அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 3. ஆ. செல்வம்
(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், 2. அ.4. வந்தபின் தீர்த்தல்-தொடர்ச்சி)
அறிவியல் திருவள்ளுவம்
ஆ. செல்வம்
‘பிணியின்மை’யை அடுத்துத் திருவள்ளுவரால் குறிக்கப்பட்டது “செல்வம்”.
‘செல்வம்’ என்றால் என்ன? ‘செல்வம்’ என்று எதனைச் சொல்கின்றோம்? பல பொருள்களையும் ‘செல்வம்’ என்று கொள்கின்றோம்.
நிலத்திலும் கடலிலும், மலையிலும் முறையே: இயற்கையாகக் கிடைக்கும் பொன், கரி, தனிமம் முதலியவற்றையும், முத்து, பவளம், உப்பு முதலியவற்றையும், மணி, கல், மரம் முதலியவற்றையும் செல்வமாகக் கொள்கின்றோம்.
மாந்தரால் செயற்கையில் உருவாக்கப்படும் வயல் வீடு, பொறிகள், பண்டங்கள் முதலியனவும் செல்வம். உழைப்பில் விளையும் நெல், பருப்பு, எண்ணெய் முதலியனவும் செல்வம். இவை அனைத்தும் கண்ணால் காணப்படும் பொருள்கள். எனவே, செல்வம் என்பதைப் பொருள் என்றும் சொல்லலாம்.
திருவள்ளுவர் “செல்வம் செயற்கு” (375) என்று செல்வம் என்னும் சொல்லாலும் குறித்தார். “தாளாற்றித் தந்த பொருள் எல்லாம்(212) என்று பொருள் என்னும் சொல்லாலும் குறித்தார். செல்வத்தை ஈட்டுவதைப் ‘பொருள் செயல்வகை’ என்று குறித்தார். இரண்டையும் கொண்டாலும் ‘செல்வம்’ என்பதை கொண்டு அதற்கு அடைமொழியாகப் ‘பொருள்’ என்பதை வைத்து “பொருட் செல்வம்” (241) என்றார்.
‘செல்வம்’ என்பதற்குப் ‘பொருள்’ என்பதை மட்டும் அடைமொழியாகத் திருவள்ளுவர் கொள்ளவில்லை. “கல்விச் செல்வம்” (400), “செவிச்செல்வம்” (411), “வேண்டாமைச் செல்வம்” (367), “அருட்செல்வம்” (241) என மேலும் நான்கைச் செல்வம் என்றார். இவை நான்கும் கண்ணால் காணப்படும் பொருள்கள் அல்ல; கருத்துப் பொருள்கள். காணப்படும் பருப்பொருள்கள் எல்லாம் செல்வமாகக் கணக்கிடப்படுவது அதனதன் மதிப்பால்தான். பொருளின் மதிப்புதான் ‘செல்வம்’ எனப்படும்.
ஒருவனுக்கு நெல் தேவைப்படுகிறது. முற்காலத்தில் தேவைப்படும் நெல்லின் மதிப்புடைய பருப்பை மாற்றுப் பொருளாகக் கொடுத்தான். இது ‘பண்டமாற்று’ எனப் பெற்றது. வாங்கியவன் பருப்பைப் பயன்படுத்திக் கொள்வான். கொடுத்தவன் மாற்றாகப் பெற்ற நெல்லைப் பயன் படுத்திக்கொள்வான். இந்தப் பண்டமாற்றுப் பொருள்கள் உடன் நேரடியாகப் பயன்படும் நெல்லாகவோ, பருப்பாகவோ அன்றிப் பொன்னாகவும் ஆயிற்று. பொன்னை அணிகலனாக்கிப் பயன்படுத்தலாம். அதனை அப்படியே உண்ணமுடியாது. உணவுப்பொருள் வேண்டுமானால் அதே மதிப்புடைய உணவுப் பொருளைப்பெற்று உண்ணலாம். எவ்வாறாயினும் பொருளின் பயன்பாடு அதன் மதிப்பால் தான் பெறப்படுகிறது.
இந்த மதிப்புப் பண்டமாற்று, பொன்னிலிருந்து நாணயத்திற்கும், பணத்தாளிற்கும் மாறியது. இவை இரண்டையும் அவற்றின் மதிப்பளவிற்கு வேறு பொருளாக மாற்றியே பயன்படுத்த முடியும். அவற்றையே நேரடியாகப் பயன்படுத்த முடியாது. இதுதான் செல்வப் பயன்பாட்டின் நடைமுறை.
இவ்வாறிருக்க, பொருளாக நேரடியில் பயன்கொள்ள முடியாத கல்வியும் கேள்வியும் வேண்டாமையும் அருளும் எவ்வாறு செல்வமாகும்? திருவள்ளுவர் இவற்றைச் செல்வம். என்றமை பொருந்துமா?
பொருந்தும்.
இப்பொருத்தத்தில்தான் இன்றையப் பொருள் அறிவியலின் கோட்பாடு பொதிந்துள்ளது.
இன்றைய அறிவியலில் பொருளியல் (Ecnomics) ஒன்று. அன்றாட வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று. பொருளியலின் இன்றியமையாத முதற்கூறு செல்வம்.
செல்வம் பற்றி இன்றையச் ‘செல்வ அறிவியல்’ (Wealth Economics) என்ன கூறுகிறது(?) என்பதைக் காண வேண்டும்.
‘செல்வம்’ என்பது குறிப்பிட்ட நேரத்தில் இருக்கும் பொருளியல் சரக்கின் இருப்பைக் குறிக்கும் என்று இன்றையச் ‘செல்வ அறிவியல்’ கணித்துள்ளது.
இதன்படி ஓர் இருப்புச் சரக்கைச் ‘செல்வம்’ என்று சொல்ல வேண்டுமானால் அதற்குப் பின்வரும் மூன்று இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.
ஒன்று:
மாந்தனின் தேவையை நிறைவேற்ற வேண்டும்.
இரண்டு;
அதன் அளவு முழுத்தேவைக்குக் குறைந்ததாக வேண்டும்.
மூன்று:
ஒருவனிடமிருந்து மற்றவனுக்கு மாறக்கூடியதாக இருக்கவேண்டும்.
இவை இக்காலச் செல்வ அறிவியல் கண்ட இலக்கணங்கள். இம்மூன்றும் கண்ணால் காணப்படும் பொருட் செல்வத்திற்குப் பொருந்தும். வீடு ஒரு பொருட் செல்வம் என்றால் அஃது ஒருவன் தேவைக்குப் பயன்படுகிறது (1), முழுத்தேவைக்கும் ஈடுசெய்ய இயலாததாகும் (2), மற்றவனுக்கு விற்பனையால் மாறும் (3).
இவை மூன்றும் கண்ணிற்குப்படும் உருவப் பொருளுக்கன்றி மற்ற அருவத்திற்கும் பொருந்தும். காணப்படும் உருப்பொருளும் பொருள்தான். கருதப்படும் கருத்துப் பொருளும் பொருள்தான். மேற்குறிக்கப்பட்ட மூன்று இலக்கணங்கள் இக்கருத்துப் பொருளுக்கு எவ்வாறு ஈடாகும்?
ஒருவனின் ‘தேவையை நிறைவேற்றுவது செல்வம்’ என்று கண்டோம்.
ஒரு நோயாளிக்கு மருத்துவம் தேவை. அந்தத் தேவைக்கு மாற்றாகப் பணம் கொடுப்பான். பணம் கொடுத்துப் பெறுவது நோயைத் தீர்க்கும் தேவையை நிறைவேற்றுகிறது. ஆனால் மருத்துவரின் மருத்துவச் செயல்’ என்பது பருப்பொருள் அன்று; நுண்பொருள். அஃதாவது மருத்துவர் கற்ற கல்விப்பொருள், கேள்விப்பொருள், பட்டறிவுப் பொருள் என்னும் இவற்றால் தேவைப்பட்ட நோய் நீங்குகிறது. இதற்கு மருத்துவரிடமிருந்து அவரின் கல்வியையோ, கேள்வியையோ, பட்டறிவையோ, நோயாளி பெறவில்லை. இவற்றைப் பெற்றால் நோயாளி மருத்துவனாக ஆகிவிட வேண்டும்; ஆவதில்லை. தன் பணத்திற்கு மாற்றுப் பொருளாக – செல்வமாக எதைப் பெறுகிறான்? மருத்துவன் அறிவின், கல்வியின், பட்டறிவின் உதவியை, அஃதாவது பணியைப் பெறுகிறான்.
இவ்வகையில் மருத்துவரின் பணி என்னும் அருவப் பொருள் மாற்றாகப் பெறப்பட்ட செல்வம் ஆகிறது. இந்தச் செல்வ அறிவியலின்படி,
கண்டுபிடிக்கப்பட்ட காப்புரிமை (Patent)
நூலாசிரியரின் மதிப்பூதியவுரிமை (Copy Right)
ஒருபொருளின் நன்மதிப்பு (Goodwill) என்னும் இவையும் இன்றையச் செல்வ அறிவியலின்படி செல்வங்களேயாகும்.
இக்கால இவ்வறிவியலைத் திருவள்ளுவரின் செல்வம் தொடர்பான அடைமொழிக் குறட்சொற்களில் காண முடிகிறது.
கல்விச் செல்வம், கேள்விச் செல்வம், வேண்டாமைச் செல்வம், அருட்செல்வம் ஆகிய செல்வங்களுள் ஒவ்வொன்றும் இக்கால செல்வ அறிவியலின் மூன்று இலக்கணங்களையும் பொதிந்தது.
கல்வி, கேள்வி, வேண்டாமை, அருள் இவற்றைக் கொண்டோரின் செயற்பாட்டின் மூலம் நிறைவேற்றப்படுகிறது (1 : இவற்றைக் கொண்டவரின் முழு அளவில் ஓர் பயன்பாடாகிறது (2); ஒருவரிடமிருந்து செயற்பாட்டுப் பயன் மாறுகிறது (3). எனவே, கருத்துப் பொருளாம் இவையும் இக்கால அறிவியலின்படி செல்வங்களாகின்றன. திருவள்ளுவரும் செல்வ அறிவியலாளர் ஆகிறார்.
இக்காலச் ‘செல்வப் பொருளியல்’ நாட்டு அரசாட்சியின் பங்கில் செயலாகும்போது பின்வரும் முறை கொள்ளப்படும்.
பண்டமாற்றுப் பொருளாக நாணயத்தையோ பணத் தாளையோ அரசு வெளியிடும்போது அவற்றின் மதிப்புடைய பொன்னோ, வெள்ளியோ பொருளோ, கடன் ஆவணமோ அரசின் இருப்பில் வைக்கப்படும். அவ்வாறு செய்வதுதான் பணவீக்கத்தை ஏற்படுத்தாது. பண மதிப்பைச் சரியாமல் உரிய மதிப்புள்ளதாக வைத்திருக்கும். (அண்மைக் காலமாக இம்முறை கடைப்பிடிக்கப் பெறாமல் பணவீக்கம் நேர்ந்து பணமதிப்பு குறைந்து வருகிறது).
இவ்வாறு ஒரு நாடு பொருளின் செலாவணிக்கேற்ற இருப்பைப் பெற்றிருக்கவேண்டும். நாட்டின் இலக்கணம் கூறும் திருவள்ளுவர்.
“பெரும்பொருளால் பெட்டக்கதுஆகி,அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு” (732)
என்று விதித்தார். இக்குறளில், ‘நாட்டிற்குப் பெரும்பொருள் வேண்டும்; அது பெட்டக்கதாக ஆக வேண்டும்’ என்றவை கூர்ந்து காணத்தக்கவை. பெரும் பொருள் என்றது நாட்டு மக்கட்கும், உயிரினங்கட்கும் வேண்டப்படும் பொருள்களின் நிறைவாகும்.
“பெட்டக்கது” என்னும் சொல் திருவள்ளுவரின் தனி ஆக்கச் சொல். இதற்கு ‘விரும்பத்தக்கது’ என்று பொது வான பொருள் கண்டனர். இதற்குத் தனியான ஆழ்ந்த சிறப்புப் பொருள் உண்டு.
‘பெட்பு-தக்கது’ என்பவற்றின் கூட்டுச்சொல் “பெட்டக்கது” “பெட்பு” என்பதற்குப் “போற்றிப் பாதுகாத்தல்” என்பது ஆழ்ந்த பொருள். இப்பொருளை அழுத்தமான சான்றுடன் உறுதிசெய்யவேண்டும். இப்பொருளின் பொதிவை இலக்கியங்களில் காணமுடிகிறது.
கடிய நெடிவேட்டுவன் என்னும் சிற்றரசன் தன்னை நாடிவந்த புலவர் பெருந்தலைச் சாத்தனாரை மதித்துப் போற்றிப் பரிசு வழங்காமல் காலங்கடத்தினான். இதனை விரும்பாத புலவர்,
“முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே“[24]
என்று பாடினார். ‘முடிமன்னர் மூவேந்தரானாலும் எம்மை மதித்துப் போற்றிப் பாதுகாவாது ஈவதை யாம் விரும்ப மாட்டோம்’ என்றார். இது கொண்டும் ‘பெட்பு’ என்னும் சொல் ‘போற்றிப் பாதுகாக்கும்’ கருத்தைக் கொண்டது என்பதை அறியலாம்.
‘பெட்பு – தக்கது’ எவ்வாறு “பெட்டக்க” தாயிற்று? ‘நட்பு’ என்னும் சொல் ‘நட்டு’ என்று ஆகி ‘நட்பு கொண்டு’ என்னும் பொருளைத் தரும். திருவள்ளுவரும் ‘முகத்தால், நட்புக்கொண்டு’ என்பதை “முகம்நட்டு” (830) என்று பதிந்துள்ளார். நாலடியாரும் நட்ட கால்’ (நட்பு கொண்ட போது) என்பதை “நட்டக்கால்”[25] என்றமைத்தார். இவை போன்றே பெட்பு’ என்பதும் பெட்டு’ என்றாகி, ‘பாதுகாப்பு’ என்னும் பொருளைத் தந்தது.
செல்வத்தைப் பாதுகாப்பாக வைக்க மரத்தால் செய்யப்பட்டதைப் ‘பெட்பு’ (பெட்டு+இ) என்கிறோம். பெரும் மதிப்புடைய செல்வத்தைப் பேணி வைக்கும் பெரும் உறுதியுள்ள பேழையைப் ‘பெட்டகம்’ (பெட்டு-அகம்) என்கிறோம். இங்கெல்லாம் ‘பெட்டு’ என்னும் சொல் ‘போற்றிப் பாதுகாத்தல்’ என்னும் பொருளில் உள்ளது.
இவற்றின் முன்னோடிச் சொல்லாகத் திருவள்ளுவர் ஆக்கிய “பெட்டக்கது” என்னும் சொல் பெரும் செல்வத்தைப் போற்றிப் பாதுகாக்கும் கருத்தைக் கொண்டது.
ஒரு நாடு வளத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் பெரும் செல்வத்தால் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும். அதற்குப் பெரும் மதிப்புடைய செல்வம் போற்றிப் பாது காக்கப்பட்டு, இருப்பில் அமைய வேண்டும். இது “பெரு பொருளால் டெட்டக்கதாகி” என்பதன் விளக்கமாகும்.
செல்வம் என்பது செலாவணிக்கு உரியது என்றாலும் அதன் மதிப்புடைய பொருள்கள் நாட்டு மக்களுக்குத் தட்டாமல் கிடைக்கவும், அவற்றைப் பெற்றுத்தரும் பண்டமாற்றுப் பொருள்களாகிய நாணயம் முதலியன தம்மதிப்பைக் குறைத்துக் கொள்ளாமலோ கூட்டிக்கொள்ளாமலோ இருக்கவும் மதிப்புடைய செல்வம் நாட்டுக் கருவூல இருப்பாகப் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் இக்கருத்து இக்காலச் செல்வப் பொருளிய’லில் எவ்வாறு மலர்ந்துள்ளது என்பதைக் காண முடிகின்றது.
நாணயத்தையோ பணத்தாளையோ அரசு வெளியிடும் போது அவற்றின் மதிப்புடைய பொன், வெள்ளி முதலிய செல்வப் பொருள்கள் அரசுப் பாதுகாப்புக் கருவூலத்தில் இருப்பாக வேண்டும் என்று விளக்கப்பெற்றது. இச் ‘செல்வ அறிவியல்’ “பெட்டக்கதாகி” என்னும் சொல் லாக்கத்தில் அமைந்துள்ளது. பொருள் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியது என்பதை “பொருளாட்சி போற்றாதார்க்கில்லை” (252) என்பதாலும் திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளதையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். இதனால், திருவள்ளுவம் ‘செல்வப் பொருளிய’லாம். அறிவியலில் விளங்குகின்றது.
பொருளியல் கோட்பாடும் திருவள்ளுவமும்
‘பொருளியல்’ என்னும் இயல் 18ஆம் நூற்றாண்டில் தான் உருப்பெற்றது. இப்பொருளியலின் தந்தை ‘ஆதம் சுமித்து’ என்பார். இவர் காலம் 1723-1790. இவர் வகுத்த பொருளியற் கோட்பாட்டின் அடித்தளக் கோட் பாடுகள் மூன்று அவை :
பொருள்களின் ஆக்கம் (Production)
பண்டமாற்று (Exchange)
பகிர்வு (Distribution)
பின்னர் ஆய்வுகளால் இம்மூன்று பகிர்வுக்கு முன்னர் (Consumption) என்பதும் இணைக்கப்பெற்று நான்காயின.
இவை நான்கும் பொருளியலின் அடித்தளக் கோட் பாடுகள். இவற்றைத் திருவள்ளுவர்,
“இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த
வகுத்தலும் வல்ல தரசு”
என்னும் குறளில் காட்டினார்.
பொருள்களை விளைச்சலால் உண்டாக்குதலும், அவற்றைத் தொகுத்தலும், போற்றிப் பாதுகாப்பாகக் காத்தலும், காத்தவற்றைப் பகிர்ந்து வழங்கலும், வழங்கப்பட்டவை. மாந்தர்க்கோ உயிரினங்களுக்கோ நுகர்வு ஆதலும் ஆகிய நான்கையும் திறமையுடன் செய்வதுதான் ஆட்சி செய்தற்குரிய அரசாகும். இதை அக்கால மன்னர் அரசுக்குக் குறிக்கப்பட்டனவாயினும் இக்கால மக்கள் ஆட்சிக்கும் மாற்ற மின்றிப் பொருந்துகின்றன.
இக்காலப் பொருளியல் நான்கை குறட் கருத்துடன் பொருத்திக் காணுமாறு திருக்குறள் அமைந்துள்ளமை குறிக்கத் தக்கது
‘ | ‘ | |
வள்ளுவம் | — | பொருளியல் |
இயற்றல் | — | ஆக்கம் |
ஈட்டல் காத்தல் | — | மாற்று |
வகுத்தல் | — | பகிர்வு |
வகுத்து வழங்கலும் பெறலும் | — | நுகர்வு |
மேலும், பொருளியலின் பல்வகைக் கூறுகளையும் திருவள்ளுவர் தம் திருவள்ளுவத்தில் காட்டியிருக்கின்றார். இவற்றை விரிவாகப் பொருளியல் வல்லுநர் முனைவர் பா. நடராசன் அவர்களும், திருவள்ளுவர் விருதுபெற்ற குறளறிஞர் கு. ச. ஆனந்தன் அவர்களும் நுணுக்கமாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளனர்.
அவற்றையும் இணைத்துப் பார்த்தால் திருவள்ளுவம் ‘செல்வப் பொருளிய’விலும் பொருளி அறிவிய’விலும் விளக்கம் பெறுவதை அறியலாம்.
இக்கால ஆங்கில அகரமுதலிகளில் ‘பொருளியல்'(Economics) என்னும் சொல்லுக்குக் காட்டப்பட்டுள்ள பொருள்:
“செல்வத்தின் ஆக்கத்தையும் (இயற்றல்) பங்கீட்டையும் (வகுத்தல்) பற்றிய செயல்முறை நூல்” என்றிருக்கும். இச்செயல்முறை நூலாகத் திருவள்ளுவம் திகழ்கிறது.
இத்தகைய செல்வமாகும் பொருள்கள் பல. அவையாவும் இயற்கையாகவும் செயற்கையாகவும் விளைபவை.
எனவே, செல்வத்தை அடுத்துத் திருவள்ளுவத்தில் விளைவைக் காண்கின்றோம்.
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
Leave a Reply