு வந்து விரித்தார். அதில் சுவையான உணவைப் படைத்தார். அன்போடு உண்ணச் செய்தார்.

 புலவர் புறப்படும்போது, தாம் முன்னர் இலையில் கொட்டிய தங்கக் காசுகளைக் கொண்டுவந்தார். அவற்றைப்  புலவர் மதுர கவிராயர் மகிழும்படி வழங்கினார், அன்புடன் வழியனுப்பிவைத்தார் என்னும் வரலாற்று நிகழ்வும் குறளுக்குச் சிறந்த ஒருவழி எடுத்துக்காட்டு ஆகும்.   

 நன்றி: புலவர் மு.படிக்கராமு,

வள்ளுவ வளம், பொருட்பால், பகுதி — 3, பக்.333-334,   

வளவன் பதிப்பகம், 2, சிங்கார வேலர் தெரு,

தியாகராயர்நகர், சென்னை — 600017.

 புறச்சான்று:

தண்ணீரை நம்பி வாழுகின்ற உழவர்தம்

கண்ணீர் வாழ்வில் இன்பம் விளையுமா..? 

 ஆஈன மழைபொழிய, இல்லம் வீழ,

                                அகத்தினளும் மெய்நோவ, அடிமை சாவ,

மாஈரம் போகு[து]என்று விதைகொண்[டு] ஓட,

வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள,

கோவேந்தன் உழு[து]உண்ட கடமை கேட்க,

குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்க,

பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் 

பாவிமகன் படுதுயரம் பார்க்கொ ணாதே..!

                      -விவேக சிந்தாமணி(பாடல் – 77)

 

பொருள் உரை விரிவாக்கம்:

ஓர் உழவர் வீட்டில் பசு மாடு ஒன்று கன்று ஈன்றுள்ளது. அதைப். பராமரிக்க முடியவில்லை. பெருமழை பெய்தது. அதனால்,  அவரது எளிய குடிசை இடிந்து வீழ்ந்துவிட்டது.

 உழவரின் அன்பு மனைவியோ மகப்பேற்று வேதனையைப் பட்டுக்கொண்டிருக்கின்றாள். அவளுக்கும் உடனிருந்து செய்ய வேண்டிய உதவிகளைச் செய்ய முடியவில்லை.

 வேலையாளும் இறந்துவிட்டதாகச் செய்தி வந்தது. அது கேட்டுக் கண்கலங்கி நிற்கிறார். இதற்கிடையில் நிலத்தில் ஈரம் போகின்றது. அதற்குள் விதைக்க வேண்டும். அதற்காக விதை நெல்லை எடுத்துக் கொண்டு வயலுக்கு விரைந்து ஓடுகிறார்.

 போகும்போது வழியில் ஏற்கெனவே உழவுப் பணிக்குக் கடன் கொடுத்தவர் தடுத்து நிறுந்துகின்றார். கடன் தொகையை வைத்து விட்டுப்போ எனக் கண்டிப்புடன் வெகுண்டு கேட்கின்றார்.

 அவரிடம் கெஞ்சிக் கூத்தாடிவிட்டுச்  செல்கின்றார். அப்போது அரசுக்குச்  செலுத்த வேண்டிய வரியைப் பெற்றுக்கொள் ளவரி திரட்டும் அரசுப் பணியாளர்கள் வந்து முன்நிற்கின்றனர்.

 அதையும் தாண்டி விரைந்து செல்கின்றார். அந்த உழவர். செல்லும் போது, திருக்கோயிலில் வழிபாடு செய்யும் குருக்கள் வந்துவிட்டார். தமக்கு உரிய தட்சணையைப் பெறுவதற்காக எதிர் நிற்கின்றார். .

 இந்தத் தாங்கொணாத் தொடர்துன்ப நிலையில் உழவர் மனம் நொந்து, வருந்தித் திகைத்துச் செய்வதறியாது   நிற்கின்றார். அப்போது, பாவாணர் ஒருவர் பைந்தமிழ்க் கவிகளைப் பாடிக் கொண்டு, அவர் முன்னர் வந்து நின்றார்.  தமக்கான பரிசுகளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

 இச்சூழ்நிலையில் அந்த உழவர் எத்துணைத் துன்பங்களை அடைந்திருப்பார்..? அந்த அப்பாவி உழவர் படுகின்ற துன்பங் களை எல்லாம் பார்க்கவே முடியவில்லை  என உழவர் படும் பெரும்பாடுகளைக் கண்டு பொறாது உள்ளம் வெந்து, நொந்து பாடுகின்றது அந்தப் பெருந்துன்பப் பாடல்.  

 புறச்சான்று:

 

உயிர் கொடுக்கும் உழவரது உயிர்.?

 

உழு[து]உழுது,  பாத்தி பலகட்டி,

                உறங்காமல், விழித்திருந்து நீர்பாய்ச்சிப்

பழு[து]இலா விதைகளைப் பார்த்துப்,

                பார்த்துத், தேர்ந்[து]எடுத்து வித்தி,மேகம்

அழுத கண்ணீர் அவ்வப் பொழுது

                மழையென விழுந்தபோது மகிழ்ந்து,

களைஎடுத்[து]  உரம்போட்டுக் காலம்தோறும்

                களிப்போடு மருந்தும் தெளித்தோம்.

 

குழந்தையைக் காக்கும் தாயைப்போலக்

                கண்ணுக்குள் வைத்துப்பயிர் வளர்த்தோம்;

விளைந்த பயிரெலாம் தலைநிமிர்ந்து,

                வாழ்வுதர நின்ற போதிலே

காற்றழுத்தத் தாழ்வு மண்டல[ம்ஒ]ன்று

                கடுகிவந்து தொலைந் தய்யா…!

மாற்றுவழி தெரியாமல், காத்தவயல்

                மூழ்கியே போன[து] அழிவானது….!

 

அழுகிப் போனபயிரைப் போலவே

                ஆனதய்யா எங்களது வாழ்க்கை;

அழு[து]அழுது புரண்டாலும் அழகுபயிர்

                வந்திடு மோ?உயிர் தந்திடுமோ?

தொழுது தொழுது நின்றாலும்

                தீர்ந்திடு மோ?துயர் மாய்ந்திடுமோ.?

எழுந்துநிற்க வழியும் இல்லையே!

                ஏன்என்று கேட்கவும் ஆளில்லையே!

 

ஊருக்[கு] எல்லாம் சோறு போடும் வீடு;

பாருங்கள் இன்று வெற்[று] எலும்புக் கூடு;

ஏங்கி நிற்குதய்யா எங்கள் வீட்டு மாடு;

ஆண்டு தோறும் எங்களுக்கேதிரு வோடு.

 

 நாட்டின் முது[கு]எலும்[பு] உழவர்கள்;

                                                என்பதால் – துயர

மூட்டைகளை முதுகிலே ஏற்றி

                                                வைத்தே – அடி

சாட்டையடி கொடுத்துச் சாய்க்குதே!

                                                இயற்கையும் – படும்

 

பாட்டைப் பாட்டினிலே பாடவும்தான்

                                                முடியலையே — ஐயா…!          

              -கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

 

 துணைநலக் குறட் பா:

இன்பம் வரின்செய்க யார்மட்டும் தள்ளாஅ[து]

                இன்பம் பயக்கும் வினை.

 மறுபக்கக் குறட் பா:

 இன்பம் வரினும் சிலர்செய்யார், எஞ்ஞான்றும்

                இன்பம் பயக்கும் வினை

                                                 குதிரை மனிதர்கள்

                      கொள்ளு என்றால் வாயைத்

                                      திறக்கும் குதிரை;

                      கடிவாளம் என்றால் மூடிக்

                                      கொள்ளும் அதுவே.          

               –கவிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசன்

000