அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், இ. அறிவியல்அறிமுகச்சொல்

(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், ஆ.திருவள்ளுவரின் பட்டறிவுப் பேச்சு-தொடர்ச்சி)
அறிவியல் திருவள்ளுவம்
இ. அறிவியல் அறிமுகச் சொல்
இவ்வாறு தனித்தன்மையுடன் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்ட இக்குறட்பாக்கள் மூன்றும் மற்றொரு வியப்பையும் உள்ளடக்கியனவாகும்.
அதுதான் இக்காலம் வளர்ந்து விரிந்துள்ள அறிவியலின் குறிப்பும் பொருந்தியுள்ளமையாகும். முன்னே கண்ட பக்கம் 25, 26 அறிவியல் விளக்கத்தையும் இக்குறட்பாக்களின் கருத்தேற்றத்தையும் பொருந்திக்காண வாய்ப்புள்ளது. மூன்று குறட்பாக்களும் சொல்லமைப்பிலும், கருத்தமைப்பிலும் பட்டறிவிலும், ஒத்துள்ளமையால் ஒரு குறளைக் கொண்டே பொருத்திக் காணலாம். அவற்றிலும் ”பெறும் அவற்றுள்” (61) என்னும் குறட் கருத்தைப் பொருத்திக் காணலாம்.
குறட்கருத்து | புதுமைக்கால அறிவியல் விளக்கம் | |
யாம் அறிவது | — | நிகழ்ச்சிகளைக் காண்டல் |
பெறும் அவற்றுள் | — | தொகுத்தல், தொடர்பு காணல் |
அறிவது, அறிவறிந்த | — | கருதல் |
மக்கட்மேறு அல்லபிற | — | ஆய்வின் முடிவு. |
புதுமைக்கால அறிவியலைக் கருதிப்பார்த்துத் திருவள்ளுவர் கருத்தளிக்கவில்லைதான். என்றாலும் சாலப் பொருந்தும் அளவு அமைந்திருப்பதைக் காண்கின்றோம். தமிழ் மண்ணில் அறிவியலின் ஊற்றுகள் பண்டைக் காலத்தே கண் திறந்தமைக்குப் பல சான்றுகளை இலக்கியங்கள் தருகின்றன. அவற்றிற்கெல்லாம் அடித்தளமான கோட்பாட்டைத் திருவள்ளுவத்தில் காண்கின்றோம். இங்கு காணப்பட்டவை கொண்டு மட்டும் திருவள்ளுவரை ‘அறிவியற் கவிஞர்’ என்று கூறி நிறைவு பெற்றுவிட வேண்டியதில்லை. மேலும் மேலும் சான்றுகள் திருக் குறளில் கிடைக்கின்றன அறிவியலின் இலக்கணம் கூறுதல் போன்றும், அறிவியலின் சான்று காட்டும் இலக்கியங்களாகவும் பல கிடைக்கின்றன.
முதலில் அறிவியலின் இலக்கணம் கூறுவது போன்ற சான்று காணத்தக்கது.
அறிவியலின் இலக்கணச் சான்று என்பது இங்கு ஒரு சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப் பெற்றுள்ளது. அறிவியல் என்பதே அறிவின் இலக்கணம், அறிவின் துறை’ என்பனவல்லவா பொருள்? இவ்வொரு சொல் அவர்தம் பட்டறிவால் எழுந்த மூன்று குறட்பாக்களில் முதலில் அமைந்த மக்கட்பேற்றுக் குறளில் உள்ளது.
“அறிவறிந்த”
மக்களை ஆணாகவோ, பெண்ணாகவோ பெற்றுவிடும் ஒன்றே பெறுமவற்றுள் பெரும்பேறு ஆகிவிடாது. தலை, கை, கால் முதலிய உறுப்புகளின் நிறைவுடன் குழந்தையைப் பெறுவது மட்டும் இங்குக் குறிக்கப்படவில்லை. எத்தகைய மக்கள் என்றும் சுட்டப்பட்டுள்ளது. எத்தகைய மக்கள்? ஒர் அடைமொழி உள்ளது. “அறிவறிந்த மக்கள்” (61) ஆம் இந்த “அறிவறிந்த” என்னும் அடைமொழிச் சொல் ஆழ்ந்ததும் நுண்ணியதுமான கருத்துடன் அமைக்கப்பட்ட சொல் இச்சொல்லாட்சி திருக்குறளில் மூன்றே குறட்பாக்களில் தான் உள்ளது.
‘அறிவறிந்த’ என்னும் சொல்லின் பொருள்களாகக் காணப்பட்டவை பின்வருபவை :
“அறியவேண்டுவனவற்றை அறிதல்”இது பரிமேலழகர் கண்ட பொருள். கற்பதில் கற்க வேண்டியவை என்றும் காணவேண்டாதவை என்றும் கொள்ள வகை உண்டு. அதனால்தான் “கற்க கசடற கற்பவை” (391) என்றார். ஆனால், அறிவில் அறியவேண்டுவன, அறியவேண்டாதன என்றில்லை. ஏனென்றால் அறிவு ‘தீது ஓரிஇ, நன்றின்பால் உய்ப்பது”. (422) எனவே, அறிவு நன்மையைத்தான் தரும். இவ்வகையில் பரிமேலழகர் பொருள் பொருந்தாது.
“அறிவறிந்த கல்விச் செல்வமான பிள்ளை” என்றார் பரிதியார். கல்வி என்றாலே அறிவறியும் செயலுக்கு உரியதுதான். இது கொண்டு நோக்கினால் ’அறிவறிந்த’ என்றமை ஒரு சிறப்புக் கருத்துக்காக அமைக்கப்பட்டதாகக் கொள்ள வழியில்லை.
இவ்வாறே ’அறிவறிந்த’ என்னும் சொல்லமைந்த மற்றைய இரண்டு குறட்பாக்களுக்கும் பொருள் காணப்பட்டது.
ஆனால் காலிங்கர் மற்றொரு பொருளைக் குறித்துள்ளார். ”அறிவினை முழுதும் அறிந்து” என்றார். இவ் விளக்கம்- ‘அறிவினை அறிதல்’ என்னும் விளக்கம் அறிவியலை அண்டிப் பார்க்கிறது.
அறிவதுதான் அறிவு என்றாலும் ’அறிவையே. அறிவது-அதனையும் முழுமையாக அறிவது’ என்பது சற்று அழுத்தமான கருத்தைக் காட்டுகிறது.
அறிவில் நுண்ணிய அறிவு சிறந்தது. நுண்ணிய அறிவின் செயற்பாடு பெரும் ஆக்கத்தை விளைவிக்கும். அதனால்தான் ”அறிவு உடையார் ஆவது அறிவார்” (427) என்றார். ஆவதாகிய ஆக்கத்தை அதனினும் புத்தாக்கத்தை அறிவு தரின் அது நுண்ணறிவால் விளைந்த விளைச்சல்.
அத்தகைய அறிவின் செயற்பாட்டால் விளையும் ஆக்கத்தைக் கண்டறிவதுதான் அறிவாகும். இவ்விளக்கத்தின் அடக்கமாகத்தான் ’அறிவறிந்து‘ என்னும் சொல் ஆக்கப்பெற்றது.
எனவே, அறிவு அறிந்த என்பதற்கு ‘ஆக்கத்தைத் தரும் அறிவை அறிந்த’ என்பது பொருளாகும். இவ்வறிவுச் செயற்பாடுதான் ’அறிவியல்’ எனப்படுகின்றது.
இக்கருத்திற்கு உரமூட்டுகின்றது அடுத்தொரு குறள்:
“செறிவறிந்த சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்“ (123)
என்னும் குறளிலும் ‘அறிவறிந்து’ என்னும் சொல் அமைந்துள்ளது.
இக்கால அறிவியலின் விளைச்சல் ’செறிவறிந்த சீர்மையைப் பயப்பது’ என்பதை அறிவோம். புதிய கருத்துகள் செறிந்த சீர்மைகளே அறிவியலின் கண்டு பிடிப்புகள். இவ் வகையிலும் ‘அறிவறிந்த’ என்பது அறிவியலைக் குறிக்கும். இது அக்கால அறிவியலின் அடையாளச் சொல்லாகத் திருவள்ளுவரால் ஆக்கப் பெற்றுள்ளது. ”செறிவறிந்த சீர்மை” பெறுவதற்கும் ஒரு விதிப்பு வைத்துள்ளார் திருவள்ளுவர். அது “அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறுதல்”. இக்காலத்தும் அறிவியல் வல்லுநர் எவரும் தம் கண்டுபிடிப்பால் இறும்பூது எய்துவர். கண்டுபிடித்த முதல் உணர்ச்சியில் துள்ளியும் குதிக்கலாம். ஆனால் அக்கண்டுபிடிப்பை பயன்படுத்துவதன் நல்ல பண்பு நெறியாக அடக்கமே கொள்வர். அறிவியல் வல்லுநர்களின் வாழ்வியலைக் கூர்ந்து நோக்கினால் இந்த அடங்கும் உண்மை புலப்படும்.
எனவே, இரண்டாவதாக ’அறிவறிந்து’ அமைந்த இக்குறளும் இக்கால அறிவியற் பாங்கைக் குறித்துக் காட்டுவதாக உள்ளது.
பொறி என்றால்
மூன்றாவதாக,
“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி” (618)
என்னும் குறள் ஒரு வகையில் அறிவியலுக்கு அணியாகின்றது. பொறியின்மை என்பதற்கு ‘விதி இல்லாமை’ என்றே பரிமேலழகர் முதலிய பலர் உரைகண்டனர். ‘நல்ல தலையெழுத்தில்லாமை பழியில்லை’ என்னும் பொருள்பட விதியைக் காட்டினர். மணக்குடவர் ‘ஆக்கம் இல்லாமை’ என்றார். ஆனால், பரிதியார் மட்டும் “மெய், வாய், கண், மூக்குச் செவி குறைந்தது பங்கமல்ல’’ என்றார். பொறி என்பதற்கு ‘ஐம்பொறி’ என்பதே உரிய பொருளாகும்.
திருவள்ளுவரும், “பொறிவாயில் ஐந்து’’ என்று ஐம்பொறிக்கே ‘பொறி’ என்னும் சொல்லைப் பெய்தார். மேலும் “கோள்இல் பொறிஇல் குணம்இலவே என்குணத்தான்” என்று ஐம்பொறியைக் குறித்தார். இவ்வைந்து பொறியும் தலையிலேயே அமைந்துள்ள குறிப்பையும் காண்கின்றோம். கண், வாய், செவி, மூக்கு நான்கொரு மெய்யின் ஒரு பகுதியும் தலையில் உள்ளமை அறிவோம்.
இவ்வகை ஐந்து பொறியில்லாமை பழிதான். பார்வையில்லாத கண்ணைக் கொண்டவன் குருடன் என்னும் பழிக்கு ஆளாவான். இதுபோன்றே கேட்கமுடியாத செவிடன், பேசமுடியாத ஊமையன்-நெறியாக மூச்சுவிட முடியாது. மணத்தைமோந்து பார்க்க முடியாத மூக்கரையன், உணர்வை உணரமுடியாது மரத்துப் போனவன் பழிக்கு ஆளாவான்.
ஆனால் “அறிவறிந்த ஆள்வினை இன்மைதான் பழி” ஆள்வினை இருந்தால் கண்பார்வையில்லாத குருடனும் வாழ்வில் சிறக்கலாம். நம்கால எலன் கெய்வர் முதல் இன்று நாட்டில் உலவும் உயர்ந்து திகழும் குருடர் பலர் பழி சொல்லப்படாதவர்கள். இது போன்றே ஆள்வினையால் மற்றையப் பொறிகள் இல்லாமல் உயர்ந்து பழியைப் புறங்கண்டோராக அறிகின்றோம்.
இக்குறள் இக்கருத்துகளுடன் இக்காலப் பொறி அறிவியல் முன்னேற்றத்தையும் குறிப்பாகக் காட்டுகிறது என்று வெளிப்படுத்தலாம்.
இக்காலம் ‘பொறி’ என்பது செயற்கையில் உருவாக்கப்பட்டு இயங்கும் எந்திரங்களைக் குறிக்கிறது. நம் உடல் உறுப்புக்குரிய சொல்லாகிய பொறி” என்னும் பெயர் இன்று இயங்கும் எந்திரங்களுக்கு எவ்வாறு ஆனது?
உடலின் ஐந்து பொறிகளும் தாம் இயங்கி மற்ற வற்றை இயங்க வைக்கின்றவை. கண், பார்வையால் தான் இயங்கி மாந்தனை நடமாடி இயங்க வைக்கின்றது. பிற உடற்பொறிகளும் இவ்வாறே. இவைபோன்று இயங்கி இயங்க வைத்ததால் எந்திரங்களும் பொறி என்று குறிக்கப்படுகின்றன.
மேலும் விரித்து நோக்கினால் இக்காலத்தில் காணப்பட்டுள்ள பொறிகள் அனைத்தும் உடலின் பொறிகள் இயங்கும் நுணுக்க த்தை வைத்தே காணப்பட்டவை என்பதை அறியலாம்
கண்ணின் இயக்கத்தைப் பார்த்து நிழற்படப் பொறி காணப்பட்டது: பலவகையாக வளர்ந்தது. காதின் ஒலிவாங்கும் இயக்கத்தை வைத்தே ஒலிவாங்கிகள்: வாயின் பேச்சு இயக்கத்தைக் கொண்டே ஒலிவிடுவான்கள், (Computer) மூளையின் இயக்கத்தை வைத்தே இன்று உலகில் உயர்ந்துவரும் கணிப்பொறிகள் என யாவும் உடற்பொறிகளின் ஈனல்களே.
இப்பொருத்தத்துடன் “பொறியின்மை யார்க்கும் பழி யன்று” என்னும் குறளைநுணுகி நோக்கினாலும் இக்காலப் பொறி வளர்ச்சியுடன் ஒப்பிட்டு நோக்கினாலும் பொறிகள் தாம் நாட்டின்-மாந்தரின் வாழ்வையே இயக்கி வாழ வைக்கின்றன என்பதை உணரலாம்.
இச்சமயத்தில் பொறியில்லாமை எந்தநாட்டிற்கும் பெரும்பழியாகும். மிதிவண்டி முதல் பீச்சிப்பாயும் வெடி ஊர்தி (இராக்கெட்) வரை பெறாத நாடு உலகில் பழி கொள்ளும் நாடாகும். ஆனால், பழியின்மை எதனால் உண்டாகும். ஆள்வினை என்னும் முயற்சியால்தான் உண்டாகின்றது. ஆள்வினையிலும் அறிவியல் அறிந்தஅறிவறிந்த ஆள்வினையால்தான் உண்டாகின்றது.
எனவே,
“பொறியின்மை” என்னும் குறள் தன் குறிப்புப் பொருளால் அறிவியலின் உள்ளீட்டைக் கொண்டதாகிறது.
இவ்வுள்ளிட்டுப் பொருளைப் பின்வருமாறு வெளிக்கொணரலாம்.
பொறியின்மை | — | மின் ஊர்தி, வான் ஊர்தி, கணிப்பொறி முதலிய ஆக்கப் பொறிகள் இல்லாமை |
யார்க்கும் | — | உலகில் எந்த நாட்டிற்கும், மாந்தருக்கும் ! !! !! |
பழி அன்று | — | குறை ஆகாது |
அறிவறிந்து | — | அறிவின் செயற்பாடாம் அறிவியலை அறிந்து |
ஆள்வினை இன்மை | — | முயலாதிருத்தலே |
பழி | — | குறையாகும் |
பொருள்கொள்வதை வெறும் இலக்கிய பொருத்தமாக இவ்வாறு மட்டும் கருதக்கூடாது. காலச் சூழலின் வெளிப்பாடுகளைக் கணித்துக்கொண்டு நோக்கினால் இப்பொருள் படவும் திருவள்ளுவரின் குறட்பா கோடிட்டுக் காட்டுவதாகக் கொள்ள முடிகிறது.
இவ்வாறு எழுதுவதை இழுத்துப் பிடித்து வலிந்து பொருள் கொள்வதாகவும் கருதக்கூடாது. இக்கால வளர்ச்சிச் சூழலையும், திருவள்ளுவர் கால தொடக்கச் சூழலையும் பொருத்திப் பார்க்க வேண்டும். அந்நிலையில் அக்கால வடிப்பில் இவ்வாறு குறிப்பாகத்தான் அமைக்கப் பட்டது என்று கொள்வதே பொருந்தும்.
எனவே, மூன்று குறட்பாக்களிலும் அறிவறிந்த என்னும் அறிவியல் இலக்கணச் சொல் அமைந்து திருவள்ளுவரின் அறிவியற் பாங்கைக் குறிக்கின்றன.
இவற்றால் மட்டும் திருவள்ளுவர் அறிவியற் கவிஞர், என்று நிறைவாகச் சொல்ல இயலாது. சொன்னால் ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டதாகும்.
இக்காலத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவாகப் பெருகியுள்ளன. நாளும் ஒரு புதுமையாக்கம் நிகழ்ந்து வருகிறது. இவற்றின் அடையாளங்கள் பலவற்றைத் திருக்குறளில் காண முடிகின்றது.
(தொடரும்)
கோவை. இளஞ்சேரன், அறிவியல் திருவள்ளுவம்
Leave a Reply